மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மதுரையின் அதிசய பானம்... ஜிகர்தண்டாவின் கதை..!

ஜிந்தா மதார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜிந்தா மதார்

நேட்டிவ் பிராண்ட் -14

ஒரு ஊரில், ஒரு தெருவில், ஒரு கடையில் மட்டுமே விற்கப்பட்டுவந்த ஒரு பானம், இன்று தமிழகம் தாண்டி, பிற மாநிலங்களுக்கும் பிற நாடுகளுக்கும் சென்று பிரபலமாக இருக்கிறது. அதுதான், ஒருமுறை குடித் தால், மீண்டும் குடிக்க வேண் டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும் ‘ஜிகர்தண்டா!’

குளிர்ந்த பால், ஐஸ்க்ரீம், பாலாடை, பாதாம் பிசின், நன்னாரி சர்பத் இவை அனைத்தையும் நுட்பமாகக் கலந்த புதுவகையான சுவையைத் தரும் பேமஸ் ஜிகர்தண்டாவை ஒருமுறை குடித்தவர்கள் மறக்கவே மாட்டார்கள்.

மதுரையின் அதிசய பானம்...
ஜிகர்தண்டாவின் கதை..!

இன்று தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பல வகையான உள்நாட்டு, வெளிநாட்டு குளிர்பானக் கடைகள் உள்ளன. அதுபோல், ஏகப் பட்ட ஜிகர்தண்டா கடைகள் இருந்தாலும் மதுரையிலுள்ள ‘பேமஸ்’ ஜிகர்தண்டாவின் சுவையை யாராலும் கொடுக்க முடியவில்லை. கோகோ கோலாவுக்குத் தனி ஃபார் முலா இருப்பது போல, இந்த நிறுவனமும் தனக்கென தனியொரு ஜிகர்தண்டாவை உருவாக்கியுள்ளது.

இந்த நிறுவனத்துக்கு மதுரையின் பல இடங்களில் கிளைகள் இருந்தாலும், பேமஸ் ஜிகர்தண்டாவின் தாய்க் கடையான கீழவாசல் விளக்குத்தூண் பகுதியில் உள்ள கடை எப்போதும் மக்களால் நிரம்பியிருக்கும். பல்வேறு பொருள்கள் வாங்க வரும் உள்ளூர், வெளியூர் மக்கள் முக்கியமான வர்த்தகப் பகுதியில் அமைந் துள்ள இந்தக் கடையில் ஜிகர்தண்டா அருந்தாமல் செல்ல மாட்டார்கள். வெளியூர் வி.ஐ.பி-கள்கூட காரில் வருகிறார்கள்.

உணவுப்பொருள் சார்ந்த தொழிலில் மக்களின் நம்பிக்கையைப் பெறுவது சாதாரணமானதல்ல. இது எப்படிச் சாத்தியமானது என பேமஸ் ஜிகர்தண்டா உரிமையாளர் ஜிந்தா மதாரிடம் கேட்டோம்.

ஜிந்தா மதார்
ஜிந்தா மதார்

“வியாபாரம் செய்வதற்காக அப்பா ஷேக் மீரான், அம்மா 1968-ல் நெல்லை மாவட்டத் திலிருந்து மதுரைக்கு வந்தார்கள். இதே இடத்துல பல வருடமா தள்ளுவண்டில ஐஸ்க்ரீம் வியாபாரம் செஞ்சாங்க. அப்புறம்தான் வித்தியாசமா ஏதாவது செய்யலாம்னு யோசிச்சு சர்பத், ஐஸ்க்ரீம், பால், பாதாம் பிசின் போட்டு இந்த ஜிகர்தண்டாவைக் கண்டுபிடிச்சு வியாபாரம் செய்ய ஆரம்பிச்சாங்க, சாப்பிட்ட மக்கள், இந்த பானம் புதுசாவும் நல்லாவும் இருக்குன்னு தொடர்ந்து வர ஆரம்பிச்சாங்க. இதனால கடைக்குக் கூட்டம் அதிகமா வர ஆரம்பிச்சது. பல வருடங்களுக்குப் பிறகுதான் தள்ளு வண்டியிலருந்து அதே இடத்துல நிரந்தரக் கடைக்கு மாறினோம். நானும் என் சகோதரர்களும் அப்பவே கடையில நின்னு வியாபாரம் பார்ப்போம்.

இதுல நாங்க சேர்க்கிற பொருள்கள் அனைத்தும் உடம்புக்கு குளிர்ச்சியையும் சத்துக்களையும் தரக் கூடியது. சின்ன குழந்தைங்க முதல் பெரியவங்க வரைக்கும் சாப்பிடக்கூடியது. உடம்புக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது.

ஜிகர்தண்டா என்பது உருது பெயர்தான். வட மாநிலங்களில் கிடைக்கிற ஜிகர்தண்டா வேறு மாதிரி யாக இருக்கும். நம்ம டேஸ்ட் வேறு. நாற்பது வருடத்துக்கு முன்னாடி ஒரு ஜிகர்தண்டா 60 பைசாவுக்கு விற்றோம். இப்ப 30, 40, 60 ரூபாய்ன்னு அளவுக்கேற்றப்படி விற்கிறோம். பார்சல் வேற ரேட்.

எங்களுக்கு சீஸன் என்பது மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வியாபராம் அதிகம் இருக்கும். மற்ற மாதங்களில் சுமாராகத்தான் இருக்கும். மழைக்காலங் களிலும் வாடிக்கையாளர்கள் தேடிவந்து குடிப்பார்கள்.

ஹோட்டல் நடத்துறவங்க பிரபலமாகிட்டா ஒரு கஸ்டமருக்குக் குறைஞ்சது 300-லருந்து 500 ரூபாய் வரைக்கும் பில் போட முடியும். ஆனால், நாங்கள் பிரபலமாக இருந்தாலும் எங்கள் கஸ்டமர்களுக்கு 60, 70 ரூபாய்க்கு மேல வியாபாரம் செய்ய முடியாது.

எங்களுக்கு ஜிகர்தண்டா விற்பனையில வந்த லாபத்தைவிட, அப்பா காலத்திலேயே தொழில் மூலம் கிடைத்த வருவாயை நிலங்களில் முதலீடு செய்ததுதான் வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்தியது.

மூத்த அண்ணன் சமீபத்துல இறந்துட்டாரு. அடுத்து, நானும், எனக்குக் கீழே உள்ள தம்பிகள் தனித்தனியாக வியாபாரத்தைப் பிரிந்து ஒரே பெயரில் கடைகளை நடத்தி வருகிறோம். சகோதரர்கள் பல ஊர்களிலும் ஃப்ரான்சைஸ் தந்துள்ளார்கள். முதலில் தொடங்கிய இந்தக் கடை என் நிர்வாகத்தில் உள்ளது.

பால் காய்ச்சுவது, பாலாடை தயாரிப்பது, ஐஸ்க்ரீம் தயாரிப்பு வேலைகளைத் தெற்குவாசலில் உள்ள இடத்தில் செய்கிறோம். குடிசைத்தொழில் என்ற நிலையிலிருந்து இப்போது அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறோம். விரைவில் துபாயில் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நாங்கள் தயாரிக்கும் ஜிகர்தண்டாவை ஃப்ரீசரில் வைத்திருந்தாலே போதும், கெடவே கெடாது.

மதுரையின் அதிசய பானம்...
ஜிகர்தண்டாவின் கதை..!

எங்களுக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. அந்தப் பெயரை எப்போதும் காப்பாற்ற வேண்டும் என்று கவனமாக இருக்கிறோம். ஆனால், பல ஊர்களிலும் எங்கள் ‘பேமஸ்’ பெயரை சிலர் எங்களிடம் அனுமதி பெறாமலே பயன்படுத்தி வருகிறார்கள்.

திரைப்படத் துறையினர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் எனப் பல தரப்பினர் எங்கள் கடையைத் தேடிவந்து சாப்பிட்டு, பாராட்டி விட்டுப் போவார்கள். சில பிரபலங்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஆர்டர் கொடுப்பார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மதுரை வந்தால் எங்கள் ஜிகர்தண்டாவை விரும்பி சாப்பிடுவார். எங்கள் கடையில் ஜிகர்தண்டா சாப்பிடணும்னு பல ஊர்களி லிருந்தும் கார் எடுத்து வருகிறவர் களையும், வெளிநாட்டுக்குக் கொண்டு செல்கிறவர்களையும் பார்க்கும்போது மனதுக்கு நிறைவாக இருக்கும்.

பலகோடி ரூபாய் மதிப்புள்ள காரில் கடைக்கு வந்த துபாய் தொழிலதிபர் ஒருவர், ஜிகர்தண்டா சாப்பிட்டுவிட்டு, என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதை நினைத்தால், இப்போதும் பெருமையாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கவே செய்கிறது. இந்தப் பெருமைக் கெல்லாம் காரணம், எங்கப்பா அம்மாதான்.

எனக்கு இரண்டு மகன்கள், ஒரு பொண்ணு. பெரிய பையன் படிச்சுட்டு தொழிலுக்கு வந்துட் டார். அடுத்ததா தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டு வர்றார். இப்ப ஜிகர்தண்டாவுடன் பாசந்தியும் தயாரித்து வருகி றோம். அதுவும் ரொம்ப சுவை யாக இருக்கும். மதுரையில நாங்க உருவாக்கின ஒரு பானம் இன்னைக்கி உலகம் முழுக்க பிரபலமாகியிருப்பது எங்களுக் குப் பெருமைதான்’’ என்றார்.

மீனாட்சி அம்மன் கோயில் தொடங்கி, மதுரைக்குப் பல பெருமைகள் உண்டு. தற்போது ‘பேமஸ் ஜிகர்தண்டா’வும் மதுரையின் தவிர்க்க முடியாத ஓர் அடையாளமாக மாறியிருக் கிறது.