Published:Updated:

சிறுகதை :எஸ்.பி.பி சூப்பர் ஹிட்ஸ்

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

நவீன்.மு

சிறுகதை :எஸ்.பி.பி சூப்பர் ஹிட்ஸ்

நவீன்.மு

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை
“வேல்முருகன் பஸ்ஸு, போடி டு மதுர, அதுல நம்மதே டெய்வரு... ‘காதலின் தீபம் ஒன்று’ அந்தப் பாட்ட எத்தன டிரிப் போட்டாலும் சலிக்காம கேப்பேன். அன்னைக்கும் பஸ்ல அந்தப் பாட்டுதே ஓடிட்டு இருந்துச்சு. வண்டி தேவர் சிலை ஸ்டாப்ல நிக்குது. ‘லேடீஸு எல்லாம் உள்ள ஏறி வாமா’ன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். திடீர்ன்னு முதுகுக்குப் பின்னாடி வெந்தய வாசன, திரும்பிப் பாக்குறேன். அந்தப் பிள்ள என் கண்ணுல தட்டுப்படுது. அந்தப் பிள்ள மாஸ்க்கோட இருந்தாலும் தோராயமா ஒரு உருவம் மனசுல பதிஞ்சிருச்சு. அந்த...’’

திடீரென்று ஒரு அதட்டல் குரல் வந்தது...

“ஏய்... பாய்சன் கேஸு! சைலன்டா இருக்கமாட்ட?” என்று டியூட்டி நர்ஸ் சத்தமிடுவதைக் கேட்டு ராசு, தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்ததை நிறுத்தினான்.

இந்த நர்ஸ் காலை ஷிப்டுக்கு வந்திருக்கிறாள். இவள் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சவுக்கின் சொடுக்கல்கள். ஆனால் நைட்டு ஷிப்டுக்கு வந்த நர்ஸ் ஒரு சாந்த சொரூபி, குணமான மனுஷி.

ராசுவை மருத்துவக் கல்லூரி தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்துவிட்டு, நேற்றிரவுதான் ஐ.எம்.சி.யு வார்டுக்கு மாற்றினார்கள். நானும் அப்பாவும் இதே வார்டில் பத்து நாள்களாக இருக்கிறோம். ராசுவின் படுக்கை, அப்பாவின் படுக்கைக்கு எதிர்ப் படுக்கை.

துரைதான் ராசுவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிக் கொண்டு வந்தான். வார்டுக்குள் வந்தவுடனே மற்ற நோயாளிகளின் உறவினர்கள், ராசுவைப் பற்றி விசாரிக்க துரையை மொய்த்தார்கள். அந்தக் கூட்டத்திலிருந்து விடுபட்ட டெங்கு பேஷன்ட் சுப்புதாயி, “எளந்தாரி பய மொளைச்சு வர்ற வயசுல இப்படி மருந்தக் குடிக்கலாமா?’’ என்று வாயில் சீலையைப் பொத்தியபடி தனக்குரிய பெட்டில் சாவகாசமாக ஏறிப் படுத்துக்கொண்டாள்.

ராசுவைப் பார்த்தபோது கழுத்தைச் சுற்றிப் பெரிய கட்டு இருந்தது. உதடுகள் மேலும் கீழும் வெடித்து வீங்கியிருந்தன. மருத்துவர்கள் ராசுவை ஆராய்ந்து, “ரெஸ்ட்லெஸ்ஸா இருக்காரு... ஓரிரு நாள்களில் செட்டிலாகிவிடும்” என்றார்கள்.

கெடுபிடியான அந்த நர்ஸ் சாப்பிடக் கிளம்புவதை ராசு பார்த்துவிட்டு, “அந்தப் பிள்ள தேனிக்கு தெனமும் நம்ம வண்டியிலதேன் வேலைக்குப் போகுன்னு தெரிஞ்சு, சீடி கடக்காரன்கிட்ட அடிப்பாட்ட பூராம் அழிச்சுவிட்டு எஸ்.பி.பி சூப்பர் ஹிட்ஸா பதியச் சொல்லிட்டேன். நம்ம லவ்வுக்கு அஸ்திவாரமே எஸ்.பி.பிதான்.

சிறுகதை :எஸ்.பி.பி சூப்பர் ஹிட்ஸ்

இந்த ‘காதலின் தீபம் ஒன்று’ பாட்டும் அந்தப் பிள்ள நெனப்பும் மிக்ஸிங் ஆச்சின்னா மனசு வீக்கம் அசால்டா வத்தும்.

ஆரம்பத்திலேருந்து நா போட்ற பாட்ட அந்தப் பிள்ள உன்னிப்பா கேக்கும். அது பஸ்ஸுல ஏறிட்டா போதும்... இந்த `பொத்தி வச்ச மல்லிக மொட்டு’, ‘வலையோசை கலகல’, ‘மண்ணில் இந்தக் காதலின்றி...’ இப்டி எல்லாப் பாட்டும் நம்ம செட்டுல சகட்டுமேனிக்கு விழும். என்ன... அந்தப் பிள்ள வண்டியில ஏறி தேனி இறங்க அர மணி நேரம் டைம். இதுல கூடக் கொறைய ஒரு அஞ்சு பாட்டு கேட்க முடியும்.

அந்தப் பிள்ள பார்வைய எம்மேல போக்கஸ் பண்ண நானும் என்னென்னமோ லந்த குடுத்துப் பாத்தேன். கண்டுக்கவே இல்ல. ஒருநா... இந்த கண்டக்டர் துரை பின்னுக்கிருந்து எஸ்.பி.பி பாடுன `ஓ பாப்பா லாலி’ போடச் சொன்னான். வக்காளி… அது எஸ்.பி.பி இல்லடா, அவர் டூப்பு மனோ பாடுனதுன்னு சொல்ல... மொத்த பேசஞ்சரும் இளிச்சாய்ங்க. அப்பதே அது மொத ட்ரிப்பு என்னைய சைடு பார்வ பாத்துச்சு…

அந்த டயம் பாத்து ‘அழகான மனைவி… அன்பான துணைவி… அமைந்தாலே பேரின்பமே’ன்னு எஸ்.பி.பி பாட… என்னா சொகம், அன்னைக்கி வண்டிய அடிச்சி ஓட்டி சிட்டா பறக்க விட்டேன்.’’

கொஞ்சம் கரகரத்த குரலில், “இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!’’ என்று ராசு வார்டுக்குள் உருகிப் பாட... டியூட்டி நர்ஸ் வேகமாக வருவது தெரிந்தது. உடனே தூங்குவது போல் பாவ்லா செய்தான்.

“ஏய் பாய்சன் கேஸு. நீ காலையில ரவுண்ட்ஸ் வந்த ஹவுஸ் சர்ஜன நிறுத்தி வச்சி கணேஷ் போயல கேட்டியாமே… திமிரா? வரட்டும், சொல்ற எடத்துல சொல்றேன்” என்று நர்ஸ் ஆவேசமாகப் பேசிவிட்டு நகர முற்பட்டாள்.

ராசு தூங்கிய நிலையில்... “கல்யாண மாலை… ம்ஹு... ஹு... ஹும்... ம்ஹு...’’ என்று முனகினான்.

“சத்தம் வரக்கூடாது...” என்று எச்சரித்த நர்ஸிடம், “மேடம்... எனக்குத் தூக்கம் வர்ல… மூச்சு விடாம ஒரே பாட்டு… பிளீஸ்...’’

“எப்பா டேய், நீ குடிச்ச ரோக்கர மிச்சம் இருந்தா குடுடா, என்னால உன்ன சமாளிக்க முடியல” என்றாள்.

ராசு சற்றும் தாமதிக்காமல்,

“வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி

என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமின்றி

சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்...”

“முடியல… வாய் வெத்தல பாக்கு போட்றும் போல…’’ என்று பாட்டைப் பாதியிலேயே நிறுத்திய ராசுவுக்கு மூச்சு மேலும் கீழுமாக வாங்கியது. இதைக் கவனித்த டி.பி பேஷன்ட் கிழவர் ஆக்ஸிஜன் டியூபுடன் இருமிக்கொண்டே, “சபாஷ்... சபாஷ்...” என்று ராசுவை உற்சாகப்படுத்தினார்.

கிழவர் ராசுவைப் பார்த்து “எஸ்.பி.பி.க்கே கொரோனாவாமே” என்றார்.

“அவருக்கு லேசா தடுமம்தே புடிச்சிருக்கு. இவீங்களுக்கு ஊரையான் வீட்ல எழவ கூட்டிவிடணும்... அம்முட்டுதேன்’’ என்றான்.

திடீரென்று ராசு கழுத்தைப் பிடித்துக் கொண்டு வலியால் துவண்டபோது அவன் பார்வை என்மீது இருந்தது.

“பாஸு... கழுத்து கடுக்குது. ஒரு தலாணி கிடைக்குமா..?” என்றான்.

நான் அப்போது அப்பாவுக்கு திரவ உணவை பீடிங் டியூப் மூலம் உள்ளே செலுத்திக் கொண்டிருந்தேன்.

பின்பு என்னிடம் கூடுதலாக இருந்த தலையணையை எடுத்துக்கொண்டு ராசுவின் அருகே சென்றேன்.

“பாஸு, பொத்துனாப்புல அத முதுக்குப் பின்னாடி சொருகிவிடுங்க...” என்றான்.

ராசுவின் தலைமாட்டுப் பகுதியைத் தேவைக்கேற்ப உயர்த்தும் வசதி அவன் கட்டிலில் இருந்தது. அதற்கான லீவரை எடுத்து மெல்லச் சுழற்றியபோது ராசுவின் முதுகுப் பகுதி உட்காரும் நிலைக்கு வந்தது. தலையணையை மெதுவாக அவன் இடுப்புக்குக் கீழே செருகினேன்.

“பாஸு! அப்புறம் இந்த குளுக்கோஸ் பாட்டிலு சூடு புடிச்சவனுக்கு ஒன்னுக்கு வந்தாப்புல சொட்டிக்கிட்டுருக்கு. கொஞ்சம் வேகமா வச்சுவிடுங்க” என்றான்.

சிறுகதை :எஸ்.பி.பி சூப்பர் ஹிட்ஸ்

“முடியாது. பொறுமையா இருங்க… உங்கள பாத்துக்க யாருமில்லையா..?’’ என்றேன்.

அதற்கு ராசு நக்கலாக, “நம்மாளு நைட் டியூட்டி நர்ஸ் இருக்கு” என்றான்.

``வெளாடாதீங்க. இப்ப உங்ககூட யாரு இருக்கா?’’

``துரை. இப்ப பால் வாங்கப் போயிருக்கான்.’’

``சரி... எதுக்காக வெஷம் குடிச்சீங்க?’’

``சின்சியர் லவ்வுக்காக!

பாஸு… கதையை வரிசையா சொல்லிட்டு வர்றேன், கேளுங்க...

அன்னக்கி முகூர்த்த நாள். சமூக இடவெளிய புட்போர்டு வரைக்கு தள்ளிட்டுப் போயிட்டாய்ங்க..! அப்ப பஸ்ல ‘என்னவென்று சொல்வதம்மா’ பாட்டு ஓடிட்டிருக்கு…

டிரைவர் சீட்டுக்குப் பின்னாடி அந்தப் பிள்ள ஒக்காந்திருக்கு. அந்தப் பாட்டு சீன்ல நதியா கட்டியிருக்க மாதிரி அட்டகாசமா சேலை... அந்தப் பிள்ளய பஸ்டு பஸ்டு சேலையில பாத்தது வாசி... எனக்கு காலு வெடவெடுத்துப் போயிருச்சு…

பாஸு... ஆண்டவனுக்குப் பொதுவா சொல்றேன், அந்தப் பிள்ள நதியாவக் காட்டிலும் பெரிய்ய ரதி... இன்னிக்கு எப்பிடியாவது பேசிறணும்னு மனசு கிடந்து ஹாரனடிக்குது...

ஸ்பாட்ல ஒரு யோசனை வந்துச்சு.

`இஞ்சின்ல கம்ப்ளெய்ன்டு’ன்னு சொல்லி வண்டிய ரேணுகா மில்லு பக்கத்துல நிறுத்தி… `ஓனருக்கு போன் போடணும்’னு அந்தப் பிள்ள செல்ல வாங்கி நம்பர ஆட்டய போட்டுட்டேன். எப்டி..!’’

தூரத்தில் நிற்கும் நர்ஸை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தொடையைத் தட்டிக்கொண்டே,

“வண்ணப்பூவின் வாசம் வந்து நேசம் பேசும்…

அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள்…

புதுப் பூக்கோலம்தான் காலில் போடுவாள்… என்னவென்று சொல்வதம்மா... வஞ்சி அவள் பேரழகை...

பாஸு, எல்லாரும் மைக்கு மோகன சொல்லுவாங்க. என்னப் பொறுத்தமட்டும் எஸ்.பி.பி குரல், பிரபு பாடி சைஸுக்குத்தான் சரியான பிட்டிங்.’’

ராசு தன் உணர்வுகளைத் தங்கு தடையில்லாமல் கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தான்.

“அப்புறமா அந்தப் பிள்ளைக்கு போன் போடலாம்னா, பயத்துல விரல் டைப்பிங்க போடுது… கட்டிங்கப் போட்டா சரியாப் போகுமுண்டு துரை சொன்னான். லவ் பண்ணுறது ஐயப்பனுக்கு மாலை போடுறது மாதிரி நீட்டா இருக்கணும்டான்னு சொல்லிட்டேன்.

ஒரு டீய சாப்ட்டு மிஸ்டுகால் விட்டேன். பேரு சுமதிn.r.s-ன்னு வருது... சுமதி உறுத்தான பேருல்ல..?

`சுமதி ஏ லவ்வ நீ சம்மதி... நீ சம்மதிச்சா’ன்னு

மனசுக்குள்ள கவித பச்சப்பிள்ள கெணக்கா தத்திக்கிட்டு எட்டு வச்சு வரும்போது...

`சுமதி சம்மதி. இல்ல அண்ணனுக்கு நா கட்றேன் சமாதி’ன்னு இந்த துரை கருநாக்குக்காரன் பேசினானா… இந்தா... ஆஸ்பத்திரில கெடாசிவிட்டுப் போய்ட்டாய்ங்க…!

பாஸு... கருநாக்குல ஒண்ணுமில்ல. ஆனா ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்ல...

அடுத்த நாள் அந்தப் பிள்ள பஸ்ல ஏறுனவுடனே... ‘காதலின் தீபம் ஒன்று’ பாட்டு. இந்த டைம் ஒலியும் ஒளியும்...

அந்தப் பாட்டு தொடங்கும்போது ரஜினி ஒரு மரத்துல ‘சுமதி’ன்னு எழுதி, அந்த எழுத்துமேல கிஸ் அடிப்பாப்ள பாத்திருக்கீங்களா..? அந்த ரக்கம் பாத்து ரிமோட்டு வச்சி நிறுத்திவிட்டேன். டிவில சுமதிங்ற பேரு தெளிவா தெரியுது.

பஸ்ல வீடியோ நிக்கிறதப் பாத்து எல்லா பயலும் சலம்புறாய்ங்க…

`ஏய்... சுமதி ஓம்பேருடீ’ன்னு அதுகூட வர்றவ ஒருத்தி சொன்ன பிறகு... அது அலட்டிக்காம ஒருக்களிச்சி பார்த்து சிரிச்சுச்சு…

அடுத்த பாட்டு ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.’

‘எஸ்... ஐ லவ் திஸ் லவ்வபில் இடியட்’ன்னு சுசித்ரா கத்தி முடிக்க, பஸ் தேனிக்குள்ள நொழையிது.

நான் வண்டிய ஸ்டாண்ட்ல போட்டுட்டு இறங்குறேன்… அந்தப் பிள்ள மூஞ்சிக்கு நேரா மாஸ்க்க நீட்டுது. கூடவே பஸ் டிக்கட்டு மடிச்சி இருக்கு. பிரிச்சுப் பார்த்தா உள்ள, ‘எஸ் ஐ லவ் திஸ் லவ்வபில் இடியட்’ ’’

இதைக் கேட்டவுடன் என்னையறியாமல் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தேன். அது ராசுவின் உணர்வுகளைச் சிறுமைப்படுத்தவே,

“பாஸு… அந்தப் பிள்ள எழுதிக் குடுத்தது வெறுமனே சினிமா எழுத்து கிடையாது. அது எங்க தலையெழுத்து. நீங்க எங்கள அவ்வளவு லேசா நினைச்சிறாதீங்க…”

கொஞ்சம் ஆவேசமாகப் பேசிய ராசுவுக்கு உதட்டிலிருந்து ரத்தம் கசிந்தது. தோல் சீவிய நுங்கு போல உதட்டில் நிறைய கீறல்கள்.

ராசு தளர்ந்த குரலில்,

“பால் வாங்கப் போன துரை பஸ் அடிச்சி செத்துட்டான்னு நெனக்கிறேன்… பாஸு… மூணு நாளு பச்சத் தண்ணி பல்லுல படல... உள்ள டீப்பு விட்டு வயித்த கழுவுனதுல ஒரே ரணமா இருக்கு. இந்த குளூகோஸ் பாட்லு ஏறி முடிஞ்சவுடனே பால் சாப்டுலாம்னு சொன்னாங்க. அந்தப் புடுங்கிய இன்னும் ஆளக் காணோம்” என்று ராசு பேச்சை வேறு திசைக்குத் திருப்பினான். இதைச் சொல்லும்போது ராசுவின் கண்கள் மிளகாய் சாந்து நிறத்தில் இருந்தது.

“பாஸு... கிறக்கமா இருக்கு, ஒத்தப் பொட்டு தூக்கமில்ல... செல்லு இருந்தா... `பச்ச மல பூவு நீ உச்சி மல தேனு’ பாட்டப் போடுங்க... தூங்கணும்’’ என்றான்.

ராசுவின் காதில் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. தூக்கத்தை அவன் நெருங்க நெருங்க, தொலைவிலேயே நிற்கும் கரடுபோல முரண்டு பிடித்தது வலி. அவன் உடலைப் போட்டு உலுக்கி அங்குமிங்குமாக உலாத்த வைத்தது.

டீன் ரவுண்ட்ஸ் வருவதாகத் தகவல் சொல்லப்பட, வார்டு பரபரப்பானது. நோயாளிகளை எண்ணியதில் டெங்கு பேஷன்ட் சுப்புதாயி இல்லாததைச் சொன்னார்கள். நர்ஸ் பதறிப் போய் வார்டு பாய்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரம் பார்த்து பால் வாங்கி வந்த துரை, “மேடம், யாரு சுப்புதாயிதான... ரோட்ட தாண்டி கணேஷ் போயல வாங்கப் போயிருக்கு” என்றான்.

பதற்றத்தில் நர்ஸ் தலையில் அடித்துக்கொண்டு வார்டு பாயை வார்த்தையால் குத்திக் குதறி, கிழவியை கையோடு அழைத்து வரச்சொல்லி விரட்டியடித்தாள்.

“கிழவிக்கு நேத்து வரை 104 டிகிரி காய்ச்சலு. செத்துப்போகுமுன்னு நெனச்சேன். கிழவிக்கு எம்புட்டு தாட்டியம் பாத்தீயா. சீப் டாக்டர் வரட்டும், கிழவிய ஜெனரல் வார்டுக்கு மாத்தி விடுறேன்” என்று புலம்பிக்கொண்டிருந்தாள்.

துரை பால் வாங்கி வந்த தூக்குவாளியை ராசுவின் தலைமாட்டுக்கு அருகே வைத்தான். ராசுவிற்கு ஏறிக்கொண்டிருந்த குளுக்கோஸ் தீர்ந்துவிடவே, வார்டு பாயின் உதவியோடு அதை அகற்றினான்.

நான் அருகில் சென்று, “நீங்க துரையா?” என்றேன்.

``ஆமாங்க... அண்ணன் சொன்னாரா?’’

``ஆமா… இவருக்கு ஏதாவது மனநலக் கோளாறா?’’

``அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஒரு ரெண்டு நாளைக்கு அப்பிடித்தான் இருப்பாருன்னு டாக்டர் சொல்லியிருக்காரு.’’

“சரி… அவரு எதுக்கு விஷத்த குடிச்சாரு?”

“அதுவா... சுமதி அண்ணி பத்தி சொல்லியிருப்பாருல்ல..?”

“மாஸ்க் குடுத்தது வரை சொன்னாரு…”

“பிரதர்... அதுக்கப்புறம் மாஸ்க்கு, சுடு தண்ணி பிளாஸ்க்கு, அதுபோக எஸ்.பி.பி பாடுன 78 ஆர்.பி.எம் பழைய ரெக்கார்டு வரைக்கும் அவுங்க லவ்வுல நெறைய அன்பளிப்பு. லவ்வுன்னாலே அன்பளிப்புதான!

சுமதி அண்ணியோட தாத்தேன் அந்தக் காலத்திலேயே பெரிய பாட்டுக் கிறுக்கேன். இன்னைக்கும் ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ பாட்ட மனப்பாடமா பாடுவாரு. அண்ணியும் எஸ்.பி.பியோட பாட்டக் கேட்டு வளந்தவுங்க. எங்க வாட்ஸப் குரூப்பு பேரே ‘இசையால் இணைவோம்.’

வீடு ஏறி நம்ம அண்ணே பொண்ணு கேட்டாரு. பொண்ணப் பெத்தவேன் ஒரு மாட்டு மூளக்காரன்.

மொத வார்த்தையே ‘என்ன ஆளுகடா...’ன்னு கேக்க... பதிலுக்கு அண்ணெ, ‘ஆம்பளையாளு’ன்னு சொல்ல... சங்கத்துல இருந்து ஆளக் கூட்டிவந்து அண்ணன விறகுக் கட்டையால அடிக்க... தடுக்க வழியில்லாம் எங்க சுமதி அண்ணி நெல்லுக்கு வச்சிருந்த ரோக்கர எடுத்து வந்து குடிக்குறேன்னு சொல்ல... அவுங்க அப்பேன் மருந்து பாட்டுலப் புடுங்கி ‘சாவுடி’ன்னு அண்ணி வாய்க்குள்ள ஊத்தப் போக... அண்ணே குறுக்க தவ்வி பாட்டிலப் புடிங்கி டானிக்க குடிக்கிற மாதிரி குடிச்சுத் தூக்கியெறிய…

பிரதர்… ஒரு நிமிசத்துல அவுங்க லவ்வு கொச கொசன்னு ஆயிருச்சு.

சிறுகதை :எஸ்.பி.பி சூப்பர் ஹிட்ஸ்

உடனே சுமதி அண்ணி 108க்கு போன் பண்ணிருச்சு. ஆம்புலன்ஸ் வீரபாண்டியிலேருந்து வரணும். போடிக்கு வந்து சேர எப்படியும் நாப்பது நிமிஷம் ஆகும்.

எங்க அண்ணி அவரு சட்டைய கழத்தி, சிந்துன மருந்தெல்லாம் தொடச்சி, தண்ணிய ஊத்தி வாயக் கொப்பளிக்க வச்சு, அடுப்புல எரிஞ்ச கொட்டாங்குச்சிய எடுத்து நுணுக்கி வாய்ல போட்டு முழுங்கச் சொல்லி, அப்புறம் மூச்சு விடுறதுக்கு வசதியா குப்புறப் படுக்க வச்சிட்டாங்க.

ஆம்புலன்ஸ்ல ஏறும்போது மருந்து பாட்டில போட்டோ எடுத்துக்கிட்டாங்க. ஆம்புலன்ஸ்ல அண்ணே பக்கத்துல இருந்து தைரியம் குடுத்துக்கிட்டே வந்தாங்க...

இங்க வந்தா `பொழைக்க மாட்டாரு, மதுரைக்கு எடுத்துட்டுப் போங்க’ன்னு சொல்லிட்டாங்க. எங்க அண்ணி சீப் டாக்டருகிட்ட கெஞ்சிக் கூத்தாடி, ஐ.சி.யூவுல மூணு நாளு வச்சிருந்தாங்க.

எனக்கு ஒண்ணு புரிஞ்சுச்சு பிரதர்… லவ்வு சின்சியரா..? போதும். எந்தப் பாய்சனையும் முறிச்சு விட்ரும்.”

“சரி... இப்ப உங்க சுமதி அண்ணி எங்க..?”

“டியூட்டி முடிஞ்சி வீட்டுக்குப் போயிருக்காங்க.”

“எங்க வேலை பாக்குறாங்க..?”

``சொல்லலையா... அவுங்க இந்த மெடிக்கல் காலேஜ் நர்சுதாங்க.’’

``எந்த வார்டு?’’

``அண்ணன் ராசிக்கு இதே வார்டுக்கே…!’’

``நைட் வார்டுக்குள்ள பக்கத்திலேயே பவ்யமா ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருந்தாங்களே... அவுங்களா?’’

``அவுங்களேதான். லவ்வு சின்சியர் பிரதர்!’’

``அடடா…! சரி... பொண்ணு வீட்டுக்காரங்க ஒண்ணும் சொல்லலையா?’’’

“கொரோனா வந்து அவீங்க எல்லாத்தையும் குடும்பத்தோட தள்ளிவச்சி தகரத்த அடிச்சிவிட்டாச்சு. பஞ்சாயத்துப் பண்ண வந்த சொச்ச மீசையெல்லாம் இப்ப டர்க்கி துண்ட மூஞ்சில மூடிக்கிட்டுத் திரியுதுங்க.’’

பேச்சுச் சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட ராசு, “லே... நீ பால் வாங்கிட்டு வர்றதுக்குள்ள மூணு தீபாவளி முடிஞ்சிருச்சுடா.”

“ணேய்... வெளியே போனவன வார்டுக்குள்ள திருப்பி விட மாட்டேன்னு சொல்லிடாய்ங்க.’’

“சரி… கழுத்துக்கு ஸ்கேன் எடுக்கணுமாம்... கீழ கிரவுண்ட் ப்ளோர் போகணும்” என்று ராசுவை அவசரப்படுத்தினான்.

நானும் துரையும் ராசுவை ஸ்ட்ரெச்சரில் மெதுவாகத் தூக்கி வைக்க, ராசு வலியால் துடிதுடித்தான்.

“பிரதர்... வாழ வைக்க வராதவனுங்க, தாலி அறுக்க மட்டும் படையோட வர்ராய்ங்க” சொல்லிக்கொண்டே துரை ஸ்ட்ரெச்சரைத் தள்ளினான்.

ராசு பல்லைக் கடித்துக்கொண்டு, ``பாஸு... நான் பாப்பேன்... இல்ல வக்காளி பஸ்ஸக் கொண்டி ஏத்துவேன்” என்றான்.

துரை ``ணே... நீ பேசாமப் படு” என்று ராசுவை அதட்டினான்.

லிப்ட் வருவதற்காகக் காத்திருந்தோம்.

ராசு தலையைத் தூக்கிப் பார்த்து, “பாஸு... உங்க போன்ல எஸ்.பி.பி ஹிட்ஸ் இருந்தா மறக்காம நம்ம செல்லுக்கு மாத்தி விடுங்க. டேய் துரை... செல்ல இவர்ட்ட குடு’’ என்றவுடன்,

துரை பாக்கெட்டிலிருந்த ராசுவின் செல்போனை எடுத்து அன்லாக் செய்தான்.

துரை முகம் பேய் அறைந்ததுபோல இருந்தது.

ராசு அசையாமல் ஸ்ட்ரெச்சரில் படுத்திருக்க, துரை செல்போனை என்னிடம் மட்டும் காட்டினான்.

‘இசையால் இணைவோம்’ வாட்ஸப் குரூப் எ.ஸ்.பி.பி-யின் மரணச் செய்தியால் நிரம்பியிருந்தது.

சில நொடிகளில் லிப்ட் எங்கள் தளத்திற்கு காலியாக வந்தடைந்து, ஸ்ட்ரெச்சரை உள்ளே தள்ளி நானும் துரையும் ஏறிக்கொண்டோம். துரை கிரவுண்ட் ப்ளோருக்கான பொத்தானை அழுத்தினான்.

லிப்டின் கதவு மூடியவுடனே…

‘அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி’ பாட்டின் பின்னணி இசை லிப்டில் பதியப்பட்டிருந்தது. இசைக்கேற்ப ஒத்திசைவோடு ராசுவின் உதடு முணுமுணுத்தது.

“காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி…’’ என்று அவன் பாடி முடிக்க, லிப்ட் கிரவுண்ட் ப்ளோர் வந்தடைந்தது.

லிப்ட்டின் கதவு திறந்தவுடன் ஸ்ட்ரெச்சரின் கைப்பிடியை நர்ஸ் சுமதியின் கைகள் உறுதியாகப் பற்றி இழுத்தன.