நடப்பு
புத்தக விமர்சனம்
Published:Updated:

நாணயம் லைப்ரரி

மார்க்கெட்டிங்: ஜெயிக்க வைக்கும் தத்துவங்கள்!

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும்  'தி இன்விஸிபிள் டச்’ எனும் ஹாரி பெக்வித் எழுதிய புத்தகம் விலை, பிராண்ட், பேக்கேஜிங் மற்றும் வாடிக்கையாளருடன் உள்ள தொடர்பு என்ற நான்கு அதிமுக்கிய மார்க்கெட்டிங் தத்துவங்களைச் சொல்கிறது.

பொருட்களை விற்பதற்கும், சேவைகளை வழங்குவதற்கும் உள்ள வித்தியாசங்களை அழகாக விளக்குகிறார் ஆசிரியர். ஒரு காரை எடுத்துக்கொண்டால் லிட்டருக்கு இத்தனை கிலோ மீட்டர் செல்லும், இத்தனை வேகம் போகும் என்பார்கள். குறிப்பிட்ட அந்தப் பொருளை வாங்கும்முன்,  அந்தக் குணாதிசயங்கள் அதில் இருக்கிறதா என்று ஆராய்ந்து வாங்கலாம்.

ஆனால், சேவை என்பது அப்படிப்பட்டதல்ல. சேவை என்பது தனிநபர் தேவைக்கேற்ப மாறும். தவிர, அதைப் பயன்படுத்தும்போதுதான், அதை வாங்கியவர் உணர முடியும்.  இதில் பல சேவைகளுக்கு நாம் முன்னரே பணத்தைக் கட்ட வேறு சொல்கிறோம் என்று நக்கலடிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் ஹாரி பெக்விக்.

ஒரு மார்க்கெட்டிங் ஆசாமியாக ஒருவரால் எதை முழுமையாக  தெரிந்துகொள்ள முடியும் என்கிற முக்கியமான கேள்வியை எழுப்புகிறார் ஆசிரியர். மார்க்கெட்டிங் துறை யில் இருப்பவர்களுக்கு எதையுமே முழுமையாக ஒருபோதும்  புரிந்து கொள்ள முடிவதில்லை.  எதையுமே சந்தேகக் கண்ணுடனேயே அவர்கள் பார்க்க வேண்டியுள்ளது.

உதாரணத்துக்கு, நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு கொலை வழக்கை நாம் படிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நடந்த விஷயங்களை வைத்து இவர்தான் குற்றவாளி என்கிற முடிவுக்கு நாம் வருகிறோம். ஆனால், நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து குற்றவாளியாக நாம் கருதியவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டால், நாட்டில் நீதி செத்துவிட்டது என்று கோபப்படுகிறோம்.

நாணயம் லைப்ரரி

காரணம், நம் உள்ளுணர்வு சொல்வது தவறு என்று தெரிய வரும்போது நம் மனது கொதிப்படைகிறது. இதே பிரச்னைதான் மார்க்கெட்டிங் துறையிலும் பலமுறை வருகிறது என்கிறார் ஆசிரியர்.

வெற்றிகரமான மார்க்கெட்டிங் புரஃபஷனல் இந்த உள்ளுணர்வைவிட்டு வெளியில் வந்து நீதிமன்றத்தில் நடப்பதைப்போல் ஒவ்வொரு கோணத் திலும் விசாரித்து, அந்த விசாரணையின் அடிப்படையில் மட்டுமே முடிவை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார் ஆசிரியர்.

மார்க்கெட்டிங் ரிசர்ச்சில் ஒருவர் எப்படியெல்லாம் தவறான முடிவு எடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்கிறார் ஆசிரியர். அவர் சிறுபிள்ளையாய் இருந்தபோது, டிவி பார்ப்பதைப் பற்றிய சர்வே எடுக்கும் நிறுவனம் ஒன்று உதவியாளர்கள் தேவை என விளம்பரம் செய்ததாம். பின், உதவியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் ஒரு நோட்டுப் புத்தகத்தைத் தந்து எவ்வளவு நேரம், என்னென்ன சேனல்களைப் பார்க்கிறீர்கள் என்று எழுதி வைக்கச் சொன்னதாம்.

நாணயம் லைப்ரரி

இந்த வேலையை ஏதோ ஓர் ஆர்வத்தில் எடுத்துக்கொண்ட ஆசிரியரின் அம்மாவால், டிவியை அதிக நேரம் பார்க்க முடியவில்லையாம். ஆனால், சர்வே நிறுவனம் தப்பாக நினைத்துவிடக் கூடாதே என்று, விருப்பமில்லாமல் பல்வேறு சேனல்களை ஸ்கேன் மார்க் போட்டாராம். இப்படி பதிவு செய்த டேட்டாவை வைத்து, டிஆர்பி ரேட்டிங் வந்து, அதைவைத்து மார்க்கெட்டிங் செய்பவர்கள் முடிவெடுத்தால் என்னவாகும்? என்று கேட்கிறார் ஆசிரியர்.

மார்க்கெட்டிங் ஆய்வுகள் (மார்க்கெட்டிங் ரிசர்ச்) உண்மையைக் கொண்டுவருவதில்லை. அதற்குப் பதிலாக, அது சொல்வதை மட்டுமே நம்புமளவுக்கு நம்மைக் குருடாக்கி விடுகிறது என்று சொல்லும் ஆசிரியர், சந்தையைப் புரிந்துகொள்ள ஆய்வு செய்யுங்கள். அதேசமயம், அதிஜாக்கிரதையாக முடிவுகளைக் கையாளுங்கள் என்ற அறிவுரையைச் சொல்கிறார்.பெரும்பான்மையான மார்க்கெட்டிங் ரிசர்ச்கள் மத்திம தர ஐடியாக்களையே ஊக்குவிப்பதாய் இருக்கின்றன என்று சொல்லும் ஆசிரியர், பிரமாதமான ஐடியாக்களை ஒருபோதும் சந்தை ஆய்வுகள் ஊக்குவிப்பதே இல்லை என்கிறார்.

மார்க்கெட்டிங் ரிசர்ச்சில் பங்கெடுப்பவர்களில் பெரும்பான்மையான மக்கள், ரிசர்ச் செய்பவரிடம் சொல்வதொன்று, நிஜத்தில் செய்வதொன்று என்றுதான் இருக்கிறார்கள் என்று சொல்லும் ஆசிரியர், இதற்கான உதாரணங்களை நிறையவே இந்தப் புத்தகத்தில் தந்துள்ளார்.

நாணயம் லைப்ரரி

பெஸ்ட் பிராக்டிசஸ் குறித்து கிண்டல் செய்யும் ஆசிரியர், மருத்துவமனைகளின் போக்கை குறிப்பிட்டு பல உதாரணங்களைச் சொல்கிறார். நோயின் காரணமாக மருத்துவமனை ஒன்றுக்குள் செல்கிறீர்கள். திரும்பி உயிருடன் வருவோம் என்ற நம்பிகையுடன். அது நிச்சயமாய் நிறைவேறும். ஆனால், எப்போது திரும்புவீர்கள் என்று சொல்ல முடியுமா? 9.30-க்கு உங்கள் அப்பாயின்மென்ட். மருத்துவமனைக்குள் 9.28-க்கு நுழைகிறீர்கள்.  என்ன ஒரு காலம் தவறாமை என உங்களை மெச்சிக்கொண்டே! ஆனால், டாக்டர் உங்களை 10 மணி வரையிலும் பார்க்கவே மாட்டார். மருத்துவமனைகளின் பெஸ்ட் பிராக்ட்டிஸ் என்பது, நாங்கள் ரெடியாகும்போதுதான் உங்களைப் பார்ப்போம் என்பதே. இப்படிப்பட்ட பெஸ்ட் பிராக்ட்டிஸ்களைக் காப்பியடிக்காதீர்கள். புதிதாக உங்களுக்கென ஒன்றை உருவாக்குங்கள் என்கிறார் ஆசிரியர்.

தொழிலில் நல்ல லீடர் தேவை என்ற ஐடியாவை மொத்தமாகக் கடிந்துகொள்ளும் ஆசிரியர், வியாபாரத்தின் எண்ணங்களும் நோக்கங்களுமே தலைமை தாங்கி எடுத்துச் செல்கிறது. பிசினஸில் சிலசமயம் சிறந்த தலைவர்கள்கூட ஃபெயில் ஆகிறார்கள். அப்படியானால் தொழிலின் எண்ணம் தானே தலைமை தாங்கி நடத்துகிறது என்று வாதிடுகிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி

ஒரு பொருளை மார்க்கெட்டிங் செய்யும்முன் நாம் என்ன மார்க்கெட்டிங் செய்கிறோம், எதை டெலிவரி செய்யப்போகிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், விற்பதாகச் சொல்வதைத் தரமுடியாவிட்டால் என்ன முயற்சி செய்தும் மார்க்கெட்டிங் செய்தும் என்ன பிரயோஜனம் என்கிறார்.

நாணயம் லைப்ரரி

திருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் என்பதுதான் உங்களுடைய இலக்கு எனில், உங்களுடைய எல்லைக்கோடு நகர்ந்துகொண்டே இருக்கும் என்று சொல்லும் ஆசிரியர், வாடிக்கை யாளரின் திருப்தியை அளவிடுவதை விட்டுவிட்டு அதைத் தொடர்ந்து அதிகரிக்கப் பாடுபடுங்கள் என்று சொல்கிறார்.

நினைவில் கொள்ளுங்கள் உங்களுடைய பேரார்வமே வியாபாரம். உங்கள் ஆர்வமே உங்களுக்கு வாடிக்கையாளர்களைத் தேடித் தருகிறது. அவர்களுக்கு உதவுவதன் மூலம் என்று முடிக்கிறார் ஆசிரியர்.

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் தொழில் செய்பவர்கள், செய்ய நினைப்பவர்கள், வேலையில் இருப்பவர்கள் என அனைவருமே படிக்க வேண்டிய ஒரு புத்தகம் இது என்றால் அது மிகையாகாது.

- நாணயம் டீம்.
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில்
விற்பனைக்குக் கிடைக்கக்கூடும்)