
நேட்டிவ் பிராண்ட் -17
கலர், ஜிஞ்சர், சோடா என்று கேஸ் அடைக்கப் பட்ட பானங்கள் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மாம்பழச்சாற்றைப் பாட்டிலில் கொடுத்து மக்களிடம் புதிய அனுப வத்தை உருவாக்கியது மதுரை ரூபி நிறுவனம்! இன்று பல்வேறு மில்க் பிளேவர் பானங்களைத் தயாரித்து குளிர்பானம் பிசினஸில் தனக்கென ஓர் இடத்தைத் பிடித்து நிற்கிறது.
இந்த நிறுவனத்தின் வெற்றிக்கதையைத் தெரிந்து கொள்ள மாட்டுத் தாவணி அருகே சிட்கோ தொழில் பேட்டையில் இயங்கிவரும் ரூபி நிறுவனத்துக்குச் சென்றோம். ரூபி ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி சம்பத் நமக்கு விளக்கிச் சொன்னார்.

“எங்க தாத்தாவுக்கு அருப் புக்கோட்டை பக்கத்துல ஒரு கிராமம். விவசாயக் குடும்பம். வேறு வியாபாரங்களில் ஈடுபடவும், பிள்ளைகளின் படிப்புக்காகவும் எங்க தாத்தா முத்துச்சாமி குடும்பத்தோட மதுரைக்கு வந்தார். முதலில் பலசரக்கு கடையும் புகை யிலைக் கடையும் நடத்தினார். அந்த ரெண்டு கடையும் நல்லா போச்சு.
எங்க அப்பா சீனிவாசன், டிரேடிங்கிலிருந்து இண்டஸ் ட்ரி லெவலுக்கு மாறணும்னு முடிவெடுத்து தாத்தாவிடம் சொல்ல, அதோடதான் ரெண்டுபேரும் சேர்ந்து 1962-ல் சிம்மக்கல் பகுதியில ரூபி குளிர்பான கம்பெனியைத் தொடங்கி, சோடா, கலர்னு ‘எரேட்டட் டிரிங்க்ஸ்’ தயாரிச்சாங்க. அதுக்குப் பிறகு, புதுசா ஏதாவது பண்ணணும்னு முடிவெடுத்து முதன்முதலா ஆப்பிள், கிரேப், மேங்கோன்னு ஃப்ரூட் ஜூஸை அறிமுகப்படுத்தினாங்க. சில நிறுவனங்கள் கிரேப் ஜூஸ் தயாரிச்சு வித்தாலும், இடையில நிறுத்திட்டாங்க. ஆனா, நாங்கதான் ‘எரேட்டேட் டிரிங்’ஸோடு ஃப்ரூட் ஜூஸ் களைத் தொடர்ந்து தயாரிச்சு மக்களுக்குத் தந்தோம்.
ஒரு கட்டத்துல ‘எரேட் டெட் சிந்தெடிக் டிரிங்ஸ்’ தயாரிப்புகளை நிறுத்திட்டு, முழுக்க ஃப்ரூட் ஜூஸ்களைத் தயாரிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டினோம். பெரிய விளம்பரம் செய்யாமல் ரூபி மேங்கோ ரொம்ப பிரபலமாகி மக்கள் மத்தியில் நிரந்தர இடம்பிடித்தது.
ரூபிங்கிற பிராண்டை எங்க தாத்தாதான் தேர்வு செஞ்சார். அந்தக் காலகட்டத்துல பெரும்பாலான பிராண்டுகள் மதம் சம்பந்தப்பட்ட பெயர்களா இருந்திருக்கு. அதனால பொதுவான பெயராகவும், டக்குன்னு சொல்லக்கூடிய பெயராகவும் இருக்கட்டும்னு ரூபிங்கிற பெயரைத் தேர்ந்தெடுத்தார்.

ஆரம்பத்தில் மதுரை நகரத்துக்குள் மட்டும் இருந்த எங்கள் விற்பனையை, கொஞ்சம் கொஞ்சமா தென் மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தினோம். அப்ப டொரினோ போன்ற பிராண்டுகள் எங்களுக்குப் போட்டியா இருந்துச்சு. குடிசைத் தொழிலாகத் தொடங்கி, சிறுதொழில் என்ற ஸ்டேஜுக்கு மாறி, பின்பு சிட்கோவில் பிளான்டைத் தொடங்கினோம்.
எங்களுடைய தயாரிப்பான ரூபி மேங்கோ மக்கள் மத்தியில் பிரபலமாகக் காரணம், இயற்கையான மாம்பழத்திலிருந்து தயாரிப்பதுதான். ஆரம்பத்தல நாங்களே நேரிடையாக மாம்பழங்களை வாங்கி அதிலிருந்து ஜூஸ் எடுத்து ஸ்டோர் பண்ணி ஆண்டு முழுவதும் மேங்கோ ஜூஸ் தயாரித்தோம். அதன் பின்பு, வெளியிலிருந்து வாங்கினோம். மாம்பழ சாற்றை எப்படிக் கொள்முதல் செய்தாலும் அதில் வேறு எதையும் கலக்காமல் தயாரிக்கும் முறையால் எங்களுடைய ரூபி மேங்கோவுக்கென தனி மக்கள் கூட்டம் உருவானது.
இந்த நேரத்துலதான் வெளிநாட்டு கம்பெனிகளின் வரவால் எங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 1996-ல பெப்சி, கோக் கம்பெனிக்காரங்க 5 ரூபாய்க்கு குளிர்பானங்களை விற்க ஆரம்பிச்சாங்க. இதனால சிறிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது. நிறைய பேர் கம்பெனியை மூடிட்டாங்க. அதுல தாக்குப் பிடிச்சு நின்னவங்கள்ல நாங்களும் ஒண்ணு. அதுக்கு காரணம், ஜூஸ் புரடக்டோட மில்க் பிளேவர் டிரிங்குகளை அதிகம் தயாரிச்சதுதான்.

வெளிநாட்டு கம்பெனிங்க பல பிராண்டுகளை வாங்கிட்டாங்க. எங்களைப் போன்ற சிறு நிறுவனங் களுக்கு பெரிய முதலீடே பாட்டில்கள்தான். அது திரும்ப வரல. எங்கள் பிராண்டுகளை வைக்கக் கூடாதுன்னு கடைக்காரர்களிடம் அழுத்தம் கொடுத்தாங்க. எங்கள மாதிரி நேட்டிவ் பிராண்டுகளை காலி பண்ணனும்கிறதுல தீவிரமா இருந்தாங்க. அந்த நேரத்துல மத்திய அரசிடம் எங்கள் பிரச்னைகளை எடுத்துச் சொல்லியும் எந்தப் பலனும் இல்லை. ‘இதை வியாபாரப் போட்டின்னு எடுத்துக்குங்க’ன்னு அரசு ஆலோசனை சொல்லிச்சு. ஆனா, இது ஆரோக்கியமான போட்டி இல்லைன்னு நாங்க சொன்னோம். சுதேசியம் பேசின அரசியல் வாதிகளே பன்னாட்டு நிறுவங்களுக்கு ஆதரவா செயல்பட்டாங்க.
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலைக் கடந்து எங்கள் தொழிலை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டுப் போனோம். 2000-ல் பிளேவர் மில்க் டிரிங்ஸ்ல காபி, சாக்லேட், ரோஸ் மில்க், பிஸ்தா, ஜிகர்தண்டா எனப் பல வெரைட்டிகளைக் கொண்டு வந்தோம். அப்ப ஆவின் கடைகளில் மட்டும்தான் பிளேவர் மில்க் விற்பனை செஞ் சாங்க. அதிலேயே புதுமையா நாங்க தயாரிக்குற பாதாம் பாலில் பாதாம் நட்ஸ்களையும் அப்படியே ஆட் பண்ணியது மக்களுக்குப் பிடிச்சது.
சமீபகாலமா மக்கள் மத்தியில் குறிப்பாக, இளைய தலைமுறை யினரிடம் உணவுப்பழக்கத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பன்னாட்டு பானங்களில் உள்ள மோசமான விளைவுகள் பற்றி தெரிந்து பாதிப்பு இல்லாத உள்நாட்டு பானங்களுக்குத் திரும்பி வர்றாங்க. அவர்களை ஈர்க்கும் வகையில் எங்க தயாரிப்பு களை எடுத்துட்டுப்போறோம். ஆரம்பத்துல கண்ணாடி பாட்டில்ல பேக் செஞ்சு வந் தோம். இப்ப பயன்படுத்தியபின் அழித்துவிடும் பிளாஸ்டிக் பாட்டிலிலும் தயாரிக்கிறோம். இந்த பானங்கள் ஆறு மாதம் வரை கெடாது. அதற்காக எந்த ரசாயனமும் கலக்குறதில்ல. இயற்கையான முறையில் பதப் படுத்துகிறோம்.
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, கோவிட் எனப் பல நெருக்கடி களைக் கடந்து வந்திருக்கிறோம். நாங்கள் ஐந்து சகோதரர்கள். ஒருவர் அமெரிக்காவில் இருக்கார். மற்ற நான்கு பேரும் நிறுவனத்துல ஆளுக்கொரு வேலையைப் பார்க்குறோம்.
எனக்கு இரண்டு பையன். மூத்தவர் யு.எஸ்ஸில் இருக்கார். ரெண்டாவது பையன் கம்ப் யூட்டர் படிச்சு டி.சி.எஸ்ல வேலை பார்த்துட்டு இப்ப எங்க பிசினஸுக்கு வந்துட்டார். அவர் வந்த பிறகு, மார்க்கெட்டிங்கை விரிவுபடுத்தி நிறைய மாற்றங் களைப் பண்ணியிருக்கார். அடுத்து எங்க பிளான்டைப் பெரிசாவே ஒரு இடத்துல அமைக்கத் திட்டமிட்டிருக்கோம்.
தென் மாவட்டங்களில் மட்டும் மார்க்கெட்டிங் செஞ்சு கிட்டிருந்த நாங்க இப்ப தமிழ்நாடு முழுக்க பிசினஸ் பண்றோம். பக்கத்து மாநிலங்களுக்கும் விரிவு படுத்தத் திட்டமிட்டிருக்கோம்.கால மாற்றத்துக்கேற்ப எங்களை நாங்க புதுப்பிச்சுகிட்டே இருக்கோம்’’ என்றார் சம்பத்.