Published:Updated:

“மனிதர்களுக்கு அவர்களின் மகிழ்ச்சிக்குரிய உடல் மீட்டுக் கொடுக்கப்பட வேண்டும்!”

ரமேஷ் பிரேதன்
பிரீமியம் ஸ்டோரி
ரமேஷ் பிரேதன்

ரமேஷ் பிரேதன்

“மனிதர்களுக்கு அவர்களின் மகிழ்ச்சிக்குரிய உடல் மீட்டுக் கொடுக்கப்பட வேண்டும்!”

ரமேஷ் பிரேதன்

Published:Updated:
ரமேஷ் பிரேதன்
பிரீமியம் ஸ்டோரி
ரமேஷ் பிரேதன்

நவீனத் தமிழ் இலக்கியத்தில், மிகத் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் இயங்கிவருபவர் ரமேஷ் பிரேதன். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் விரிவாகவும் நுட்பமாகவும் புதுமைகளை எழுதிப் பார்த்தவர். பிரேமுடன் இணைந்து 21 நூல்களை எழுதிய ரமேஷ் பிரேதன், கவிதை, நாவல் வகைமைகளில் 12 நூல்களைத் தனித்தும் எழுதியுள்ளார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளவருக்கு இன்று தமிழும் இலக்கியமுமே காலமும் வெளியுமாக இருக்கின்றன. பாண்டிச்சேரியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தோம். சுவரில் சட்டகமிடப்பட்ட ஓவியங்களிலிருக்கும் வள்ளலாரையும் பாரதியையும் ‘தனது அறைத்தோழர்கள்’ என்று அறிமுகப்படுத்துகிறார். “மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன் என்று கவிதை எழுதிய ஒருவனை, சுதந்திர தினத்தன்று சந்திக்க வந்திருக்கிறீர்கள்...” என மலர்ந்து சிரிக்கிறார் ரமேஷ். முற்பகல் தொடங்கி, பொழுது அந்தியாகும் வரை உரையாடிக்கொண்டேயிருந்தோம்...

“ஒரு முழுநேர எழுத்தாளராக, உடல்நிலை நிர்பந்தத்தால் இன்றைக்குப் பெரும்பாலும் ஓர் அறைக்குள்ளாகவே வசிப்பவராக, உங்களின் ஆகப்பெரும் புழங்குவெளி என்பது மொழிதான். மொழி, உங்களுக்கு என்னவாக இருக்கிறது? மொழிக்கும் உங்களுக்குமான உறவு எப்படியானது?”

“மனிதர்களுக்கு அவர்களின் மகிழ்ச்சிக்குரிய உடல் மீட்டுக் கொடுக்கப்பட வேண்டும்!”

“எனக்கு முதலில் அறிமுகமான அறிவே மொழிதான். நான் உடம்பால் ஆனவன். உடம்பாலான பிற மனிதர்களை நான் என் மொழியால்தான் தொடர்புகொள்கிறேன். என் ஐம்பத்தைந்து ஆண்டு வாழ்க்கையில், வெகு சிலரை மட்டுமே நான் என் உடம்பால் தொடர்புகொண்டிருக்கிறேன். மற்றவர்களை மொழியால் மட்டுமே தொடர்புகொள்கிறேன். மொழியால், அவர்கள் உடம்புக்குள் நுழைந்து அவர்களின் ஆன்மாவைத் தொடுகிறேன். அவர்களும் மொழியின் வாயிலாகவே என் ஆன்மாவைத் தொடுகிறார்கள். ஒரு துணியை நெய்வதுபோல ஊடுபாவாக மனிதர்களை மொழிதான் பின்னிக்கொண்டிருக்கிறது. எனக்கு முதலும் கடைசியுமாக இருக்கிற ஒரே அலகும் வெளியும் மொழி மட்டும்தான். இறுதியில் என் உடம்போடு அழியப்போகிற ஒன்று இருக்குமெனில், அது என்னில் இயங்கும் என்னை இறுதிவரை இயக்கும் மொழிதான். சுருக்கமாகச் சொன்னால், நான் ஓர் எளிய மொழியுயிரி.

பொதுவாகச் சொல்லப்படுவதுபோல, மொழி என்பது வெறுமனே தகவலையும் உணர்வையும் கடத்துகிற கருவி மட்டுமல்ல. மொழியே உணர்வு. மொழியே நான். என்னிடமிருந்து மொழியை எடுத்துவிட்டால், மிஞ்சுவது ஒன்றுமில்லை. ரமேஷ் என்பது எலும்பும் தசையும்கொண்டு சமைந்த வெறும் உடம்பு. இந்த உடம்பைப் பொருண்மை செய்வது மொழிதான். என் பெரும்பான்மையான இயங்குதளம் அறிவென்றால், அந்த  அறிவு, மொழியால்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மொழியை மீறி அறிவு செயல்படாது. விஞ்ஞானியின் அறிவாகட்டும், கவிஞனின் அறிவாகட்டும் மொழி வழியாகவே சாத்தியமாகியிருக்கிறது. மொழியைத் தாண்டி ஒருவரால் சிந்திக்கமுடியாது. சிந்தனை என்பதே மொழிதான். நாம் எல்லோருமே மொழி உயிரியாகத்தான் இருக்கிறோம். பைத்திய நிலையிலும் மனிதன் சிந்திக்கிறான், அதற்கொரு மொழியிருக்கிறது. அம்மொழியின் அர்த்த தர்க்கத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியாமல், தொடரமுடியாமல் போகலாம். ஆனாலும் அம்மனதிலும் மொழி செயல்படுகிறது. தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு எனச் சில மொழிகளில் நான் இயங்கினாலும், என் வாழ்வின் எல்லாமுமாகி நிற்கும் அதிசயம் தமிழ்தான். ‘யாதுமாகி நின்றாய் காளி’ என்றானல்லவா ஒரு கவி, அந்த உருவக நிலையில் எனக்கு எல்லாமுமாகி நிற்கும் காளி, தமிழ்தான்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“மனிதர்களுக்கு அவர்களின் மகிழ்ச்சிக்குரிய உடல் மீட்டுக் கொடுக்கப்பட வேண்டும்!”

“மொழி, பொதுவானதுபோலத் தோன்றினாலும் ஒவ்வொரு தனி மனிதரின் மொழியும் பிரத்யேகமானதுதான். ஒவ்வொருவரது தனிப்பட்ட சொற்சேகரமும் பயன்படுத்தும் விதமும் அம்மொழியில் வெளிப்படும் அரசியல் மற்றும் கருத்து நிலைகளும் தனித்துவமானவையே. சிலர், அரசியல் சரிநிலைச் சல்லடையில் சொற்களைச் சலித்துவைத்திருப்பதை அவதானித்திருக்கிறேன். ரமேஷ் பிரேதனின் மொழியைப் பற்றிச் சொல்லுங்கள்...”

“மொழி என்பது ஒரு பன்னாட்டு அறிவு முனையம். ‘எனக்குத் தமிழறிவு மட்டும் போதும், மற்றவற்றை ஒதுக்குகிறேன், ஒவ்வாமையாக இருக்கிறது’ என்று விலகி நின்று எதையும் நாம் உருவாக்க முடியாது. நமது ‘திருக்குறள்’கூட பன்முனைப் பண்பாட்டு முனையம்தான். இந்திய மரபில் மூத்த பனுவலாகச் சொல்லப்படும்  ‘ரிக்’ வேதம்கூடப் பல பண்பாடுகளுடைய குவிமையமாகத்தான் இருக்கிறது. அது, ‘Let noble thoughts from

everywhere’ என்றுதான் சொல்கிறது. பாரதியும்கூட,  ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்கிறான். சுயம்புவாக ஒருபடித்தான பனுவல் என்பதோ, அறிவு என்பதோ ஒருபோதும் சாத்தியமேயில்லை.

எனக்குள் பல்வேறு கால அடுக்குகள் செயல்படுகின்றன. என் மூளை என்பது ரமேஷின் மூளை இல்லை. அது ஐந்தாயிரம் ஆண்டுப் பழைமையானது. அத்தனை கால அடுக்குகளின் நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறது. அகழாய்வுகள் வழியாகப் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழும்போது, ஏற்கெனவே என் மூளைக்குள் அவை சேகரமாகியிருப்பதைக் கண்டறிந்து, பெயரிடுவது மட்டும்தான் என் வேலையாக இருக்கிறது. நான் என்பது ஒருமை இல்லை; பன்மை. நான் என்பது காலத்தின் நீட்சி. தமிழ் ஒரு செவ்வியல் மொழி என்றால், நான் ஒரு செவ்வியல் உயிரி. என் மொழியும் அறிவும் மிகப் பழைமையானவை. என் மரபணுக்களைத் தோண்டிச்சென்றால், அது உலகின் திசைகளில் எங்கெங்கோ பரவியிருக்கிறது. ஐந்தாயிரம் ஆண்டுப் பழைமையான மரபணுக்கள் என் உடம்புக்குள் உயிர்ப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. நீங்கள் குறிப்பிட்டீர்கள், ஓர் அறைக்குள் அடைந்துகிடக்கிறேன் என்று. ஆனாலும், மொழி வழியாக என் வேர்கள் எல்லாத் திசைகளிலும் பயணித்துக்கொண்டு தானிருக்கின்றன. ஒவ்வொரு உடம்பும் ஒவ்வொரு மொழியும் பன்னாட்டு முனையம்தான். உடம்பை ஒரு வர்ணத்துக்குள் சாதிக்குள் ஒடுக்கலாம்; அறிவை ஒடுக்கித் தூய்மை பாராட்ட முடியாது. அறிவு பலபட்டறை; அங்கு தீண்டாமை ஒதுக்குதல் இல்லை. ஈயத்தைக் காய்ச்சி யார் காதிலும் இனி ஊற்றமுடியாது.”

வர்ணாசிரமத்துக்குள் செயல்படுகிற தன்னிலையால் எந்தச் சூழலிலும் ஆன்மிகத்தால் விளைகிற உச்ச சிலிர்ப்பை (Juissance) அடையவே முடியாது.

“மொழியைப் பற்றிப் பேசும்போது, அதை நீங்கள் ஆன்மிகமயப்படுத்துகிறீர்களோ எனத் தோன்றுகிறது...”

“ஆன்மிகம் பற்றித் தனியாகப் பேசவேண்டும். அது தவறான புரிதலை நோக்கி இன்றைக்குப் போய்விட்டது. மொழி பன்முகத்தன்மை கொண்டதுபோலவே ஆன்மிக மனம் என்பதும் பன்முகம் கொண்டதுதான். பன்முக மனிதன்தான் ஆன்மிக மனிதனாக இருக்கமுடியும். ஆன்மிகம் என்பது அறிவின் பெருவிழிப்பு, மதம் கடந்தது, கடவுள் கடந்தது. உச்சபட்ச ஆன்மிகவாதி நாத்திகனாகத்தான் இருப்பான். மார்க்ஸைவிடப் பெரிய ஆன்மிகவாதி யார்? மார்க்சியம் என்ற பொருள்முதல் வாதம் முன்வைக்காத ஆன்மிகத்தை எந்த மதம் முன்வைக்கிறது? ‘எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தல் வேண்டும்’ என்பதைவிடப் பெரிய ஆன்மிகம் எது? அப்படிப் பார்த்தால் பொதுவுடைமைதானே உண்மையான ஆன்மிகம்.

“மனிதர்களுக்கு அவர்களின் மகிழ்ச்சிக்குரிய உடல் மீட்டுக் கொடுக்கப்பட வேண்டும்!”

இந்திய ஆன்மிகம் என்பது, போலியான ஆன்மிகம். இந்த வர்ணாசிரமச் சாதியச் சமூகத்தில், பொதுமனம் என்பதோ பொதுமனிதர் என்பவரோ இல்லாதபோது இங்கு ஆன்மிகம் எப்படி உருத்திரளும்? எனக்கான ஆன்மிகம் உங்களுக்கானது இல்லை. உங்களுடையது என் ஆன்மிகம் இல்லை. உங்கள் நம்பிக்கைக்கு எதிராக எனக்குள் நான் கொலைக்கருவியை மறைத்து வைத்துக்கொண்டு எப்படி ஆன்மிகம் பேசமுடியும்? இந்தியச் சமூகத்தில் ஆன்மிகம் என்ற அறிவுவிழிப்பு நிலைக்குச் சாத்தியமே இல்லை.”

“அப்படியானால் மொழி, ஆன்மிகத்தன்மை  உடையது என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்கள்...”

“ஆமாம். உச்சபட்ச ஆன்மிக வெளிப்பாடு என்பது மொழி வழியாகவே சாத்தியமாகும். உள்ளம் என்பது மொழியால் ஆனது. மூளை என்பது கொழுப்புப் பொருளாக இருக்கலாம். ஆனால், அதற்குள் எழும் சிந்தனை என்பது மொழி கட்டமைப்பதுதான். பலவிதக் காலவெளியைச் சார்ந்த கூட்டியக்கம் மொழி. பலவித மூளைகளின் அறிவுச்சங்கமமாக அதுமட்டுமே இருக்கிறது. உங்களுக்கும் எனக்கும் இடையில் மொழியைத் தவிர்த்து வேறெந்தப் பொதுமையும் கிடையாது. உடம்பு, நிறம், பணம், மதம், கடவுள் எதுவும் பொதுவாக இல்லை. மொழி தனது சேகரமாக அறிவை வைத்திருக்கிறது. அதனால், அறிவே பொதுவானது. நான் முன்பே சொன்னதுபோலப் பொதுவுடைமையைப் போலத் தனித்துவமான ஓர் உள்ளடக்கத்தை வேறெந்த ஆன்மிகம் வைத்திருக்கிறது? நான் பொதுவானவனாக இருந்தால் மட்டுமே நல்ல ஆன்மிகவாதியாக இருக்க முடியும். யானையின் வழித்தடத்தை மறித்து ஆசிரமம் அமைப்பவனும், பிராய்லர் கோழிப்பண்ணை போல ஒரே சீருடையில் ஒரே வயதில் பெண்களை அடைத்து வளர்த்து ஆசிரமம் நடத்துபவனும் இங்கே ஆன்மிகவாதிகள். அடிப்படையில் இங்கே பொதுக்கடவுளே இல்லாதபோது நல்ல ஆன்மிகம் எப்படி இருக்க முடியும்? சமூகம் ஒரு பொதுமனிதரை உருவாக்காதபோது, அங்கே எப்படி ஆன்மிகம் சாத்தியமாகும்? எல்லோருமே இங்கு மதம் சார்ந்த ஆன்மிகவாதியாகத்தான் இருக்கிறார்கள். உண்மையான முழுமையான ஆன்மிகம் என்பது, மதம் கடந்தது. அதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமே இல்லை. பெரியாரைவிடப் பெரிய ஆன்மிகவாதி என்று வேறு யாரைச் சொல்ல முடியும்? வர்ணாசிரமம் வேண்டாம் என்று சொல்வதுதானே சிறந்த ஆன்மிகம். புத்தரும் அம்பேத்கருமே எனது அறிவுவழி நின்ற ஆன்மிக ஆசான்கள். வருணாசிரமத்துக்குள் செயல்படுகிற தன்னிலையால் எந்தச் சூழலிலும் ஆன்மிகத்தால் விளைகிற உச்ச சிலிர்ப்பை (Juissance) அடையவே முடியாது.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
“மனிதர்களுக்கு அவர்களின் மகிழ்ச்சிக்குரிய உடல் மீட்டுக் கொடுக்கப்பட வேண்டும்!”

“நீங்கள்  பின்நவீனத்துவவாதியாக உங்களை அடையாளப்படுத்துகிறீர்கள். அதேசமயம், பொதுமையான அறிவு, பொதுக்கடவுள், பொதுமனிதன் குறித்தும் பேசுகிறீர்கள். இது முரண்பாடாக இருக்கிறதே?”

“நான் ஒற்றைக் கடவுளையோ, ஒற்றை மதத்தையோ நோக்கிப் போகவில்லை. குறிப்பாக ஒருமையை நோக்கிப் போகவில்லை. எல்லாப் பன்மைகளும் வந்து குவிவதற்கான ஓரிடத்தை அனுமதிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன். பொதுமை வேறு; ஒருமை வேறு. இங்கே சமூகம் தன்னளவில் ஒருமையாக இருக்கிறது. வெளியிலிருந்து வரும் மற்ற ஒன்றை அனுமதிப்பதே இல்லை. எல்லோருமே கதவை மூடிவிட்டு, தன் அறைக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். எல்லா மட்டத்திலும் ஒவ்வாமை இருக்கிறது. தன்னைத் தவிர்த்து எந்த அறிவையும் உள்ளே அனுமதிப்பதில்லை. அப்படியிருக்கும்போது, பொதுமை எப்படி வரும்? ஒருமை நோக்கிக் குவிவதல்ல பின்நவீனத்துவம். பலவிதப் பன்மைகளை அனுமதித்து, ஒரு மையத்தில் குவித்து அறிவது. தேவைப்படும்போது, அந்த மையத்தைச் சிதைப்பது. மையம் என்பது ஓரிடத்தில் நிற்காது; இயங்கிக்கொண்டே இருக்கும்.

இன்னும் நானூறு ஐந்நூறு ஆண்டுகள் கழித்து திருக்குறளைச் சொல்வதுபோல, ‘பாரதி என்பவர் ஒருவர் இல்லை. பலபேர் எழுதிய கவிதைகளின் தொகுப்புதான் பாரதி கவிதைகள்’ என்று சொல்லக்கூடும்.

பல அறிதல்களை நான் எனக்குள் கொண்டுவரும்போது, எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்டு மூடுண்ட இருப்பாக இருந்துவிடக் கூடாது. அது எனக்குள் மிகப்பெரிய அதிகாரத்தை உருவாக்கிவிடும். உள்ளே வருவதை அப்படியே மிச்சமற்றுச் செலவு செய்துவிட வேண்டும். அப்படி யாரும் செலவு செய்வதில்லை. அறிவைச் செலவு செய்யாவிட்டால் பாசிசம் விளைந்துவிடும். அறிவார்ந்த மேலாதிக்கம் என்பது, அறிவைத் தனக்கு மட்டுமானதாகக் கொள்வதுதான். அறிவை உள்வாங்கி ஒரு புலனின்பமாக்கிக்கொண்டு அதற்குள் தேங்காமல் நகர்ந்துகொண்டே இருக்கவேண்டும். தேங்கும் நீரில் கொசுவும் தேங்கும்; அறிவில் மேலாதிக்கமும் உருவாகும். ஆம். ஓரிடத்தில் அடைபட்டுத் தேங்கி நின்றால் அங்கு பாசிசம் உருத்திரளும். இது அடிப்படை அறிதல். அறிவைக் கலைத்துப்போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். உங்களை நீங்களே மறுதலித்துக்கொண்டு செல்லும்போது, ஒரு கடவுள் எப்படி வரும்? ஒரு மொழி எப்படி வரும்? ஓர் இனம் எப்படி வரும்? நீங்கள் எப்படி ஒருமனிதராக மட்டும் இருப்பீர்கள். மனிதராகப் பிறந்து வாழ்ந்து, மனிதராக இறப்பதென்பது இயற்கை விதி. ஆனால், ஓர் உடம்பு இன்னோர் உடம்பில் கூடுபாய்வது, இன்னோர் உடம்பாக வாழ்ந்து பார்ப்பது ஓர் உருவகநிலை. உருவகநிலையைக் கலைத்துப்போட்டு மாற்றி அடுக்கிக்கொண்டே செல்லவேண்டும். அதைத்தான் இன்று கலை இலக்கியங்கள் சாத்தியப்படுத்துகின்றன. அந்த உருவகநிலையின் கொண்டாட்டத்தைத் தான் கவிதை இன்று முன்னெடுக்கிறது.”

“நீங்கள் இப்போதும் பின்நவீனத்துவவாதியா?”

“யார் ஒருவரும் பின்நவீனத்துவவாதியாக இருக்க முடியாது; யார் ஒருவரும் கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியாததைப் போல. நான் ஒரு பின்நவீனத்துவவாதி, கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வது, நான் ஓர் ஆன்மிகவாதி என்று சொல்லிக்

கொள்வதைப் போன்றது. ஒரு குறிப்பிட்ட அறிதல் முறைக்குள் அந்த அடையாளத்துக்குள் ஒருவர் முடங்கிவிட்டால், இயக்கமற்றுப் போய்விடுவார். கம்யூனிசத்திலிருந்து தாண்டிச் செல்வதுதான் கம்யூனிசத்தை அறிவதற்கான சிறந்த வழி. ஆன்மிகத்திலிருந்து தாண்டிச் செல்வதுதான் ஆன்மிகத்தை அறிந்துகொள்ளச் சிறந்த வழி. நமது நம்பிக்கைக்குரிய அறிதல் முறையின் போதாமையை நாம் உணரவேண்டும். பின்நவீனத்துவத்தின் மிகப்பெரிய அறிதல் முறைமை அதுதான். ஒன்றுக்குள் அடங்காமல், ஒன்றையொன்று கலைத்துப்போட்டுக்கொண்டு நகர்ந்துகொண்டேயிரு என்கிறது பின்நவீனத்துவம்.”

“மனிதர்களுக்கு அவர்களின் மகிழ்ச்சிக்குரிய உடல் மீட்டுக் கொடுக்கப்பட வேண்டும்!”

போதாமையை உணர்ந்து நகர்வதுதான் பின்நவீனத்துவ அறிதல்முறை என்கிறீர்கள். அப்படியானால், பின்நவீனத்துவத்தின் போதாமை என்று நீங்கள் கருதுவது என்ன?”

“போதாமை எதுவுமே அதில் கிடையாது. ஏனென்றால், பின்நவீனத்துவம் என்பது அறிவுவங்கி (Knowledge Bank) இல்லை. சேகரிக்கப்பட்ட அறிவுப்பாதை. தொடர்ச்சியான அறிதல்முறை. பின்நவீனத்துவம் என்பது, அமீபாபோல் வடிவத்திற்குள் விளங்காத ஒருசெல் உயிர்ப் பொருண்மையாக இருக்கிறது. அதுதான் அதன் வெற்றி. விளங்கினால், அது உங்கள் கைக்குள் வந்துவிடும். கிணற்றை, குளத்தை, ஏரியை, ஆற்றை, வரையறுப்பதுபோல நீங்கள் கடலை வரையறுக்கமுடியாது. கடல் இயக்கமும் விரிவும்கொண்டது. குறிப்பாக அது எங்கும் தேங்குவதில்லை. தத்துவம், ஆன்மிகம் என்பனவும் அப்படித்தான், பெரும் சுழற்சியில் இயங்கிக்கொண்டேயிருக்க

வேண்டும். அதை வரையறுத்து ‘ஃபிரேம் ஒர்க்’ செய்துவிட்டீர்கள் என்றால், அதற்குள் அதிகாரங்கள் செயல்பட ஆரம்பித்துவிடும். ஒன்றையொன்று தாண்டி, ஒன்றையொன்று கைவிட்டுப் போய்க்கொண்டேயிருக்க வேண்டும். கைக்கொள்ளுதல், கைவிடுதல்தான் இயங்கியல் அறிவு. கெட்டியாகப் பிடித்துக்கொண்டால் கைக்குள்ளிருப்பது ஆயுதமாகிவிடும். ஆனால், நாம் இந்தப் பயணத்தில் சுவடுகளற்றுப் போய்க்கொண்டே இருக்க வேண்டும். உண்மையில், பின்நவீனத்துவவாதி என்று யாரும் தன்னைக் கூறிக்கொள்ளமாட்டார்கள். இது பின்நவீனத்துவம் குறித்த எனது அறிதல்; இது எனக்கு மட்டுமேயான அறிவொழுங்கின் நிலை. இந்நிலை, பரிந்துரைப்பிற்கோ பிரசாரத்திற்கோ இல்லை. இதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எல்லாருக்கும் தன் இருத்தல் என்பது இங்கு அவசியமாக இருக்கிறது. எனது இந்நிலையை நீங்கள் மறுதலிப்பதில் எனது இயக்கம் தொடர்கிறது.”

“பின்நவீனத்துவத்தையும் ஆன்மிகத் தன்மையோடு விளக்குவது போலிருக்கிறதே...”

“ஆமாம். நான் மிகப்பெரிய ஆன்மிகவாதிதான். எனக்கும் மற்றோர் ஆன்மிகவாதிக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்றால், நான் ஓர் ஆன்மிகவாதி என்பது எனக்குத் தெரிந்திருக்கிறது. நான் ஆன்மிகவாதி என்று எனக்குத் தெரிவதால், நான் அதை மறுதலித்துவிட்டு நகர்ந்து

கொண்டேயிருக்கிறேன். வேறெந்த ஆன்மிகவாதியும் அப்படி வெளியேற நினைப்பதில்லை. சௌகர்யமாக அந்த ஆசனத்தில் அமர்ந்துகொள்கிறார். கை கால்களை நீட்டிப்போட்டு இளைப்பாறுகிற, பணம் கொழிக்கிற அற்புதமான இடம் அது. ராணுவம்கூட நுழையமுடியாத பாதுகாப்பான இடமும்கூட. எனவே, நான் அங்கிருந்து நகர்ந்து செல்பவனாக இருக்கிறேன். இந்திய ஆன்மிகவாதிகள், கட்சி அரசியல்வாதி களைவிடக் கொடிய பாசிஸ்டுகள்” (சிரிக்கிறார்)

“பெரும்பாலும், பின்நவீனத்துவம் என்பது மொழி மற்றும் கலை இலக்கியத் தளத்தில் மட்டுமே விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு வெளியே சமூகத்தில் அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது? குறிப்பாகத் தமிழகத்தில், பின்நவீனத்துவத்தால் விளைந்த முக்கிய மாற்றங்கள் அல்லது நன்மைகள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?”

“நான் முன்பே சொன்னதுபோல, பின்நவீனத்துவம் என்பது தத்துவப் பள்ளியோ இயக்கமோ இல்லை; அது ஓர் அறிதல் முறை. அது இங்கு குறிப்பிடத்தக்க எந்தப் பெரிய மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை. பின்நவீனத்துவவாதி தன்னை மறுதலித்துப் போய்க்கொண்டேயிருப்பார். அதனால்தான், நான் என்னை போஸ்ட் மார்டனிஸ்ட் கிடையாது என்று சொல்கிறேன். ஏனென்றால், போஸ்ட் மார்டனிஸ்ட்டுக்கு வரையறையே கிடையாது.”

“ஒரு தத்துவம் அல்லது அறிதல்முறை, ஒரு மொழியில் அல்லது சமூகவெளியில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமல்லவா? நன்மையோ, தீமையோ அதனால் ஏதேனும் ஒன்று விளைய வேண்டுமல்லவா?”

“நிச்சயமாக அப்படிச் சொல்ல ஒன்றுமில்லை. இங்கே யாரும் எதையும் உளப்பூர்வமாகச் செய்வதேயில்லை. எல்லாமே ஃபேஷனாகத்தான் இருக்கின்றன. இங்கேவந்து கோலோச்சி, சகல மட்டத்திலும் பரவியிருக்கிற சித்தாந்தம் என்றால், அது கம்யூனிசம்தான். ஆனால், ஒரு மனிதர் முழுமையான கம்யூனிஸ்டாக உருவாவது மிகப்பெரிய சவாலான விஷயமாக இருக்கிறதே. ஒரு முழுமையான கம்யூனிஸ்ட் உருவான சமூகத்தில்தான், ஒரு பின்நவீனத்துவவாதி உருவாகமுடியும். இது இன்னும் சோஷலிச சமூகமாகவே மாறவில்லைவே. கம்யூனிசச் சமூகத்தில்தான் நாம் பின்நவீனத்துவம் பற்றிப் பேசமுடியும். அப்போதுதான் ஒன்றைக் கலைத்து அடுக்குவது, தனிமனித நிலையிலும் சமூக நிலையிலும் அதிகாரமற்ற நிலையை உருவாக்குவது  போன்ற  பணிகளிலெல்லாம் ஈடுபடமுடியும். அதற்கான வழிமுறைகள் ஏதும் இங்கு இல்லை.

இச்சமூகத்தில் கடைசியாக இருவர் மீந்தால், அதில் ஒருவர் பத்திரிகை நடத்துவார்.

பின்நவீனத்துவம் குறித்து நாம் சில பாடங்களைப் படித்துக்கொண்டிருந்தோம். அவற்றில் புரிந்துகொண்டவற்றைக்கொண்டு சிலவற்றை எழுதிப் பார்த்தோம். இலக்கியவாதிகள் அதைக் கையாண்ட அளவுக்குக்கூட, தத்துவவாதிகள் அதைச் சீண்டவில்லை. தமிழ்நாட்டில் தத்துவவாதிகளே இல்லையே. என்னளவில் நான் இலக்கியவாதிதான். என் தேடலில் இறுதியாகக் கிடைத்த சமூகத் தத்துவ அறிதல், கம்யூனிசம். அதிலும்கூட நடைமுறையில் அதிகாரம் செயல்படும்போது, கம்யூனிச இயக்கப் பாசிசத்தை நான் எதிர்கொண்டபோது, புத்த சமயத்தை நோக்கிப்போய் ஏதாவது கிடைக்குமா என்று தேடினேன். எதற்குள்ளும் அடங்காத அனார்க்கிக் ஸ்டேட் ஆஃப் மைண்ட் (Anarchic State of mind) பின்நவீனத்துவத்துக்குள் சாத்தியமாகிறது. எனவே நான் அதையும் உள்வாங்கிக் கொள்கிறேன்.

பின்நவீனத்துவம் என்பது தனிமனிதத் தேடல். அது எதற்குள்ளும் அடங்காது. அதனால், அதைச் சமூகத்துக்குப் பரிந்துரைக்கமாட்டேன். தனி மனிதர்களுக்கு மட்டுமே, குறிப்பாகக் கலைஞர்களுக்கு மட்டுமே அதை நான் பரிந்துரைப்பேன். கலைஞர்களால் சமூகத்தைக் கட்டமைக்கவே முடியாது. சமூகத்தைக் கட்டமைப்பவர்கள் அரசியல்வாதிகள். அரசியல்வாதிகளுக்குப் பின்நவீனத்துவம் ஒவ்வாது. அதனால், அவர்களுக்கும் அதைப் பரிந்துரைக்க மாட்டேன். கம்யூனிஸ்ட்டுகள், பின் நவீனத்துவத்தை முதலாளித்துவச் சார்பானது என்று புறந்தள்ளுவார்கள்; முதலாளித்துவவாதிகள், அதைக் கம்யூனிசச் சார்பானது என்று ஒதுக்குவார்கள். இடையில் அங்கும் இங்குமாய் பின்நவீனத்துவவாதி கிடந்து உருளுவார். இங்கு நாம் சமூகவியலுக்கும் தத்துவத்திற்குமான வேறுபாட்டை விளங்கிக்கொள்ள வேண்டும்.”

“மொழி கவிதையாகும் தருணத்தை முதன்முதலாக நீங்கள் உணர்ந்தது எப்போது?”

“தமிழ் மொழியே கவிதைதானே… ‘அம்மா’ என்ற சொல் வெறும் உறவுப்பெயர் மட்டுமா என்ன? அது ஒரு கவிதையல்லவா? ஒவ்வொரு சொல்லுமே உருவகம்தானே. தொன்மை மிகுந்த தமிழில் ஒவ்வொரு சொல்லும் பன்முகத்தன்மை கொண்டவை. ‘நாவாய்’ என்றொரு மூலத் தமிழ்ச்சொல் இருக்கிறது. பிரெஞ்சில் ‘நவிர்’ என்கிறார்கள். ஆங்கிலத்தில் ‘நேவி’ என்பார்கள். ‘நாக்கு’ என்ற வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை வந்தது. படகு, கலம், வல்லம் என்றெல்லாம் மாறி மாறி வருகிற இந்த வார்த்தையின் பயணம் எவ்வளவு நீண்டது பாருங்கள்... மொழியின் தொன்மை, அதன் வார்த்தைகளின் பயன்பாட்டு வடிவத்தில் எவ்வளவு தூரத்துக்குப் பரவியிருக்கிறது பாருங்கள்... சில சமயம் சில சொற்கள் அதன் பயன்பாட்டில் மொழி கடந்தும் நீட்சிபெறுவது உண்டு. எந்தவொரு மொழியும் தன்னளவில் கவிதையாகத்தான் இருக்கிறது. நான் கவிதைக்கென்று தனியாக மொழிக் கட்டமைப்பை உருவாக்க முனைந்ததில்லை. கவிதைக்கெனப் புதிதாக மொழிப்பாடுகளை உருவாக்கச் சிரமப்படவில்லை. இயல்பாகவே நான் கவித்துவமானவன், என்னுடன் நெருக்கமாகப் பழகிய அனைவருக்கும் இது தெரியும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“நான் கேட்பது, மொழியைக் குறித்து உங்களுக்குள் இவ்வளவு பிரக்ஞை உருவாவதற்கு முன்பாக, மொழி வழியே நீங்கள் கவிதையை உணர்ந்த அனுபவம் பற்றி… ஓர் ஆணோ பெண்ணோ பருவமடைந்துவிட்ட உடலை முதல்முறை உணரும் அனுபவம் இருக்கிறதல்லவா, அதுபோல…”  

(சிரிக்கிறார்) “ரொம்பவும் உருவகமாகப் பேச வேண்டாம் என்கிறீர்கள். சரி, நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, பாரதியார் கவிதை நூல் ஒன்றை வாங்கிப் படித்தேன். பல பகுதிகள் புரியவில்லை. ஆனாலும், என்னை அக்கவிதைகள் வெகுவாக ஈர்த்தன. பாரதியின் மொழிவளமும் ஆளுமையும் என்னைத் தாக்கின. அந்த மொழிக்கு நான் அடிமையானேன், பாரதி எனக்குத் தெய்வம் ஆனான். பாரதியின் சொற்கள் எனக்குள் மிக அழுத்தமாகப் படிந்துவிட்டன. நான் பேசுவதில் சிந்திப்பதில் எழுதுவதில் பாரதியின் செழுமையான மொழி தொனிக்கத் தொடங்கியது. பாரதியைத் தாண்ட வேண்டும் என்கிற வெறி, பத்தாம் வகுப்பு படிக்கும் அச்சமயமே எனக்குள் வந்துவிட்டது. அதுதான் நான் மொழியைத் தீவிரமாக உள்வாங்கிக்கொண்ட காலகட்டம் என்று நினைக்கிறேன். அச்சமயம், சாதாரணப் பேச்சுவழக்கையே மிகச் சிரமப்பட்டுப் பேசும்படியாகிவிட்டது. இன்று வரைக்கும் பாரதிக்குள்தான் ஊடாடி ஊடாடிக் கிடக்கிறேன். என் தலைமாட்டில் இதோ அவன்தான் இருக்கிறான். சோர்ந்து போகும்போதெல்லாம் அவன்தான் என்னைத் தேற்றுகிறான்.”

“உங்களது முதல் புனைபெயர்கூட பாரதியைச் சேர்த்துதான் வைத்திருந்தீர்கள் அல்லவா?”

“ஆமாம். என் அப்பா பெயரான மருத முத்துவிலிருந்து மருதுவை எடுத்துக்கொண்டு பாரதியைச் சேர்த்து, ‘மருதபாரதி’ என்று வைத்துக்கொண்டேன். இலக்கிய உலகிற்கு வந்துபார்த்த பிறகுதான் புரிந்தது, தடுக்கி விழுந்தால் ஏதாவது ஒரு பாரதிமீதுதான் விழவேண்டும் என்று. உடனே, ‘வானநேசன்’ என்று பெயரை மாற்றிக்கொண்டேன். அது மேநிலைப் பள்ளிப் பருவம். உள்ளூர்ப் பத்திரிகையில் அப்பெயரில் சில விருத்தப்பாக்கள் வெளிவந்தன. அப்போதே நானொரு வெண்பாப் பன்றி. இப்போது ‘ரமேஷ் பிரேதன்’ என்று மிஞ்சியிருக்கிறேன். சரி பிரச்னை தீர்ந்ததா என்றால், இல்லை. வீட்டுக்கு ஒரு மரம் வளர்வதுபோல தமிழ் நாட்டில் வீட்டுக்கு ஒரு ரமேஷ் வளர்கிறான். முகநூலைத் திறந்தால், எத்தனை கோடி ரமேஷ்கள் இறைவா இறைவா” (சிரிக்கிறார்)

என் உடம்பு ஒரு பெண்ணால் ஆனது; என் எழுத்துகள் பல பெண்களால் ஆனவை.

“எட்டாம் வகுப்பிலிருந்து பாரதியைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கும் உங்கள் தலைமாட்டில் பாரதியை வைத்துக்கொண்டிரு க்கிறீர்கள். பாரதி உங்களுக்குத் திகட்டவே இல்லையா?”

“பாரதியை அவன் வாழ்ந்த காலத்தில் வைத்துத்தான் மதிப்பிடுவேன். ஆச்சர்யமாக இருக்கிறது, பாரதி ஒரு சுரங்கம்... இன்னும் நானூறு ஐந்நூறு ஆண்டுகள் கழித்து, திருக்குறளைச் சொல்வதுபோல, ‘பாரதி என்பவர் ஒருவர் இல்லை. பலபேர் எழுதிய கவிதைகளின் தொகுப்புதான் பாரதி கவிதைகள்’ என்று சொல்லக்கூடும். அவ்வளவு பரிமாணங்கள் அவன் கவிதைகளில்... புதிய கோடாங்கியின் ‘நல்லகாலம் வருகுது; நல்லகாலம் வருகுது’ என்ற குரலும், ‘எந்த நேரமும் நின் மையல் ஏறுதடீ. குறவள்ளி’ என்ற குரலும் ‘வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு’ என்ற குரலும் வேறு வேறாக இருக்கின்றன. இத்தனை வேறுபாடுகளையும் முப்பத்து ஒன்பது வயதுக்குள் சாத்தியமாக்கியது, குறிப்பாக புதுச்சேரியில் இருந்த பத்தாண்டுக்குள் பசி பட்டினியில் உழன்றுகொண்டே எழுதிக் குவித்தது அதிசயம்தான்.

மொழியில் எப்போதேனும் மாபெரும் வெடிப்பு நிகழும். அந்த வெடிப்பு, பாரதியின் வழியாக நடந்திருக்கிறது. பாரதியைப் பார்த்துவிட்டு பலரும் அப்படி முயன்று பார்த்தார்கள். நிலைக்க முடியவில்லை. பெருவெடிப்புகள் தானாக நிகழவேண்டும். அடுப்பை வேண்டுமானால் நாம் உருவாக்கலாம், எரிமலைகளை உருவாக்க இயலாது.”

“பாரதியை முன்னிட்டு அல்ல, பொதுவாகவே கேட்கிறேன். இப்படியான பெரும் கலைச்சாதனைகளை மனித ஆளுமைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக மர்மப்படுத்துவது பிரச்னை இல்லையா?”

“உண்மையில் அது பிரச்னைதான். ஆனால், உண்மையான கலை உள்ளம் இதை அறியும். இலக்கியத்தை அறிவியல் பார்வையில் முழுமையாக விளக்குவது, புரிந்துகொள்வது சிக்கலானது.

இன்றைக்கு இலக்கியம் குறித்த புரிதல், ‘இந்தப் பிரதியால் நிகழ்ந்துள்ள சமூகப் பயன்பாடு என்ன?’ என்று கேட்பதாகத்தான் இருக்கிறது. இந்தச் சமூகத்துக்கு ரமேஷ் தன் கலைச்செயல்பாட்டின் வழியாக என்ன செய்தான் என்பது கேள்வியாக இருக்கிறது. உண்மையில் கலையால் எதையும் உருவாக்கிடவோ கலைத்திடவோ முடியாது. சமூகத்தின் ஒரு கூறு மட்டும்தான் கலை. கலைஞனால் ஏதோ பெரிய சமூக மாற்றம் நிகழ்ந்துவிடும் என்பதைப்போல ஏன் கலைஞனுக்குக் கோயில் கட்டிக் கும்பிடப் பார்க்கிறீர்கள்? கலையால் ஏதும் நிகழப்போவதில்லை. ரமேஷ் கவிதை எழுதுவான். அவன்பாட்டுக்கு எழுதிக் கொண்டிருப்பான். சோழராஜனைப்போல அவனால் கத்திச்சண்டையெல்லாம் போட்டு, கடாரத்தை வென்றெடுத்து வரமுடியாது. கலையாலோ, கவிதையாலோ ஒரு சமூகப் பயன்பாடும் கிடையாது. நான் ஒரு சிற்பத்தை வடித்துவைத்தால் அதைப் பாருங்கள்; ரசியுங்கள். அது உங்களுக்கு உவப்பாக இல்லாவிட்டால் அதன் மூக்கை உடையுங்கள். சிலையைச் செதுக்கி வைப்பதற்கான மனம் எப்படிச் சமூக விளைச்சலோ அதைப்போல அந்தச் சிற்பத்தை ஊனப்படுத்துவதும் சமூக விளைச்சல்தான். இரண்டுக்கும் இடமிருக்கிறது. கலையையோ கவிதையையோ மர்மப் படுத்துவதோ புனிதப்படுத்துவதோ என் நோக்கமல்ல. என் கவிதையைக் கிழித்துப் போடுபவனுக்கும் என் குழாத்தில் இடமிருக்கிறது. என்னை மறுதலித்துவிட்டு நீங்கள் போய்க்கொண்டேயிருக்கலாம். பாரதியையும்கூட நீங்கள் மறுதலிக்கலாம். ஒரு பிரச்னையுமில்லை!”

“மனித அகத்தைப் பண்படுத்துகிற குணம் கலைக்கு இருக்கிறதல்லவா? அது கலையின் பயன்பாடு ஆகாதா?”

“நிச்சயமாக மனித அகத்தைக் கலை பண்படுத்தவே செய்யும். கலையால் கொலை செய்யமுடியாதுதான். ஆனால், தற்கொலைக்குத் தூண்ட முடியும். கலையின் சமூகப் பயன்பாட்டை அரசியல் மயப்படுத்தி, அதன் ஆன்மிக மதிப்பை வெளியே எடுத்து ‘என்ன பயன்... என்ன செய்தாய்…?’ என்று கேட்கும்போது கலைஞர் மனச்சிதைவுக்கு ஆளாவார். அப்படித்தான் படைப்பாளி மனநோயாளியாக மாறுகிறார். எந்தக் கலைஞரையும் எந்த ஒரு சமூகமும் தூக்கிக் கொண்டாடாது. அரசியல் செயல்பாடுகளில் இயக்கத்தோடு முன்னிற்பவர்கள் அப்படிக் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் மற்றொரு தரப்பால் வெறுக்கவும் கொல்லவும்பட்டிருக்கிறார்கள். இதுதான் யதார்த்தம். இது இப்படித்தான் நிகழ்ந்துகொண்டே இருக்கும். கலையின் சமூகப் பயன்பாடு குறித்துக் கவலைப்படும் கலைஞர் மனச்சிதைவுக்கு ஆளாவார்.”

“நீங்கள் எழுதவந்த காலகட்டத்தில், இலக்கியச் சூழலில் நிறைய போதாமைகள் இருந்ததாக அப்போதைய ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக் கிறீர்கள். நீங்கள் எழுதவந்து 33 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கு நிலைமை எப்படி இருக்கிறது?”

“போதாமைகள் தொடர்ந்து இருப்பவைதானே! ‘ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் / இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்’ என்பதுதானே. அது வெறும் பசியை வைத்து மட்டும் பாடியதா என்ன? என்றைக்கும் வெற்றிடம் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் ஒரு வெற்றிடம் இருக்கவே செய்யும். ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதிய ஜெயமோகனிடம் வெற்றிடம் இல்லையா என்ன? இருக்கும். அதனால்தான், அடுத்ததாக ஐந்து பக்கத்தில் ஒரு சிறுகதையையும் எழுதிப் பார்க்கிறார். வெற்றிடம் தொடர்ந்து இருக்கும்வரைதான் ஆக்கபூர்வமான படைப்புச் சூழலும் படைப்பு மனமும் இருக்கும். அன்றைக்கு உணர்ந்தது போலவே இன்றும் போதாமைகளை உணர்கிறேன்.

ஆனால், அன்றைவிட இன்றைக்கு ஏராளமான புதிய எழுத்தாளுமைகள் உருவாகியிருக்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு பேர் எழுதவில்லை. அதற்கான வசதி வாய்ப்புகளும் இல்லை. படைப்புச் சூழலுக்குள் அதிக குழுவாதமும் வட்டார மனப்பான்மையும் இருந்தது. ஒரு படைப்பை சிறுபத்திரிகைக்கு அனுப்பிவிட்டு, அது வெளியாகுமா ஆகாதா என்று அன்றைப்போல இன்றைக்குக் காத்திருக்க வேண்டியதில்லை. காலையில் ஒரு கவிதை எழுதி அதை முகநூலில் ஏற்றினால், மதியத்துக்குள் நூறு பேர் வாசித்துவிடுகிறார்கள். அதில் 60 பேர் விருப்பக் குறியிடுகிறார்கள். சிலர் இதயக்குறிகூடத் தருகிறார்கள். இன்று எழுத்தாளருக்கும் வாசகருக்கும் கால இடைவெளி இல்லை.”

“நீங்கள் எழுதவந்த புதிதில் பிரசுரப் பிரச்னைகளைச் சந்தித்தீர்களா?”

“சந்தித்தீர்களாவா…? எழுதிய பல புத்தகங்கள் இன்றுவரை வெளிவராமலே போய்விட்டதே. ‘மூன்று சிகரெட்டுகளும் ஒற்றை மரணமும்’ என்ற நாவல் வெளிவர வாய்ப்பற்று மேலட்டை மட்டும் அச்சாகி ரொம்ப நாள் இருந்தது. ஒருகட்டத்தில் கிழித்தெறியப்பட்டது.”

“இன்றைக்குத் தமிழ் இலக்கிய உலகில், சிறுபத்திரிகைதன்மை உயிர்ப்போடு இருப்பதாகக் கருதுகிறீர்களா?”

“நான் சிறுபத்திரிகைகளின் வாயிலாக இயங்கும் எழுத்தாளன்; அந்நிலையைத் தாண்டி அறியப்படுபவன் அல்லன். கல்வியாளர் புழங்கும் வெளிகளிலும் என் எழுத்துகள் அறிமுகமானதில்லை. குறிப்பாக, நான் பொதுவாசகர்களுக்கானவன் அல்லன். என் எழுத்துகள் ஒருபோதும் வெகுமக்களால் அறியப்படும் அதிசயம் நிகழாது. யாரோ ஒருவர் என்னைத் தேடிவந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தான் வாசித்த என் நூல்களைச் சொல்லி அவை குறித்த பேச்சைத் தொடரும்போது, ஏதோவொரு வேற்றுக்கிரகவாசியோடு உறவாடுவதுபோல உணர்கிறேன். எனது முதல் எழுத்து அச்சாகி வெளிவந்து 33 ஆண்டுகள் ஆகின்றன. என் நூல்கள் அதிகபட்சம் 300 படிகளும் குறைந்தபட்சம் 50 படிகளும் அச்சாகின்றன. காரணம், அவை சிறுபத்திரிகைக்காரர்களால் வெளியிடப்படுபவை. அவர்கள் தங்கள் மனைவியரின் கழுத்தணியை விற்றுப் பத்திரிகையைக் கொண்டுவரும் இலக்கியத் தீவிரவாதிகள். இவர்களால் மட்டுமே என்னைத் தாங்கிப்பிடிக்க முடிகிறது. ‘மணல்வீடு’, ‘நடுகல்’, ‘சிறுபத்திரிகை’, ‘இடைவெளி’, ‘சிலேட்’, ‘கல்குதிரை’, ‘கொம்பு’, ‘உன்னதம்’ என ஒரு மாற்றுவெளி தொடர்ந்து கைக்கொள்ளப்பட்டு வருகிறது. நான் உட்பட பத்திரிகை தொடங்காத எழுத்தாளரைச் சந்தித்ததில்லை. இச்சமூகத்தில் கடைசியாக இருவர் மீந்தால், அதில் ஒருவர் பத்திரிகை நடத்துவார்.

“முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் படைப்புத் தீவிரத்தை நீர்த்துப்போகச் செய்கின்றனவா?”

“அப்படிச் சொல்ல முடியாது. நான் முகநூலுக்கு வந்து இருபது மாதங்களாகின்றன. வெளிவந்த, வெளிவரப்போகும் படைப்பிலக்கியங்களை மட்டுமே பதிவிடுகின்றேன். அக்கப்போருக்கு அறைகூவல் விடுவார்கள்; ஈவ்டீசிங் செய்யும் குழுவினரிடமிருந்து விடுவிடென விலகிச் செல்லும் பெண்ணைப்போலக் குனிந்த தலை நிமிராமல் அந்த இடத்தைக் கடந்துவிடுவேன். என் நட்பு வட்டம் நாளுக்கு நாள் விரிவடைகிறது. பலவகைப்பட்ட அறிவுஜீவிகளின் நெரிசலை முதன்முதலாய் எதிர்கொள்கிறேன். இது பன்னாட்டு முனையம். பன்னாட்டுப் பண்பாட்டு முனையமாகவும் மாறிக்கொண்டுவருகிறது.அகிலம் தழுவிய அறிவார்ந்த சூழலை உருவாக்குகிறது. சாதி மத வர்க்கச் சுவர்கள், பெர்லின் சுவர்போல் இடிகின்றன. முகநூல் வெளியில் தும்பைக் காட்டில் வண்ணத்துப்பூச்சி போல் என்னை உணர்கிறேன். பெண்கலைஞர்களுக்குத் தடையற்ற புழங்குவெளி உருவாகிறது. இந்த ஊடகவெளியைக் கட்டிக்காக்க வேண்டும். ஆம், விட்டு விடுதலையாகி நிற்க ஒரு வெளி.”

“சமீப காலங்களில் உங்களுடைய நூல்களை மறுவாசிப்பு செய்து பார்த்ததுண்டா? வாசிக்கும்போது என்ன மாதிரி உணர்ந்தீர்கள்?”

“அடிக்கடி என் படைப்புகளை வாசிப்பது, என்னை மீள்பார்வை செய்துகொள்வது போன்ற ஒரு செயல். பொதுவாக, சொந்த வாழ்க்கை நடைமுறைகளையோ மற்றவர்களின் வாழ்நிகழ்வுகளையோ எழுதுபவன் அல்லன். காலவோட்டத்தில் கடந்துபோகக்கூடிய மறந்துபோகக்கூடிய நிகழ்வுகளைப் பொருட்படுத்திப் படைப்புகளாக மாற்றியதில்லை. அதிபுனைவுகளையும் நுண் அரசியல் விவாதங்களையும் கட்டமைப்பதாகவே அன்றும் இன்றும் எனது படைப்புகள் இருக்கின்றன. எனக்கு முதல் வாசகன் நான்; இறுதி வாசகர் காலத்தில் பிறந்துகொண்டேயிருப்பார். காலந்தோறும் மாறுபடும் வாசிப்பில் பிரதியானது வகைவகையாகப் பல்கிப்பெருகுவதே அதன் இயங்கியல். பிரதியில் கடைசிப் பக்கம் இருக்கிறது; வாசிப்பில் அது இல்லை. இது பிரதிப் பொருண்மையின் இயங்கியல்.”

“புனைவு சார்ந்து நிறைய பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டவர் நீங்கள். அவ்வளவு வடிவசோதனைக்கான சிந்தனையை, கற்பனையை எங்கிருந்து எப்படிப் பெற்றீர்கள்?”

“நான் கருவிலேயே திருவுடையவன் அல்லன்; கருவில் திருதிருவென்று முழித்தவன். என் அம்மா கருவிலேயே என்மீது கொலைமுயற்சியை மேற்கொண்டார். எட்டாம் பேறு பெண்ணாகப் பிறந்தால், மருத்துவமனையிலேயே கைவிடத் திட்டமிட்டிருந்தார். இடுப்புக்குக் கீழ் தொங்கிய மாவடு என் வாழ்க்கையை நீட்டிக்க உதவியது. அம்மா ஃபிரெஞ்சு குடும்பத்தைச் சார்ந்தவர்; அவர் வழியாகத்தான் அம்மொழிமீது எனக்கு கவனம் குவிந்தது. அம்மா கவித்துவமான துறவு மனம்கொண்டவர். அவருடைய கைப்பிள்ளையாகவே வளர்ந்தேன். இந்த 55 அகவையிலும் அம்மாவின் வாசனையை ஞாபகம்கொண்டு மனம்கொள்ள முடிகிறது. வாசித்துத் தீராத நாவல், அம்மாவே எனது எழுத்தின் ஆணிவேர். அம்மாவை எழுதிப் பார்ப்பதைத் தவிர்க்கும் எத்தனிப்பிலேயே வேறுவகையாய் எழுதிப் பார்க்கிறேன். அம்மாவைத் தொடர்ந்து என் வாழ்வில் வந்துசென்ற பெண்களால் நான் வளர்த்தெடுக்கப்பட்டவன். ஐந்து வயதிலிருந்து அந்தந்த வயதுப் பெண்களால் வடிவமைக்கப்பட்டேன். எல்லோருடைய பெயரும் முகமும் காலவரிசைப்படி நினைவில் அடுக்கிவைத்திருக்கிறேன். இன்றுவரை என் உடம்பில் ஊறுவது பெண்பால் குருதி. எனது வார்த்தைகளை நசுக்கி முகர்ந்தால் புதினா மணம்போல் பெண்வாசனை தனித்துவமாய்க் கமழும். என் உடம்பு ஒரு பெண்ணால் ஆனது; என் எழுத்துகள் பல பெண்களால் ஆனவை. என் வாழ்வில் பெண் இருக்கும்வரை என் எழுத்து தேங்கி வற்றாமல் சுரக்கும். ‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என இதைத்தான் என் ஆசான் கொண்டாடு கிறானோ.”

“தமிழ்ப் புனைவுலகு இன்றைக்கு மீண்டும் எதார்த்தவாதத்திற்கே சென்று சேர்ந்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இரண்டு பேர் தேநீர் கடையில் அமர்ந்து, அன்றைய செய்தித்தாளை வாசித்தபடி உலக நடப்புகள், நாட்டு நடப்புகள், ஊர் நடப்புகள், இருவரின் குடும்ப நடப்புகள் எனப் பேசிப்பேசித் தம்மைப் பற்றிய பேச்சின் புள்ளியில் குவிந்து, கைகலப்பில் ஈடுபட்டு ஒரு கொலையில் திகைத்து நிற்கும் 300 பக்க நாவலை ஓர் எதார்த்தக் கதையாகவும் மிகைஎதார்த்தக் கதையாகவும் மாயயெதார்த்தக் கதையாகவும் வாசிக்கலாம். ஒரு பனுவலின் தன்மை அதன் பொருள்கோள் முறையில் வேறுவேறாகப் பல்கிப்பெருகும். எழுதியவர் பிரதி, வாசிப்பவர் வழி மாறுபட்டு நிற்கும். எனவே எழுதியவர் பிரதியை அறுதியிட்டு ஒன்றில் பொருட்படுத்த முடியாது. எதார்த்தவாதம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது; பக்கவாதம் பற்றித் தெரியும்.”

“எந்த ஒரு பிரதியிலும், இருவரின் மூளை அல்லது மனம் ஈடுபடுவதும் இடையீடு செய்வதும் அப்பிரதியைப் பன்முகத்தன்மை கொண்டதாக, குறிப்பாகப் பின்நவீனத் தன்மையுடையதாக ஆக்குகிறது என்று முன்பு குறிப்பிட்டீர்கள். தனித்து எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அந்த ‘ஸ்டேட்மென்ட்’ குறித்த உங்கள் பார்வை என்னவாக இருக்கிறது?”

“இரண்டு பேர் இல்லை... பாரதி, கம்பன், வள்ளுவன், வள்ளலார், ஔவை... என்று இப்போது எனக்குள் பன்னிரண்டு பேர் இருக்கிறார்கள்; ஒவ்வொரு கண்டத்திற்கும் பத்துப் பேர் இருக்கிறார்கள். நான் வாசித்த, கேட்ட, அவதானித்த, எத்தனையோ பேரின் சொற்களை, வரிகளை நான் என் படைப்புகளில் எடுத்தாள்கிறேனே. வள்ளுவன் எப்போதும் என் படைப்பில் இடையீடு செய்கிறான். ஓர் இலக்கியப் பிரதி, எப்போதுமே கூட்டுத் தயாரிப்புதான். என்னுடைய பெயரில் ஒரு பிரதி வெளியாவதால் அது என்னுடைய புத்தகமாகிறது. அவ்வளவுதான்! என்னைப் போலவே என் படைப்புகளும் ஒரு கூட்டுத் தயாரிப்பே.”

“நீங்கள் எழுதுவது வன்முறையின் அழகியலா?”

“வன்முறையின் அழகியல் இல்லை; இது அழகியலின் வன்முறை. கடந்த 30 ஆண்டுகளில் கொஞ்சமாகவே எழுதப்பட்டுள்ளது. பதினான்கு கவிதைத் தொகுப்புகள், ஐந்து கதைத் தொகுப்புகள், ஐந்து நாவல்கள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் பிற நூல்கள் என முப்பது படைப்புத் தொகைமை வாசிக்கக் கிடைக்கின்றன. ஏற்கெனவே நிலைபெற்ற ஒன்றை மீண்டும் எழுதுவது, தனியொருவர் தான் கடந்துவந்த கதையை எழுதுவது, கவித்துவ உணர்வெழுச்சியை தர்க்கக் கட்டமைப்பின்றி எழுதிச்செல்லும் முறைமை எனக்கு ஒவ்வாதவை. லூயிஸ் போர்கெஸ் கொஞ்சமாகத்தான் எழுதியிருக்கிறார். ஆனால், அவை புதிய கண்டுபிடிப்புகள். இவை அளவில் கொஞ்சமாக இருப்பினும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியவை. இன்று அகிலம்சார் கதைத் தொழில்நுட்பத்தை லூயிஸ் போர்கஸ் வடித்தெடுத்திருக்கிறார். அவர் வழியில், நான் வந்துநிற்கும் தமிழ் நிலத்தின் அறவியல், அழகியல், கவிதையியலை வரைந்தெடுக்கிறேன். திருக்குறள் இதற்கு அடிப்படைப் பனுவலாக உடன் நிற்கிறது. அழகியலின் பாசிசத்தையும் பாசிசத்தின் அழகியலையும் துறந்த தமிழ் பவுத்த அழகியல், அரசியல் பனுவல்களை எனது மொழிவழி ஒழுங்கில் கட்டமைக்கிறேன். பண்டிதர் அயோத்திதாசர் எனக்குப் பெரிதும் துணைநிற்கிறார்.”

தமிழ் அறத்திற்கானது, பிரெஞ்சு கவிதைக்கானது. இந்த இரண்டு தன்மையும்கொண்டு `திருக்குறள்’ எழுதப்பட்டிருக்கிறது

“தமிழில் கொண்டாட்டத்திற்குரிய மகிழ்ச்சியான கவிதைகள் குறைவாக இருப்பதன் காரணம் என்ன? மகிழ்ச்சியை எழுதுவது அவ்வளவு சிரமமா?”

“மகிழ்ச்சி, கொண்டாட்டம் என்றால் என்ன? நுணுகிப் பார்த்தால் ஆணுக்குப் பெண்ணின் உடம்பும், பெண்ணுக்கு ஆணின் உடம்பும்தான் மகிழ்ச்சி. என் அறிவுக்கு எட்டியவரை, காம நிகழ்த்துகலைதான் மானிடத்தின் முக்கியமான கொண்டாட்டம். இந்தக் கொண்டாட்டத்தைப் பற்றி எழுதினால்தான் எல்லோரும் பதற்றமாகி விடுகிறார்களே… அய்யோ இவன் உடம்பைப் பற்றி எழுதுகிறான் என்று ஒதுக்கிவைத்து விடுகிறார்களே? ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றால், மாணவிகள் ஒதுங்கிச் சென்றுவிடுகிறார்களே... இந்தச் சமூகம் காமத்தைக் கொண்டாட்டத்திற்குரிய ஒன்றாகக் கருதவில்லை. அப்படி நினைக்க அச்சப்படும் சமூகம், அதன்மீதான கவனத்தை ஈர்ப்பைத் தவிர்ப்பதற்காகவே சினிமா, கலைநிகழ்ச்சிகள், குடி, கூத்து, அரட்டை என மனிதரின் முன் கொண்டாட்டம் இதுதான் எனப் பாசாங்கு செய்கிறது. இப்படியான சமூகத்தில் மகிழ்ச்சியான படைப்புகள் எப்படி உருவாகும்?”

“நீங்கள் குறிப்பிடும் காமம், எல்லோருக்கும் பிடித்தமான ஒரு கொண்டாட்டமாகத்தானே இருக்கிறது. ஏன் அது ரகசியமாக்கப்படுகிறது; புனிதப்படுத்தப்படுகிறது; குறிப்பாக இந்தியச் சமூகம் ஏன் அதை ஒடுக்கவும் செய்கிறது?”

“காமத்தை ஒடுக்குபவை எவை? மதிப்பீடுகள்! மதிப்பீடுகளை உருவாக்குவது எது? சமூகம்! சமூகத்தைக் கட்டமைப்பவர்கள் யார்?

எல்லா விடைகளும் உங்கள் உள்ளங்கையிலேயே தரப்பட்டிருக்கின்றன. ஆனால், கொஞ்சம் பூடகமாக. சமூக நிறுவனம், ஒரு மனிதனை இயல்பிலிருந்து கீழாக்கம் செய்து கட்டுப்படுத்த, அவனுக்கு மூக்கணாங்கயிறு பூட்டும் விஷயமாகத்தான் காமத்தை விலக்கிவைக்கிறது. மனிதனின் காமத்தை ஒடுக்கி, மிக எளிதாக அவனை மனச்சிதைவுக்கு உள்ளாக்கலாம். அதைத்தான் இன்றைக்கு இந்தியச் சமூகம் செய்துகொண்டி ருக்கிறது. இதற்குள், சாதி, மத, வர்க்கக் காரணிகள் எனப் பல செயல்புரிகின்றன. ஆனாலும், ஓர் இயல்பான உணர்ச்சியை இவ்வளவு கொடூரமாகச் சித்திரிக்க முடிவது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த நாள் இன்று. நீங்களே சொல்லுங்கள்… என் இணையோடு இணைவதைவிடவும் இந்தச் சுதந்திரத்தை நான் எப்படிக் கொண்டாடுவது? உண்மையில், நமது உடம்பைப் பார்த்து நாமே அச்சப்படுகிறோம். நம் சமூகத்தில் எத்தனை பேர் தங்களின் முழுமையான நிர்வாண உடலைக் கண்ணாடியில் பார்த்திருக்கிறார்கள்/ பார்க்கிறார்கள்? பாலுறவு என்பது இருட்டில் நடக்கும் ஒன்று என்பதாகத்தான் எல்லோரும் புரிந்துவைத்திருக்கிறார்கள். இந்தியக் குடும்பங்களில் கோடிக்கணக்கானவர்கள், தங்கள் இணையின் பிறப்புறுப்பைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதுதான் நடைமுறை உண்மை.

அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும்

போதுதான் பெண்ணுறுப்பிலுள்ள கிளிட்டோரிஸைக் கண்டுபிடித்ததாகச் சொல்வார்கள். அந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகுதான், பெண்ணுக்கான பாலுறவு உச்சம் பற்றியே உலகம் அறிந்தது; பெண் விடுதலை என்பதே மற்றொரு கோணத்தில் பார்க்கப்பட்டது. வளர்ந்த சமூகத்தை விடுங்கள், ஆப்பிரிக்கப் பழங்குடிச் சமூகம் சிலவற்றில்கூட பெண்களின் கிளிட்டோரிஸ் நீக்கப்படும் சடங்கு உள்ளது. இந்த உண்மை ஆச்சர்யத்தையும் மிகுந்த கவலையையும் தருகிறது. ஆதிமுதலே, பெண் உடம்பை ஆண் அடக்கிவைக்கவே விரும்பியிருக்கிறான். அதன் முதல் நடவடிக்கையாகப் பாலுறவு, தண்டனைக்குரிய குற்றமாகச் சமூகத்தில் மாற்றிவைக்கப்படுகிறது.

1947-ம் ஆண்டுதானே நம் எல்லோருக்கும் இந்திய அடையாளம் வந்தது. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர் எனும் அடையாளம்தானே நம்முடையது!

மனித உடலிலிருந்து கொண்டாட்டம் விலக்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் அவரது மகிழ்ச்சிக்குரிய உடல் மீட்டுக் கொடுக்கப்பட வேண்டும். அதுதான் மனிதகுலத்துக்கு உண்மையான மீட்சியாக உண்மையான விடுதலையாக இருக்கும். இழப்பதற்கு ஒன்றுமில்லை, நம் அடிமை விலங்கைத் தவிர. பெறுவதற்கு ஒன்றுமில்லை நம் உடம்பைத் தவிர.”

“ஆணோ பெண்ணோ பாலியல் சார்ந்த சிறு குற்றச்சாட்டில் அவர்களது மொத்த வாழ்க்கையும் ‘கறைபட்டு’விடுகிறது. எளிய போராளி முதல் அமெரிக்க பிரசிடெண்ட் வரை இதுதான் நிலை. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“உயிரியல் உலகில் பாலுறவுச் செயல்பாட்டில் பாவப்பட்டு நிற்கும் விலங்கு, பேசும் மனிதர் மட்டுமே. பெரிதுபடுத்தப்பட்ட பாலுறுப்புகளை உடம்பில் பொருத்திக்கொண்டு அவர்கள் படும் இன்னல்களைச் சொல்லித் தீராது. அமெரிக்க அதிபரிலிருந்து, தஞ்சை உழுகுடிப் போராளிவரை, இது சமூக உறவுகளில் சமூக அரசியல் உறவுகளில் முதன்மைப் பாத்திரம் வகிக்கின்றது. பாலுறவுகளில் வல்லுறவு மட்டுமே அற இழுக்கு; இதில் மட்டுமே ஒரு பக்க ஒவ்வாமை செயல்படுகிறது. எதிர் பால் இணையோ தன் பால் இணையோ, இதில் ஒன்றையொன்று முரணும்போது, தனிநபர் பிரச்னையானது சமூகப் பிரச்னையாகி மூன்றாம் நபரின் தலையீடு நிகழ்கிறது. மேற்கண்ட அமெரிக்க தஞ்சை எடுத்துக் காட்டுகள், திட்டமிடப்பட்ட அரசியல் உள்நோக்கம் கொண்டவை. ஒருவரைத் தகுதியிறக்கம் செய்ய மேற்கொள்ளப்படும் அபத்த வன்முறை. இதில் காந்தி, பெரியார் போன்றோர் மயிரிழையில் தப்பிய சமூகச் செயற்பாட்டாளர்கள். இயல்பான ஆண்குறி, பெண்குறி செயல்பாட்டைப் பொதுச்சமூகம் பொருட்படுத்தக் கூடாது. குறிகளின் மேன்மையை வளர்த்தெடுத்து, குறி அறம் பேணாச் சமூகம் கீழ்மையுறும். பால்வழிச் சமூக மேன்மையைக் கட்டிக்காப்பதே கூட்டுக்குடி அறம். பாலுறவுச் சொல்லாடல்களை மறைபொருள் மர்மமாக்காமல் அவற்றை சமூகவழக்கில் கவினுற பாலரசியல்படுத்த வேண்டும்.”

“தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாடு என்ற இரண்டு வெளிகளிலுமே ‘காதல்’, ‘நட்பு’ என்ற இராண்டு உறவுகளுக்கும் முக்கிய இடமுண்டு. உங்கள் அனுபவத்தில் இவ்வுறவு சார்ந்த மதிப்பீடுகள் என்ன?”

“நட்பு, காதல் இரண்டும் பால் சார்ந்தோ உடம்பு சார்ந்தோ அமையவில்லை. பால் கடந்த வாழ்க்கையில் ஆன்மிகத் திளைப்பில் இருந்தேன். தோழனுடன் இருபத்தைந்து ஆண்டுகளும் தோழியுடன் பதினைந்து ஆண்டுகளும் வாழ்ந்தேன். கலை இலக்கிய வரலாறு அறியாத புதிர்வட்டப் பாதைகளால் அமைந்த வாழ்க்கையின் ஒரு முனை வழியாக நுழைந்த எலியால் எதிர் முனை வழியாக வெளியேறி வடையைத் தின்னமுடியவில்லை. சொந்த வாழ்க்கைத் தரவுகளிலிருந்து அறுதியிட்டுச் சொல்வேன், ஒருவனுக்கு ஒருத்தி என்ற அமைப்பே குறைந்த அளவிலான பாசிசம் வெளிப்படும் எளிய ஏற்பாடாகும்.”

“வரலாற்று மாணவர் நீங்கள். ஒரு வரலாற்று மாணவனாகப் பயின்றது, படைப்பாளியாக உங்களுக்குப் பயன்பட்டிருக்கிறதா?”

“ நான் கல்வி நிலையங்களுக்கு வெளியில் உருவானவன். வரலாறு மூலமாகத்தான் மனித குலத்தின் படிநிலைகளை அறிந்து கொண்டேன். சமூகம் எப்போதும் நிரந்தரமான ஒன்றுக்குள் அடைபடுவதில்லை என்ற உண்மையைத் தெரிந்துகொண்டேன். தொடர்ந்து ஒன்றை நிராகரித்து, மற்றொன்று வந்துகொண்டே இருக்கிறது. உக்கிரமாக நிகழும் எல்லாப் போக்குகளுமே தற்காலிகமானவையே என்பதை உணர்ந்துகொண்டேன். எந்த ஒரு சித்தாந்தமும் அதன் எதேச்சதிகாரத்தை   ஒரு நூற்றாண்டுக்கு மேல் தொடர முடியாது. எல்லாமும் அதன்போக்கில் காலாவதியாகும் என்ற மகிழ்ச்சியான செய்தியை வரலாற்றின் வழிதான் அறிந்தேன். காங்கிரஸ் கட்சி மட்டுமோ பா.ஜ.க மட்டுமோ தொடர்ந்து ஆளுங்கட்சியாக இருந்து மக்களை ஏமாற்ற முடியாது. எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு என்ற மகத்தான உண்மையை அறிந்ததால், தற்கால அழுத்தங்கள் என்னை பாதிப்பதில்லை. எனவே, நான் மகிழ்ச்சியாக சாவேன். இந்தப் பூமி எப்போதும் இருக்கும். நில வரைபடங்களும் மனிதர்களின் அரசியல் அடையாளங்களும்தான் மாறிக்கொண்டே இருக்கும்.”

“ஈழ இறுதி யுத்தத்தின் பொருட்டு தமிழகத்திலிருந்து அதிகமும் மொழிவழியாய் அலறியவர் நீங்கள். கிழக்கு பார்த்த வங்கக் கடல் உங்களுக்குள் எவ்வித நினைவுகளை, காட்சிகளை உண்டாக்குகிறது?”

“அது ஒரு கொடுமையான காலம். நான் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு நடுத்தெருவில் கைப்பிடியளவு வார்த்தைகளோடு அநாதரவாக நின்றிருந்த காலம். நான் பவுத்தனாக இருப்பதற்கு அவமானப்பட்டேன். அது அறம்சார் அறிவைக் கட்டமைக்கும் மனிதமையப் பொருள்முதற் சமயம் என்ற கற்பிதம் தகர்க்கப்பட்டு, புத்தன் என் முன் அம்மணமாக நின்றான். பாசிசமே முழுமுதல் உண்மை என்ற இருட்டறையில் அடைபட்டு அலறிக்கொண்டிருந்தேன். நான் கடலாலானவன். கடலில்லாத நிலப்பகுதியில் என்னால் உயிர்த்திருக்க முடியாது. கிழக்குக் கடலைப் பார்த்து பயந்தேன். அன்றொரு நாள், என் குட்டி மகள் அக்கடலைத் தனக்குக் கேட்க, அவளுக்கு அதைக் கையளிக்க வேண்டி, மைத்ரி விரிகுடா என அவளுடைய பெயரால் அழைத்தேன். அப்பெயரிலேயே அக்கடலைக் குறிப்பிட்டு எழுதிவந்தேன். அந்த மைத்ரி விரிகடலில் தமிழர் பிணங்கள் மிதந்துவந்து கரையொதுங்கின. பிணங்கள் குவியும் அறத்தின் மயானவெளியில் முக்கண் சடையனின் பேய்க்கூத்து. ‘பன்றிக்குட்டி’ என்ற கவிதைத் தொகுப்பின் வழி எனது சிதிலங்களை ஒன்றுகூட்டித் தொகுத்தேன். இறுதி யுத்தத்தின் முந்தைய ஆண்டில், புதுச்சேரியில் தோழர் ஒருவரின் இல்லத்தில் நிகழ்ந்த அறைக் கூட்டத்தில், தோழர்

வே.ஆனைமுத்து தனது உரையில், ‘ஈழம் அமைய 60 ஆண்டுகள் ஆகும்’ என்ற கருத்தை, அகில உலக அரசியலை ஆய்ந்து முன்வைத்தார். நான் அக்கருத்தில் முரண்பட்டு, கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறதென்று கூறினேன். கூட்டம் முடிந்து மனச்சோர்வுடன் வெளிவந்தேன். அறுபதாண்டுகள் வரை கூட்டத்தில் பங்கேற்ற யாரும் உயிருடன் இருக்கப்போவதில்லை என்ற உண்மை உக்கிரமாகச் சுட்டது. தமிழர்க்கு உரிமையுள்ள ஒருபிடி நிலம் பூமியில் அமையப்போவதைப் பற்றிய எதிர்பார்ப்பு தள்ளிப்போவதை அறிவு ஏற்றாலும் உணர்வு ஏற்க மறுத்தது. இதை இறுதி யுத்தம் என்று சொல்வது தவறு; முள்ளிவாய்க்கால் போர் என்றே கூறவேண்டும். அங்கு ஒன்றரை லட்சம் உடல்களாய் நான் செத்துச் செத்து வீழ்ந்தேன். இன்று ‘பன்றிக்குட்டி’யைப் படிப்பதற்கு பயமாயிருக்கிறது.”

“இந்தியச் சமூகத்திலும் தமிழ்ச் சமூகத்திலும் சாதி மத இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டுக் கொண்டாடப்படும் ஒரு தன்னிலை என்றால் அது இளையராஜாதான்.

“உங்கள் ஆளுமையை பாதித்த, முக்கியமான நூல்கள், சிந்தனைகள் மற்றும் ஆளுமைகள் குறித்துச் சொல்லுங்கள்…”

“பாரதியும் வள்ளலாரும் என்னை மிகவும் பாதித்த இருவர். வள்ளலாரிடமிருந்துதான் தமிழின் நவீனத்துவம் தொடங்குகிறது என்று சொல்வேன். சங்க இலக்கியங்கள்கூட மிக நவீன மனக்கட்டமைப்பு கொண்ட பிரதிகள்தான். திருக்குறளை ஒரு பின்நவீனத்துவப் பிரதியாகவே நான் பார்க்கிறேன். பல்வேறு தத்துவப் பள்ளிகளின் இணையமாக அது விளங்குகிறது.”

“இடைமறிப்பதற்கு மன்னிக்கவும். தமிழ் இலக்கிய மற்றும் சிந்தனைப் பகுதிகளைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறீர்கள். உடல், மனம், அரசியல், வரலாறு, தத்துவம் என ஐரோப்பிய சிந்தனைகளின் இலக்கியங்களின் தாக்கமும் உங்கள் எழுத்துகளில் வெளிப்பட்டதே… அதுகுறித்துச் சொல்லுங்கள்.”

“தமிழில் பாரதியைப் படித்ததுபோல, பிரெஞ்சு மொழியில் ஏராளமான கவிஞர்களைப் படித்திருக்கிறேன். நான் பள்ளியில் படித்தபோது, ‘உலகிலேயே கவிதைக்கான மொழிகள் இரண்டுதாம். ஒன்று தமிழ், மற்றொன்று பிரென்சு’ என்று என் ஆசிரியர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இரண்டையும் நான் கற்ற பின்பு உணர்ந்தது, இதுதான்: தமிழ் அறத்திற்கானது, பிரெஞ்சு கவிதைக்கானது. இந்த இரண்டு தன்மையும்கொண்டு திருக்குறள் எழுதப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன். மார்க்சியம் நான் அதிகம் படித்த சமூக அறிவியல் பனுவல்கள். இன்று வரை மார்க்சியம்தான் என்னை வழிநடத்துகிறது. சமீபத்தில் மார்க்ஸ் பற்றி, எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய உரையைக் கேட்கும்போது, பல இடங்களில் எஸ்.ரா. நாத் தழுதழுத்து நிற்க, நான் கண்ணீர்விட்டேன். உண்மையான மார்க்சியர்களிடமே அந்த மன அழுத்தம் வெளிப்படும். அதில் பாசாங்கு இல்லை. பொதுவுடைமை என்பது ஒருபோதும் மனித குலம் முழுமைக்கும் நிரந்தரமாவது சாத்தியமில்லை. அது சாத்தியம் ஆகாதவரை மார்க்ஸ் இருந்துகொண்டே இருப்பார். உலகில் கடைசி இரண்டு மனிதர்கள் மிஞ்சும்போதும், அதில் ஒருவர் தனியுடைமை என்றும் மற்றொருவர் பொதுவுடமை என்றும் பேசிக்கொண்டிருக்கத்தான் செய்வார். அதுதான் அந்தச் செருமானிய இரட்டை மூளைகளின் ஒற்றைச் சிந்தனையின் வெற்றி. மாற்றம் நிகழவேண்டியது வெளியில் மட்டும் இல்லை; உள்ளே இரண்டாய்ப் பிளந்த எதிரெதிர் நிலைகளைப் பார்க்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனியுடைமைவாதியும் பொதுவுடைமை வாதியும் இருக்கிறான். இரண்டு எதிரெதிர் உடல்களின் போராட்டம் அல்ல இது. ஓருடலுக்குள்ளேயே நிகழ்ந்திருக்கும் பிளவு. இதைப் புரிந்துகொள்ளாமல் மார்க்சியத்தை நடைமுறையில் சாத்தியப்படுத்த முடியாது. மேலும் இந்திய அறிவுஜீவிகளில் நான் திளைத்து நின்ற இடம் அம்பேத்கர். அவர் பன்முக அறிவாளி. புத்தருக்குப் பிறகு உருவான இந்தியப் பொதுமனிதர். தனிநபர் பல்கலைக்கழகம். ‘புத்தரா காரல் மார்க்ஸா’ என்று அவர் முன்னெடுத்த விவாதம் மார்க்சியத்தை ஆழ அகலப்படுத்துவது.”

“மார்க்ஸ், பாரதி போல நீங்கள் மிக முக்கியமான விவாதத்துக்கு உட்படுத்திய வரலாற்று ஆளுமை காந்தி. ‘காந்தியைக் கொன்றது தவறுதான்’ கவிதை நூலில், அவர் மகாத்மா என்று அழைக்கப்படுவதில் உங்களுக்கிருக்கும் ஆட்சேபனையைப் பதிவுசெய்திருப்பீர்கள். ஆனால், அம்பேத்கரை மகாத்மா என்று ஒரு கவிதையில் உணர்ச்சி மிகக் குறிப்பிடுவீர்கள்…”

“மகாத்மா என்பது அரசியல் சொல்லாடல் வழிவந்த ஒரு முடிபு இல்லை; அது கவிதையியல்சார் ஆன்மிக வெளிப்பாடு. ராமராஜியக் கனவுகாணும் வர்ணாசிரம நிலைப்பாடுகளை ஏற்கும் மனம்கொண்ட காந்தியை, தாகூரைப்போல் ‘மகாத்மா’ என்று இடப்படுத்துவதில் எனக்குத் தயக்கம் இருக்கிறது. நான் காந்தியவாதி இல்லை; அம்பேத்கரிஸ்ட். இதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். அம்பேத்கரியம் என்பது வரலாற்றுபூர்வமான, விஞ்ஞானபூர்வமான தன்னிலை உருவாக்கம். ஓர் அறிவுத் தேர்ந்தெடுப்பு. ஓர் அரசியல் நிலைப்பாடு. ஒருவர் அம்பேத்கரிஸ்ட்டாக வாழத் தேர்வது, துறவுநிலையைத் தேர்வதற்கு ஒப்பானது. ஒருவர் அம்பேத்கரிஸ்ட்டாக மாற வேண்டுமெனில், அவர் இந்திய மதவாத மனநிலையிலிருந்து, இந்திய சனாதன மனத்திலிருந்து வெளியே வர வேண்டும். இந்த இந்துத்துவ மனக்கட்டமைப்பைக் குலைக்க வேண்டுமெனில், அது ஒரு அம்பேத்கரிஸ்ட்டால் மட்டுமே முடியும். ஒருவர் அம்பேத்கரிஸ்ட்டாக மாற, மாபெரும் அறிவுப் பயிற்சி தேவைப்படும். மார்க்சியத்திற்கு அடுத்து நான் அதிகம் படித்த பனுவல்கள் அம்பேத்கரியப் பனுவல்கள்தான். நான் முழுமையான அம்பேத்கரிஸ்டாக மாற முயன்றுகொண்டிருப்பவன். அம்பேத்கரின் ஆன்மிகமே எனது விழைவு.”

“காந்தியையும் அம்பேத்கரையும் நீங்கள் எதிரெதிராக வைக்கிறீர்களா?”

“நான் எதிரெதிராக வைக்கவில்லை. காந்தியை மகாத்மா என்று சொல்லும்போது, அம்பேத்கரை ஏன் மகாத்மா என்று சொல்லக் கூடாது என்று கேட்கிறேன். இந்தியப் பொதுப்புத்திக்கு காந்தி ஒரு மகாத்மாதான். ஆனால், காந்தியை மகாத்மா என்று அம்பேத்கர் சொல்லமாட்டார். ‘கக்கத்தில் குறுவாளை வைத்துக்கொண்டு அகிம்சையை போதிப்பவரை மகாத்மா என்று ஏற்றுக்கொள்வீர்களா?’ என்று அம்பேத்கர் கேட்கிறார். அதேசமயம், அம்பேத்கர் காந்தியை முழுமையாக நிராகரிக்கவில்லை. விமர்சனபூர்வமாக அடையாளப்படுத்தவே செய்தார்.

அம்பேத்கர், ‘பூனா ஒப்பந்த’ முயற்சிகளை ஏற்க மறுக்கும் மனக்குமுறல்களை ஒரு நாடகமாக எழுதும் முயற்சியிலிருந்தபோது, அம்பேத்கரின் எழுத்துகளோடுதான் நான் வாழ்ந்தேன். அவரது வேதனைகளையும் போராட்டங்களையும் வாசித்துக் கலங்கினேன். இந்திய வரலாற்றில், காந்திக்கும் அம்பேத்கருக்கும் நடந்த உரையாடல்களை எந்தவொரு இந்தியரும் அவசியம் வாசிக்க வேண்டும். காந்தி தன்னுடலை வைத்து இரட்டை வாக்குரிமைக்கு எதிராக ஆடிய சூதாட்டத்தில், அம்பேத்கர் அடைந்த தவிப்பையும் அவரது ஓர் இரவின் மன உரையாடலையும்தான் நாடகமாக எழுதத் தீர்மானித்திருந்தேன். பல தோழர்கள் அதில் என்னையே அம்பேத்கராக நடிக்கவும் சொன்னார்கள். அதைத் திரைப்பிரதியாக எழுதும் எண்ணம் இருந்தது. பிறகு, பல காரணங்களால் அதை எழுதமுடியாமல் போயிற்று. உண்மையாகவே காந்தி இரட்டை வாக்குரிமைக்கு எதிராகச் செய்தது வரலாற்று மோசடி. அதை எந்தவொரு அம்பேத்கரிஸ்ட்டும் ஏற்றுக்கொள்ளமாட்டார்.”

“காந்தியை ‘தலித்துகளுக்கு எதிரி’ என்று ஒரு சாரரும், ‘இந்து மதத்துக்கே எதிரி’ என்று மறு சாரரும் ஒதுக்கிவைத்துவிட, வரலாற்றில் காந்தி ஆதரவற்றுத்தானே நிற்கிறார்? காந்தியின் உருவ பொம்மையைக்கூட மதவாதிகள் சுடுகிறார்களே…”

“இல்லை... காந்தி இந்தியாவின் மையமாகத்தான் எப்போதும் இருந்துவருகிறார். காந்தியை மறுத்துவிட்டு எந்த ஒரு விவாதமும் இங்கு நடைபெறுவதே இல்லையே. இன்றைக்கு காந்தி பொம்மையைச் சுடுகிறார்கள். அம்பேத்கர் சிலைகளை உடைக்கிறார்கள். நாளை தங்களைத் தாங்களேகூட சுட்டுக்கொள்வார்கள்... (சிரிக்கிறார்)

இதுபோன்ற செயல்களையெல்லாம் ஓர் அரசியல் அல்லது தத்துவ நிலைப்பாடு என்று சொல்ல முடியாது. அது அவர்களின் மனச்சிதைவைத்தான் வெளிப்படுத்துகிறது. சுதந்திர இந்தியாவில், இன்றைக்கும் அம்பேத்கர் இரும்புக் கூண்டுக்குள்தானே இருக்கிறார். காந்தி சுதந்திரமாகத்தான் இருக்கிறார். இந்தியப் பொதுப்புத்தி, அம்பேத்கரை ஒருநாளும் ஏற்காது.”

“அம்பேத்கரை ‘இந்துத்துவ அம்பேத்கர்’ என்று உருவகப்படுத்த முயல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அம்பேத்கர் ஒரு முழுமையான இந்தியன். இந்துத்துவ இந்திய மனநிலையும், அதற்கு எதிரான இந்திய மனநிலையும் வேறுவேறு. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தவர்கள், காங்கிரஸ்காரர்கள் யாருக்கும் முழுமையான இந்தியராகும் வாய்ப்பில்லை. ஏனென்றால், இவர்களுக்குள் பிராந்திய, சாதிய, மதவாத, மொழிசார்ந்த எல்லைகள் செயல்பட்டுக் கொண்டே இருக்கும். காந்திக்குள் ஒரு குஜராத்தியின் மனமும், நேருவுக்குள் ஒரு காஷ்மீரியின் மனமும் செயல்பட்டுக் கொண்டேயிருக்கும். அம்பேத்கருக்கு அவ்விதமான பலவீனங்கள் எதுவும் கிடையாது. மொழிவாரி மாநிலங்களைக்கூட அம்பேத்கர் அன்று மறுத்தார். பிளவுகள் உண்டாகும் என்று எச்சரித்தார். ‘ஏக இந்தியா’ என்ற கருத்தில் அவர் உறுதியாக இருந்தார். சுயநலமற்ற தொலைநோக்கோடு செயல்பட்டார். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒடுக்கப்பட்ட சாதியினரைப் பட்டியிலிட்டபோது, அது இந்தியத் துணைக்கண்டத்தைப் பற்றிய மாபெரும் சமூக மானுடவியல் படிப்பினையாக இருந்தது. தலித்துகள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் ஓர் இனக்குழுவல்ல; இந்தியா முழுக்கப் பரவி வாழும் ஓர் ஒடுக்கப்பட்ட இனம் என்று கண்டறிந்து, அவர்களின் விடுதலைக்காகப் போராடினார். துணைக்கண்டத்தில் மூன்று இந்தியா இருக்கின்றன. தலித் இந்தியா, சூத்திர இந்தியா, பிராமண இந்தியா. இதில், தலித் இந்தியா கண்டம் முழுதும் சிதறிக்கிடக்கிறது.”

“இந்திய அளவிலான தலித்துகளின் ஒன்றிணைவிற்கு தமிழ்த்தேசியம் தடையாக இருக்கும் எனும் வாதம் குறித்து உங்கள் பார்வை...”

“இந்த இடத்தில் மிகக் கவனமாக நாம் இரட்டை நிலைப்பாடு எடுக்க வேண்டியது அவசியம். நாம் ஒட்டுமொத்த இந்திய அடையாளத்திற்குள் செல்வது என்பது ஒரு தற்காலிக தேசிய ஏற்பாடுதான். 1947-ம் ஆண்டுதானே நம் எல்லோருக்கும் இந்திய அடையாளம் வந்தது. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர் எனும் அடையாளம்தானே நம்முடையது! இந்திய அடையாளம் என்பது ஓர் அரசியல் அடையாளம். தமிழர் என்பது இனக்குழு அடையாளம். இது வெளியிலிருந்து உருவாக்கப்பட்ட ஓர் அடையாளம் அல்ல. ஓர் இனம் நாகரிக வளர்ச்சிபெற்று, உயர்ந்து, தன்னகத்தே உருவாக்கிக்கொண்டது. இந்த அடையாளம் தனித்துவமானது; வரலாற்றுபூர்வமானது; இதைத் தூக்கிப்பிடிப்பது அவசியமானது. இந்திய அடையாளம் எப்போதும் மாறிவிடச் சாத்தியமுள்ள ஒன்று. நாளையே இந்தியா இரண்டாக நான்காக எட்டாகப் பிரியலாம். அப்போது நமது தேசிய அடையாளமும் மாறலாம். ஆனால், நமக்குச் சொந்தமான, உரித்தான தமிழர் எனும் இனக்குழு அடையாளத்தை ஒருபோதும் நாம் இழந்துவிடக் கூடாது. இந்திய அரசியல் கட்டமைப்பில் ஒரு மொழித்தேசியமாக, மொழிவழி இனக்குழுவாக அடையாளப்படும் தமிழர், நாளைய தனி நாட்டில் முழுமையான தமிழ்த் தேசியராக அடையாளப்படுவர்.”

“இது பேணப்பட வேண்டிய அடையாளம். அதேசமயம், இந்த விழிப்புணர்வோடே நாம் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற தளத்தில் இந்திய அளவில் ஒன்றுகூடுவதும் அவசியம் என்கிறீர்கள். சரிதானே?”

“ஆமாம், மூன்று இந்தியா இரண்டாகப் பிரித்துத் தொகுத்து ஊர் இந்தியா, சேரி இந்தியா என்றுதானே இருக்கிறது. இந்திய அளவில் வர்ணாசிரமத்தை உடைத்தால்தான் சாதி ஒழியும். இந்திய நிலப்பரப்பு என்பது பிரம்மனின் உடம்பு. இந்த உடம்புக்குள் தலித்துகள் இல்லை. உடம்புக்கு வெளியில்தான் இருக்கிறார்கள். பிரம்மனின் முகத்துக்கு வெளியேகூட இல்லை; சூத்திரரின் காலுக்கு வெளியே இருக்கிறார்கள். இன்னொரு விஷயத்தை இங்கே குறிப்பிட வேண்டும். ‘இந்தியாவின் தொல்குடியே தமிழர்கள்தான் (நாகர்கள்). இன்றைக்கு இந்தியாவை ஒரு மக்கள் தொகுதி உரிமைகொண்டாட முடியும் என்றால், அது தமிழர்கள்தான்’ என்கிறார் அம்பேத்கர். இதைப் போகிறபோக்கில் சொல்லாது, ஆதாரபூரமாக நிறுவுகிறார். இன்று இதை வடஇந்தியர்கள் ஏற்றுக் கொள்வார்களா?”

“சரி, மீண்டும் இலக்கியத்துக்கு வருவோம். உங்கள் நினைவில் எப்போதும் நீங்காதிருக்கும் ஒரு கவிதை மற்றும் ஓர் ஓவியம் குறித்துச் சொல்லுங்கள்…”

“ ‘காந்தியைக் கொன்றது தவறுதான்’ என்ற தலைப்பில் எழுதிய பத்துக் கவிதைகளில் ஒன்று, என்னைத் தனக்கு எதிரே நிறுத்தி மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொல்கிறது. அந்தக் கவிதையிலிருந்து என்னால் வெளியேற முடியவேயில்லை:

நேற்று எனது கனவில்

காந்தி வந்தார்

எனது இருக்கையிலிருந்து எழுந்து

அவரை அமர்த்திவிட்டு

தரையில் அமர்ந்தேன்

என் கனவில் வந்த காந்திக்கு

வயது முப்பத்தியாறு

என்னைவிட மூன்று வயது இளையவர்

ஆழ்ந்த இறுக்கத்தில் இருந்தார்

சில நிமிடங்களுக்குப் பிறகு

ஆழ்ந்த மௌனத்திலிருந்து

கண்ணீர் வழிந்தது

சப்தமின்றி அழுதார்

மழை போலவோ

அருவி போலவோ

பேரோசை எழுப்பாத

நீரின் வீழ்ச்சி

சப்தமற்ற அழுகைதானே

என்னிடம் ஒரு துப்பாக்கியை எடுத்து நீட்டினார்

நான் பதற்றத்தோடு பெற்றுக்கொண்டேன்

தன்னைச் சுடச்சொல்லிச் சைகை செய்தார்

நான் தயங்கினேன்

பல மணி நேரம் வார்த்தையின்றி மன்றாடினார்

ஒரு கட்டத்தில் என்மீது

வெறித்த பார்வை நிலைகொள்ள

கண்களிலிருந்து முடிவற்று நீர்வழிய

ஆழ்ந்த இறுக்கத்தில் சமைந்தார்

வலி தாளமுடியவில்லை

அவரது நெற்றியில் பொருத்தி

வெடித்தேன்

திடுக்கிட்டு கனவிலிருந்து

வெளிப்பட்டேன் உடம்பெல்லாம் பெரும் நடுக்கம்

விளக்கைப் போட்டேன்

சுவரில் கிழவர் சிரித்துக்கொண்டிருந்தார்

வியர்வைப் புழுக்கத்தில்

என் நெற்றிக் குங்குமம் வழிந்து

மூக்கின்மீது ஊர்ந்துகொண்டிருந்தது

நத்தையைப் போல

காந்தியின் ரத்தம்.

தமிழக ஓவியர்களில் டிராட்ஸ்கி மருதுவின் கோடுகளில் எனது பார்வை ஊர்ந்து செல்லச் செல்ல அவை உயிர்ப்பொருளாய் நெளியும். அவை தரும் அனுபவம் அலாதியானது. கலைவிமர்சகர்களும் படைப்பாளர்களுமான சி.மோகனும் இந்திரனும் என் வணக்கத்துக்கு உரியவர்கள்.”

“மனிதர்களுக்கு அவர்களின் மகிழ்ச்சிக்குரிய உடல் மீட்டுக் கொடுக்கப்பட வேண்டும்!”

‘1789 ஜூலை 14 - அன்று கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்’ எனும் உங்கள் கதைத் தலைப்பே மயக்கம் தருவது. கனவுகளுக்கும் உங்களுக்குமான உறவு குறித்துச் சொல்லுங்கள்…”

“அந்தத் தலைப்பிலான கதை உட்பட ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு அது. பிரெஞ்சுப் புரட்சி நடந்த அன்றைய நாளின் கனவில் பெய்த மழையில் யாரும் நனையவில்லை. அது அமாதியே மொஸாரை ஊடுபிரதியாகக்கொண்ட புனைவு. அதை முதலில் ஒரு திரைப்பிரதியாக உருவாக்க நினைத்து, இறுதியில் இப்படியான நெடுங்கதை வடிவத்தில் வெளிவந்தது. அத்தொகுப்பிலுள்ள ஐந்து கதைகளையும் நாவல்களாக எழுத நினைத்து, இறுதிவரை இயலாமல் கனவில் பெய்தமழை தடையமற்றுக் காய்ந்துபோனது. ‘பிரம்மனின் உடம்புக்கு வெளியே’ என்ற கதையை யாரேனும் திரைப்படமாக எடுக்க முன்வரலாம். பன்னிரண்டு ஆண்டுகளாக எனக்குப் படைப்பாக்கக் கனவுகள் வருவதில்லை. பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பதால் இது நேர்ந்திருக்கலாம். பகல் கனவில் வெயிலடிப்பது கவித்துவ இழப்பை உண்டாக்குகிறது. பத்து வயதிற்குட்பட்ட என் மகளைத் தவிர வேறு உயிரினம் கனவில் வருவதில்லை. பூனை, பாம்பு, வண்ணாத்தி, நத்தை யாவும் என் கனவிலிருந்து வெளியேறிவிட்டன. மழையில் இனி நனைவேனா? நடந்து பழகிய புதுச்சேரிக் கடற்கரையைத் தொலைக்காட்சி வாயிலாகப் பார்க்கிறேன். கனவில் கடல் வருவதில்லை. தூரத்துக் கடலோசை அதிகாலை உறக்கத்தில் நுழைவதில் மட்டுமே இயற்கையோடு இருக்கிறேன்.”

“கொலை, தற்கொலை பற்றி கவிதைகளில் மிக நுட்பமாக எழுதியிருக்கிறீர்கள். எப்போதேனும், உங்களுக்குத் தற்கொலை எண்ணம் வந்ததுண்டா?”

“கொலையின் கவிதையியலையும் தற்கொலையின் கவிதையியலையும் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதியிருக்கிறேன்தான். இச்சாதியச் சமூகம், ஒரு தன்னிலையைக் கொலைக்கும் தற்கொலைக்குமிடையில் நிறுத்தி வைத்திருக்கிறது. கொலையும் தற்கொலையும் அற இழுக்கு. உலகச் சமூகங்கள் தங்கள் ராணுவ நிலைகளை மூடும் காலமே கொலையும் தற்கொலையும் காலாவதியாகும் காலம். கொலையும் தற்கொலையும் சமூக விளைவுதானே தவிர, தனிமனித விளைவு இல்லை. துப்பாக்கியின் ஒவ்வொரு தோட்டாவும் ஒவ்வொரு தலைக்கு என்ற கணக்கில்தான் உலைக்கூடத்தில் வார்க்கப்படுகிறது. நான் வள்ளுவம் வழியில் ஒழுகுபவன்; மரணமில்லாப் பெருவாழ்வை இச்சிப்பவன்.”

“முன்பு நீங்களும் பிரேமும் இணைந்து இளையராஜாவை நேர்காணல் செய்திருந்தீர்கள். அது புத்தகமாகவும் வந்தது. அதில் அவர் பேசியதுபோல அரசியல்பூர்வமாக வேறு எங்கும் எப்போதும் பேசியதில்லை…”

(இடைமறிக்கிறார்) “இளையராஜா அதே விஷயத்தைப் பேசினார். ஆனால், நடைமுறைத் தமிழில் பேசினார். நாங்கள் எங்களுடைய மொழியில் எழுதினோம். அப்படி எழுதியதால், சிலர் நாங்களே மொத்த நேர்காணலையும் எழுதிக்கொண்டதாகச் சொன்னார்கள். அப்படி எழுதிக்கொள்வதால் எங்களுக்கு என்ன லாபம்? சென்னையில் நடந்த அந்த நூல்வெளியீட்டு விழாவுக்கு 500 ரூபாய் கடன் வாங்கிக்கொண்டுதான் சென்றோம். அந்த நேர்காணல் நூல் வெளிவந்தபோது, தமிழின் மிகப்பெரிய இலக்கியவாதிகள் பலர் எங்களை விலக்கி வைத்தார்கள். எங்களின் வேலைக்கு இடையூறுகள் தரப்பட்டன. இவையெல்லாம்தான் அந்தப் புத்தகத்தினால் எங்களுக்குக் கிடைத்த லாபம்.”

“இளையராஜா மற்றும் அவரது இசை குறித்த உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?”

“இந்தியச் சமூகத்திலும் தமிழ்ச் சமூகத்திலும் சாதி மத இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டுக் கொண்டாடப்படும் ஒரு தன்னிலை என்றால் அது இளையராஜாதான். லட்சக் கணக்கானவர்கள் அவரை தெய்வமாகவே பார்க்கிறார்கள். ஆகச்சிறந்த அறிவாளியும் புரட்சியாளருமான அம்பேத்கருக்கே அந்தச் சிறப்பு வாய்க்கவில்லை. ஆனால், இளையராஜா அதைத் தனது கலையால் சாத்தியமாக்கியிருக்கிறார். மிகப்பெரிய இசை ஆளுமை அவர். அவரால் எல்லாவிதமான இசைச் சாதனைகளையும் செய்ய முடியும். ஆனால், இன்னும் அவர் சினிமா இசைக்குள்ளேயே சிக்கிக்கொண்டிருப் பதுதான் வருத்தமளிக்கும் விஷயம். இளையராஜாவைத் தாண்டியும் இன்று இசை வளர்ந்தும் விரிந்தும் சென்றுகொண்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவர் குறித்துக் குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம், அவர் இசையில் வெளிப்படுகிற ஆன்மிகம் அவரது தனிப்பட்ட வாழ்வில் தென்படவில்லை. துறவிகளைத் தேடிச் செல்பவராக இருக்கிறார், அவருக்குள் இன்னும் துறவு ஏற்பட்டதாய் அவதானிக்க முடியவில்லை.”

“உங்களின் இலக்கியப் பங்களிப்புக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கருதுகிறீர்களா?”

“யாரிடமிருந்து யாருக்கு அங்கீகாரம்? எதிர்த் திசையில் இயங்குபவரை யார் அங்கீகரிப்பார்? என்னுடைய எழுத்துகள் அங்கீகாரத்திற்கானவை இல்லை. விளிம்பில் நிற்பவர்களுக்கான எழுத்து ஒருபோதும் மையநீரோட்டத்தில் சேராது. என்னை வாசித்த திளைப்பில் முகம் அறியாதவர்கள் கொண்டாடுகிறார்கள். உணவு, உடை, மருந்து என யாரேனும் தந்துதவி, என் இருப்பை நீட்டிக்கிறார்கள். என்னை அங்கீகரிப்பவர்கள் மரணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள்.”

“55 வருட உடலும் மனமும் உங்களுக்குச் சொல்லும் செய்தி என்ன?”

“ஆம், என் உடம்புக்கு ஐம்பத்தைந்து வயது ஆகிறது; உள்ளம் பதின்பருவத்திலேயே நிலைத்து நிற்கிறது. உடம்பின் அர்த்தநாரித் தன்மையின் பெண்ணிலை செயலிழந்து விட்டது. உடம்பின் பெண் பகுதியைத் துறந்ததும் முழு விடுதலை அடைந்தேன். இனி வலி இல்லை வாதை இல்லை. விட்டு விடுதலையாகி நிற்கிறேன். தன்னை இரண்டாய்ப் பிளந்து சக்தியின் மூளிப் பிணத்தை அகோரி சிவன் தின்கிறான்.”

“இந்தத் தருணத்தில் நீங்கள் நினைத்துப் பார்க்க விரும்பும் உங்களின் அன்புக்குரிய நண்பர்கள், ஆளுமைகள்...?”

“சாரு நிவேதிதா, என்னை நேசித்து வளர்த்த பேரன்பாளர். பலவீனங்களை மறைக்கத் தெரியாதவர். இயேசுவை மறைந்து மறைந்து, இரண்டாயிரம் ஆண்டுகளாய்த் தேடித்திரியும் மக்தலேனாவின் ஆண்பால் வடிவம். ஆனால், யாரைத் தேடுகிறோம் என்பதை இதுநாள் வரை அறியாதவர். புதிர்வட்டப்பாதையில் அடைபட்ட கலையுள்ளம்.

எம்.டி.முத்துக்குமாரசாமி, அறிவும் கலையும் இரண்டறக் கலந்த திளைப்பை அவருடனான உறவாடலில் மட்டுமே இதுநாள் வரை நான் கண்டது. விவாதங்களில் திகைக்கவைக்கும் நுட்பம். தமிழ் அறிவு ஒருமுகப்பட்ட பன்னாட்டுப் பண்பாட்டு அறிவுஜீவி.

வே.மு.பொதியவெற்பன், தமிழ் அறிவு மரபில் வரும் பின்நவீனத்துவ மார்க்சியர். ஆழ்ந்து அகன்ற இடதுசாரி நுண்ணரசியல் எழுத்தாளுமை. என்னை முன்னகர்த்திக் கொண்டிருப்பவர். ஆதியும் அந்தமுமிலா தோழமை உறவு இவருடன் மட்டும்தான்.

கரையில் கிடந்த என்னை எடுத்து மீண்டும் அலையில் விட்டவர், இந்நூற்றாண்டின் மகாகலைஞன் ஜெயமோகன். படைப்பைத் தவிர வேறு எழுத்துகளில் ஒன்றமுடியாத முரண் ஆளுமை. எளிமையாகச் சொன்னால் இவரால்தான் இருக்கிறேன். இறுதியில் சேரவேண்டிய, பாரதியின் குயில் தோப்புச் சுடுகாடு, இடைக்காலத்தில் தூங்கி ஓய்வெடுக்கும் இடமாக இருந்தது. அங்கிருந்து என்னை இவர் அப்புறப்படுத்தினார்.

எழுதப் படிக்கத் தெரியாதவள். என்னை உள்ளும் வெளியும் அறிந்தவள். ஆணிவேர் அறுபட அடியோடு சாய்ந்தவனைத் தூக்கி நிறுத்தி நீரூற்றி வளர்த்து, மீண்டும் தழைக்கச் செய்பவள். என்னை ஆட்கொண்ட அங்காளி. நான் சரண்புகுந்த அருட்பெருஞ்சோதி, பிரேமா என்ற பெயர்கொண்ட தோழி.

“வேறு ஏதேனும் சொல்ல நினைக்கிறீர்களா?”

தன் முன்னே நான்குபேர் அமர்ந்து, தான் பேசுவதைச் செவிமடுக்கும்போது அந்த மொழியில் தேவதூத போதகச் சாயல் படிந்துவிடும். இந்தச் சட்டாம்பிள்ளைத் தொனி இந்நேர்காணலில் வந்துவிடக் கூடாது என்பதை மேலதிகப் பிரக்ஞையோடு தவிர்க்கிறேன். இது மொழிவழி நேரும் ஒருவகை மேலாதிக்க பலவீனம். இதை இயேசு கிறிஸ்து தொடங்கி மரத்தடி கிளி சோதிடர் வரை காணலாம்.

நான் இதுவரை வாசித்து வளர்ந்ததையும், எழுதியதையும் எழுதயிருப்பதையும் இங்குக் குறிப்பிட்டுப் பெயர் பட்டியல்போட விரும்பவில்லை. இலக்கியம், கலை, நிகழ்த்துகலை, மதம், தத்துவம், சமூகவியல், அறிவியல் யாவும் ஒன்றுகலந்த அறிவுச்சமைவு நான். இதுவரை வாழ்ந்த நாள்களுக்கு இணையான எண்ணிக்கைகொண்ட பனுவல்கள் அறிமுகமாகி, அவற்றில் விருப்பம் சார்ந்து தேர்ந்து, சிலவற்றை ஏற்று, பலவற்றை ஒதுக்கி வாசித்து வளர்பவன். உலக மக்கள் தொகையைவிடப் பலமடங்கு அதிக எண்ணிக்கையிலான நூல்கள் எழுதப்பட்டு விட்டன. தான் வாழ்ந்து முடித்த ஆண்டுகளைவிட மேலதிக எண்ணிக்கை யிலான நூல்களை, எந்தவொரு அங்கீகாரமும் இல்லாத தமிழ்ச்சூழலில் சக எழுத்தாளர்கள் எழுதிவிடுகிறார்கள். ஆக, எந்தவொரு வளர்ந்த மொழியிலுள்ள அனைத்து நூல்களையும் அம்மொழியைத் தாய்மொழியாய்க்கொண்ட ஒருவரால் துறைசார்ந்து முழுமையாக வாசித்துமுடிக்க இயலாது. எல்லாவற்றிலும் கொஞ்சமே நாம் அறிந்தது. அடடா… ‘கற்றது கையளவு, கல்லாதது கடலளவு’ என்று முதுமொழி இதை நான்கு சொற்களால் சொல்லிவிட்டது.

“உங்களுக்குப் பிடித்த பாரதியின் கவிதை வரிகளோடு நேர்காணலை நிறைவுசெய்வது பொருத்தமாக இருக்கும்...”

“சிலுவையிலே அடியுண்டு இயேசு செத்தான்

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்

பலர்புகழும் ராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்

பார்மீது நான்சாகா திருப்பேன் காண்பீர்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism