Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 8 | திரைகடலோடிய தமிழர்கள் வாணிகத்தில் சாதித்த வரலாறு!

தூங்காநகர நினைவுகள்
News
தூங்காநகர நினைவுகள்

தமிழர்கள் இயற்கையை வணங்கினார்கள், மலைகளுடனும் காடுகளுடனும் காதல் கொண்டிருந்தார்கள் என்பதைச் சங்க இலக்கியங்கள் நமக்கு விளக்குவது போலவே அது தமிழர்கள் கடலுடன் கொண்டிருந்த தீராக்காதலையும் எடுத்துரைக்கிறது.

Published:Updated:

தூங்காநகர நினைவுகள் - 8 | திரைகடலோடிய தமிழர்கள் வாணிகத்தில் சாதித்த வரலாறு!

தமிழர்கள் இயற்கையை வணங்கினார்கள், மலைகளுடனும் காடுகளுடனும் காதல் கொண்டிருந்தார்கள் என்பதைச் சங்க இலக்கியங்கள் நமக்கு விளக்குவது போலவே அது தமிழர்கள் கடலுடன் கொண்டிருந்த தீராக்காதலையும் எடுத்துரைக்கிறது.

தூங்காநகர நினைவுகள்
News
தூங்காநகர நினைவுகள்

கடலில் முத்துக்குளித்தார்கள், ஆழ்கடல் மீன் பிடித்தலில் ஈடுபட்டார்கள், நாவாய்கள் கட்டுவதில் தேர்ந்திருந்தார்கள். அதே போல் கடலில் தொலைதூரக் கரைகளுக்குப் பாய்மரம் வீசிச் செல்லும் நுட்பங்களை அறிந்திருந்தார்கள் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

மேற்கே கிரீஸ், ரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம்வரையில் கடலோடினார்கள்.
எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா ஆகிய நாடுகளுடன் பண்டைய தமிழர்கள் வாணிகத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர்.

ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு பொன், வெள்ளி, தந்தம், துகிம் (மயில் தோகை), ஆல்மக் (வாசனைக்கான அகில் மரங்கள்), விலையுயர்ந்த ரத்தினங்கள், யானைத் தந்தங்கள் ஆகியவற்றை மேற்காசிய நாடுகளில் பண்டைய நாள்களிலேயே வணிகம் செய்திருக்கிறார்கள். இந்தப் பொருள்களையெல்லாம் ஏற்றிச் செல்ல இன்றைய நான்கு வழிச்சாலையைப் போலவே பெருவழிச்சாலை மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து மதுரை வழியாகக் கடல் நோக்கிச் சென்றதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

எகிப்திய வணிகர்கள்
எகிப்திய வணிகர்கள்

பண்டைய தமிழகத்திலிருந்து மஸ்லின் துணியும், ஏலம், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களையும் தமிழக வணிகர்கள் மரக்கலங்களில் கொற்கையில் இருந்தும் தொண்டியில் இருந்தும் ஏற்றிச் சென்று ஏடன் வளைகுடாவுக்கு இருபுறமுள்ள துறைமுகங்களில் இறக்கினர்.

இந்தத் துறைமுகங்களில் இருந்து இந்தச் சரக்குகளை அரேபியர்கள் தங்கள் வசம் ஏற்றுக்கொண்டு எகிப்துக்கு எடுத்துச் சென்று வணிகம் செய்தார்கள். எகிப்தில் (கி.மு. 1500-1350) இறக்குமதியான தந்தத்தினால் கடையப்பட்ட வேலைப்பாடுகள் மிகுந்த பொருள்களெல்லாம் தென்னிந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை.

இரண்டு பழங்கால உடைகளைக் குறிப்பிடும் பாபிலோனிய நாட்டுப் பட்டியல் ஒன்றில் மஸ்லின் என்னும் துணிவகையைக் குறிக்கும் ‘சிந்து’ என்னும் சொல் எழுதப்பட்டுள்ளது. மஸ்லின் என்பது மிகமிக நுண்ணிய துணிவகையாகும். அந்தக் காலத்தில் மிக நுண்ணிய துணிவகைகள் தமிழகத்தில் நெய்யப்பட்டு வந்தன.

தமிழகத்து நறுமணப் பொருள்களின் சுவையையும், ஏனைய ஏற்றுமதிப் பண்டங்களின் பெருமையையும் கிரேக்கர்களின் மூலமே ரோமாபுரி மக்கள் அறிந்துகொண்டனர். பண்டைய நாள்களில் தமிழகத்திற்கும் மடகாஸ்கருக்கும் இடையே நெருங்கிய வாணிகத் தொடர்பு இருந்துவந்தது.

தமிழகத் துறைமுகங்களில் எண்ணற்ற நாவாய்கள் இருந்தன என்பதை பெரிபுளூஸ் கூறுகின்றது. வைகாசி மாதந் தொடங்கி மூன்று நான்கு மாதங்கள்வரையில் மோதும் தென்மேற்குப் பருவக்காற்றை முதன்முதல் கண்டறிந்தவர் ஹிப்பாலஸ் (கி.பி. 45) என்ற கிரேக்கர். இந்தக் காற்றோட்டத்தின் துணையுடன் பாய்விரித்து கப்பல்கள் வெகு விரைவாகவும், கட்டுக் குலையாமல் நம் துறைமுகங்களை அடையமுடியும் என்ற உண்மையை ஐரோப்பிய மாலுமிகள் அறிந்துகொண்டனர்.

ரோம வணிகர்கள்
ரோம வணிகர்கள்
ரோம நாவாய்கள்
ரோம நாவாய்கள்

இந்தப் பருவக்காற்றின் துணை கொண்டு வாணிகச் சரக்குகள் ஏற்றிய பெரிய பெரிய மரக்கலங்கள் கடல்களின் நடுவில் பாய்விரித்தோடி தமிழகத்தின் மேற்குக்கரைத் துறைமுகங்களை அடைந்து நங்கூரம் பாய்ச்சின. தென்மேற்குப் பருவக்காற்றின் பயனைத் தெரிந்துகொள்ளும் முன்பு வாணிகர்கள் சிறு சிறு படகுகளில் பண்டங்களை ஏற்றிக்கொண்டு கரையோரமாகவே ஊர்ந்து வந்து நீண்ட நாள் கழித்து நம் துறைமுகங்களை அடைவது வழக்கம்.

ரோமாபுரியுடன் தமிழகம் மேற்கொண்டிருந்த கடல் வாணிகம் காலப்போக்கில் பல மாறுதல்களுக்கு உட்பட்டது. ரோமாபுரிப் பேரரசின் ஆட்சி முடிவுற்றபின் ரோமரின் வாணிகம் தமிழகத்தில் மட்டுமன்றி மசூலிப்பட்டினத்திலும், ஒடிசா கடற்கரையிலும் பரவலாயிற்று. ரோமாபுரி நாவாய்கள் அங்கெல்லாம் நங்கூரம் பாய்ச்சின.

ரோமாபுரியை ஆண்ட அகஸ்டஸ் என்பவர் கி.மு. 30-ல் எகிப்தை வென்று அதன்மேல் தம் ஆட்சியை நிலைநாட்டினார். இந்த வெற்றி எதிர்பாராத நலனை அவருக்கு வழங்கியது. இதனால் அவருக்குத் தமிழகத்துடன் நேர்முக வாணிகத் தொடர்பு கிட்டியது.

அவர்கள் வழங்கி வந்த பொன், வெள்ளி நாணயங்களும், செப்புக் காசுகளும் இப்போது புதைபொருள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்படுகின்றன. ரோமர்கள் வாணிகத்தில் இந்நாணயங்களைப் பயன்படுத்தினர். மதுரையில் ரோம நாணய அச்சுச்சாலை ஒன்று நடைபெற்றிருக்க வேண்டும் என்றும் வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

மத்தியதரைக் கடல் நாடுகளில் மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்களைப் போன்ற கலங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் கிடைத்துள்ளன. ரோமாபுரியில் இறக்குமதியான சரக்குகளின் அளவு ஆண்டுதோறும் ஏறிக்கொண்டே போனது. அதனால் ஆண்டுதோறும் 6,00,000 பவுன் மதிப்புள்ள ரோமாபுரித் தங்கம் தமிழரின் கைக்கு வந்துகொண்டேயிருந்தது. இதனை முன்னிட்டு ரோமாபுரி மக்களுக்குப் பெரும் இழப்பு ஏற்படுகிறது என்று அன்றே கடும் எதிர்ப்புகள் அங்கே எழுந்துள்ளன. கட்டுக்கடங்காத உலகமயம் உள்ளூர்த் தொழில்களை அழித்துவிடும் என்பதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அனுபவம் நமக்குக் கற்றுத்தருகிறது.

துறைமுகத்தில் கடல் வணிகம்
துறைமுகத்தில் கடல் வணிகம்

தமிழகத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குப் பலவகையான பண்டங்கள் ஏற்றுமதியாயின. அத்துடன் புலி, சிறுத்தை, யானை, குரங்கு, மயில், கிளி, வேட்டை நாய்கள் ஆகியவற்றைத் தமிழகம் ஏற்றுமதி செய்தது. தமிழகத்து வேட்டை நாய்கள், தரத்தில் மேலானவை என அயல்நாடுகளில் மிகவும் பாராட்டப்பெற்றன. யானைகள் தமிழகத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அயல்நாட்டினர் சில பாம்பினங்களையும் தமிழகத்தில் கொள்முதல் செய்தனர்.

மிளகு இந்திய மருந்து என்றே ஐரோப்பாவில் குறிப்பிடப்பட்டது. நல்லெண்ணெயின் பயனைக் கிரேக்கர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலேயே நன்கு அறிந்திருந்தனர். நல்லெண்ணெய் பண்டைய தமிழரின் உணவுப் பண்டங்களுள் ஒன்றாகும்.

தமிழகத்துக் கருங்காலி மரங்கள் ரோமாபுரியில் பெருமளவில் விற்பனையாயின. பாரசீக வளைகுடாத் துறைமுகங்களில் தமிழகத்துத் தேக்கு மரங்களைக் கொண்டு கப்பல்கள் கட்டினார்கள்.

தமிழகம் மேலைநாடுகளுடன் கொண்டிருந்த வாணிகத் தொடர்பைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் பல சான்றுகள் காணப்படுகின்றன. தமிழர்கள் அந்த நாடுகளிலிருந்து தேயிலையும் பொன்னையும் இறக்குமதி செய்தனர். பல யவனர்கள் தமிழக மன்னர் அரண்மனைகளில் கைவினைக் கம்மியராக (கம்மியர்- உலோக வேலை செய்பவர்) பணிபுரிந்தனர். யவனர் செய்த அழகிய வேலைப்பாடுகள் அமைந்த உறுதியான மரக்கலங்கள் பொன்னைக்கொண்டு வந்து கொட்டிவிட்டு மிளகு மூட்டைகளை ஏற்றிச்செல்லும்.

மேலைநாடுகளுடன் மட்டுமன்றிக் கீழைநாடுகளான சீனம், மலேசியா, ஜாவா, வடபோர்னியா ஆகிய நாடுகளுடனும் தமிழகம் மிகவும் வளமான கடல் வாணிகம் நடத்திவந்தது. சீனத்துடன் தமிழகம் மேற்கொண்டிருந்த வாணிகத் தொடர்பு மிகவும் பழைமையானது. இந்தத் தொடர்பு கி.மு. 1000 ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. தமிழகப் பண்டங்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே சீனத்தில் இறக்குமதியாயின என்று அந்நாட்டு வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

கொற்கை முத்து
கொற்கை முத்து
Hannes Grobe
சீனத்துப் பட்டாடைகளையும், சர்க்கரையையும் தமிழகம் ஏற்றுக் கொண்டது. இதனால் இன்றளவும் பட்னினைச் சீனம் என்றும், சர்க்கரையைச் சீனி என்றும் அழைத்துவருகின்றோம்.
சீனக் கண்ணாடி, சீனக் கற்பூரம், சீனக் கருவா, சீனக் களிமண், சீனக் காரம், சீனக் கிழங்கு, சீனக் கிளி, சீனக் குடை, சீனச் சட்டி, சீனர் சரக்கு, சீனச் சுக்கான், சீனச் சுண்ணம், சீனத்து முத்து, சீன நெல், சீனப் பட்டாடை, சீனப் பரணி, சீனப் பருத்தி, சீனப்புகை, சீனப் புல், சீனப் பூ, சீன மல்லிகை, சீன மிளகு, சீன ரேக்கு, சீன வங்கம், சீன வரிவண்டு, சீனாக் கற்கண்டு, சீனாச் சுருள் என்னும் சொற்கள் இன்றளவும் தமிழ்மொழியில் புழக்கத்தில் உள்ளன. மதுரை கீழமாசி வீதி பலசரக்கு மற்றும் நாட்டு மருந்துக் கடைகளின் வரிசையில் நீங்கள் ஒரு நடை சென்றால் இன்றும் இந்தச் சொற்கள் உங்கள் காதுகளில் விழும்.

பிலிப்பைன்ஸ் தீவுகளில் அண்மையில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் இரும்புக்காலப் புதைபொருள்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கத்திகள், கோடரிகள், ஈட்டிகள் போன்ற கருவிகள் அனைத்தையும் கி.மு. முதலாம் ஆயிரம் ஆண்டில் தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்த கருவிகளைப் பெரிதும் ஒத்துள்ளன. சீனம், சாவகம் போன்ற கீழைநாடுகளுடன் மேற்கொண்டிருந்த வணிகத் தொடர்பின் பழைமையை இந்தச் சான்றுகள் நமக்கு மெய்ப்பிக்கின்றன.

கிழக்காசிய நாடுகளுக்கும் ரோமாபுரிக்குமிடையே நடைபெற்று வந்த கடல் வாணிகத்தில் தமிழகமும் பெரும்பங்கு ஏற்று வந்தது. சீனம், மலேசியா, சாவகம் முதலிய நாடுகளிலிருந்து தமிழகம் பண்டங்களைக் கொள்முதல் செய்து அவற்றை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்தது. மேலை நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த கடல் வாணிகம் குன்றிய பிறகு கீழை நாடுகளுடனான அதன் வாணிகம் மேலும் மேலும் வளர்ந்தது. தமிழகத்து மக்கள் இந்த நாடுகளில் பல குடியேற்றங்களை அமைத்துக்கொண்டனர், இந்நாடுகளுடன் அரசியல் தொடர்புகளைப் பெருக்கிக்கொண்டனர். இங்கெல்லாம் நம் நாகரிகத்தையும் பண்பாடுகளின் பெருமைகளையும் பரப்பினர்.

கடல் கடந்து தமிழர்கள் கடலோடியது, வணிகம் செய்தது பல நாடுகளில் சென்று அங்கு குடியேறியது என்கிற தகவல்களின் பின்னணியில் உள்ள பெரும் பயணத்தை இந்தத் தகவல்கள் நமக்குக் காட்சிப்படுத்துகின்றன. இன்றைக்கும் மொரிசியஸ், ரியூனியன் தீவுகள், மடகாஸ்கர், தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பர்மாவில் பண்டைய காலத்திலேயே குடியேறிய தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நல்ல செல்வாக்குடன் வாழ்கிறார்கள்.

இந்த நாடுகளில் உலவும்போது அங்கே நீங்கள் தமிழ் பேசும் பண்டைய தமிழர் ஒருவரைச் சந்திக்கும்போது மீன்கொடி உங்கள் தலைக்கு மேலே பறப்பதை உணர முடியும்.

நன்றி: தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும். -கே.கே.பிள்ளை