Published:Updated:

வெற்றியைக் குவிக்கும் விராட் கோஹ்லி!

தடைக்கல்லும் படிக்கல்லே!

பிரீமியம் ஸ்டோரி

அனுபவசாலிகள் பலர் இருக்கும் இடத்தில், அனுபவமில்லாத சிறுவன் ஒருவன் தனது திறமையை நிரூபிப்பதுடன், கஷ்டப்பட்டு வாங்கிய பெயரை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள பெரிய போராட்டமே நடத்த வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நம்பிக்கை வீரரான விராட் கோஹ்லி அப்படியொரு போராட்டத்தைக் கடந்து வந்தவர்.

நவம்பர் 5, 1988-ம் ஆண்டு டெல்லியில் நடுத்தர குடும்பமொன்றில் பிறந்த கோஹ்லி, பள்ளியிலேயே  கிரிக்கெட் மட்டையை கையில் எடுத்துவிட்டார். மேற்கு டெல்லிக்கான கிரிக்கெட் அசோசியேஷன் முதன்முதலில் ஆரம்பித்தபோது, 15 வயது சிறுவனாக அந்த அணியில் இடம்பிடித்து தனது ஸ்கோரைத் தொடங்கினார் கோஹ்லி.

உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடிவந்த கோஹ்லிக்கு, டெல்லி அணியில் சேர்ந்து ஆட வாய்ப்பு கிடைத்தது. 2006-ம் ஆண்டு ரஞ்சி போட்டியில் டெல்லி அணி, கர்நாடக அணியுடனான ஆட்டத்தில் ஃபாலோ-ஆனை தவிர்க்கப் போராடியது. டெல்லி அணிக்கு தோல்வி நிச்சயம் என எல்லோரும் நினைத்த நேரத்தில் களமிறங்கிய கோஹ்லி, 90 ரன்களை அதிரடியாக விளாசித்தள்ள, டெல்லி அணியினால் ஃபாலோ-ஆனைத் தவிர்க்க முடிந்தது. இத்தனைக்கும் அன்றைக்கு முதல்நாள்தான் அவரது அப்பா இறந்து போயிருந்தார்.

வெற்றியைக் குவிக்கும் விராட் கோஹ்லி!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை வழிநடத்தி கோப்பையை வென்ற கோஹ்லி, இந்திய அணிக்குள் நுழைவது உறுதி என எல்லோரும் நினைத்த நேரத்தில், சீனியர் வீரர்களில் பலர் நல்ல ஃபார்மில் இருந்ததால், கோஹ்லிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும், ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணியில் அதிரடியாக ஆடி எல்லோரையும் கவனிக்க வைத்தார்.
ஒருநாள் போட்டிகளில் வேகமாக ரன் குவித்தாலும், வெளிநாட்டு தொடர்களில் மோசமாக ஆடியதால், அவர் இந்தியாவில் மட்டும் ஆடினால் போதும் என்று சிலர் சொல்ல ஆரம்பித்தார்கள். இதற்குப் பதிலடி தருகிறமாதிரி, ஆஸ்திரேலியாவில் 40 ஓவரில் 321 ரன்களை துரத்தி, 87 பந்தில் 133 ரன் குவித்தார்.

இந்தியாவின் அடுத்த சச்சின் என்று சொல்லப்படும் கோஹ்லி, தோனிக்குப்பின் இந்திய அணியை வழிநடத்துவார் என்கிறார்கள். ஏற்கெனவே பல தடைகளைத் தாண்டிவந்த கோஹ்லி, இனியும் பல சாதனைகளை நிச்சயம் செய்வார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு