நடப்பு
Published:Updated:

நாணயம் லைப்ரரி : தலைமை... புதுமை... முன்னேற்றம்!

நாணயம் லைப்ரரி : தலைமை... புதுமை... முன்னேற்றம்!

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது பைசல் ஹக் மற்றும் டிரேக் பேர் எழுதிய ‘எவ்ரிதிங் கனெக்ட்ஸ்’ என்னும் புத்தகத்தை. புதுமை, புதுமை என்று அலையும் உலகில் எப்படி அதற்கேற்ற வாறு மாற்றங்களை ஏற்படுத்தி முன்னேறிச் செல்வது என்பது குறித்து தலைவர்களுக்குச் சொல்வதற்காக எழுதப்பட்டது இந்தப் புத்தகம்.

பொதுவாக, தொழில்நுட்ப வளர்ச்சியானது உலகத்தைச் சுருக்கி, விட்டது. இந்தச் சுருக்கத்தினால் வாய்ப்பு கள் அதிகரித்ததைப்போல, சவால்களும் அதிகமாகிவிட்டன. தொழிலில் வாய்ப்பு களை உபயோகிக்கவும், அதிலிருக்கும் சவால்களை எதிர்நோக்கவும் நமக்குக் கிடைக்கும் நேரம் மிகவும் குறைந்து விட்டது! நமக்குக் கிடைக்கும் இந்தக் குறைந்த நேரத்தில் நாம் சந்திக்க வேண்டிய சவால்களை எதிர்கொள்ள ஒரு தலைமையானது என்னென்ன குணாதிசயங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கும் பயிற்சியாளர்தான் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள்.

தொழில்முனைவோர் என்பதற்கு, பொருளாதார ரீதியில் தனது வாழ்வுக்குத் தன்னையே பொறுப்பாக்கிக் கொண்டவர்' என்ற ஒரு புதுவிளக்கத்தை இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள் தந்துள்ளனர். ஒரு தொழில்முனைவோர் என்பவர், எந்தச் சூழ்நிலையில் யாராக இருந்து எப்படிச் செயல்படுவார் என்பதுதான் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் முதல் கேள்வியாக இருக்கும் என்கிறார்கள் ஆசிரியர்கள். இதற்கு ஆசிரியர்கள் சொல்லும் உதாரணமே அலாதியானது.

நாணயம் லைப்ரரி : தலைமை... புதுமை... முன்னேற்றம்!

‘‘உங்கள்முன் ஒரு பீங்கான் கப் இருக்கிறது. அதில் காபி இருக்கிறது. கப்பினால் உங்களுக்கு என்ன உபயோகம்? கப்பில் இருக்கும் காபி உங்களுக்கு குடிக்க உதவும். காபியைக் குடித்தபின் கப்பில் ஒன்றும் இருக்காது. அப்போது அந்த கப் உங்களுக்கு உபயோகப்படுமா? உபயோகப்படாது. அப்படியெனில், கப்புடன் காபி சேர்ந்தால்தான் மதிப்பு. அதாவது,  காபிக்குத்தான் மதிப்பு. கப்புக்கு அல்ல.  

சரி, இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். கப்பில் பாதி காபி இருக் கிறது. காபியின் ருசியோ சூப்பர். இன்னும் கொஞ்சம் கேட்டால் கிடைக் கும். ஆனால், ஏற்கெனவே கப்பில் பாதி காபி இருக்கிறதே, என்ன செய்வது? இந்தச் சூழலில், உங்களுக்கு எப்படிப்பட்ட  கப் வேண்டும். காலி கப்தான் வேண்டும். கொஞ்ச நேரத்துக்கு முன் காலி கப்பினால் பிரயோஜனம் இல்லை என்றீர்கள், இப்போது காலி கப்தான் வேண்டும் என்கிறீர்களே?

இந்த உதாரணத்தில் கப்புக்குப் பதில் உங்கள் மூளையை வைத்துக்கொள் ளுங்கள். ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், உங்கள் மூளையைக் காலியாய் வைத்து அதுகுறித்த அனைத்து விஷயங்களையும் உள்வாங்க வேண்டும். அதுதான் எனக்குத் தெரியுமே என்றிருந்தால் உள்வாங்க முடியாது. அதேசமயம், சில இடத்தில் உங்கள் மூளையில் இருக்கும் விஷயத்தை உபயோகித்து வெற்றி பெற வேண்டியிருக்கும். இதுதான் உலக நடைமுறைச் சிக்கலே. காலியாய் இருப்பது ஓர் இடத்தில் சிறந்தது. முழுவதும் நிறைந்து இருப்பது இன்னொரு இடத்தில் சிறந்தது’’ என்கின்றனர் புத்தகத்தை எழுதிய ஆசிரியர்கள்.

ஒரு வேலையை ஆரம்பத்தில் பயிலும் மனநிலையில் இருக்கும் ஒருவரால்தான் புதுமைகளைக்  கொண்டு வருவது சாத்தியமாகும் என்கிறார்கள் ஆசிரியர் கள். ஏனென்றால், தொடக்கத்தில்  ஏகப்பட்ட நடப்புகளுக்கான சாத்தியக் கூறுகள் மனதில் இருக்கும். சரியா, தவறா தொழில்நுட்பம் ஒத்துழைக்குமா என்றெல்லாம் கவலைப்படாமல் யோசிப்பார். ஆனால், நிபுணர்தான் தனக்கு எல்லாம் தெரியுமே என்று யோசிப்பவராயிற்றே! அவரால் எங்கே புதுமையைக் கொண்டுவர முடியும் என்று கிண்டலடிக்கின்றனர் ஆசிரியர்கள்.
 
‘‘ஒரு எக்ஸிக்யூட்டிவ்வாக உங்களுக்கு ஒன்று புரிந்தேயாக வேண்டும். உலகத்தில் சில விஷயங்கள் பல காலம் கடந்தும் ஒரேமாதிரியாக இருக்கும். சில விஷயங் கள் அந்தத் தன்மையுடையவையாக இருக்காது. உதாரணத்துக்கு, உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செல்போனைப் பாருங்கள். ஐந்து வருடத்துக்கு முன்னால் இருந்த அளவும் தொழில்நுட்பமுமா இப்போது இருக்கிறது?

ஆனால், ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுக்கும்போது, ஒரு மேடைப் பேச்சு பேசும்போது, என்ன செய்கிறீர்கள்? சாக்ரட்டீஸ் சொன்னார் என்று பின்னோக்கிப் போகிறீர்கள் இல்லையா? இது காலம் கடந்து நிற்கும் விஷயம். டெக்னாலஜி காலமாற்றத்தைத் தாக்குப் பிடிக்காத விஷயம் என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று சொல்லும் ஆசிரியர்கள், பெர்சனாலிட்டி பற்றி சில சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளைச் சொல்கின்றனர்.

நாணயம் லைப்ரரி : தலைமை... புதுமை... முன்னேற்றம்!

‘‘பெர்ஃபார்மென்ஸ் என்பது பெர்சனாலிட்டியைப் பொறுத்தது. நீங்கள் ஸ்டார் பெர்சனாலிட்டி ஆக இருப்பதிலேயே சிறந்த விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். வீடு, ஆபீஸ் எல்லாம் ஒன்று தான். எல்லாம் டாக்குமென்ட் ஆகியிருக்கணும். என் அனுமதி இல்லாமல் ஒரு சின்ன விஷயம் கூட நடக்காது என்று சொல்பவரா நீங்கள்? அப்படியானால், நீங்கள் அதிகார வர்க்கம். அந்தந்த வேலையை அதற்கேற்ற நபர்களிடம் விடும் நபரா நீங்கள்? அட, நீங்கள் இன்ஜினீயரிங் பெர்சனாலிட்டி. நான் சொல்றதைச் செய்யப்பா என்கிற டைப்பா? ஏகாதிபத்தியம். இவ்வளவுதான் அலுவலகத்தில் இருக்கும் பெர்சனாலிட்டி டைப்புகளே'' என்று சொல்லும் ஆசிரியர்கள், ஒவ்வொரு பெர்சனாலிட்டியும் எந்த மாதிரியான ரிசல்ட்டுகளைத் தரும் என்பதையும் சொல்கின்றனர்.

ஒரு நிறுவனத்தினுள் வேலை பார்ப்பவர்களிடையே இருக்கும் அலுவல்ரீதியான நட்புறவின் முக்கியத் துவத்தை (நிறுவனத்துக்கு) மிகவும் அழகாகச் சொல்லியிருக்கும் ஆசிரியர் கள், புதுமை என்பது இந்தவகை நட்புறவு அதிகமாக இருக்கும் இடத்திலேயே மிக அதிகமாகத் தோன்றுகிறது என்கின்றனர்.

நாணயம் லைப்ரரி : தலைமை... புதுமை... முன்னேற்றம்!

‘‘ஒவ்வொரு டீமும் அதன் அங்கத்தினரின் நடுவே இருக்கும் அலுவல்ரீதியான நட்புறவினால் வலுப் பெறுகிறது என்பதை ஒப்புக்கொண்டே யாக வேண்டும்'' என்று சொல்லும் ஆசிரியர் கள்,  ஒரு டீமில் இருப்பவர்களில் சிலர் அலுவலகத்தின் ஏனைய டீம் களோடு நல்லதொரு அலுவல் ரீதியான நட்பை பேணுபவர்களாக இருக்கும் போது அவர்களுடைய டீமுக்குப் பெருமளவிலான வெற்றிக் கிடைக்கிறது என்பதை ஆதாரத்துடன் வாதிடு கின்றனர். அலுவல்ரீதியான நட்புறவை அளந்தாலே டீமின் வெற்றியை

நாணயம் லைப்ரரி : தலைமை... புதுமை... முன்னேற்றம்!

சுலபத்தில் கணித்துவிடலாம்.

நிர்வாகம் பணியாளர்களிடம், நாங்கள் சுபிட்சமடையும் அளவுக்கு உங்கள் செயல்பாடுகள் இருந்தால், உங்களைச் சுபிட்சமடையச் செய்வோம் என்கிறது.

பணியாளர்களோ, நீங்கள் எங்களைச் சுபிட்சமாக வைத்தால், நாங்கள் உங்களைச் சுபிட்சமடையச் செய்வோம் என்கின்றனர். இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் புதுமைகள் நிச்சயமாய்த் தோன்றுமே’’ என்று முடிக்கின்றனர் ஆசிரியர்கள்.


தொழில்முனைவோரானாலும் சரி, அதிகாரிகள் ஆனாலும் சரி, முன்னேற்றத்துக்குப் புதுமைகள் மட்டுமே வழி என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை ஒருமுறையாவது படிக்க வேண்டும்.

- நாணயம் டீம்.
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்
வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்)