Published:Updated:

விடம்பனம் ஒரு முயற்சி

விடம்பனம்
பிரீமியம் ஸ்டோரி
விடம்பனம்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

விடம்பனம் ஒரு முயற்சி

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

Published:Updated:
விடம்பனம்
பிரீமியம் ஸ்டோரி
விடம்பனம்

தார்த்தத்தில் சலிப்படைந்திருக்கிறோம்.  ஆகவே நமது பிரதிகளில் அதிலிருந்து தப்பிக்கும் உபாயத்தைத் தேடுகிறோம்.  ஆனால், நமது சமூகத்தின் வாழ்க்கை எளிமையானது. கலாசார Cloneகளான நமது செயல்கள் கிட்டத்தட்ட ஒரேவிதமானவை.  நமது நிறுவனங்கள் அப்படி நம்மை வைத்திருக்கின்றன. சலிப்பினாலோ, சிந்தனையினாலோ அவ்வப்போது மாறுதல்களும் ஏற்பட்டதுண்டு. சூழல் அழிவினால் உண்டாகும் மாறுதல்களும் இப்போது கூடுதலாகச் சேர்ந்திருக்கின்றன.   

இப்போதைய சிக்கல்களைவிடவும் குறைவான சிக்கல்கள் இருந்த கடந்த காலமும் வேறெந்த சமூகத்தைப்போலவே நமக்கும் உண்டு. நாம் மெதுவாக மாறக் கூடியவர்கள். புறவயமான மாற்றங்களில் வேகமும் அகவயமான மாற்றங்களில் பெருத்த நிதானமும் உடையவர்கள். ஆனால், நமது பிரதிகளால் இந்த மாற்றத்தை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அவை திரும்பவும் பழைய காலத்திற்குச் செல்ல விரும்புகின்றன. நாஸ்டால்ஜியா, எதார்த்தவாத இலக்கியத்தின் தீராத கைப்பொருள்.

கிணறு தோண்டுவதையே ஏறக்குறைய நிறுத்திவிட்ட சமூகமாக நாம் இருக்கிறோம். ஆனால், நமது கூட்டுநினைவில் இன்றைக்கும் கையில் அள்ளிக் குடிக்க முடிந்த வரை நீர் ததும்பிய கிணறுகள் நிறைந்திருக்கின்றன. நமது பிரதிகளில் பெரும்பாலானவை நீர் ததும்பிய கிணறுகளைத் தேடுபவை.

சீனிவாசன் நடராஜன் ஓர் ஓவியர்.  நேரடியாக ஒரு நாவல் வழியாகத் தமிழ் இலக்கிய உலகில் நுழைந்திருக்கிறார். அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது, வாசக சமூகம் எதார்த்தவாதக் கதைகளில் சலிப்படைந்திருக்கிறதென்று. ஆகவே, தனது பிரதியை வடிவமற்ற வடிவத்தில், திரைமொழியில் சொன்னால் Montage வடிவத்தில் எழுதியிருக்கிறார்.

விடம்பனம் ஒரு முயற்சி

நாவலின் முன்னுரையில் சுகுமாரன் சொல்வதைப்போல, பிக்காரெஸ்க் நாவல் வடிவத்தின் கூறுகள் ஒன்றிரண்டு கையாளப்பட்டுள்ளன. இந்நாவலில் கதை இருக்கிறதா என்றால் இருக்கிறது, வரலாறு இருக்கிறதா என்றால் இருக்கிறது, சிறப்பிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் இருக்கிறதா என்றால் இருக்கின்றன என்றும் அப்படியொன்றுமே இல்லையென்றும் சொல்லத்தக்க வகையில் நாவல் கண்ணாமூச்சி விளையாட்டைப் போல அல்லது கிளித்தட்டு விளையாட்டின் அமைப்பில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், இந்நாவலை ‘Baudolino’ அல்லது ‘Hopscotch’ நாவல்களுடன் என்னால் ஒப்பிட முடியவில்லை.  அந்நாவல்களின் மொழியும், பேசப்படும் பொருள்களும் மிக விரிவானவை. வரலாறென்பதே புனைவுகளால் அல்லது போலியான ஒன்றின்மீது வைக்கப்படும் நம்பிக்கையால் உருவாகும் சாத்தியமுள்ளது என்பதை விவாதிக்கிற நாவல் Baudolino. உம்பர்த்தோ ஈகோவின் ‘The Force of Falsity’ கட்டுரையையும் அவரது நாவலையும் சேர்த்து வாசித்து இதைப் புரிந்து கொள்ளலாம். ‘கட்டுடைப்பு நிகழும்போதே கட்டமைப்பு உருவாவதைத் தடுக்க முனைந்த எழுத்து இதுவாகவும் இருக்கலாம்’ என்று அம்மாஞ்சி கதாபாத்திரம் சொல்வது, இந்நாவலின் வடிவத்தை நாவலின் உள்ளிருந்தே சுட்டுவதே (பக்.273).

“…நெய்தல் நிலத்தின் அழகு… எனத் துவங்கி… ஒரு சேர் டம்ளர் காணாமல் போனது எதனாலோ” என முடியும் அம்மாஞ்சியின் கூற்று, இந்நாவலின் மையமாக இருக்கிறது (பக்.45).

மினிமலான ஒரு மொழியில், வாசிக்க அலுப்பூட்டாத பக்க எண்ணிக்கையில், பின் எழுபதுகள் துவங்கி சம காலம் வரைக்குமான கீழத்தஞ்சை நிலப்பரப்பின் வாழ்வையும் மாற்றங்களையும் எழுதியிருக்கிறார்.  

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவள் எனப் புரிந்துகொள்ள முடிகிற மணிமொழி (பின்னாள்களில் மாவட்ட ஆட்சியர் ஆகிறார், ஐபேட் புரோவில் ஸ்டேடஸ் பார்க்கிறார்), ஒரு நாய்க்கு ‘ஜிம்மி கார்ட்டர்’ எனப் பெயரிடுகிறார். ஒரு நாயின் சராசரி ஆயுட்காலமும், ஜிம்மி கார்ட்டர் எந்த வருடங்களில் அமெரிக்காவின் அதிபராக இருந்தார் என்கிற தகவலும் தெரிந்திருந்தால், இந்நாவலின் மையக்காலகட்டத்தை அறியலாம். அதைவிட எளிதாகப் பல இடங்களில் வருடங்கள் சொல்லப்பட்டு விடுகின்றன. ஓரிடத்தில் நுட்பமாகவும், மற்றோரிடத்தில் வெளிப்படையாகவும் எதார்த்தத்தையும், அதைக் குலைத்தும் இந்நாவல் வளர்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விடுதலைக்குப் பின்பான தமிழ்ச் சமூகத்தில் எழுந்து, அடங்கிய, திசைமாறிய அனைத்துச் சிந்தனைகளும் இந்நாவலில் விவாதிக்கப்படுகின்றன. தேசிய, திராவிட, இடதுசாரி, நக்சல்பாரி, சினிமா, தகவல் தொழில்நுட்பக் கால உணவுக் கலாசார மாற்றம், ரசிகர் மன்றம், கோயில் ஓவியங்கள், இந்தியக் கட்டடக் கலை, சிற்பம், காமம் என இந்நாவல் எடுத்துக்கொண்டுள்ள விசயங்கள் எதையும் அரைப் பக்கத்திற்கு மிகாமல் விவாதித்திருக்கிறது.

விடம்பனம் ஒரு முயற்சி

திராவிட இயக்கத் தலைவர்கள் பயன்படுத்திய உத்திகள் நவீன இலக்கிய உத்திகளுக்கு நிகரானவை. அவற்றை வாசிக்க தியாக குணமும், பொறுமையும் கூடுதலாகத் தேவைப்படும், அல்லது சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ நாவலையாவது வாசித்துப் பயற்சி பெற்றிருக்க வேண்டும். கருணாநிதியின் ‘குப்பைத்தொட்டி’ கதையை குஷ்வந்த சிங் தேர்ந்தெடுத்த இந்தியச் சிறுகதைகளில் சேர்த்திருக்கிறார்.

 ஆடுதன் ராணியும்-மைனரும், மணிமொழியும்-தமிழ்வாணனும் இலட்சியத் தம்பதிகளாகவும் இயல்பான மனித குணங்களை வளர்க்கிற தம்பதிகளாகவும் எதிர் எதிராக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். தலைகீழாக ஒரு பெண் மரமேறுவதிலிருந்து ஆரம்பிக்கும் நாவல், வாசிப்பவர்களுக்கான ஒரு தடயம். இந்நாவலின் சில பகுதிகள் தலைகீழாக மேலேறுகின்றன. வாசிப்பவரை அவை வசீகரிக்கின்றன.

மீட்பதாகச் சொன்ன ரட்சகர்களும், அரசியல் சித்தாந்தங்களும் அவை சொன்னதைப்போல நடந்துகொள்ளவில்லை எனக் காட்டும் பிரதிகள் பலவற்றை நாம் பார்த்துவிட்டோம். ஒருவகையில் இந்நாவல், சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ நாவலின் சாயலில் இருக்கிறது. அந்நாவலில் விவாதிக்கப்படாத ஓர் அம்சம் நமது சமூகத்தின் சினிமா உருவாக்கிய பாப்புலர் கலாசாரம். ‘விடம்பனம்’ பாப்புலர் கலாசாரத்தைத் தீவிரமாகப் பேசியிருக்கிறது. டாஸ்மாக்கிலிருந்து, தமிழிசை செளந்தரராஜன் வரை காலத்தை இரட்டைப்பின்னல் போட்டு எழுதப்பட்டிருக்கிறது. சுந்தர ராமசாமியின் வீட்டில் ‘குமுதம்’ புத்தகம் பார்க்கப்படுவது வரை.

தமிழ் பாப்புலர் கலாசாரத்தின் ஒரு நிரந்தர அங்கம் ரசிகர் மன்றங்கள். அம்மாஞ்சியின் வாயிலாக ரசிகர் மன்ற நினைவுகளும் இங்கே எழுகின்றன. பாப்புலர் கலாசாரக் கூறுகளும், நிறங்கள், ஒளி, கலையின் தோற்றம் முதலான மெட்டாபிஸிக்கல் விசயங்களும் பேசப்படுகின்றன. அவை எளிதாகக் கண்டுகொள்ள முடிகிற வகையில் இருந்தாலும், தொடர்ந்து ஏற்படும் விலகல்களால் தப்பிவிடுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நாவல் ஒருவகையில் நமது சமகாலத்தின் முக்கியக் கூறான Disruptionஐ அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. நாம் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப சாதனங்களால், ஊடகங்களால், பொருளாதார ஏற்ற இறக்கங்களால் தொந்தரவூட்டப்பட்டு, உணர்ந்துகொள்ளும் முன்பாகவே அதிவேகமான மாற்றத்திற்கு உள்ளாகிறோம். சீர்குலைதல் ஒரு பொருளாதாரச் சொல்லாக, அன்றாடத்தின் ஒரு வகிபாகமாக மாறியிருக்கிறது. இந்நாவலும் தொடர்ந்து நமது வாசிப்பைச் சீர்குலைத்து மீண்டும் ஒன்றுசேர்ப்பதை ஒரு விளையாட்டாகவே செய்கிறது. ‘விடம்பனம்’ நாவலை ஒரு Disruptive நாவல் என்று அழைக்கலாம். சீர்குலைதல் என்னும் சொல்லை பாரம்பர்யப் பொருளில் பயன்படுத்தவில்லை. ஒரு பொருளாதாரத் துறைச் சொல்லை இலக்கியத்திற்குப் பயன்படுத்துவதை நாம் ஒப்புக்கொள்ளவும் வேண்டும். அப்படி இல்லையெனில் இந்நாவலின் அமைப்பைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்காது.

நாவலின் காலத்தோடு, நாவல் எழுதப்படும் காலத்தை இணைப்பது, நாவல் கையாளும் காலத்தின் பிரச்னைகளோடு நாவல் எழுதப்படும் காலத்தின் பிரச்னைகளைச் சேர்ப்பது, கதாபாத்திர ங்களோடு, சமகால மனிதர்களைச் சொல்வது போன்ற உத்திகள் புதிது என்றாலும், அவை நாவலின் ஒளித்து வைக்கப்பட்ட தீவிரத்தைக் கிட்டத்தட்ட மறையச் செய்கின்றன.ஆனால், நாவலின் நோக்கமே விளையாட்டாக இருக்கும் பட்சத்தில் நம்மால் அதைக் குறையாகச் சொல்லவும் முடியாது.

கர்ட் வானகட்டின் ‘பூனையின் தொட்டில்’ நாவல், மிகச் சிறந்த பகடி நாவலுக்கான ஓர் உதாரணம். நாவல் வடிவம் அதன் பிறப்பிலேயே பகடியை உள்ளடக்கியிருக்கிறது.  நவீன நாவல்களின் மூலத்தோற்றப் பிரதியான ‘டான் குவிக்ஸாட்’ அதற்குச் சாட்சி. தமிழர்களால் ‘டான் குவிக்ஸாட்’டை உருவாக்க முடியாததற்கு என்னால் எடுத்துச் சொல்லப்பட முடியாத காரணங்கள் இருக்கின்றன என்பதை உண்மையென்று நம்புகிறேன். ‘பிரதாப முதலியார் சரித்திர’ வரிசையில் ‘விடம்பனமும்’ சேர்ந்திருக்கிறது. இதன் பிரத்யேகமான முயற்சிகளுக்காக பின்னாள்களில் உதாரணம் காட்டப்படலாம். 

ஓவியர் ஒருவர் நாவல் எழுத வருவது, ஒரு புதிய துவக்கம். அலுவலகங்களில் பணிபுரிகிறவர்களால் நிறைந்திருக்கும் தமிழ் இலக்கிய உலகில், கலைத்துறை யிலிருந்து ஒரு நாவலாசிரியர் உருவாகியிருக் கிறார். மிக நேர்த்தியாகத் தயாரிக்கப் பட்டுள்ள, ஓவியங்களுடன் கூடிய, எளிதாக வாசிக்கத்தக்க, தீவிரமான ஒரு நாவலின் நிழல்கள் விரவியிருக்கிற ஒரு பரிட்சார்த்த நாவல் இது!

நினைவுப்பிழை

கடந்த இதழில் வெளியான எனது நேர்காணலில், என் நினைவுப்பிழை காரணமாக இரண்டு தகவல் பிழைகள் நேர்ந்துவிட்டன. ஒன்று, ‘விஷ்ணுபுரம்’ விருது மறுப்பில், அந்நூல் வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்டுவிட்டேன். ஆனால் நான் கலந்துகொண்டது, ஜெயமோகனின் பிரிதொரு நாவலான ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வாகும். அக்கூட்டத்தில் ‘விஷ்ணுபுரம்’ நாவல் பற்றிய எனது கருத்துகளையும் தெரிவித்திருந்தேன்.

இரண்டாவது, த.மு.எ.ச பற்றிய கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், ‘அவசரநிலை அறிவிப்பு’க்குப் பின்தான் த.மு.எ.ச உருவாக்கப்பட்டது போன்ற கருத்து வெளிப்பட்டுள்ளது. இது தவறு. த.மு.எ.ச தோற்றம் பெற்று, அதன் முதல் மாநாடு மதுரை தமுக்கம் கலையரங்கில் 1975 ஜூன் 11 & 12 தேதிகளில் நடைபெற்றது. அதற்கு அடுத்த பதினான்காம் நாள் 1975 ஜூன் 25ம் தேதிதான் ‘அவசரநிலை’ பிரகடனம் செய்யப்பட்டது. இந்நிலையில், அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க த.மு.எ.ச-வை ஒரு மாற்றுத்தளமாகக் கட்சி பயன்படுத்திக்கொண்டது என்றுதான் குறிப்பிட்டிருக்க வேண்டும். த.மு.எ.ச அமைப்பே இதற்காகத்தான் தோற்றுவிக்கப்பட்டது என்பதாக வெளிப்பட்டுள்ள தகவல் சரியற்றது. அது ‘செம்மலர்’ எழுத்தாளர்க் குழுவின் வளர்ச்சிப்போக்கில் உருவானது. சி.பி.ஐ-க்கு ‘தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம்’ உள்ளதுபோல், சி.பி.எம்-க்கு ஓர் இலக்கிய அமைப்பு வேண்டுமென்கிற நோக்கில் உருவாக்கப்பட்டது. த.மு.எ.ச-வின் கொள்கை உருவாக்கத்தில் பங்குகொண்டு, ‘எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்’ எனும் அறிக்கையை வரைவுசெய்து, மதுரை முதல் மாநாட்டில் பங்கேற்று, திரைப்படங்கள் பற்றி உரையாற்றி தொடர்ந்து பத்தாண்டுக் காலம் த.மு.எ.ச-வில் பணியாற்றியவன் என்ற வகையில் இதைக் கூறுகிறேன். 40 ஆண்டுகளுக்கு முற்பட்ட தகவல்கள் என்பதால், நினைவில் சிறுபிழைகள்… தவறுக்கு வருந்துகிறேன்!

-இராசேந்திர சோழன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism