
தொழில்
‘‘சீமென்ஸ், போயிங் கம்பெனியில வேலை பார்க்கும்போதுகூட இவ்ளோ சந்தோஷம் எனக்கு கிடைக்கல. ஆனா, சொந்த ஊருல ஒரு தொழில் தொடங் குனப்ப கிடைச்ச சந்தோஷத் துக்கு அளவே இல்லை’’ என்று முகம் முழுக்க சந்தோஷம் தளும்ப பேச ஆரம்பித்தார் மதுரையில் இயங்கிவரும் கண்மணி இயற்கை பால் நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டன் சுப்புராமன்.
மதுரை மாநகரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது கண்மணி இயற்கை பால் உற்பத்தி நிறுவனம். ஆரம்ப காலத்தில் வீடு வீடாகச் சென்று பால் விற்பனை செய்யத் தொடங்கி, இன்று பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. மதுரை மாவட்டத்தில் முதன்முதலில் ஆன்லைன் மூலம் ஒரு பால் நிறுவனம் பாலை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டனை சந்தித்தோம். அவர் பிசினஸ் பயணத்தைப் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

“எனக்கு சொந்த ஊரு மதுரைதான். ஒத்தக்கடையில 1982-ல் எங்க அப்பா சுப்பு ராமன்தான் முதல் பால் விற்பனையைத் தொடங்கினார். 2005-ல் எம்.பி.ஏ முடிச்சுட்டு, அதே வருஷம் மென்பொருள் நிறுவனம் ஒண்ணுல வேலையில சேர்ந்தேன். 2005-ல் தொடங்கி 2019 வரை மென்பொருள் நிறுவனங்கள்ல வேலை பார்த்தேன். ஆனா, எனக்கு அந்த வேலை அந்தளவு திருப்திய தரல; அந்த நேரத்துல, ‘ஏன் நம்ம சொந்த ஊருல ஒரு பிசினஸ் தொடங்கக்கூடாது’னு ஒரு ஐடியா வந்தது.
2019-ல் நான் பார்த்துட்டு இருந்த வேலையை விட்டுட்டு இந்த பிசினஸ்குள்ள வந்தேன். புதுசா ஒரு பிசினஸை ஆரம்பிக்கிறதுக்கு நம்ம அப்பா பண்ற பிசினஸை டெவலப் பண்ணி பெரிய லெவலுக்குக் கொண்டுபோகக் கூடாதுனு யோசிச்சேன். கம்பெனிக்கு ஒரு நல்ல பேரு வேணும்; அதுவும் ஒரு தமிழ் பேரா இருக்கணும்; ஈசியா எல்லார்கிட்டயும் சேரனும் அப்படினு யோசிச்சு தேடுறப்ப, இந்த கண்மணிங் கிற பேர கண்டுபிடிச்சேன். குழந்தைகளுக்கு ரைம்ஸ் சொல்ற கண்மணி பாடல்கள் நம்ம எல்லாருக்கும் தெரியும்; பசும்பாலும் அப்படித்தான். குழந்தைகளுக்கு ஒரு முக்கியமான உணவாதான் பெரும்பாலும் பாக்குறாங்க. இந்தப் பேரு ரொம்ப ஈசியா அவுங்க மனுசுல பதியும்னு தான் வச்சேன்.
என்னோட அப்பா காலத்துல சொந்தமா மாடு வச்சுதான் பால் விற்பனை பண்ணிட்டு இருந்தோம். ஒரு காலகட்டத்துல அவ்வளவு மாடு இல்லாம போச்சு. அதுக்கு அப்புறமா பாலை வெளிய இருந்து கொள்முதல் பண்ண ஆரம்பிச்சோம் ஆனா, அது தரத்துல குறைவா இருந்ததால, குவாலிட்டி டெஸ்ட் பண்ற மெஷின் ஒண்ணு வாங்கி, தரமான பாலை மட்டும் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். இதுக்கு மக்கள் மத்தியில ஒரு நல்ல வரவேற்பு இருந்தது. கண்மணி பால் என்கிற பிராண்ட்டையும் மக்கள் மனசுல பதிய வைக்கிறதுக்கு இது உதவியா இருந்துச்சு.
பொதுவா, பால் நிறுவனங்கள் பதப்படுத்தப்பட்ட (standardised) பால்தான் விக்கிறாங்க. தமிழக அரசு FSSAI-யின்படி, நல்ல பாசும் பாலில் கொழுப்புச் சத்து அளவுங்கிறது 3.5% - 4% இருக்கணும்; புரதச்சத்து 7.5% - 8% இருக்கணும். ஆனா, இத சமச்சீர் பண்ற பேர்ல 5% - 6% அளவு கொழுப்பு, எஸ்.என்.எஃப் 9% இப்படி அவங்கவங்க வசதிக்கேத்த மாதிரி பாலைப் பதப்படுத்தி விக்கிறாங்க. இந்தப் பால் ஒரு நாள் கழிச்சுதான் ஜனங்களுக்கு வந்து சேருது. ஆனா, நாங்க தினமும் ஃப்ரெஷ் பாலைத் தர்றதால, ‘ஸ்டாண்டர் டைஸ்’ முறையைப் பயன்படுத்தக் கூடாதுனு முடிவு செஞ்சோம். அதுக்கு பாலை 4 டிகிரிக்கு மாத்தி விக்கிறோம். தமிழ்நாடு வேளாண் கல்லூரி வளாகத்துல உள்ள நபார்ட் - மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் ஃபோரம் மூலமா நிறைய உதவி கிடைச்சது. இவுங்களோட அதிநவீன லேபாரட்டரி, பாலின் தரத்தை டெஸ்ட் பண்ண ரொம்ப உதவியா இருக்கு.

பால் விக்குற முறைய மாத்தணும்; புதுசா ஏதாச்சும் பண்ணணும்னு நினைச்சப்ப, இதுக்காக ஏன் ஒரு ‘ஆப்’பை ஸ்பெஷலா கிரியேட் பண்ணி அது மூலமா பால் டெலிவரி பண்ணக்கூடாதுங்கிற ஐடியா எங்களுக்கு வந்தது. இது மூலமா மக்கள் ரொம்ப எளிதா பாலை வீட்ல இருந்துகிட்டே ஆர்டர் பண்ணி வாங்க முடியும்.
தவிர, பாக்கெட்ல விக்கிற பால் அவ்வளவு பாதுகாப்பானதா இல்லை. அதையும் மாத்தணும்னு நெனச்சப்ப, பாலை இனிவரும் காலங்களில் பாட்டில்ல விற்க முடிவு செஞ்சோம். இதனால பாலின் வாழ்நாள், தரம் அதிகரிச்சது. ஆனா, பாட்டில்ல பால் விக்கிறது அவ்வளவு ஈசி இல்ல; ஆனா, மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்துறது மூலமா அதையும் சாத்தியம் ஆக்கினோம்.
இனி வரப்போற நாள்ல பாட்டிலோட ஒரு க்யூ.ஆர் கோட் பதிப்பிக்கப்போறோம். இந்த க்யூ.ஆர் கோடை ஸ்கேன் பண்ணினா, பால் உற்பத்தி செய்யப்பட்ட தேதி, அதோட தரம் எல்லாத்தையும் ஈசியா தெரிஞ்சிக்க முடியும். இதுக்கெல்லாம் நிறைய நேரம் செலவாகும். ஆனா, மக்களுக்கு சரியான தகவலைச் சொல்லி, அவங்ககிட்ட பாலை விக்கணும்னுங்கிற ஒரே காரணத்துக்காகத் தான் இவ்வளவு மெனக்கெடுறோம்.
ஆரம்ப காலத்துல அதிகமான பால் மிஞ்சுனாலே அந்தப் பாலை தயிரா மாத்தி விக்க ஆரம்பிச்சோம். அதுவும் மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைச்சது. அதைத் தொடர்ந்து பால் சம்பந்தப்பட்ட மத்த பொருள்களையும் உற்பத்தி பண்ணோம். தயிர்ல தொடங்கி இப்போ 18 பொருள்கள் வர விக்குறோம். இத்தாலி நாட்டில் மட்டும் கிடைக்கும் ஃபேமஸ் ஆர்ட்டிசனல் சீஸ், நேச்சுரல் பிளேவர்ட் ஐஸ்க்ரீம்னு நிறைய புது பொருள்கள்லாம் கூடிய விரைவுல அறிமுகப் படுத்தப்போறோம்.
இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட வாடிக்கை யாளர்கள் ரெகுலரா பால் வாங்கிட்டு இருக்காங்க. இந்த 3,000 பேரை 10,000-ஆக மாத்துற வேலையை நாங்க செஞ்சுகிட்டு இருக்கோம்.
ஆரம்பத்துல்ல தினமும் 50 லிட்டர் பாலை விக்க ஆரம்பிச்சோம். இன்றைக்கு ஒரு நாளைக்கு 3,000 லிட்டர் பால் விக்கிறோம். முதல் வருஷத்துல ரூ.50 லட்சம் டேர்ன்ஓவர் ஆச்சு. அப்புறம் ரூ.1 கோடி, அடுத்து ரூ.2 - ரூ.2.5 கோடி, இந்த வருஷம் ஏறக்குறைய ரூ.4 கோடி வரை டேர்ன்ஓவர் பண்றோம்.
நல்ல தீவனங்கள்தான் மாடு களுக்குத் தருகிறோம். விவசாயி களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத் துறோம். மாடுகளுக்கு நோய் வருவதற்கு முன்பே நம்ம மெடிக் கல் டீம் அதைக் கண்டுபிடிச்சு முன்கூட்டியே விவசாயிகளுக்கு அறிவிக்கும். நேஷனல் லெவல்ல இப்போ நம்ம ஒவ்வொரு நொடி யும் கண்காணிச்சுகிட்டே இருக்கோம்.
எனக்கு நுகர்வோருக்குரிய ஒரு கம்பெனியா இருக்கணும் தவிர, பெரிய கார்ப்பரேட் கம்பெனி மாதிரி மாற விருப்பம் இல்ல. மதுரைல நல்ல பால் அப்படினாலே எங்களைத் தேடி வரணும். மத்த தனியார் நிறுவ னங்கள் மாதிரி வர எங்களுக்கு எண்ணம் இல்ல. ஆஃபர்ஸ நம்பி நாங்க பாலை விக்கல; தரம் ஒண்ண நம்பியே நம்மலால அந்த நிறுவனங்களுக்கு இணையா விக்க முடியும். டெய்லி பால் விக்கிற சிறுவியா பாரிகள் எங்களை போட்டியா பார்க்கலாம். ஆனா, மக்கள் தரமான பால்தான் விரும்புறாங்க.

சிறு பால் உற்பத்தியாளர்கள் கிட்ட இருந்து நாங்க பால் வாங்குறோம். நடுவில் இருக்குற டீலர்ஸ்னாலயே பாலின் விலை அதிகரிக்குது. நாங்க 365 நாளும் பால் உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலையில கொள்முதல் பண்ணமுடியும். எங்களை நம்பி வருகிற விவசாயிகளுக்கு ஏற்ற விலையைத் தர்றோம். அதுவும் கையில பணமா தர்றதுல்ல. நேரடியா அவுங்க பேங்க் அக்கவுன்ட்க்கு பணத்த டெபாசிட் பண்றோம், இது மூலமா விவசாயிகளுக்கு நிரந்தரமான விலையில பால் தர வழி வகுக்குறோம்.
மத்தவங்க பால் விலை உயர்த் தினாலும் நாங்க ரொம்ப யோசிச்சுதான் உயர்த்துறோம். கொள்முதல் விலையை நிலையா வைக்குறதனால வாடிக்கை யாளர்களுக்கும் நிலையான ஒரு விலையைத் தர முடியுது. அதுமட்டுமல்லாம, ‘ஸ்டாண்டர் டைஸ்ட் மில்க்’ உற்பத்தி பண்றப்ப, அதிகம் செலவாகுது. நாங்க அதைச் செய்றதில்லைங் கிறதால, எங்களால் விலை குறைவா தர முடியுது. ஆரம் பிக்கும்போது ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.48. மூணு வருசம் கழித்து இப்ப 50 ரூபாயாக மாற்றி இருக்கோம்.
இதுவரை மதுரையில மட்டும் எட்டு கிளைகள் இயங்கிக்கிட்டு வருது. வரும் நாள்களில் இதை இன்னும் அதிகரிக்கணும். 365 நாளும் இயங்கி வரும் தொழில் என்கிறதால, முதலீட்டாளர் களுக்கு நல்ல ஒரு வாய்ப்பு இருக்கு. நாங்களும் முதலீட் டாளர்களை முழுமனசோட வரவேற்கிறோம். இதுவரை சில முதலீட்டாளர்கள் அவங் களாகவே முதலீடு செய்ய வர்றாங்க.
இந்தப் பெரிய வெற்றிக்கு உறுதுணையாக இருக்குறது, எங்களோட உழைப்பாளர்கள். அவுங்க இல்லாம இது சாத்தியம் இல்ல. என்னோட குடும்பத்துல என்னோட அப்பா தொடங்கி என் நண்பர்கள் உட்பட எல்லாருமே ஒரு பெரிய சப்போர்ட்டா இருக்காங்க.
மென்பொருள் வேலைய விட்டு வரும்போது எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. ஆனா, மக்களுக்கு நல்ல தரமான பால் தரணும் அப்படிங்கிற எண்ணம் மட்டும் மேலோங்கி இருந்தது. ஆரம்பிச்ச ஆறு மாசத்துல நெருக்கடியான சூழல் வந்தது. ஆனா, அந்த நேரத்துலயும் அப்பா உறுதுணையா இருந்தாரு. என்னோட மனைவியோட பங்களிப்பு ரொம்ப பெருசு. ஆரம்பத்துல என்னை மாதிரி அவுங்களும் மென்பொருள் நிறுவனத்துலதான் வேலை பார்த்தாங்க; அப்புறம் அந்த வேலையை விட்டுட்டு இப்ப எனக்கு முழு சப்போர்ட்டா இருக்காங்க.
இன்னைக்கு இந்த அளவுக்கு நான் வளர்ந்து நிற்க காரணம், விடாமுயற்சிதான். அதுமட்டுமல்லாம, நமக்கு நல்ல வருமானம் வரும்போதும் சரி, அதே நேரத்துல நம்ம ஒரு சின்ன சரிவை சந்திக்கும்போதும் சரி, இந்த ரெண்டு நேரத்துலயும் மத்தவுங்க என்ன சொன்னாலும் அதைக் காதுல வாங்கிக்காதீங்க. எதைப் பத்தியும் காதுல போட்டுக்காம உங்க வெற்றிப் பாதையை நோக்கிப் பயணிங்க. கண்டிப்பா நீங்க நெனச்ச வெற்றியை அடையலாம்” என்று வெற்றிக்களிப்புடன் தான் கடந்து வந்த பாதையைப் பகிர்ந்துகொண்டார் மணிகண்டன்.
பால் விற்பனை புதிய தொழில் அல்ல; ஆனால், அந்தத் தொழிலில் பல புதுமைகளைப் புகுத்தி, மக்களுக்குத் தரமான பாலைத் தர நினைக்கும் மணிகண்டனின் சிந்தனை பாராட்டத்தக்கது. புதுமையான சிந்தனையும், கடுமையான உழைப்பும் கொண்ட அவர் பிசினஸில் நிறையவே சாதிப்பார்!