நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

யூலிப் பாலிசிகள்: கட்டாயம் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

இரா.ரூபாவதி படம்: தி.குமரகுருபரன்.

யூலிப் பாலிசிகள் என்றாலே இன்றைக்கும் பயந்து நடுங்கிறவர்கள் பலர். காரணம், 2007-ம் ஆண்டில் எக்கச்சக்கமான லாபம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் எல்லோரும் முதலீடு செய்ததுதான். ஆனால், இதில் உள்ள ரிஸ்க்கினைக் கொஞ்சம்கூட புரிந்துகொள்ளாமல் பணத்தைப் போட்டதன் விளைவு, சந்தை சரிந்த போது பலரும் கடுமையாக நஷ்டம் அடைந்தனர். அன்றைக்கு பலரது அனுபவம் நெகட்டிவாக அமைந்ததால், இப்போதுகூட யூலிப் இ்ன்ஷூரன்ஸ் பாலிசி  என்றாலே வேண்டாம் என்று சொல்லிவிடுகின்றனர்.

ஆனால், இன்றைக்கு பலரும் நினைக்கிற மாதிரி, யூலிப் பாலிசிகள் மோசமானவை அல்ல.  நீண்ட காலத்தில் நல்ல பலனைத் தரக்கூடியவை. ஆனால், அதிலுள்ள இன்ஷுரன்ஸ் என்கிற அம்சத்தை மறந்து விட்டு, முதலீட்டை மட்டுமே எல்லோருக்கும் எடுத்துச் சொன்னதால்தான், குறுகிய காலத்தில் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி யிருந்தது.

 தவிர, யூலிப் பாலிசிகள் குறுகிய காலத்தில் மிக அதிகமான லாபம் தரும் என்கிற தவறான வாக்குறுதியினால்தான் அதில் பணம் போட்டவர்கள் நஷ்டம் அடைந்தார்கள். இந்த நிகழ்வுக்குப் பிறகு, யூலிப் பாலிசிகள் குறித்து பல்வேறு புதிய விதிமுறைகளைக் கொன்டுவந்தது  இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான  ஐஆர்டிஏ. இதனால் யூலிப் பாலிசிகளை நடத்தும் நிறுவனங்களுக்கு  கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இப்போது  புதிய விதிமுறைகளுடன் யூலிப் பாலிசிகள் மீண்டும் எட்டிப்பார்க்கத் தொடங்கி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பங்குச் சந்தை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதால், புதிய புதிய யூலிப் பாலிசிகளை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த பாலிசிகளில் பணத்தைப் போடு வதற்குமுன் இதில் உள்ள கட்டணங்களை தெரிந்துகொண்டால், இந்த பாலிசிகளில் நாம் பணத்தைப் போடலாமா  என்பது குறித்து முடிவு செய்ய உதவியாக இருக்கும். யூலிப் பாலிசிகளில் உள்ள பல்வேறு கட்டணங்களைப் பற்றி சொல்கிறார் மை அசெட்கன்சாலிடேஷன் டாட்காமின் நிறுவனர் சுரேஷ் பார்த்தசாரதி. 

1பிரீமியம் ஒதுக்கீட்டுக் கட்டணம் (Premium allocation charge)

யூலிப் பாலிசியில் முதலீடு செய்யும்போது  ஒதுக்கீட்டுக் கட்டணம், உள்ளார்ந்த செலவு, விநியோகஸ்தர்களுக்கான கமிஷன்் ஆகியவைகளுக்கு கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும். இந்தக் கட்டணம் போக, மீதமுள்ள தொகை பாலிசிதாரரின் பெயரில் முதலீடு செய்யப்படும். ஐஆர்டிஏ பிரீமியம் ஒதுக்கீடு செய்வதற்கான கட்டணத்தை வரையறை செய்துள்ளது. அதாவது, 10-15 வருட பாலிசிகளுக்கு ஒருவகை யான கட்டணத்தையும், முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்பவும் இந்தக் கட்டணத்தை வரையறை செய்துள்ளது.

யூலிப் பாலிசிகள்:  கட்டாயம் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

2. பாலிசி பராமரிப்புக் கட்டணம் (Policy administration charge)

யூலிப் பாலிசிகள் நீண்ட காலத்துக்கானவை.   அவற்றைப் பராமரிக்க ஆகும் செலவையும் பிரீமியத்திலிருந்து  எடுத்துக்கொள்வார்கள். அதாவது, பாலிசியை விநியோகம் செய்வது,  தகவல்களைப் பரிமாறுவது, பிரீமியம் நோட்டீஸ் அனுப்புவது மற்றும் பணியாளர்களின் வேலை ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகளுக்கு இந்தக் கட்டணம் வசூலிப்பார்கள். இது வருடத்துக்கு 0.25 சதவிகிதமாக இருக்கும்.
இதை நேரடியாக பாலிசிதாரர்களிடம் இருந்து வசூலிப்பதில்லை. அதற்குப் பதிலாக 0.25 சதவிகிதத்துக்கு உண்டான யூனிட்களை இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்து, எடுத்துக்கொள்ளும்.

3. ஃபண்ட் நிர்வாகக் கட்டணம் (Fund management charge)

யூலிப் பாலிசியைப் பொறுத்தவரை, முதலீடு செய்யப்படும் தொகை, நேரடியாக பங்குச் சந்தை திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு அதன்மூலமாக வருமானம் ஈட்டப்படும். இந்த முதலீடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த முடிவு பாலிசிதாரரின் விருப்பத்தின் அடிப்படையில் இருக்கும். அதாவது, முதலீடு செய்யும் தொகை முழுவதும் ரிஸ்க் அதிகம் உள்ள திட்டங்களிலா அல்லது ரிஸ்க் இல்லாத திட்டங்களிலா என்பதை பாலிசிதாரர் தனது விருப்பத்தின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளலாம். 

முதலீடுகளை கவனிப்பதற்கு ஃபண்ட் மேனேஜர்கள் இருப்பார்கள். இதற்கான கட்டணம் முதலீட்டிலிருந்து எடுக்கப்படும். அதாவது, ஈக்விட்டி சார்ந்த திட்டங்களுக்கு 1.35 சதவிகித கட்டணம் இருக்கும். கடன் சார்ந்த திட்டங்களுக்கு இதைவிட குறைவான அளவு கட்டணம் இருக்கும்.

யூலிப் பாலிசிகள்:  கட்டாயம் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

4. இறப்பு கவரேஜ் கட்டணம் (Mortality charges)

யூலிப் பாலிசிகள் முதலீட்டுடன் கூடிய  இன்ஷூரன்ஸ் பாலிசிகள் ஆகும். இதில் முதலீடு செய்தவர் பாலிசிக் காலத்தில் இறந்துவிட்டால், குறிப்பிட்ட அளவு தொகை பாலிசிதாரர்களுக்கு  கவரேஜாகக் கிடைக்கும். இதற்கும் பிரீமியமாக குறிப்பிட்ட அளவு தொகை வசூலிக்கப்படும். இந்தத் தொகையின் அளவு பாலிசிதாரரின் வயதின் அடிப்படையில் இருக்கும். அதாவது, 30 வயதுடைய பாலிசிதாரருக்கும்,
40 வயதுடைய பாலிசிதாரருக்கும் இந்தத் தொகை வித்தியாசப்படும்.
 
5. சரண்டர் மற்றும் இடையில் நிறுத்துவதற்கான கட்டணம் (Surrender charges or discontinuance charge)

பாலிசி எடுத்தபின் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சரண்டர் அல்லது இடையில் நிறுத்துவதாக இருந்தால்,  அதற்கும் கட்டணம் இருக்கிறது.  இந்தக் கட்டணம் பாலிசியின் கவரேஜ் தொகையில் 10-15 சதவிகிதமாக இருக்கும்.

மேலும், குறிப்பிட்ட அளவு தொகை அல்லது பிரீமியம் செலுத்திய தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம், இதில் எது குறைவான தொகையோ அது  கட்டணமாக இருக்கும். இந்த கட்டணம் அதிகபட்சமாக ரூ. 6 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.

யூலிப் பாலிசிகள்:  கட்டாயம் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

இதற்குமுன் இருந்த பாலிசியில் இந்தத் தொகை லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் விருப்பத்துக்கு ஏற்ப வைத்திருந்தார்கள். ஆனால், தற்போது ஐஆர்டிஏ இதனை நெறிமுறைப்படுத்தி இருக்கிறது. அதாவது, முதலீடு செய்துள்ள தொகை மற்றும் பாலிசிக்காக பிரீமியம் செலுத்திய ஆண்டுகளின் அடிப்படையில் இந்தக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என ஐஆர்டிஏ கூறியுள்ளது.

6. பிரீமியம் மாற்றி அமைப்பதற்கான கட்டணம் (Premium Redirection Charges)

யூலிப் பாலிசிகளில் இனிவரும் காலத்தில் முதலீடு செய்யப்படும் தொகையை மாற்றி அமைப்பதற்கு கட்டணம் உண்டு. இது ஆண்டுக்கு 250 ரூபாய் ஆகும். இதுவே, ஆன்லைனில் செய்யும் மாற்றத்துக்கு ரூ.25 - 50 வரை கட்டணம் இருக்கும்.

7. இதர கட்டணங்கள் (Miscellaneous Charge)

பாலிசிதாரர்கள் பாலிசி காலத்தில் முகவரி மாற்றம், மெயில் முகவரி மாற்றம் அல்லது பாலிசி பத்திரத்தில் பாலிசிதாரரின் பெயர், பிறந்த தேதி, நாமினி போன்றவற்றில் மாற்றம் செய்யும்போது கட்டணம் இருக்கும். பிரீமியம் செலுத்தும் தொகைக்கு ஏற்ப இந்தக் கட்டணம் 250 முதல் 500 ரூபாய் வரை இருக்கும்.

8. சுவிட்ச் ஆஃப்ஷன் (Switch option)

பாலிசிதாரர்கள் யூலிப் பாலிசியில் ஏற்கெனவே முதலீடு செய்யப்பட்ட தொகையை  பாலிசிதாரரின் விருப்பத்துக்கேற்ப  மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். அதாவது, பாலிசி எடுக்கும்போது ஈக்விட்டி சார்ந்த திட்டங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். ஆனால், அந்தத் திட்டங்கள் நீங்கள் எதிர்பார்த்ததுபோல செயல்படவில்லை எனில், முதலீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க முடியும். ஆனால், இதற்கு கட்டணம் உண்டு. ஓர் ஆண்டில் நான்கு முதல் ஆறு முறை கட்டணம் இல்லாமல், மாற்றி அமைக்கலாம்.  அதற்கு மேல்ஆண்டுக்கு 250 ரூபாய் கட்டணம் இருக்கும். இதை ஆன்லைனில் செய்யும்போது ரூ.25-50 வரைதான் கட்டணம் இருக்கும்.

9. விபத்துக் காப்பீடு (Accident Benefit)

யூலிப் பாலிசியிலும் விபத்துக்கான கவரேஜ் உள்ளது. இதை ரைடராக வாங்க முடியும். இதற்கு பாலிசிதாரரின் வயதின் அடிப்படையில் பிரீமியம் இருக்கும்.

10. வரிச் சலுகை (Tax Benefit)

யூலிப் பாலிசிகளுக்கு பிரீமியமாகச் செலுத்தும் தொகைக்கு வருமான வரிப் பிரிவு 80சி-ன் கீழ் வரிச் சலுகை பெற முடியும். அதேநேரத்தில், இந்த முதலீட்டின் மூலமாகக் கிடைக்கும் வருமானத்துக்கு வருமான வரிப் பிரிவு 10 (10டி) கீழ் வரிச் சலுகை பெற முடியும்.