Published:Updated:

உலக வங்கியின் வருடாந்தர கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பதின் முக்கியத்துவம் என்ன?

அமைச்சர் நிர்மலா சீதாராமன்
News
அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை உலக வங்கி கடந்த வாரம் 7.5 சதவிகிதத்திலிருந்து 6.5 சதவிகிதமாகக் குறைத்திருந்தது. இருப்பினும், உலக பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாகவும், சர்வதேச வர்த்தகக் கொள்கையில் தவிர்க்க முடியாத நாடாகவும் நாம் இருக்கிறோம்.

உலக வங்கியின் வருடாந்தர கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பதின் முக்கியத்துவம் என்ன?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை உலக வங்கி கடந்த வாரம் 7.5 சதவிகிதத்திலிருந்து 6.5 சதவிகிதமாகக் குறைத்திருந்தது. இருப்பினும், உலக பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாகவும், சர்வதேச வர்த்தகக் கொள்கையில் தவிர்க்க முடியாத நாடாகவும் நாம் இருக்கிறோம்.

Published:Updated:
அமைச்சர் நிர்மலா சீதாராமன்
News
அமைச்சர் நிர்மலா சீதாராமன்

உலக வங்கி (World Bank) மற்றும் சர்வேதச நாணய நிதியின் (IMF) வருடாந்தர கூட்டத்தில் பங்கேற்பதற்காக நமது நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறு நாள் பயணமாக அக்டோபர் 11 முதல் 16 வரை அமெரிக்க நாட்டுக்குச் சென்றுள்ளார். உலக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில், நிதியமைச்சர் பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அமைச்சர் நிர்மலா சீதாராமன்

உலக வங்கியின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு..!

 நாட்டின் பொருளாதாரக் கொள்கை முன்னுரிமைகளை முன்னிலைப்படுத்துதல் மற்றும் சிறந்த முதலீட்டு இடமாக இந்திய நாட்டை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு அமையுமென சொல்லப்படுகிறது. மோசமான வெளிப்புற சூழல் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை உலக வங்கி கடந்த வாரம் 7.5 சதவிகிதத்திலிருந்து 6.5 சதவிகிதமாகக் குறைத்திருந்தது. இருப்பினும், உலக பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாகவும், சர்வதேச வர்த்தகக் கொள்கையில் தவிர்க்க முடியாத நாடாகவும் நாம் இருக்கிறோம்.

உலக வங்கியின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடும், அதன் வருடாந்தர கூட்டத்தில் கலந்துகொள்வதும் முக்கியத்துவ மானதாக பார்க்கப்படும் நிலையில், அதற்கான காரணம் உலக வங்கியின் நிலைத்தன்மையும், அதன் செயல்பாடுகளும்தான்.

Washington DC
Washington DC

உலக வங்கி (Worldbank.org)…

 `உலக வங்கி’ என்பது வளரும் நாடுகளுக்கு அவர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவுவதற்காக நிதியுதவி, ஆலோசனை மற்றும் அதன் சார்ந்த ஆராய்ச்சிகளை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாகும். வளரும் நாடுகளுக்கு மட்டுமல்லாமல், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவிகளை வழங்குவதன் மூலம் வறுமையை எதிர்த்து போராடுவதற்கான முயற்சியை அளிக்கும் ஓர் அமைப்பாகவும் உலக வங்கி செயல்படுகிறது.

 1944-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் நாணய மற்றும் நிதி மாநாட்டின் (United Nations Monetary and Financial Conference) மூலம் தொடங்கப்பட்டதுதான் உலக வங்கி. உலக வங்கியும், சர்வதேச நாணய நிதி அமைப்பும் (IMF) ஒருசேர ஆரம்பிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் உலக வங்கி குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு கடனுதவி மற்றும் மானியங்களை அளிக்கிறது. 

 உலக வங்கியின் கீழ் ஐந்து சர்வதேச அமைப்புகளும் செயல்படு கின்றன. இவை வங்கிகளாகவும், வளர்ச்சி, நிதியுதவி, முதலீடு போன்றவற்றை மேற்கொள்பவையாகவும், பல்வேறு நாடுகளின் முதலீடுகள் மூலம் ஏற்படும் சிக்கல்களை களையவும் வழிவகை செய்கிறது. தொடங்கும்போது 38 நாடுகளை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டிருந்த உலக வங்கியின் இன்றைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 189 நாடுகளாக உள்ளது. உலக வங்கியின் செயல்பாட்டைக் கவனிக்க ஒரு தலைவரும், 25 நிர்வாக இயக்குநர்களும் மற்றும் 29 துணைத் தலைவர்களும் பொறுப்பில் உள்ளனர்.

நா.சரவணகுமார், ஆலோசகர், www.richinvestingideas.com
நா.சரவணகுமார், ஆலோசகர், www.richinvestingideas.com

இந்தியாவைச் சேர்ந்த அன்சுலா காந்த்

உலக வங்கியின் தலைவராக அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ராபர்ட் மல்பாஸ், வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரி பொறுப்பை, இந்தியாவைச் சேர்ந்த அன்சுலா காந்த் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.

உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநராக (Chief Economist)  இந்தர்மிட் கில் வகிக்கிறார். இருப்பினும், முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான வாக்கெடுப்பில் வளர்ந்த நாடுகளே அதிகாரத்தைக் கொண்டுள்ளன. குறிப்பாக அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் (UK), ஜப்பான், ஜெர்மனி மற்றும் சீனா போன்ற நாடுகள் தான் அதிகப்படியான வாக்குகளை கொண்டுள்ளன. இதற்கு அடுத்தவாறு வேகமாக வளரும் நாடுகளின் பட்டியல் உள்ளது. உலக வங்கி வாக்கெடுப்பு எண்ணிக்கையில் இந்தியா ஏழாவது இடத்தில் இருப்பதும், கடந்த சில வருடங்களாக வேகமாக வளரும் நாடுகளின்(Emerging Economies) வாக்கு எண்ணிக்கை அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

உலக வங்கியின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகள்

உலக வங்கியின் கீழ் செயல்படும் அமைப்புகள் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பது, வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள தனியார் துறையை ஊக்கப்படுத்துவது, தனியார் நிறுவனங்களை அன்னிய முதலீட்டை மேற்கொள்ள வைத்தல், தனியார் முதலீட்டாளருக்கும் - அரசாங்கங்களுக்குமான முதலீட்டு உறவை பேணுதல் என பல பிரிவுகளில் இந்த அமைப்புகள் இயங்கி வருகின்றன.

  • வளர்ந்த நாடுகள் மற்றும் முதலீட்டு சந்தைகளிலிருந்து குறைந்த வட்டி விகிதத்தில் கடனாக பெற்று, வளரும் மற்றும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பது உலக வங்கியின் முக்கிய செயல்பாடாகும்.

உலக வங்கி
உலக வங்கி
  • அனைத்து உறுப்பு நாடுகளிடமிருந்து குறிப்பிடத்தக்க கட்டணத்தை பெறுதல், கடனளித்த நாடுகளிடமிருந்து வட்டி வருவாயை பெறுதல், நிதிச் சந்தையில் முதலீட்டை திரட்டுதல் ஆகியவற்றின் மூலம் உலக வங்கியின் வருவாய் பெறப்படுகிறது.

  • வெறுமென கடன் நிதியுதவி மட்டும் அளிக்காமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான ஆலோசனை மற்றும் ஆராய்ச்சிகளையும் உலக வங்கி ஊக்கப்படுத்துகிறது. பொருளாதார கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு, எதிர்கால திட்டங்கள் சார்ந்த வடிவமைக்கப்படும் தகவல் மற்றும் தரவுகளையும் உலக வங்கி மற்ற நாடுகளுக்கு வழங்குகிறது.

  • வளர்ந்த நாடுகளில் ஒரு குறிப்பிட்ட துறையில் இயங்கும் சிறந்த நிறுவனங்களை முன்னுதாரணமாக எடுத்து, வளரும் நாடுகளில் அதன் பங்களிப்பை ஏற்படுத்த உலக வங்கி முனைகிறது.

  • பாதுகாப்பான குடிநீர், கல்வி, இயற்கை மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரித்தல், போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், சுகாதார கட்டமைப்பு, போதுமான எரிசக்தியை உறுதி செய்தல், புதுமைகளை எளிமையாக பரிமாறிக்கொள்ளுதல் என ஒவ்வொரு துறைக்கும், நாடுகளுக்கும் தேவையான நிதி சார்ந்த உதவிகளை  உலக வங்கி நிர்வகிக்கிறது.

  • உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கு தேவையான கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சிறப்பு மையங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 

சுருக்கமாக சொன்னால், உலக நாடுகளுக்கு தேவையான சேவையை  வழங்கும் ஒரு சர்வதேச நிதி நிறுவனம் தான், ‘உலக வங்கி’. நிதி ஆதாரம் என்று மட்டுமில்லாமல் சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, சட்டம் மற்றும் சுற்றுச்சூழலை பேணுதல் ஆகிய நடவடிக்கைகளையும் இவ்வங்கி செய்து வருகிறது. உலகின் வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மையங்களில் மிகப்பெரியது, இந்த உலக வங்கி தான்.

ஒவ்வொரு உறுப்பு நாட்டின் (Member Countries) அரசாங்கங்களும் உலக வங்கியின் பங்குதாரர்கள். அவர்களது பங்களிப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்கு எண்ணிக்கை அமையும். அரசாங்கம் சார்பில் அந்நாட்டின் நிதி அமைச்சர்கள் அல்லது ஆளுநர்களே வாக்களிக்கும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கொரு முறை நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் தங்களது நாட்டின் நிதி சார்ந்த கோரிக்கைகளையும், முதலீட்டு வாய்ப்புகளையும் முன்னிறுத்துவர். உலக வங்கியின் அடுத்தகட்ட செயல்பாடுகளுக்கான வாக்குகளையும் அளிப்பார்கள்.

 வருடாந்திர கூட்டத்தில் ஒவ்வொரு நாடுகளின் கோரிக்கைகளை பெறுவதோடு மட்டுமில்லாமல் சர்வதேச நாணய நிதி அமைப்புடன்(IMF) இணைந்து உலகளாவிய பிரச்னைகளை தீர்க்க, வறுமையை குறைக்கும் விதமாக வரவிருக்கும் காலத்தில் உலக நாடுகள் எவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பதனையும் உலக வங்கி தீர்மானிக்கும். 

உலக வங்கி
உலக வங்கி

 ‘உலக வங்கி’ போன்ற ஒரு சர்வதேச நிதி அமைப்பு இல்லையென்றால், இன்று பெரும்பாலான நாடுகள் எந்தவொரு நிதி ஆதாரத்தையும் பெற முடியாமல் ஏழ்மையான நாடாகவே இருந்திருக்கும். கல்வியறிவை பெருக்கவும், சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், புதிய வேலை மற்றும் தொழில்களை ஏற்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை பெற இது போன்ற உலகளாவிய சேவையும் இன்றைய காலத்தில் அவசியமான ஒன்று. 

 “உலக வங்கியின் சேவையை நன்கு உணர்ந்திருக்கும் நாடாகவும் இந்தியா எப்போதும் உள்ளது. கடந்த 1958ம் வருடம் இரண்டாம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் ஏற்பட்ட நிதிச் சுமையால் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது இந்தியா. முழுமையடையாத உட்கட்டமைப்பு மற்றும் தொழில்துறையால் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ஒரு ஆண்டுக்குள் கரைந்து விடும் என்ற அச்சம் இருந்தது. நாட்டிற்கு தேவையான கூடுதல் நிதி உதவி செய்யுமாறு உலக வங்கியை நாடியது இந்தியா. பின்னர் நாட்டின் அவசர நிலைக்கான தீர்வை உலக வங்கி செய்தது. “

 உலக வங்கியின் சமீபத்திய எச்சரிக்கை:

  கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு உலக நாடுகள் தற்போது மீண்டுமொரு பொருளாதார மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. 2020ம் ஆண்டின் கொரோனா ஊரடங்கு காலத்தில் உலகளவில் ஏழ்மைக்கு தள்ளப்பட்டவர்களில் 80 சதவீதம் மக்கள் இந்தியர்கள் எனவும், ஊரடங்கு காலத்தில் டிஜிட்டல் பண பரிமாற்றம் மற்றும் நிதி உதவி மூலம் பெரும் பொருளாதார வீழ்ச்சியை இந்தியா தவிர்த்ததையும் குறிப்பிட்டுள்ளது உலக வங்கி.