Published:Updated:

எளிய மனிதர்களுக்கும் பேங்க் அக்கவுன்ட்:

எல்லா வங்கி அதிகாரிகளும் இவரைப்போல இருந்தால்..? எம்.புண்ணியமூர்த்தி படங்கள்: க.தனசேகரன்.

எளிய மனிதர்களுக்கும் பேங்க் அக்கவுன்ட்:

எல்லா வங்கி அதிகாரிகளும் இவரைப்போல இருந்தால்..? எம்.புண்ணியமூர்த்தி படங்கள்: க.தனசேகரன்.

Published:Updated:

“எல்லோரும் சம்பாதிக்கவே செய்கிறார்கள்... பேப்பர் போடுகிறவர்... செருப்பு தைக்கும் தொழிலாளி... தள்ளுவண்டி கடைக்காரர்கள், கூலி வேலைக்குச் செல்கிறவர்கள் என எல்லா தரப்பினரும் தினம் தினம் உழைத்துச் சம்பாதித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், இவர்களது வாழ்க்கை எல்லாம் எத்தனை வருடங்கள் ஆனாலும் மாறாமல் இருக்கிறதே ஏன்? கடன் வாங்காமல் இவர்களால் வாழ்க்கையை நடத்த முடியவில்லையே, ஏன்?’’ யதார்த்தமாக இந்தக் கேள்வியைக் கேட்டார் ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான ஜே.எஸ்.பார்த்திபன்.
 

இந்தக் கேள்விகளை அவர் நம்மிடம் கேட்கவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் அதிகாரியாகப் பணியில் சேரும்போது, தனக்குத்தானே கேட்டுக் கொண்டார். இந்தக் கேள்விதான் ஓய்வுபெறுவதற்குமுன் பல அடித்தட்டு மக்களிடம் வங்கி சேவையைப் பார்த்திபன் மூலம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.

ஆம், இன்றைக்குப் போனால்கூட உடனடியாக நீங்கள் ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கை துவங்கிவிட முடியாது, அது வேண்டும், இது வேண்டும் என்று அலைக்கழிப்பார்கள். ஆனால், முப்பது வருடங்களுக்கு முன்பே சேமிப்புக் கணக்கை பிச்சைக்காரர்கள் முதல் செருப்பு தைக்கிறவர் வரை பல ஆயிரக்கணக்கான ஏழை எளியவர்களுக்கு கொண்டுபோய் சேர்த்த பார்த்திபனின் வங்கிப் பயணம் ஒரு சுவாரஸ்யமான சாதனை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எளிய மனிதர்களுக்கும் பேங்க் அக்கவுன்ட்:

வங்கிப் பணியிலிருந்து பார்த்திபன் ஓய்வுபெற்றுவிட்டாலும், அவர் இன்னும் ஓயவில்லை. வெளிநாடுகளுக்குப் பறந்து கொண்டிருக்கிறார். காரணம், அவரது அரிய வங்கிப் பணியை ஆண்ட்ரூ ஹின்டன் என்பவர் Banking of change என்ற தலைப்பில் குறும்படமாக எடுத்து வெளியிட, அது இன்றைக்கு பல நாடுகளின் பல்கலைக்கழகங்கள், வங்கிகள், கல்லூரிகளில் பார்க்கப்படுகிறது. பார்த்து விட்டு,  அவரை அழைத்துச் சிறப்பிக்கிறார்கள்.

அனைவருக்கும் வங்கிச் சேவை என மத்திய அரசு செயல்பட்டுவரும் இந்த நேரத்தில் அவரைச் சந்திக்க முடிவெடுத்தோம். வங்கிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஒரு தொண்டு நிறுவனச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அவரை சேலத்தில் இருக்கிற அவரது வீட்டில் சந்தித்தோம்.

‘‘எனது அப்பா, அம்மா இரண்டு பேருமே ஆசிரியர்கள். அவர்கள் பணியில் ஒழுக்கமாக இருந்தவர்கள். அவர்களிடமிருந்துதான் நான் அந்த ஒழுக்கத்தைக் கற்றுக்கொண்டேன். நான் முதன்முதலில் வங்கியில் சேர்ந்தபோது இந்தப் பணியின் மூலம் மக்களுக்கு என்ன செய்ய முடியும்; அதுவும் அடித்தட்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்கிற கேள்விதான் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. டெல்லியில் வேலை பார்த்தபோது, சாலையோரத்தில் இருப்பவர்களைக் கவனிப்பேன். தினசரி அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் அவர்களைப் பார்த்துக்கொண்டே செல்வேன். அந்த மக்களுக்கு பொருளாதார ரீதியான வழிகாட்டுதல் இல்லை என்று அப்போது புரிந்துகொண்டேன்.
டெல்லியில் அதிகம் வேறு மாநிலத்தவர்கள் வேலை பார்ப்பார்கள். கடுமையாக உழைப்பார்கள். நன்றாகச் சம்பாதிப்பார்கள். ஆனால், அன்றாடச் செலவு, கஞ்சா, போதைப் பொருட்களுக்கே அவர்களின் வருமானம் செலவாகிவிடும். என்றாவது, ஒருநாள் ஊருக்குப் போகிறபோதுதான், கையில் காசில்லையே என்று  யோசிப்பார்கள். வட்டிக்குப் பணம் வாங்கிக்கொண்டு போவார்கள். திரும்ப வந்து வேலை பார்த்துச் சம்பாதிப்பதை எல்லாம் வாங்கிய கடனுக்கு வட்டியாகத் தருவார்கள்.

அதுபோன்ற தொழிலாளிகள் பணத்தைச் சேமிச்சு வச்சா, எவ்வளவு நல்லா இருக்கும்னு நினைத்து, அந்தப் பகுதியில் டீக்கடை வைத்திருந்த ஒருவரிடம், ‘‘ஏம்ப்பா, நீ சம்பாதிக்கிற பணத்தை பேங்க்ல போட்டு வச்சா, உனக்குத் தேவைப்படும்போது மொத்தமா எடுத்துக்கலாமே?’’னு கேட்டேன். அதற்கு அந்த டீக்கடைக்காரர், ‘‘அட போங்க, சார். எங்கள மாதிரியான ஆட்களுக்கெல்லாம் யாரு சார் பேங்க்ல அக்கவுன்ட் ஓப்பன் பண்ணி தர்றாங்க?’’னு கேட்டார். அப்பதான் எனக்கு தப்பு யார்மேல என்று தெரிந்தது.

இதுபோன்ற மக்களுக்கு வங்கிக் கடன் கிடைக்க வேண்டுமெனில், மாற்றத்தை நம்மகிட்ட இருந்துதான் கொண்டு வரணும் என்று முடிவு செய்து களத்தில் இறங்கினேன். உடனே எல்லார்கிட்டேயும் போய், ‘நான் பேங்க் மேனேஜர். நீ ஒரு அக்கவுன்ட் ஓப்பன் பண்ணு’னு நிற்க முடியாது. நம்மள ஃப்ராடுனு நினைச்சுடுவாங்கனு யோசிச்சு தினமும் ஒரே கடையில் டீ குடிப்பேன். ஒரே ஆள்கிட்ட ஷூ பாலிஷ் போடுவேன். அப்படியே அவங்ககிட்ட பேச்சு கொடுத்து, அந்த மக்களிடம் மொதல்ல நம்பிக்கை யானவனா மாறுனேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வங்கிச் சேவையைப் பத்தி எடுத்துச்சொல்லி, ‘எல்லோரும் லட்சாதிபதியாகலாம்’னு ஓர் அறிவிப்பு கொடுத்து, அதன் கீழ் ஒரேநேரத்தில் நானூறுக்கும் மேற்பட்ட எளிய மக்களுக்கு வங்கிக் கணக்கை ஆரம்பித்துக் கொடுத்தேன். அப்புறம் நாள் போகப்போக அது ஆயிரங்களைத் தாண்டுச்சி. அதன்பிறகு அவர்கள் பணம் சேர்க்க ஆரம்பித்தார்கள். நான் அந்த வங்கிக் கிளையைவிட்டு வேறு ஊருக்கு மாறுதலானபோது ஓர் அம்மா வந்து கண்கலங்கி நின்னுச்சி. என்னனு கேட்டா, எந்தக் கடனும் வாங்காம என் பொண்ணுக்கு நான் கல்யாணம் பண்ணிட்டேன். உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தேன்னு சொன்னார். அதைக் கேட்டு நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

எளிய மனிதர்களுக்கும் பேங்க் அக்கவுன்ட்:

அதேபோலத்தான் கடன் வழங்குகிற சங்கதிகளும். நான் தர்மபுரிக்கு மாற்றலாகி வந்தபோது நடந்த சம்பவம் ஒன்று. ‘‘ஏதோ ஒரு காரணத்தால் தனது உறவினரை கொலை செய்துட்டுத் தண்டனை பெற்று, விடுதலையான ஒருவர் என்னிடம் வங்கிக் கடன் கேட்டு வந்தார். ஊர் மக்கள் எல்லோரும் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தவன் என்று அவரை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். கடன் கொடுப்பதற்குத் தேவையான ஆவணங்கள் எல்லாம் சரியா வச்சிருந்தார். நிலம் சீரமைக்கிறது, குழாய்ப் பதிப்பது என படிப்படியா அவருக்கு கடன் கொடுத்தேன். அடுத்தடுத்து கரெக்ட்டா கடனைக் கட்டிக்கிட்டு, தொழிலையும் சிறப்பா செய்து ஊரில் வசதியானவரா மாறிட்டார். கடைசியில அந்த ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அவரைப் பால்வள சங்கத் தலைவரா தேர்ந்தெடுத்தாங்க.

அதுபோல இன்னொரு சம்பவம். ஒரு நாள் இரவு பாதை மாறி ஒரு கிராமத்துக்குள்ள போயிட்டேன். ஒரே முட்புதர்களா இருக்கு, இருட்டு வேற. பெண்கள் மட்டும் கும்பலா நிக்கிறாங்க. ஆம்பளைங்க யாரையும் காணல. என்னை போலீஸ்னு நினைச்சு பயந்தவர்களிடம் என்ன ஏதென்று விசாரித்தேன். அப்புறம்தான் தெரிந்தது, அந்த ஊரில் ஆண்களது தொழில் மறைமுகமா சாராயம் காய்ச்சும் வேலை என்று. அந்தப் பெண்கள் எல்லாம் அந்தத் தொழிலுக்குத் தேவையான முட்களை வெட்டிக்கொடுத்து வந்தார்கள்.  அந்த ஊரில் எந்த அடிப்படை வசதியுமே இல்லை. ஏம்மா இந்தத் தொழில் பண்றீங்க என்று அவர்களிடம் பேசினேன். வேறு ஏதாவது நல்ல தொழில் செய்தால் கவுரவமாக குடும்பத்தைக் காப்பாற்றலாமே என்று மனதை மாற்றினேன்.

நாங்க வேற என்ன சார் பண்றதுனு கேட்டவர்களிடம், நாளைக்கு வந்து என்னை பேங்க்ல பாருங்கம்மா என்று சொல்லிட்டு வந்துட்டேன், அதேபோல மறுநாள் வந்தவர்களிடம் உட்கார வைத்து பேசி, ‘நான் உங்க எல்லோருக்கும் தொழில் செய்ய கடன் தர்றேன். ஆனா, நீங்க இனிமேல் அந்தத் தொழிலை விட்டுடணும்னு புரியவச்சேன். அவர்களுக்கு கறவை மாடு வாங்க கடன் ஒதுக்கியதோடு, நானே முன்னின்று கறவை மாடுகள் வாங்கிக் கொடுத்தேன். அந்த ஊர் ஆண்களுக்கு நூல் மில்களில் வேலை வாங்கிக் கொடுத்தேன்.
நான் அந்த வங்கியில இருந்து மாற்றலாகும்போது, அந்தப் பெண்கள் ரூ.7 லட்சம் கடன் வாங்குற அளவுக்கு வளர்ந்திருந்தாங்க. அதை இப்ப நினைச்சாலும் எனக்கு நிம்மதியைத் தருது.

எனக்கு தர்மராஜன்,  ஆல்வின் டேவிட் என என் இரு அதிகாரிகளும் உறுதுணையாக இருந்தார்கள். மக்கள்தான் வங்கியைத் தேடி வரணும்னு இல்லை. வங்கியும் மக்களைத் தேடி போகலாம், வங்கி மக்களைத் தேடி போனாதான், அவர்களுடைய உண்மையான சூழலை அறிந்து உதவ முடியும் என்று அவர்கள்தான் என்னை ஊக்கப்படுத்தினார்கள்.

அப்படி நான் ஒன்றும் சாகசம் செய்துவிடவில்லை. என் பணி வங்கிக் கணக்கு ஆரம்பிச்சுத் தர்றது. அதைத்தான் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தேன். அதுவரைக்கும் அவங்க வழிதெரியாம இருந்திருக்காங்க. இன்றைக்கு மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபிறகு ஜன் தன் திட்டம் என அறிவித்து எளிய மக்களுக்கும் வங்கிச் சேவை என தொடங்கியுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வேலையை நான் முன்னேமே தொடங்கியுள்ளேன் என்கிற மனநிறைவு எனக்கு வருகிறது’’ என நெகிழ்ச்சியோடு பேசி தன் கதையைச் சொல்லி முடித்தார் பார்த்திபன்.

இன்றைக்கு இந்தியா முழுவதும் இருக்கிற வங்கி அதிகாரிகள்  பார்த்திபன் போல இருந்துவிட்டால், அனைவருக்கும் வங்கிச் சேவை என்பது நூறு சதவிகிதம் சாத்தியமே!

அதிகரிக்கும் மொபைல் இன்டர்நெட்!

இந்தியாவில் மொபைல் மூலம் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டின் இறுதிக்குள் 30.2 கோடியைத் தொடும் என இந்திய இணைய மற்றும் மொபைல் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது மொபைல் மூலம் அதிகமாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களைக் கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியா (27.8 கோடி பேர்) மூன்றாவதாக உள்ளது. முதல் இடத்தில் சீனா (60 கோடி பேர்), அமெரிக்கா (27.9 கோடி பேர்) இரண்டாவது இடத்தில் உள்ளது. நடப்பு ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் மொபைல் இணைய பயன்பாடு 32% வளரும் எனவும், 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் 35.4 கோடியாக இருக்கும் எனவும் ஐஏஎம்ஏஐ கணித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism