நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

கத்தியின் மறுபக்கம்

எஸ்.எல்.வி.மூர்த்தி

அண்மையில் கத்தி சினிமா பார்த்தேன். படம் எனக்குப் பிடித்திருந்தது.  விவசாயத்தின் ஜீவநாடியான நீர்நிலைகளை அபகரிக்கும் கோலா கம்பெனிக்கு எதிராகப் போராடும் ஹீரோவின் கதை. விஜய் என்னும் ஹீரோவின் போராட்டம் எடுபட வேண்டுமானால், வில்லனான கோலா கம்பெனியின் அக்கிரமங்களை மிகைப்படுத்த வேண்டும். இதை நன்றாகவே செய்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ்.  ஆனால், உணர்ச்சி வேகத்தினாலோ அல்லது கமர்ஷியல் காரணங்களினாலோ,  ஒட்டுமொத்த பிசினஸ் உலகத்தையே மக்கள் விரோத சக்திகளாக காட்டிவிட்டார். மக்களிடம் கைதட்டல் பெறுவதற்காக அவர் இதை செய்திருக்கலாம். ஆனால், இதுவே உண்மை அல்ல என்று மக்களுக்கு தெரியுமோ இல்லையோ, முருகதாஸுக்கு நன்றாகவே தெரியும்.

மக்களின் நீர்நிலைகளைச் சுரண்டும் கோலா கம்பெனிகள், ஆறுகளை சாக்கடைகளாக்கும் சாயப்   பட்டறைகள், மணல் கொள்ளைக்காரர்கள், நிலக்கரி வளங்களைச் சூறையாடும் தொழில் அதிபர்கள், 2ஜி ஒலிக்கற்றைத் திருடர்கள், குழந்தைகள், முதியோர் உணவான பாலில் கலப்படம் செய்யும் மனித மிருகங்கள், உயிர் காக்கும் மருந்துகளில் போலிகள் தயாரிக்கும் பணவெறி ஓநாய்கள் – வகை வகையான அயோக்கிய பிசினஸ்மேன்கள் நம் நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கவே செய்கிறார்கள். எல்லா துறைகளிலும் சுயநலமிகள் இருப்பதுபோலவே, பிசினஸிலும், இத்தகைய அயோக்கியர்கள் மிகச் சிலர் உள்ளனர். இந்த ஒருசில நயவஞ்சகர்களுக்காக, பல நல்லவர் களுக்கும் குற்றவாளிப் பட்டம்  கொடுக்கலாமா?

கத்தியின் மறுபக்கம்

டாடா, பிர்லா, பஜாஜ், முருகப்பா, டிவிஎஸ் குழுமங்கள், அண்ணாமலை செட்டியார், அழகப்பச் செட்டியார், கருமுத்து தியாகராஜ செட்டியார் ஆகியோர் சீரமைத்த கோயில்கள், உருவாக்கிய பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள், ஆஸ்பத்திரிகள் ஆகியவை வறுமையில் வாடிய லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் நம்பிக்கை தீபம் ஏற்றிவைத்திருப்பதை முருகதாஸ் உள்பட யாரும் மறுக்க முடியாது.

உலகம் முழுக்க உள்ள கண்ணியம் மிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் பல, பல்வேறு சமுதாயப் பணிகளை விடாமல் செய்து கொண்டிருக்க, அவையெல்லாம் வெறும் நாடகம் என்று எப்படி சொல்ல முடியும்? கார்ப்பரேட் நிறுவனங்களின் சமுதாயப் பொறுப்புணர்ச்சி வெளிவேஷமா அல்லது நிஜமா என்று கண்டுபிடிக்க ஏழு அளவுகோல்கள் இருக்கின்றன. அவை:

1. தங்கள் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் தரும் ஊதியம், பென்ஷன், வேலை பார்க்கும் இடத்தின் சூழல், நடத்தும் முறை, திறமைகளைப் பட்டைதீட்ட தரும் பயிற்சி வசதிகள், ஊழியருக்கும் அவர் குடும்பத்துக்கும் தரும் மருத்துவ, கல்வி உதவிகள்.

2. கம்பெனிக்குப் பொருட்களும், பிற சேவைகளும் தரும் சப்ளையர்களை நடத்தும் முறை.

3. கம்பெனியின் தயாரிப்பு / சேவைகளை வாங்கும் கஸ்டமர்களிடம் நடந்துகொள்ளும் விதம்.

4. கம்பெனி தயாரிப்பு / சேவை கஸ்டமர்களின் தேவைகளை பூர்த்திசெய்வதையும் தாண்டி, அவர்களுக்கு சுக அனுபவமாக இருக்க வேண்டும் என்று காட்டும் அக்கறை.

கத்தியின் மறுபக்கம்

5. தங்கள் தொழில் நடவடிக்கைகளால், இயற்கைச் சூழல் மேம்பட வேண்டுமேயல்லாது, கொஞ்சமும் சீர்கெட்டுவிடக்கூடாது என்னும் உறுதி.
6. தங்கள் சமுதாய நல முயற்சிகள் கம்பெனியின் ஊழியர்கள், சப்ளையர்கள், கஸ்டமர்கள் என்னும் குறுகிய வளையங்களைத் தாண்டி, மனித சமுதாயத்துக்கே பயன்பட வேண்டும் என்று நினைக்கும் பரந்த மனம்.

7. பணத்தைச் செலவிடுவது சுலபம். பள்ளத்தில் வீழ்ந்தவரை கைதூக்கிவிடுவதை வெறும் தொழில்ரீதியான கடமையாக நினைக்காமல், மனப்பூர்வமாக, உணர்வுப்பூர்வமாக கம்பெனியின் தலைவர், முக்கிய அதிகாரிகள் ஆகியோர் சமுதாயப் பணிக்காக தங்கள் நேரத்தைச் செலவிடுதல்.

உங்களுக்குத் தெரிந்த கம்பெனிகளை, பிசினஸ்மேன்களை இந்த ஏழு உரைகல்களிலும் சோதித்துப் பாருங்கள். ஏராளமான நிறுவனங்கள் இந்தச் சோதனையில் ஜெயிப்பார்கள்.

அதிலும் குறிப்பாக, நூறாண்டுகள் தாண்டிய பிரிட்டானியா, கோத்ரெஜ், ஐடிசி, டாடா, பிர்லா, விப்ரோ, முருகப்பா, டிவிஎஸ் ஆகியோர் முன்னணி யில் இருப்பார்கள். ஏன் தெரியுமா? அவர்களின் தொடர் வெற்றியின் முக்கிய ரகசியம், சத்தியமான சமுதாயப் பொறுப்புணர்ச்சிதான்!
மேலே சொன்ன ஏழு அளவுகோல்களில், முதல் நான்கு அளவுகோல்களிலும், பிசினஸை வளர்க்கும் சுயநல நோக்கம் இருக்கலாம். ஏனென்றால், ஊழியர்கள், சப்ளையர்கள், கஸ்டமர்கள், தயாரிப்புப் பொருட்கள் ஆகிய அம்சங்களின் ஒருங்கிணைப்பு இல்லாமல், எந்தப் பிசினஸும் தலையெடுக்கவே முடியாது.

ஐந்தாவதாக வரும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி நிறுவனங் கள் கவலையே படாமல் இருந்த நாட்கள் மலையேறி வருகின்றன. மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் கடும் நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியிருக்கின்றன. பொதுநல ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்து கிறார்கள். நீதிமன்றங்களும் அதிக அக்கறை காட்டுகின்றன.  ஆகவே, விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கம்பெனிகள் ஐந்தாம் அளவுகோலை பின்பற்றியே ஆகவேண்டும்.

ஆகவே, ஒரு கம்பெனி சமுதாய நலனில் நிஜமாகவே அக்கறைகொண்டிருக்கிறதா, இல்லையா என்பதை ஆறாம், ஏழாம் அளவுகோல்களால் மட்டுமே, பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும்.

நிஜ அக்கறை கொண்டவர்கள் விளம்பர வெளிச்சத்தைத் தவிர்ப்பதால், இந்த இரண்டு அளவுகோல்களின் முக்கியத்துவத்தை நம்மில் ஏராளமானோர் இன்னும் அறிந்துகொள்ளவில்லை. முன்னோடியான இத்தகைய சில கார்ப்பரேட் அனுபவங்களை நீங்கள் தெரிந்துகொண்டால்தான், கார்ப்பரேட் நிறுவனங்களின் இன்னொரு முகம் உங்களுக்குத் தெரியும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 1964ம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. பெட்ரோலியப் பொருள் தயாரிப்பைப்போலவே, தொழிற்சாலைகளின் அருகே வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஆகிய இரண்டும் தன் முக்கிய லட்சியங்கள் என்று இந்தியன் ஆயில் அறிவித்தது. வார்த்தைகள் செயல்களாயின.

கத்தியின் மறுபக்கம்

அசாம் மாநிலத்தில், தொழிற்சாலைகளை அடுத்தப் பகுதிகளில், சுத்தமான குடிநீர், கழிவறை, சாக்கடை வசதிகள், மருத்துவமனைகள் ஆகிய வசதிகளுக்கான மொத்தச் செலவுகளையும் இந்தியன் ஆயில் ஏற்றுக்கொண்டதோடு  திட்டங்களை நிறைவேற்றுவதிலும் கரம் கொடுத்தது.
இந்த கிராமங்களில்  மக்கள் குடிநீருக்காக  பல கிலோ மீட்டர் நடந்து, தலையில் பானை சுமக்கும் திண்டாட்டத்தைப் போக்க  இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் போர்வெல்கள் தோண்டி் ஓவர்ஹெட் டேங்குகள் கட்டித் தந்தனர். குடிநீர் குழாய்களில் தண்ணீர் கொட்டியது. கிராமப் பெண்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரும்தான்!

அந்தக் கிராமங்களில் ஒருவர் வீட்டிலும் கழிவறைகள் இல்லை. ஆண்களும், பெண்களும், பொது இடங்களில் காலைக்கடன்களை முடிக்கும் அவலம். இந்தியன் ஆயில் நிறுவனம், முதலில் பொதுக் கழிவிடங்கள் கட்டித் தந்தது.  அடுத்து, வீடுகளுக்கு தனிக் கழிவிடங்கள் கட்டிக்கொள்ள உதவியது. சுகாதார வசதிகள் பெருகின. நோய்கள் பரவுவது கணிசமாகக் குறைந்தது.

அடுத்தகட்டமாக, மருத்துவர்களை இந்தக் கிராமங்களுக்கு அழைத்து வந்தது இந்தியன் ஆயில் நிறுவனம். முகாம்கள் நடத்தி, இலவச மருந்துகளும், சிகிச்சைகளும் தந்தது. குடும்பக் கட்டுப்பாடு, எய்ட்ஸ் ஆகியவைப் பற்றி விளக்கியது. குழந்தை களுக்கு டிப்தீரியா, டெட்டானஸ், கக்குவான் இருமல் ஆகிய தடுப்பு ஊசிகள் போட ஏற்பாடு செய்தது. போலியோ சொட்டு மருந்து தந்து, எல்லா குழந்தை களையும் முடமாகிப் போவதிலிருந்து காத்தது. சுத்தம் சுகாதாரம் தரும் என்னும் அடிப்படை உண்மையைக் கற்றுத்தந்தது.

இறுதியாக, இந்தப் பகுதிகளில் நவீன வசதிகளும், மருத்துவ நிபுணர்களைக் கொண்ட மருத்துவமனைகளும் வந்தன. இவை ஒன்றுமே இந்தியன் ஆயில் நிறுவனத்தின் லாபத்தை ஒரு பைசாகூட அதிகமாக்காதே? பிறகு ஏன் இத்தனை பணத்தையும், முக்கிய அதிகாரிகளின் பொன்னான நேரத்தையும் செலவிட்டது இந்தியன் ஆயில் நிறுவனம்? அதுதான் அந்த நிறுவனத்தின் சமுதாயப் பொறுப்புணர்ச்சி!

டிவிஎஸ் மோட்டார்ஸ், சுந்தரம் க்ளேய்ட்டன் ஆகிய நிறுவனங்களின் தலைவர் வேணு ஸ்ரீநிவாசனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால், அவருக்கு இருக்கும் இன்னொரு முகம் சிலருக்கே தெரியும்.  ஸ்ரீநிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் என்னும் சேவை அமைப்பு நடத்துகிறார். வறுமையில் வாடும் கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கே, சுகாதார வசதிகளை மேம்படுத்துகிறார், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கிறார், மருத்துவ வசதிகள் தருகிறார். சுய உதவிக் குழுக்கள் மூலமாக தொழிற்பயிற்சி தருகிறார். சிறு தொழில்கள் தொடங்கவும், நடத்தவும் உதவுகிறார்.கல்விச்சாலைகள் அமைக்கிறார். திறமைசாலிகள் தொடர்ந்து படிக்க நிதி உதவி தருகிறார். தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய நான்கு தென்னக மாநிலங்களிலும், இதுவரை, 2,501 கிராமங்களில், 3,49,506 குடும்பங்களில் வேணு ஸ்ரீநிவாசன் மகிழ்ச்சி மலரவைத்திருக்கிறார்.

இது போதாது எனில், இன்னும் இரண்டு அனுபவங்களைச் சொல்கிறேன்.

கத்தியின் மறுபக்கம்

பஸ்கள், லாரிகள், என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சேர்மன் சாண்டில்யா. உலக மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர். பல முன்னணி நிறுவனங்களில் இயக்குநர். இத்தனைக்கும் நடுவில், SOS Children’s Villages என்னும் பன்னாட்டு சேவை நிறுவனத்தின் இந்தியத் தலைவராக இருக்கிறார். அனாதைக் குழந்தைகளுக்குப் புகலிடம், கல்வி வசதி அத்தனையும் தந்து அவர்களை நல்ல குடிமகன்களாக்கும் இந்த அமைப்பால் புதுவாழ்வு பெறும் குழந்தைகள் பல்லாயிரம். SOS Children’s Villages–க்காக சாண்டில்யா கணிசமான நேரம் செலவிடுகிறார்.

சென்னையில் இருக்கும் பிரபல, கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் மெட்ராஸ் இன்ஜினீயரிங் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியை நிறுவியவர் பார்த்தசாரதி. அண்மையில் அமரரான இவருடைய மனைவி ராதா பார்த்தசாரதி, யோகக்ஷேமா டிரஸ்ட் என்னும் சேவை நிறுவனம் நடத்தி வருகிறார். திருத்தணி அருகே இருக்கும் தண்டலம் கிராமத்தை இந்த டிரஸ்ட் தத்து எடுத்திருக்கிறது. ஊர்க்கோயில் புனரமைப்பு, பராமரிப்பு, 260 கழிவறைகள் என ஏராள முன்னேற்றங்கள். கிராமப் பெண்களுக்கு மசாலாப் பொடிகள், பேப்பர் பைகள், கம்போஸ்ட் உரம் தயாரிப்பு ஆகியவற்றில் பயிற்சி கொடுத்து அவர்களைச் சொந்தக் கால்களில் நிற்கவைத்திருக்கிறார். ராதா பார்த்தசாரதியின் அர்ப்பணிப்பு தண்டலம் மக்களின் தலையெழுத்தையே மாற்றியிருக்கிறது.

இந்தியன் ஆயில், டிவிஎஸ், சாண்டில்யா, திருமதி ராதா பார்த்தசாரதி போன்றவர் களின் முயற்சிகள் இன்று சிறுதுளிகளாக இருக்கலாம். ஆனால், வெகு சீக்கிரமே இவை பெரு வெள்ளமாகும். ஏன் தெரியுமா? இந்திய அரசாங்கம் ஆகஸ்ட் 2013–ல் கார்ப்பரேட் சோஷியல் பொறுப்புணர்ச்சி (Corporate Social Responsibility) சட்டம் நிறைவேற்றியதுதான்.

இந்தச் சட்டத்தின்படி, 500 கோடிக்கு மேல் சந்தை மதிப்போ, 1,000 கோடிக்கு மேல் வருட விற்பனையோ, 5 கோடிக்கு மேல் வருட லாபமோ கொண்ட எல்லா கம்பெனிகளும், தங்கள் லாபத்தில் இரண்டு சதவிகிதத்தை சமுதாயநலப் பணி களுக்காக செலவு செய்தாக வேண்டும். இதனால், 12,000 கம்பெனிகள் ஆண்டுக்கு சுமார் 5,000 கோடி ரூபாய் மக்கள் நலப் பணிகளுக்குச் செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் 5,000 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும் எனில், அடுத்த பத்து ஆண்டுகளில் 50,000 கோடி ரூபாய் மக்களுக்கு கிடைக்குமே!

இதன் மூலம் பல புதிய மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் உருவாகுமே!

சமூகப் பொறுப்புணர்ச்சி ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி கார்ப்பரேட் நிறுவனங்களும் அதிக சமூகப் பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தின் மூலம் சமூக பொறுப்புணர்ச்சி அனைவரிடமும்  தழைத்தோங்கும்  என்று எதிர்பார்ப்போம்.