நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

தகதக தங்கம்: 10 வருடத்துக்கு முன்- பின்!

இரா.ரூபாவதி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்.

இந்தியாவில் தங்கம் தொன்றுதொட்டு மக்களிடம் அதிக ஆதரவைப் பெற்றுவந்துள்ளது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில்தான் அதன் விலை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. அதாவது 2005, 2006-ம் ஆண்டுகளில் சுமார் ரூ.700-க்கு அருகில் விற்பனையான ஒரு கிராம், மெள்ள மெள்ள உயர்ந்து 2009-ம் ஆண்டில் 1,500 ரூபாயைத் தொட்டது. இப்படி படிப்படியாக உயர்ந்து, 2013-ம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் சுமார் ரூ.3,000 வரை விலை உயர்ந்தது.

பத்து வருடங்களுக்குமுன் தங்கத்தின் விலைப்போக்கு எப்படி இருந்தது என்பது குறித்து மும்பையைச் சேர்ந்த காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“1974-ல் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 200-250 டாலரில் வர்த்தகமானது. ஏனெனில்,  ஐரோப்பிய வங்கிகள் கையிருப்பாக வைத்திருந்த தங்கத்தை விதிமுறை இல்லாமல் விற்று வந்தது. இதனால் தங்கத்தின் விலை கடுமையாகச் சரிய ஆரம்பித்தது. இதைத் தடுக்கும்விதமாக அமெரிக்கா, ஐரோப்பிய மத்திய வங்கிகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்து ஒரு நாளைக்கான விற்பனை அளவை வரையறைக்குள் கொண்டு வந்தது. அந்தச் சமயத்தில்தான் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. 2001-ம் ஆண்டில் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதன் விளைவாக உலகம் முழுக்க பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்தன. இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்தனர்.

தகதக தங்கம்: 10 வருடத்துக்கு முன்- பின்!

மேலும், டாலரின் மதிப்பு வலிமை இழக்க ஆரம்பித்தது. நஷ்டம் கண்ட பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பாதுகாப்பு காரணமாக தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். பல்வேறு நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தன. இந்திய ரிசர்வ் வங்கியும் சுமார் 200 டன் வாங்கி வைத்தது.

இதனால் தங்கத்தின் விலையானது கடுமையாக உயர ஆரம்பித்தது. இந்தியாவில் தங்க உற்பத்தி படுமோசமாக இருந்ததால் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டது. இதன் விளைவாக இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்தது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்துவந்த சீனா 2013-ல் நம்மை முந்திவிட்டது. கடந்த 2013-ல் மட்டும் இந்தியா 974 டன் தங்கத்தை இறக்குமதி செய்ய, சீனாவோ 1120 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது’’ என்றார்.

அதிக அளவில் தங்கம் இறக்குமதி ஆவதைத் தடுப்பதற்காக மத்திய அரசு இறக்குமதி வரியை ஒரே ஆண்டில் 2 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக உயர்த்தியது. தங்கத்துக்கு அடமான கடன் வழங்குவதில் அதிக விதிமுறைகளைக் கொண்டு வந்தது ரிசர்வ் வங்கி. என்றாலும், தங்கம் இறக்குமதி குறைந்தபாடில்லை. கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் 550 டாலர் குறைந்துள்ளது. ஆனால், உள்நாட்டில் தங்கம் விலை அந்த அளவுக்கு குறையவே இல்லை.

10 வருடத்துக்குப்பின்!

தங்கத்தின் விலைப்போக்கு அடுத்த பத்து ஆண்டுகளில் எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாகச் சொல்லமுடியாது என்றாலும், தங்கத்தின் விலையில் பெரிய  ஏற்றங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை என்பதற்கு பல காரணங்களை எடுத்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள். தங்க சுரங்கங்களில் இருப்பு நாளுக்குநாள் குறைந்து வருகிறது. உலக அளவில் தென் ஆப்பிரிக்காவில்தான் அதிக அளவில் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. 1970-ல் சுமார் 1,000 மெட்ரிக் டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டது. இதுதான் மிக அதிக அளவாக இதுவரை உள்ளது. ஆனால் 2006-ல் 272 டன் தங்கம் மட்டுமே தென் ஆப்ரிக்காவில்  வெட்டி எடுக்கப்பட்டது. இது படிப்படியாகக் 2013-ல் 145 டன்னாகக் குறைந்தது.

தகதக தங்கம்: 10 வருடத்துக்கு முன்- பின்!

உலக அளவில் 2006-ல் 2,360 டன்னாக இருந்த உற்பத்தி, 2013-ல் 2,770 டன்னாக உயர்ந்துள்ளது. காரணம், இந்தக் காலகட்டத்தில் தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்தது. இதன் விளைவாக உலக நாடுகள் அனைத்தும் தன்னுடைய பார்வையை தங்கத்தின் மீது திருப்பியது. தங்கத்தின் மீதான முதலீடும் அதிகமானது. இதன் விளைவாக உற்பத்தியை உலக நாடுகள் அதிகரித்தது.  இதற்கிடையில் ஐந்து வருடங்களுக்கு முன் வேர்ல்டு கோல்டு கவுன்சில் இன்னும் 14 வருடங்களுக்குதான் தங்கத்தின் உற்பத்தி இருக்கும் என தெரிவித்தது.

மறுசுழற்சி தங்கம்!

இந்த நிலையில் ஏற்கெனவே இருக்கும் தங்கத்தை மறுசுழற்சி செய்வதன் மூலம் தங்கத்தின் தேவை ஓரளவுக்கு  நிறைவேற்றப்பட்டு வருகிறது. “இந்திய வீடுகளில் இருக்கும் பழைய தங்க நகைகளைப் போட்டு, புது நகைகளை வாங்கும் பழக்கம் இருக்கிறது. ஒரு வருடத்துக்கு 300-400 டன் தங்கம் மறுசுழற்சிமுறையில் விற்பனைக்கு வருகிறது. இதனால் ஓரளவுக்கு தங்கத்தின் தேவை நிறைவேற்றப்படுகிறது.

தகதக தங்கம்: 10 வருடத்துக்கு முன்- பின்!

இந்தியாவின் தேவை கடந்த இரண்டு வருடங்களில் 300 டன் அதிகரித்து 1000 டன்னாக உள்ளது” என்றார் ஜெம் அண்ட் ஜுவல்லரி டிரெய்னிங் சென்டரின் இயக்குநர் கே.சுவாமிநாதன்.  மேலும் சுரங்கங்களில் தங்கத்தின் இருப்பு குறைந்து வருவதால், இனிவரும் நாட்களில் மறுசுழற்சி தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும். சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் தங்கமானது உலக தேவையில் வெறும் 2 சதவிகிதம்தான். மீதமுள்ள 98 சதவிகித தேவை மறுசுழற்சி தங்கத்தின் மூலமாகத்தான் நிறைவேற்றப்படுகிறது. இதற்கேற்ப நகை கடைகளும் பழைய தங்கத்தை அதிக விலை கொடுத்தும், எடையில் கழிவு இல்லாமலும் வாங்கிக் கொள்கிறது. இது, இனிவரும் நாட்களில் அதிகரிக்கவே செய்யும். எனவே, வீடுகளில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். 

விலை உயருமா?

தங்கத்தின் மீதான மோகம் என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. ஏனெனில், மிகவும் எடை குறைந்த நகைகளை அணியவே பெண்கள் விரும்புகிறார்கள். முன்பெல்லாம் விலை குறையும்போது மக்கள் அதிகளவில் தங்கம் வாங்குவார்கள். தற்போது இது போன்ற நிலை இல்லை. தேவையைப் பொறுத்தே விற்பனை உள்ளது.  மேலும், மக்களின் முதலீடு பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் என பல முதலீட்டு திட்டங்களை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது. மேலும், கடந்த ஒருவருடமாக பங்குச் சந்தை நல்ல லாபம் கொடுத்து வருகிறது.

இதனால் தங்கத்தின் மீதான முதலீடு குறைய வாய்ப்புள்ளது. தங்கத்தின் விலையானது அடுத்த மூன்று, நான்கு வருடத்துக்கு உயர வாய்ப்பில்லை. மேலும், விலையில் மந்தநிலை தொடர்ந்தால் வாங்குவதற்கான ஆர்வம் குறையும். உலகப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடைந்து வருவதால் பங்குச் சந்தை இன்னும் வளர்ச்சி அடையும். இதனால் தங்கத்தின் விலை அடுத்த பத்தாண்டுகளில் பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.