நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

நீலகிரியிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்!

தேயிலை முதல் தேநீர் வரை...

காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பது நம்மில் பலருக்கும் வாடிக்கையாகிவிட்டது. டீ தயாரிக்கத் தேவைப்படும் இந்தத் தேயிலை எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள நீலகிரிக்கு விசிட் அடித்தோம்.

நீலகிரியின் பிரதான தொழில்!

இங்கிருக்கும் மலைகளில் மரங்களைவிட தேயிலை செடிகளே அதிகம். தேயிலை விவசாயம், தேயிலை தொழிற்சாலை, தேயிலை விற்பனை, தேயிலை வர்த்தகம் என தேயிலை சார்ந்த தொழில்களே ஆதாரமாக விளங்குகின்றன. மலைகள் சூழ்ந்திருக்கும் இந்த மாவட்டத்தில் வருடம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதே இங்கு தேயிலை  அதிகம் உற்பத்தியாக காரணம். ஊட்டியில் விளையும் தேயிலைக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்புண்டு. 
    
தேயிலை பலவிதம்!

தேயிலையில் கறுப்புத் தேயிலை, பச்சைத் தேயிலை, வெண்மைத் தேயிலை என பலவகை உண்டு. தேயிலையின் நிறத்தைப் பொறுத்து இவைப் பிரிக்கப்பட்டு, மேலும் கிரேடு வாரியாக தரம் பிரிக்கப்படுகிறது. 

நீலகிரியிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்!

குன்னூர் தேயிலை வாரியம்!

தேயிலையின் உற்பத்தி பற்றி தெரிந்துகொள்ள முதலில் குன்னூர் தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநர் ஆர்.அம்பலவாணனைச் சந்தித்தோம்.

‘‘தென் இந்தியாவைப் பொறுத்தவரை, 93,037.14 ஹெக்டேர் நிலப்பரப்பில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தத் தொழிலில் 11.20 லட்சம் பேர் நேரடியாகவும், 30 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

நீலகிரியைப் பொறுத்தவரை, 43,736.03 ஹெக்டேர் அளவில் தேயிலை பயிரிடப் பட்டுள்ளது. இதில் 97 பெரிய நிறுவனங்களின் எஸ்டேட்களும் (16,131.54 ஹெக்டேர்), சுமார் 38,611 (27,702.49 ஹெக்டேர்) சிறு விவசாயிகளும் அடக்கம்’’ என சில புள்ளிவிவரங்களைத் தந்தவர், ஏற்றுமதி தொடர்பான விவரங்களையும் தந்தார்.

‘‘கடந்த 2013-14ம் நிதியாண்டில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 12,090 லட்சம் கிலோ. இது, அதற்கு முந்தைய நிதி ஆண்டில் 11,350 லட்சம் கிலோவாக இருந்தது. இதில், தென் இந்தியாவின் (மொத்தம் 322 தேயிலைத் தொழிற்சாலைகள் இருக்கின்றன) பங்கு 2,424.8 லட்சம் கிலோ.

நீலகிரியிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்!

உற்பத்தி சற்று அதிகரிக்கும்!

தென் இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் இடமான நீலகிரியில் கடந்த 2013-ம் ஆண்டில் மொத்தம் 210 தேயிலை உற்பத்தி தொழிற்சாலைகளின் மூலம் 1,500 லட்சம் கிலோ தேயிலை உற்பத்தி ஆனது.

நடப்பு ஆண்டில் தேயிலை உற்பத்திக்கு சாதகமான பருவநிலை இல்லா விட்டாலும், தேயிலை உற்பத்தி யில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என் கிறார்கள். அதனால் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டில் தேயிலை உற்பத்தி சற்று அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார், அம்பலவாணன்.

தேயிலை எஸ்டேட்டுகள்!

அடுத்து, கோத்தகிரி அரவேணுவில் உள்ள விக்னேஸ்வர் தேயிலைத் தொழிற்சாலையின் உரிமையாளரான ரமேஷ் போஜ ராஜனுடன் பேசினோம்.

“கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி யில் 200 ஏக்கரில் எங்களுக்கு டீ எஸ்டேட்களும், மூன்று தொழிற்சாலைகளும் இருக்கின்றன. ஒரு ஏக்கர் டீ எஸ்டேட்டில் இருந்து வருடத்துக்கு அதிகபட்சமாக சுமார் 5,000 கிலோ வரை டீ உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிலோ டீ உற்பத்தி செய்ய கூலி ஆட்கள் செலவு, உரம் என ரூ.13-14 வரை ஆகும்.

நீலகிரியிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்!

மழை சிறப்பாக இருந்து, பனிமூட்டம் குறைவாக இருக்கும்போது தேயிலை உற்பத்தி அதிகரிக்கும். தரமான தேயிலையை உற்பத்தி செய்ய முடியும். ஒருமுறை செடிகளில் இருந்து தேயிலைகளைப் பறித்துவிட்டால், அதன்பிறகு 10-12 நாட்கள் இடைவெளிவிட்டுதான் பறிக்க வேண்டும். அப்போதுதான் தரமான தேயிலை கிடைக்கும்” என்றவர், தேயிலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

தொழிற்சாலைகளின் செயல்பாடு!

“தேயிலைத் தொழிற்சாலைகள் இரண்டு வகையானவை. ஒன்று, சொந்த எஸ்டேட்களில் இருந்து உற்பத்தியாகும் தேயிலையைப் பயன்படுத்தி, உற்பத்தி செய்வது. இரண்டாவது, தங்களது எஸ்டேட்டுகளிலிருந்து  மட்டுமல்லாமல், சிறு விவசாயிகள் விளைவிக்கும் தேயிலையை வாங்கி உற்பத்தி செய்வது. இரண்டாவது வகையைச் சேர்ந்ததுதான் எனது தொழிற்சாலை. இந்த தொழிற்சாலைகளை ‘பாட் லீஃப் ஃபேக்டரி’ (Bought Leaf Factory) என்பார்கள்.

விவசாயிகளிடமிருந்து பெறும் ஒரு கிலோ தேயிலைக்கு அதன் தரத்தைப் பொறுத்து ரூ.10 - 20  வரை விலை தரப்படுகிறது. இது ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் வித்தியாசப்படும். ஒரு கிலோ டீத்தூள் உற்பத்தி செய்ய நான்கு கிலோ தேயிலை பயன்படுத்தப்படுகிறது.  தேயிலை வாங்குவது, கூலி ஆட்களின் சம்பளம் என ஒரு கிலோ டீத்தூள் தயாரிக்க ரூ.26-27 வரை செலவாகும். இதுவும் ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் மாறுபடும். எங்கள் தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் கிலோ டீத்தூள் உற்பத்தியாகிறது.

தரம் பிரிக்கப்படும் டீத்தூள்!

உற்பத்தியான டீத்தூள் லீஃப் கிரேடு (பிஓபிஎல், பிஓபி, பிபி, பிஓபிஎஃப்), டஸ்ட் கிரேடு (பிடி, ஆர்டி, எஸ்ஆர்டி, எஸ்எஃப்டி) என தரம் பிரிக்கப்பட்டு, 30 அல்லது 35 கிலோ கொண்ட மூட்டைகளாகக் கிடங்குக்கு அனுப்பப்படும். உற்பத்தியாளர்கள் வர்த்தகப்படுத்த நினைக்கும் டீத்தூள்களை   திங்கள் கிழமை மாலை ஐந்து மணிக்குள் அனுப்பிவிட வேண்டும். அப்போதுதான் அந்த டீத்தூளானது அடுத்த வியாழன் மற்றும் வெள்ளி அன்று நடக்கும் குன்னூர் தேயிலை வர்த்தகச் சங்கத்தால் விற்பனைக்கு வைக்கப்படும். உரிய நேரத்துக்குள் அனுப்பவில்லை எனில், வழக்கமான நடைமுறையிலிருந்து ஒரு வாரம் கழித்தே விற்பனைக்கு வைக்கப்படும்’’ என்றார்.

நீலகிரியிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்!

கிடங்குகளின் முக்கியப் பணி!

தேயிலைகளைப் பறித்து, தொழிற்சாலைகளில் அரைத்து டன் கணக்கில் தயாரிக்கப்படும் டீத் தூள்களை வைக்கப் பயன்படுவதுதான் இந்தக் கிடங்குகள். பெரிய தனியார் நிறுவனங்கள் தனியார் கிடங்குகளை வைத்திருந்தாலும், பெரும்பாலான டீ உற்பத்தியாளர்கள் தயாரிக்கும் டீத்தூள்களைப் பாதுகாக்க நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிடங்குகள் உள்ளன.  குன்னூரில் இருக்கும் தி நீலகிரி டீ சர்வீஸ் கிடங்கு உரிமையாளர் ஷர்மாவிடம் பேசினோம்.

“மொத்தம் 200 தொழிற்சாலை களிலிருந்து டீத்தூள் எங்களது கிடங்குகள் வழியாக ஆன்லைன் மூலம் வர்த்தகமா கிறது. டீத்தூளை கிடங்கில் வைக்க ஒரு கிலோ டீக்கு மாதமொன்றுக்கு 60 பைசா கட்டணம் வசூலிக்கிறோம்.  விற்பனைக்கு வரும் டீத்தூள்களின் தரம் மற்றும் எடைக்குத் தகுந்தபடி சேம்பிள் எடுத்து, அதை ஏலதரகர்களுக்கு அனுப்புவோம்.

தேயிலை விற்பனையாளர்களுக்கான ஆறு ஏலத் தரகு நிறுவனங்கள் நீலகிரியில் செயல்படுகின்றன. இதில் எந்தத் தரகு நிறுவனத்துக்கு  விற்பனையாளர்கள் அனுப்பச் சொல்கிறார் களோ, அவர்களுக்கே டீ விவரங்களையும், சேம்பிள்களையும் அனுப்புவோம். ஏல தரகர்கள் மூலம் எங்களது கிடங்கில் உள்ள டீ ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப் பட்டிருந்தால், அதை வாங்கியவர்கள்  12 நாட்களுக்குள் பணத்தை வங்கியில் கட்டிவிட்டு பொருளை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட நாட்களுக்குள் பொருளை எடுக்கவில்லை எனில், காலதாமதக் கட்டணம் உண்டு” என்றார்.

நீலகிரியில் விளையும் டீ கிரேடுகள், ஆன்லைன் மூலம் டீ விற்பனை ஆகியவை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

-செ.கார்த்திகேயன்,
படங்கள்: தி.விஜய்,  த.ஸ்ரீநிவாசன்.

‘‘தேயிலை எஸ்டேட்தான் எங்களின் சாமி!’’

கண்மணி, கூலித் தொழிலாளி.

நீலகிரியிலிருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்!

‘‘நான் கடந்த 10 வருடங்களாக தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். நீலகிரியில் பல ஏக்கர்களில் தேயிலை எஸ்டேட்கள் இருப்பதால், வேலை இல்லை என்று ஒருநாளும் சும்மா இருந்தது கிடையாது. அதிக மழை, பனிப்பொழிவு போன்ற நேரங்களில் மட்டும் தேயிலை பறிக்க முடியாத நிலை ஏற்படும். தினசரி சம்பளமாகவோ, நாங்கள் பறிக்கும் தேயிலைக்குத் தகுந்தபடியோ கூலி கிடைக்கும். அதுதவிர, சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு உதவிகளும் எங்களுக்குக் கிடைக்கிறது. நாங்கள் மூன்றுவேளை நிம்மதியாகச் சாப்பிடுவதற்குக் காரணம், இங்கிருக்கும் தேயிலை எஸ்டேட்கள்தான். இதுவே எங்களுக்குச் சாமி.’’