Published:Updated:

நிராகரிப்பை எதிர்கொள்ள சிரமப்படுகிறீர்களா? இந்த மெசேஜ் உங்களுக்காகத்தான்!

பிரபலங்கள் எதிர்கொண்ட நிராகரிப்புகளையும், அவர்கள் அதை எப்படி நேர்மறையாக எடுத்துக்கொண்டு `துள்ளியெழுந்து’ சாதனை படைத்தார்கள் என்பதையும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டு, வாசிப்பவர்களை யோசிக்க வைத்திருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் அம்பி பரமேஸ்வரன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நிராகரிப்புக்கு உள்ளாகாமல் யாருக்கும் ஜெயித்துவிட முடியாது. இன்றைக்கு வெற்றிக்கொடி நாட்டியவர்கள் எல்லோருமே நிராகரிப்புக்கு உள்ளாகி, அதிலிருந்து மீண்டு வந்தவர்கள்தாம். ஆனால், நாமோ நிராகரிப்பை நமக்கே நமக்கென ஏற்பட்ட அவமானமாக நினைத்து, விலகிவிடுகிறோம். இதனால் வெற்றியை நோக்கி அடுத்த கட்டத்துக்கு நம்மால் முன்னேறவே முடியாமல் இருக்கிறது. இந்தக் கருத்தை ஆணித்தரமாக எடுத்துச் சொல்கிறது அம்பி பரமேஸ்வரன் எழுதிய ``ஸ்பிரிங் – பவுன்சிங் பேக் ஃப்ரம் ரிஜெக்‌ஷன் (Spring – Bouncing Back From Rejection)” என்கிற புத்தகம். வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்தில் நிராகரிப்பிலிருந்து மீண்டு வந்து ஜெயித்தவர்கள் பற்றிய சுவாரஸ்யமான குறிப்புகள் பலப்பல இருக்கின்றன.

Ambi Parameswaran
Ambi Parameswaran
Photo: Linkedin / aparameswaran

இந்தப் புத்தகத்தை எழுதிய அம்பி பரமேஸ்வரன், பிரபல விளம்பர நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தவர். இப்போது பிராண்ட் ஆலோசகராக இருக்கும் அவர், மும்பையில் வசித்து வருகிறார். தனது நீண்டகால அனுபவம், பல பிரபலங்களுடனான சந்திப்பு, அவர்களைப் பற்றி பல நூல்கள், கட்டுரைகள் மூலம் தெரிந்துகொண்ட விஷயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் புத்தகத்தை மிகவும் சுவாரஸ்யத்துடன் எழுதியிருக்கிறார்.

வெளி உலகத்தாரால் அதிகம் அறியப்பட்ட பிரபலங்கள் எதிர்கொண்ட நிராகரிப்புகளையும் அவர்கள் அதை எப்படி நேர்மறையாக எடுத்துக்கொண்டு `துள்ளியெழுந்து’ சாதனை படைத்தார்கள் என்பதையும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டு, வாசிப்பவர்களை யோசிக்க வைத்திருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் அம்பி பரமேஸ்வரன்.

ஆசிரியர் சந்தித்த நிராகரிப்புகள்

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அம்பி பரமேஸ்வரன், தன் வாழ்க்கையில் சந்தித்த நிராகரிப்புகளை முதலில் சொல்கிறார். 1970-களின் இறுதியில் ஐ.ஐ.டி சென்னையில் கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்த கையோடு கல்லூரி வளாகத்துக்கு மாணவர்களைத் தெரிவு செய்யவந்த ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் நடத்திய நேர்காணலில் எளிமையான ஒரு கேள்விக்கு பதிலளிக்க முடியாததால் அந்த வாய்ப்பை இழந்ததையும், அதன்பின் ஸ்ரீராம் ஃபைபர்ஸில் `இன்ஜினீயரிங் ட்ரையினி’யாக வாய்ப்பு கிடைக்க அதேநேரத்தில் ஐ.ஐ.எம்-கொல்கத்தாவில் எம்.பி.ஏ படிக்கவும் அழைப்புவர அதைத் தெரிவு செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Spring: Bouncing Back From Rejection
Spring: Bouncing Back From Rejection

அதன்பின் ஐ.ஐ.எம் வளாகத்துக்கும் யுனிலீவர்ஸ் நிறுவனம் மாணவர்களைத் தெரிவு செய்ய சென்றிருக்கிறது. அப்போது நீண்ட மாணவர்கள் பட்டியலிலிருந்து இவரும் இன்னொருவரும் மட்டுமே இறுதிச்சுற்று நேர்காணலுக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இவர் துரதிர்ஷ்டம், அதிலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. தனது பார்வையை விளம்பரத்துறை பக்கம் திருப்ப அப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டிருந்த விளம்பர நிறுவனமான ரீடிஃப்யூசனில் வேலை கிடைக்க அதில் சேர்ந்து தன்னை செதுக்கிக்கொண்டு விளம்பரத்துறையில் சுமார் 27 வருடங்கள் கோலோட்சி வந்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிராகரிப்பிலிருந்து மீளும் வழிகள் ✌️

ஸ்பிரிங் என்கிற `திருகு சுருள் வில்’லை தயாரிப்பதில் Coiling, Hardening and Polishing என மூன்று செயல்முறைகள் இருப்பது போல நிராகரிப்பை எதிர்கொண்டு மீள்வதையும் மூன்று பகுதிகளில்

- நிராகரிப்பை எதிர்பார்ப்பதும் எதிர்கொள்வதும்,

- பக்கவப்படுதலும் நிராகரிப்பிலிருந்து மீள்வதும்,

- நிராகரிப்பிலிருந்து படிப்பினையும் முன்னேற்றமும் எனப் பிரித்துச் சொல்லியிருக்கிறார்.

நிராகரிப்பை எதிர்கொள்ள உங்களைத் தயார்ப்படுத்திக்கொள்வது அவசியம். வேலை பார்க்குமிடத்தில் நீங்கள் கொடுக்கும் யோசனை நிராகரிக்கப்பட்டால் கொஞ்சம் நிதானித்து யோசியுங்கள். கொடுத்த யோசனையை மாற்றலாமா அல்லது முற்றிலும் புதிய யோசனையைக் கொடுப்பதா, அதற்கு என்ன செய்ய வேண்டும் என சிந்தித்து அதன்படி செயல்படுங்கள். அவர்கள் நிராகரித்தது உங்களது யோசனையைத்தானே தவிர, உங்களையல்ல என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நிராகரிப்பை எதிர்கொள்ளும்போதெல்லாம் இதை நினைவுகூர மறக்காதீர்கள்.

பலமுறை நிராகரிக்கப்பட்ட எழுத்தாளர்கள்

பிரபல எழுத்தாளர் அமிஷ் திரிபாதி, எழுத்தாளர் ஆவதற்கு முன்பு வங்கியில் உயர் பதவியில் இருந்தவர். இதிகாசத்தின் / புராணத்தின் அடிப்படையில் அவர் எழுதிய முதல் நாவல் `இம்மார்ட்டல்ஸ் ஆஃப் மெலுஹா’ பதிப்பாளர்களால் பலமுறை நிராகரிக்கப்பட்டது. இறுதியில் அவரே அதை அச்சில் கொண்டு வர புத்தகம் பிரபலமானது. அதன்பின், பதிப்பாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு அவரது நூலைப் பதிப்பிக்க ஆரம்பிக்க இன்றைக்கு அவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் சுமார் 35 லட்சம் பிரதிகள் விற்பனையாகிருக்கின்றன. இந்தியாவில் விற்பனையாகும் முதல் 10 புத்தகங்களில் (best sellers) இவரது ஆறு புத்தகங்கள் இடம் பெற்றிருப்பது உலகளவில் ஒரு சாதனையாகும்!

இதே மாதிரியான அனுபவம்தான் மற்ற எழுத்தாளர்களுக்கும் ஏற்பட்டது. இதில் குறிப்பிடத்தக்கவர் `சிக்கன் சூஃப் ஃபார் தி சோல் (Chicken Soup for the Soul)’ என்கிற பெயரில் புத்தகங்களை எழுதிக் குவித்த ஜாக் கேன்ஃபீல்ட். இவரது எழுத்து அச்சில் வருவதற்கு முன்பு 144 முறை நிராகரிக்கப்பட்டிருக்கிறது!

நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் புதிதாக ஏதேனும் ஒரு பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கும்போது அதற்கு நிரகாரிப்பு வரும் எனத் தெரிந்தாலும் உங்களது விதியை நொந்து கொள்ளாதீர்கள். நிராகரிப்பு என்கிற பயத்தை உபயோகித்து புதிய அணுகுமுறையோடு அந்தப் பொறுப்பை மேற்கொள்ளுங்கள்.

Sanjay Subrahmanyan
Sanjay Subrahmanyan
Photo: Twitter / sanjaysub

சஞ்சய் சுப்ரமணியத்துக்கு ஏற்பட்ட நிராகரிப்பு

பாடகர் சஞ்சய் சுப்ரமண்யன் மும்பையில் கலந்துகொண்ட ஒரு கச்சேரிக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமே. அதைப் பார்த்து கச்சேரிக்கு ஏற்பாடு செய்தவர்கள் சஞ்சயிடம் அதற்காக மன்னிப்புக் கேட்க அதற்கு அவர், `நீங்கள் என்னை கச்சேரிக்கு அழைத்தீர்கள். நான் அந்த வேலையைச் செய்கிறேன். பத்துப் பேராக இருந்தாலும் அவர்களுக்காக நான் பாடுகிறேன். அதைப் பற்றி நீங்கள் வருத்தப்பட வேண்டாம்’ எனக் கூறிவிட்டு அவர் எப்பவும் போல பிரமாதமாகப் பாடினார். அவர் கூட்டத்தைப் பார்த்து தன் பொறுப்பை நிராகரிக்கவில்லை. அப்படி செய்திருந்தால் அது கச்சேரிக்கென்று வந்தவர்களை அவமதிப்பு செய்வது போலவும், அவர் தொழில் நேர்த்தியற்றவர் எனவும் பதிவாகியிருக்கும். அவர் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

அப்துல் கலாமின் பெருந்தன்மை

மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் எஸ்.எல்.வி-3 திட்டத்துக்கு தலைமையேற்றிருக்கும்போது அது விண்ணில் ஏவப்பட்ட சில நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயல்படாமல் போனது. இதனால் கலாமும் அவரது குழுவினரும் வருத்தம் அடையக்கூடும் எனக் கருதி, அதைத் தன் தோல்வியென பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறியவர், அப்போது இஸ்ரோவின் தலைமைப் பொறுப்பிலிருந்த சதீஷ் தவான். சில மாதங்களுக்குப்பின் அந்தத் திட்டம் வெற்றியடைந்தபோது பத்திரிகையாளர் கூட்டத்தில் கலாமையும் அவரது குழுவினரையும் முன்னிறுத்தி வெற்றிக்குக் காரணம் அவர்களே எனக் கூறினார். இந்தத் தலைமைத்துவப் பண்பினால் கலாமும் அவரது குழுவினரும் முதலில் தோல்வியடைந்தாலும் உற்சாகத்தோடு அடுத்த கட்டத்துக்குச் சென்று வெற்றி பெற்றார்கள்.

அப்துல் கலாம்
அப்துல் கலாம்

இதுபோல, கீத் சேத்தி, பி.வி.சிந்து, ககன் நரங் (2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஏர் ரைஃபில் பிரிவில் தோல்வியுற்றாலும், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்) ஆகியோர் எதிர்கொண்ட நிராகரிப்புகளையும் தோல்விகளையும் சுட்டிக்காட்டியிருப்பதோடு அது அவர்களை எந்த அளவுக்குப் பக்குவப்படுத்தி, அவரவர் வேலையில் / பயிற்சியில் மேலும் கவனத்தைக் குவிக்க வைத்து வெற்றி பெறச் செய்தது என்பதையும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுவும் கடந்துபோகும்...

வாய்ப்புகளை இழந்தது பற்றியும் நிராகரிக்கப்பட்டது பற்றியும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பேடி அப்டன் (Paddy Upton) கூறுவதைப் பார்ப்போம்...

1. நிராகரிப்பினால் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்டது என நினைக்காமல், ஒரு வரையறைக்குள் பாருங்கள்.
2. வாழ்க்கை மற்றும் கற்றலின் ஒரு பகுதியாக நிராகரிப்பை எதிர்பார்ப்பதோடு ஏற்றுக்கொள்ளவும் செய்யுங்கள்.
3. இதுவும் கடந்து போகும் (சூரியன் மறுநாளும் உதிக்கும் என்பது எவ்வளவு தீர்க்கமானதோ அதுபோல) என நம்புங்கள்.
4. எதைக் கட்டுப்படுத்த முடியுமோ, அதைக் கட்டுப்படுத்துங்கள். உங்களால் கட்டுப்படுத்த முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்.
5. மதிப்பாய்வு செய்து அதிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
6. மேம்படுத்திக்கொள்ள திட்டமிடுங்கள்.
7. தோல்வியோ, வெற்றியோ உங்கள் பண்புகளை நிர்ணயிக்கும்படி வைத்துக்கொள்ளாதீர்கள்.

நிராகரிப்பு நால்வரின் கண்ணோட்டம்

வெற்றியானது தோல்வியிலிருந்து தூரத்தில் இருக்கிறது.
தாமஸ் ஜே. வாட்ஸன் (நிறுவனர், ஐபிஎம்)
சிரமங்களுக்கு மத்தியில் வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
`நீ தோல்வி அடையவில்லை எனில், உன்னால் எதுவும் செய்ய முடியாது’ என்று எனக்கு என் அப்பா கூறியது ஒரு மிகச்சிறந்த புத்திமதியாகும்.
எம்மா தாம்ஸன் (இங்கிலாந்து நாட்டு நடிகை)
எனது வெற்றியை வைத்து நான் யாரென முடிவு செய்யாதீர்கள், எத்தனை முறை விழுந்து மீண்டும் எழுந்திருக்கிறேன் என்பதை வைத்து முடிவு செய்யுங்கள்.
நெல்சன் மண்டேலா

புத்தகத்தை நிராகரிக்காதீர்கள் 😉

ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பிரபல மேற்கோளுடனும் இறுதியில் அந்த அத்தியாயத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை `கட்டம் கட்டி’யும் வலியுறுத்தியிருப்பதோடு நூலின் இறுதியில் வாசகர்களின் பயிற்சிக்கென `ஏழு ஒர்க்‌ஷீட்’டுகளை கொடுத்திருப்பதும் சிறப்பு.

நிராகரிப்பையும் தோல்வியையும் வெற்றிக்கான படிக்கட்டுகளாக எண்ணினால் அதிலிருந்து மீள்வதும் வெற்றி பெறுவதும் அவ்வளவு கடினமில்லை என்பதை இந்நூலாசிரியர் பலரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதியிருப்பதால் அலுப்பில்லாமல் வாசிக்க முடிகிறது. எனவே, நிராகரிப்பிலிருந்து மீள முயல்வோர் இந்நூலை `நிராகரிக்காதீர்கள்!'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு