Published:Updated:

சின்னச் சின்ன சவால்களைச் செய்துபாருங்கள்!

சித்தார்த்தன் சுந்தரம்

லமரம் மிகப் பெரிது என்றாலும் அதன் விதை சிறியதுதான். இன்றைக்குச் சில நிறுவனங்கள் மிகப் பெரிய பிசினஸ் சாம்ராஜ்ஜியங்களாக வளர்ந்து நின்றாலும், அதன் சரித்திரத்தில் சின்னச் சின்னதாக எடுத்த பல சவால்கள்தான் அந்த நிறுவனத்தை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது என்பதைப் பல உதாரணங்களுடன் அற்புதமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் ‘லிட்டில் பெட்ஸ்’ என்னும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பீட்டர் சிம்ஸ்.

சின்னச் சின்ன சவால்களைச் செய்யும்போது அதன் விளைவாக நீங்கள் சந்தித்தாக வேண்டிய ரிஸ்க் என்பது குறைவாகவே இருக்கும். அந்தச் சவால்கள் உங்களுக்கு நன்மை தரும் எனில், அதையே பிற்பாடு மிகப் பெரிய அளவில் எளிதாக விரிவுபடுத்தவும் முடியும். இந்தக் கருத்து எந்தெந்த நிறுவனங்களில் எப்படியெல்லாம் நடந்திருக்கிறது என்பதை விளக்கமாகவே எடுத்துச் சொல்லியிருக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். முதலில் கூகுள் உருவான கதையைச் சொல்கிறார் ஆசிரியர்.

 வழிகாட்டிக்கு வழிகாட்டி!

கூகுள் என்கிற `தேடல் பொறி’க்கு (search engine) மூலகாரணமாக அமைந்தது பேஜ்ஜும், ப்ரினும் செய்த ஸ்டான்ஃபோர்டு டிஜிட்டல் லைப்ரரி புராஜெக்ட்தான். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் நூலகத் தேடலை ஆன்லைனில் எப்படி முன்னுரிமைப் படுத்துவது என்கிற ஒரு சின்ன வேலைதான். இந்த வேலையை ஆர்வத்தோடு செய்தபோது அவர்கள் முதலில் கண்டுபிடித்தது ‘பேஜ் ரேங்க் அல்காரிதம்’ (Page Rank Algorithm). ஒரு புத்தகம் அல்லது கட்டுரை வேறு எத்தனை புத்தகங்கள் அல்லது கட்டுரை களில் மேற்கோளாகவோ அடிக் குறிப்பாகவோ குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இந்த நடைமுறை உதவியாக அமைந்தது. இதை அடிப்படையாக வைத்து, நாம் விரும்பும் விஷயங்களைத் தேட முடியுமா என்கிற கேள்விதான் கூகுள் தேடுதல் இயந்திரம் உருவாவதற்கு மூலகாரணம். ‘பேஜ் ரேங்க் அல்காரிதத் திலிருந்து புதிதாக என்ன கண்டுபிடித்துவிட முடியும் என்று அவர்கள் நினைத்திருந்தால், கூகுள் தேடுபொறி நமக்குக் கிடைக்காமலேகூடப் போயிருக்கும்!

 அமேசானின் கண்டுபிடிப்பு!

குருட்டாம்போக்காக கால்போன போக்கில் பயணித்தால் ஏதாவது ஓர் இலக்கை அடைவதுபோல அமேசானும் பல புதிய வாய்ப்புகளைக் கண்டுபிடிக்கத் தனது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் களைச் சிறிய சிறிய பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட ஊக்குவிக்கிறது. புதிய சந்தையில் தனது சேவையை அறிமுகப்படுத்தும்போது எந்த யுக்தி வேலை செய்யும், செய்யாது என்பதை உறுதியாகக் கூறமுடியாது. எனவே, பரிசோதனை என்கிற `விதை’யின் மூலம் பணம் காய்க்கும் மரத்தை வளர்ப்பது தான் அமேசானின் அணுகுமுறை.

சின்னச் சின்ன சவால்களைச் செய்துபாருங்கள்!

இந்த முறையில் அமேசான் கண்டுபிடித்த அம்சம்தான், அவர்கள் வலைதளத்தில பொருள் வாங்கிய ஒருவரின் சரித்திரத்தை (purchase history) மற்ற அனைத்து வாடிக்கையாளர்களின் சரித்திரத்துடன் ஒப்புமை செய்து ஏறக்குறைய ஒரேமாதிரியான விருப்பம் கொண்டவர்களைக் கண்டுபிடித்து, அதற்கு ஏற்றமாதிரி மார்க்கெட்டிங் உத்தியை வடிவமைத்துக் கொள்வது. இதேபோல, அந்த நிறுவனம் வடிவமைத்த இன்னொரு அம்சம், `அசோசியேட் புரோகிராம் (Associate Programme)’. அதாவது, ஒரு வலைதளத்துக்குச் செல்லும் வாடிக்கையாளரை அமேசான் வலைதளத்துக்குச் செல்லுமாறு `வழிகாட்டும்’ அம்சம்.

இதன்மூலம் பொருள் எதுவும் விற்காமல் வழிகாட்டிய வலைதளத்துக்கு கமிஷனும், அமேசானில் அந்த வாடிக்கையாளர் பொருள் வாங்கும்பட்சத்தில் அமேசானுக்கு வருமானமும் கிடைக்கக் கூடிய வகையிலான மார்க்கெட்டிங் உத்தியாகும். இதன்மூலம் அமேசானின் வருமானம் பல மடங்கு பெருகியது. பதினோரு ஆண்டுகள் ஆன பின்பும் இந்தச் சிறிய மார்க்கெட்டிங் உத்தி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார் இதன் நிறுவனர் ஜெஃப்.

 ஸ்டீவ் ஜாப்ஸின் பிக்சேர்!

இந்தப் புத்தகத்தில் பல உதாரணங் களை புத்தகத்தின் ஆசிரியர் பீட்டர் சிம்ஸ் சொல்லியிருந்தாலும், ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையின் கீழ் இயங்கிய பிக்சேர் ஸ்டுடியோஸ் (Pixar Studios) பற்றி கொஞ்சம் விரிவாகவே எடுத்துச் சொல்லியிருக்கிறார். மிகவும் சிக்கலான பிம்பங்களைப் பார்ப்பதற்கு உதவும் பொருட்டு கணினிகளைத் தயாரிக்கத் திட்டமிட்டு ஜார்ஜ் லூகாஸால் ஆரம்பிக்கப்பட்ட லூகாஸ் ஃபிலிம்ஸின் ஓர் அங்கம்தான் பிக்சேர். இந்த நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் 1986-ம் ஆண்டு 5 மில்லியன் டாலருக்கு வாங்கினார். அந்த நேரத்தில் இந்த நிறுவனம் அனிமேஷன் வேலைகளில் கவனம் செலுத்தி வந்தது. அதன் முக்கியமான வேலை பிக்சேர் ஹார்டு்வேர்களினால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை உலகுக்குத் தெரியப்படுத்துவதுதான்.

ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் சிறிய, சிறிய அனிமேஷன் வேலைகளை – `சின்னச் சின்ன சவால்களாக’ ஏற்றுக்கொண்டு செய்ய ஆரம்பித்தார். இந்தச் சிறிய அனிமேஷன் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதன் க்ரியேட்டிவ் டீம் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களது தொழில் நுட்பத்தை மேம்படுத்தி 1988-ம் ஆண்டு ‘டின் டாய்’ என்கிற அனிமேஷன் படத்தை எடுத்தது. அதற்கு அந்த ஆண்டு ஆஸ்கார் விருது கிடைத்தது. பிறகு இந்தக் குறும்படம் ‘டாய் ஸ்டோரி’ என்கிற பெயரில் அனிமேஷன் திரைப்படமாக உலகெங்கும் வெளியிடப்பட்டு ஏறக்குறைய 350 மில்லியன் டாலரை வாரிச் சுருட்டியது.

சின்னச் சின்ன சவால்களைச் செய்துபாருங்கள்!

 யூனுஸின் சின்னச் சவால்!

இன்னொரு உதாரணமாக சிம்ஸ் சொல்லியிருப்பது பங்களாதேஷைச் சேர்ந்த முகமது யூனுஸின் கிராமீன் வங்கி. இதுதான் `மைக்ரோ ஃபைனான்ஸ்’ என்கிற கோட்பாட்டை உலகளவில் பரவலாக்கியது. இதன் மூலம் பல தனிநபர்களும், சுய உதவிக் குழுவினரும் பயன்பட்டு வருகின்றனர். இது நிதி உலகில் முயற்சிக்கப்பட்ட ஒரு `லிட்டில் பெட்’ ஆகும்.

 புதிய சவால்கள்!

கூகுள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் தங்களது வேலை நேரத்தில் 20% நேரத்தை இந்த மாதிரியான `லிட்டில் பெட்ஸ்’ சோதனைகளில் ஈடுபட அந்த நிறுவனம் அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சமீபத்தில் அமேசான் முயற்சி செய்துபார்த்த `டிரோன் (drone) டெலிவரி’ முறையும் – அதாவது, பொருட்களைக் குறிப்பிட்ட தூரத்திற்குள் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய மிகச் சிறிய அளவிலான ஆளில்லா டிரோன்களைப் பயன்படுத்துவது இந்த வகையைச் சேர்ந்ததுதான். இதற்குத் தேவையான அனுமதிகள் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும்பட்சத்தில் இது `லாஜிஸ்டிக்’ உலகில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணும் என்பதில் சந்தேகமில்லை.

நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சிறிய சிறிய சவால்களிலும், கண்டுபிடிப்புகளிலும் ஈடுபட்டு வந்தால் அதுவே உங்கள் தொழிலில், வேலையில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதைப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது நமக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. சின்னச் சின்ன சவால்களைச் செய்து, வாழ்க்கையில் ஜெயிக்க, இந்தப் புத்தகத்தை நீங்கள் ஒருமுறை நிச்சயம் படிக்கலாம்.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கக்கூடும்)