நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

பெற்றோர்களுக்கு டெஸ்ட் : பிள்ளைகள் ஃபைனான்ஷியல் கில்லாடிகளா?

படங்கள்: தே.தீட்ஷித், இரா.யோகேஷ்வரன், ச.ஹர்ஷினி.ஆர்.ராதாகிருஷ்ணன், நிதி ஆலோசகர்

ஆரம்பத்தில் இருந்தே பணம் பற்றிய விஷயங்களையும், குடும்பத்தின் பொருளாதார நிலைமைகளையும் சொல்லிச் சொல்லி என் பிள்ளையை வளர்த்ததால்தான், இன்று அவன் தனது குடும்பத்தைச் சிறப்பாக வழிநடத்துகிறான் என்று பல பெற்றோர்கள் சொல்ல கேட்டிருப்போம். சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையும் குழந்தைகள் குடும்பச் சூழ்நிலைகளிலிருந்துதான் நிதி சார்ந்த அறிவைப் பெறுகிறார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளது.ஆனால், இன்றைய பிஸியான உலகத்தில் பல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்களைச் சொல்லித்தருகிறார்களா என்றால், சந்தேகம்தான். முக்கியமாக, நிதி சார்ந்த அறிவை குழந்தைகளுக்கு எத்தனை பெற்றோர்கள் சொல்லித்தருகிறார்கள் என்று நாம் அனைவரும் யோசிக்கத்தான் வேண்டும்.

பெற்றோர்களுக்கான டெஸ்ட்!

சரி, இதுவரை நீங்கள் தங்களின் பிள்ளைகளுக்கு நிதி சார்ந்த விவரங்களைக் கொடுத்திருந்தாலும், கொடுக்காவிட்டாலும் கவலை வேண்டாம். ஆனால் இனி அதைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதற்குமுன்பாக, இன்றைய நிலையில் நீங்கள் உங்களின் குழந்தைகள் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு கீழே தரப்பட்டுள்ள பத்து கேள்விகளுக்கும் நீங்கள் பதிலை தேர்வு செய்வது அவசியம். 

பெற்றோர்களுக்கு டெஸ்ட் : பிள்ளைகள் ஃபைனான்ஷியல் கில்லாடிகளா?

1.நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பாக்கெட் மணி கொடுக்கும் பழக்கம் உள்ளவரா?

ஆம் 
எப்போதாவது 
இல்லை

2. ஆம் எனில், அந்த பாக்கெட் மணியை உங்கள் குழந்தை என்ன செய்யும்?
 
வாங்கிக் கொடுத்திருக்கும் உண்டியலில் சேர்ப்பார்கள்.
பள்ளிப் புத்தகப் பையில் வைப்பார்கள்.
அதை அப்போதே செலவு செய்துவிடுவார்கள்.

பெற்றோர்களுக்கு டெஸ்ட் : பிள்ளைகள் ஃபைனான்ஷியல் கில்லாடிகளா?

3. கொடுத்த பாக்கெட் மணியை என்ன செய்தாய், செலவு செய்திருந்தால் எதற்காக என்று குழந்தைகளிடம் விசாரிப்பீர்களா?

ஆம் 
எப்போதாவது 
இல்லை

4.நீங்கள் கொடுக்கும் பாக்கெட் மணியை உண்டியலில் குழந்தைகள் சேமிக்கும்போது..?

சைக்கிள் வாங்க, புத்தகங்கள் வாங்க என்கிற குறிக்கோளுடன் சேமிப்பார்கள்
சேமிக்க வேண்டும் என்பதற்காகச் சேமிப்பார்களே தவிர, குறிக்கோள் இருக்காது.
பொழுதுபோக்கு அம்சங்களுக்காகச் சேமிப்பார்கள்.

5.கடைகளுக்குச் செல்லும்முன், குறிப்பாக உடை, பொம்மை முதலியன வாங்குவதற்கு பட்ஜெட் தீர்மானித்து, குடும்பத்தில் அனைவருக்கும் குழந்தைகள் உட்பட அறியும் வண்ணம் தெரிவிப்பீர்களா?

அனைவரையும் அறியவைப்பேன்.
நான் திட்டமிடுவது உண்டு; மற்றவர்களிடம் சொல்வதில்லை.
நான் பட்ஜெட் எதுவும் போடுவதில்லை.

பெற்றோர்களுக்கு டெஸ்ட் : பிள்ளைகள் ஃபைனான்ஷியல் கில்லாடிகளா?

6கடைகளில் பொருட்களை வாங்கும்போது, நீங்கள் விலைப் பட்டியலை பார்ப்பீர்களா? நீங்கள் விலையைப் பார்ப்பதை குழந்தைகள் அறியும்படி செய்வீர்களா?

பெற்றோர்களுக்கு டெஸ்ட் : பிள்ளைகள் ஃபைனான்ஷியல் கில்லாடிகளா?

விலை விவரங்களை குழந்தைகள் அறியும்படி செய்வேன்.
நான் மட்டும் கவனிப்பேன்.
விலை பற்றி கவனிப்பதில்லை.

7கடைகளில் பொருட்களை வாங்கியபின் அல்லது ஹோட்டலில் சாப்பிட்டபின் தரப்படும் பில்லை குழந்தைகளிடம் தந்து சரிபார்க்க வைப்பீர்களா?

ஆம் 
எப்போதாவது 
இல்லை

8. நீங்கள் உங்கள் குடும்பத்துக்கு அல்லது குழந்தைக்கு ஏதேனும் பரிசு பொருட்களை வாங்கித் தரும்போது, உங்கள் குழந்தையின் உடனடி கருத்து என்ன?

 இதற்கு ஏன் இவ்வளவு செலவு செய்தீர்கள்; இவ்வளவு விலையில் அவசியமில்லையே என்பார்கள்.
 இது நன்றாக உள்ளது என்பார்கள்.
 பரிசுப்பொருள், விலை இரண்டையும் கவனிக்காமல், பெற்றுக்கொண்டு சும்மா இருப்பார்கள்.

9.பணத்தை அடிக்கடி தொலைக்கும் பழக்கம் உங்களின் குழந்தைக்கு உள்ளதா?
 
இல்லை
எப்போதாவது தொலைப்பார்கள்.
ஆம்

10அவசியம் என்கிறபோது தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து, பிறருக்கு உதவும் பழக்கம் உங்கள் பிள்ளைகளிடம் இருக்கிறதா?
 
ஆம்.
பலமுறை யோசித்துவிட்டு அதன்பிறகு செய்வார்கள்.
செய்யாது.

பத்து கேள்விகளுக்கும் பதிலைத் தேர்வு செய்துவிட்டீர்களா? பதில் A-க்கு 3,   B-க்கு 2், C-க்கு 1 மதிப்பெண் எனில், நீங்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களைக் கொண்டு் நீங்கள் எப்படிப்பட்டவர் என பார்ப்போம்.

பெற்றோர்களுக்கு டெஸ்ட் : பிள்ளைகள் ஃபைனான்ஷியல் கில்லாடிகளா?

26-30 மார்க் நீங்கள் உங்கள் நிதி சம்பந்தப்பட்ட விவரங்களில் சரியான அணுகுமுறையைக் கையாள்வது மட்டுமல்லாது, உங்கள் குழந்தைகளையும் சரியான வழியில் நடத்திச் செல்கிறீர்கள் என்று அர்த்தம். அந்தக் குழந்தைகளுக்கு  சேமிப்புக் குறித்த பயன்களை விளக்கி, வங்கியில் குழந்தை பெயரிலேயே சேமிப்புக் கணக்கைத் ஏற்படுத்திக் கொடுங்கள். தொடரட்டும் உங்களின் சரியான அணுகுமுறை.

16-25 மார்க் நீங்கள் நிதி பற்றிய அறிவு, செயல்பாடு குறித்த சரியான கருத்தை கொண்டு உள்ளீர்கள். ஆனால், அதைச் செயல்படுத்துவதில் மற்றும் குழந்தைகளிடம் பகிர்வதில் சில நேரங்களில் தவறுகிறீர்கள். இது இப்படியே தொடர்ந்தால் உங்களுக்கும், உங்களின் குழந்தைக்கும் நல்லதல்ல. அதனால் உங்கள் அறிவை, செயல்பாட்டை, குழந்தையுடன் பகிர்ந்து, அவர்களுக்குத் தொடர்ந்து அனுபவத்தை வழங்குங்கள்.

0-15 மார்க் முதலில் உங்கள் நிதி சார்ந்த செயல்பாடும் அணுகுமுறையும் சரியாக வேண்டும். அதன்பிறகு அதை குழந்தைகளுடன் பகிர்தல் அவசியம். நம் குழந்தைகள் எல்லாவற்றையும் நம்மிடமிருந்துதான் கற்கிறார்கள். நமது அணுகுமுறையே தவறானதாக இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கும் சரியான நிதி சார்ந்த அறிவை புகட்ட முடியாது. இதனால் குழந்தைக்கு பணம் பற்றிய புரிதல் இல்லாமல் போவதோடு, அதிக செலவு செய்யும் பழக்கமும் உருவாகலாம். மிகுந்த கவனம் தேவை. 

பெற்றோர்களுக்கு டெஸ்ட் : பிள்ளைகள் ஃபைனான்ஷியல் கில்லாடிகளா?

பெற்றோர்களின் பங்கு அதிகம்!

இன்றைய குழந்தைகளுக்கு நிதி சார்ந்த அறிவு, அணுகுமுறை மற்றும் நிதி சார்ந்த நடத்தை முதலியவற்றை கற்றுத்தருவதில் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்களுக்கு குடும்பத்தைத் தவிர வேறு இடங்களில் நிதி சார்ந்த அறிவுகள் கிடைக்க வாய்ப்பு குறைவு. பெற்றோர்கள் குழந்தைகளுடன் நிதி மட்டுமல்லாது வாழ்வுக்குத் தேவையான விவரங்களைத் தொடர்ந்து பேசுவது, விவாதிப்பது அவர்கள்  தங்கள் எதிர்காலத்தை  நம்பிக்கையுடனும், தைரியமாகவும் எதிர்கொள்ள உதவும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.
 

பெற்றோர்களுக்கு டெஸ்ட் : பிள்ளைகள் ஃபைனான்ஷியல் கில்லாடிகளா?

அவசியம் தேவை, பாக்கெட் மணி!

பொதுவாக இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எதுக்கு பாக்கெட் மணி என்று யோசிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. எந்த வயதில் இருந்து கொடுக்கலாம், எவ்வளவு கொடுக்கலாம் என்பதெல்லாம் பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் நலன் கருதி, அவர்களின் தேவை அறிந்து முடிவெடுக்கலாமே தவிர, பாக்கெட் மணி கொடுக்கத் தேவையில்லை என்கிற முடிவை மட்டும் எடுத்துவிடக் கூடாது.இப்படி தவறான புரிதலுடன் இருக்கும் பெற்றோர்கள் பாக்கெட் மணி கொடுப்பதன் மூலம்தான், குழந்தைகளுக்கு நிதி சார்ந்த அறிவை அனுபவப்பூர்வமாக உணர்த்த முடியும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
 
விவரங்களைக் கேட்க வேண்டும்!

பிள்ளைகளுக்கு பாக்கெட் மணி கொடுத்துவிட்டு சும்மா இருப்பதால் பயனில்லை. பணத்தை என்ன செய்தார்கள் என்கிற விவரங்களைக் கேட்டறிய வேண்டும். அப்போது அவர்கள் சொல்லும் காரணம், அவர்களுக்கு செலவு மற்றும் சேமிப்பு குறித்த விஷயங்களைப் புரியவைக்க உதவும். அதேபோல, நாம் வாங்கும் பொருள் ஏன் தேவை என்பதை நாம் தீர்மானிப்பதோடு, குழந்தைகளும் அறியுமாறு செய்தல் வேண்டும்.

இன்று கிரெடிட் கார்டு வசதி இருப்பதால், தேவையோ இல்லையோ, அதன்மூலம் பொருட்களை வாங்கிவிட்டு பின்னர் தொகை கட்டவேண்டிய நேரத்தில் திணறும் பலரையும் நாம் பார்க்கிறோம்.  இப்படி நம் குழந்தைகளும் வளரக் கூடாது எனில், அவர்களுடன் சேர்ந்து திட்டமிடும்போது, அவர்களுக்கு அவசியம், அவசியமற்ற செலவு என்பனவற்றை பகுத்து அறிய உதவும்.

நாம் நம் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் நிதி தொடர்பான விஷயங்களை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு நிதி சார்ந்த அறிவை, அனுபவத்தை வழங்க வேண்டும். மேலும் நாம் இவ்வாறு செய்யும்போது குழந்தையின் வயது, மனநிலை ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஏற்றபடி புரியவைப்பது அவசியம். இனி கற்றுக் கொடுங்கள்; கற்றுக் கொள்ளட்டும்!