Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

கறுப்பு - சிவப்பு - நீலம் என்னும் மூன்று நிறங்களும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசப்பட்டுவரும் சமகாலச் சூழலில், அப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்பதற்கான ஆவணம் இந்தப் புத்தகம்.

படிப்பறை

கறுப்பு - சிவப்பு - நீலம் என்னும் மூன்று நிறங்களும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசப்பட்டுவரும் சமகாலச் சூழலில், அப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்பதற்கான ஆவணம் இந்தப் புத்தகம்.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை
‘இப்படி ஒரு போராளி நம்மிடையே வாழ்ந்தாரா?' என்று ஆச்சர்யப்படத்தக்க அளவுக்கு சாகசங்களும் தியாகங்களும் கொண்ட வாழ்க்கை, ஏ.ஜி.கே என்று அழைக்கப்படும் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் வாழ்க்கை. திராவிடர் கழகத்தில் இணைந்து காவிரி டெல்டாவில் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தைக் கட்டியமைத்தவர். விவசாயத் தொழிலாளர்களைப் புழுக்களுக்கும் கீழாக நடத்தி, உரிய கூலி தராமல் ஏமாற்றி, பெண்கள்மீது பாலியல் அத்துமீறல்களை மேற்கொண்ட நிலப்பிரபுக்களுக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி, உரிமைகளை வென்றெடுத்தவர் ஏ.ஜி.கே.

காமராஜர் ஆதரவு - காங்கிரஸ் ஆதரவு என்ற பெரியாரின் நிலைப்பாடு ஏற்படுத்திய நெருக்கடியால் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து மக்களுக்கான போராட்டங்களைத் தொடர்ந்தார். கீழ்வெண்மணிக் கொடூரத்தின்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ஏ.ஜி.கே, நிலப்பிரபுக்களால் கொல்லப்பட்டார் என்ற வதந்தி பரவியதால், மக்கள் மூவரைக் கொன்றனர். ‘அந்தணப்பேட்டை முக்கொலை வழக்கு' என்றழைக்கப்பட்ட இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின் ஆயுள்தண்டனைக் கைதியானார் ஏ.ஜி.கே.

24 ஆண்டுகள் சிறையில் கழித்த ஏ.ஜி.கே அங்கும் சும்மா இருக்கவில்லை. சிறைக்கைதிகளின் உரிமைகளுக்காக ‘சிறைப்பட்டோர் நலச்சிங்கம்' என்னும் ரகசிய அமைப்பை ஏற்படுத்தியதுடன் அதற்கான கையெழுத்து இதழையும் நடத்தினார். வாழ்வின் பெரும்பகுதியைச் சிறையில் கழித்து விடுதலையாகி 52 வயதில்தான் திருமணம், குழந்தைகள் என இல்லற வாழ்க்கைக்குத் திரும்பிய ஏ.ஜி.கே, மீண்டும் திராவிடர் கழகத்தில் இணைந்தும் ‘தமிழர் தன்மானப் பேரவை’ என்னும் அமைப்பை நடத்தியும் செயற்பட்டு நிறைவாழ்வு வாழ்ந்து 84வது வயதில் மறைந்தார்.

ஏ.ஜி.கே என்னும் இந்த சமரசமற்ற போராளியின் வாழ்க்கை கீழத்தஞ்சையைத் தாண்டி அறியப்படாமலிருந்தபோது பசு.கவுதமன், பாவெல் சூரியன் ஆகியோர் அவர் குறித்த பதிவுகளைக் கொண்டுவந்திருந்தனர். அவர் மறைந்த பிறகு ஏ.ஜி.கே குறித்த விரிவான பதிவுகளைக் கொண்டுவந்திருக்கிறார் மு.சிவகுருநாதன்.

பெரியாரியமும் பெரியாரியக்கமும் தவறவிட்ட, தவறிழைத்த புள்ளிகளை விமர்சனப் பார்வையுடன் சுட்டிக்காட்டும் தய்.கந்தசாமியின் கட்டுரை. அமெரிக்கத் தொழிலாளர் இயக்கங்களுக்குள் நிலவிய இனப்போராட்டங்களை விவரித்து உலகளாவிய பார்வையுடன் ஏ.ஜி.கேவின் பணிகளை அணுகும் வ.கீதாவின் கட்டுரை. சிறையில் ஒரு வழிகாட்டிக்கான முன்னுதாரணமாக ஏ.ஜி.கே விளங்கியதைச் சுவைபடக்கூறும் தியாகுவின் கட்டுரை, இயக்கச் செயல்பாடுகளை அருகிருந்து பார்த்த சாக்கோட்டை இளங்கோவனின் கட்டுரை ஆகியன அவரை மதிப்பிட உதவும்.

கறுப்பு - சிவப்பு - நீலம் என்னும் மூன்று நிறங்களும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசப்பட்டுவரும் சமகாலச் சூழலில், அப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்பதற்கான ஆவணம் இந்தப் புத்தகம்.

- சுகுணா திவாகர்

என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி

னது சிலாக்கியமான வாசிப்புத் தேடலின் வழியே தன்னை மேம்படுத்திக்கொண்டவர் உமர் பரூக். எளிய நடை, எளிய மொழி, எளிய பதம் என எளிய வாசகர்களை இலக்காகக் கொண்டு இயங்கும் இளம் எழுத்தாளர்களில் தனித்துவமானவர். கவிதையில் அடியெடுத்து வைத்து, சிறுகதை, கட்டுரை எனப் பயணித்து, தொழில்முறையாய் ஏற்றுக்கொண்ட மரபுவழி மருத்துவத்தில் ஆழங்கால்பதித்து முப்பதுக்கும் மேற்பட்ட மருத்துவக் கட்டுரை நூல்களும், சமீபத்தில் இலக்கியமாய்ப் பதிவாகியுள்ள அவரது ‘ஆதுரசாலை’ நாவலும், சொந்த மாவட்டத்தின் தொல்லியல் சான்றுகளை ஆய்வுசெய்து ஆவணமாக்கிய ‘அழநாடு’ கையேடு நூலும் சான்றுகள். உமர் பரூக் பன்முகம் கொண்ட ஒரு மனிதனாய் தத்துவத் தெளிவும் சமூக அக்கறையும் மிக்கவொரு புரிதலுள்ள தெளிந்த இலக்கியவாதியாய் வளர்ந்து வருவது தமிழுக்கான வரப்பிரசாதமென்பேன்.

காமுத்துரை.ம

உமர் பரூக், சி.எம்.முத்து
உமர் பரூக், சி.எம்.முத்து

ஆளுமை போற்றுதும்!

கா
விரிப்படுகையின் வண்டல் மண் வாழ்க்கையை, சார்பின்றிப் பதிவு செய்த மூத்த படைப்பாளி சி.எம்.முத்து. அந்த நேர்மையே தமிழின் முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாளிகள் வரிசையில் அவரை இணைக்கிறது. எளிய குடும்பத்தலைவராக, சகதியில் உழலும் விவசாயியாக வாழ்ந்துகொண்டே எழுதும் முத்துவின் எல்லாப் படைப்புகளிலும், நிலச்சுவான்தாரர்களான மிராசுகளின் ஆகிருதி, அந்தரங்கங்கள், ஆதிக்க மனோபாவம், கீழ்ப்படிந்து வாழ்ந்த எளிய மக்களின் துயரம் தோய்ந்த வாழ்க்கை படிந்திருக்கின்றன. நெற்குதிர்கள், மரக்கலப்பைகள், காளை மாடுகள், கூண்டு வண்டிகள், மண்பாண்டங்கள் என தஞ்சையின் பச்சைய வாசனை மணக்க மணக்க எழுதும் முத்து, உறவுநிலைச் சிக்கல்களையும் உளவியல் புரிதலோடு பதிவு செய்திருக்கிறார். தமிழக வரலாற்றை நெடுக ஆய்வுசெய்து, வேளாண் மக்களின் சரிவை முன்னிறுத்தி எழுதியிருக்கும் ‘மிராசு’ நாவல், ஆகச்சிறந்த தமிழ் நாவல்கள் வரிசையில் இடம் பிடிக்கிறது. ‘நெஞ்சின் நடுவே’, ‘கறிச்சோறு’, ‘இவர்களும் ஜட்கா வண்டியும்’, ‘வேரடி மண்’, ‘ஐந்து பெண்மக்களும் அக்ரஹாரத்து வீடும்’ போன்ற நாவல்கள், ‘ஏழுமுனிக்கும் இளைய முனி’, ‘மழை’, ‘அந்திமம்’ போன்ற சிறுகதை நூல்கள் முத்துவின் பெயரைக் காலத்தில் விதைத்தவை.

வெ.நீலகண்டன்

ஏ.ஜி.கே.எனும் போராளி

தொகுப்பு: மு.சிவகுருநாதன்

வெளியீடு: பன்மை, நிலா வீடு, 2/396 பி, புரட்டாசி வீதி, கூட்டுறவு நகர், திருவாரூர் - 610004

அலைபேசி: 98424 02010, 98428 02010

பக்கங்கள்: 296

விலை: ரூபாய் 290