காலையில் எழுந்தவுடன் செய்தித்தாளையும், வாரப் பத்திரிகையையும் படிக்காவிட்டால் நம்மில் பலருக்கு அடுத்த வேலை ஓடாது. இரவு 11 மணிக்கு நடந்த சம்பவத்தை மறுநாள் காலை ஆறு மணிக்கு செய்தியுடன் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட முடிகிறதெனில், அச்சுத் துறையில் ஏற்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பம்தான் காரணம். இன்றைக்கு அச்சுத் தொழில்நுட்பம் முழுக்க கணினிமயமாகிவிட்டாலும், அதற்கு அடிப்படையாக இருந்தது ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவான அச்சு இயந்திரம்தான்.

அச்சு இயந்திரம் உருவாகும்முன், மனிதனின் எழுத்து வரலாறு பல நூற்றாண்டுகளைத் தாண்டி பின்னோக்கிச் செல்கிறது. முதலில் பாறையில் கிறுக்கிய மனிதன், பின்பு பனை ஓலைகளில் எழுதி, எழுத்துகளுக்கு நிலையான வடிவம் தந்தான். இதனால் பலராலும் எழுதவும் படிக்கவும் முடிந்தது. பிற்பாடு காகிதத்தைக் கண்டுபிடித்த மனிதன், அதில் மையை நனைத்து, தனது மனவோட்டத்தைக் கொட்டினான்.

அதிசயம் செய்த அச்சு இயந்திரம்!

மனிதர்களின் மனவோட்டங்களை, எண்ணங்களை, சிந்தனைகளைப் பரந்துபட்ட மக்களுக்கு கொண்டு செல்வது எப்படி என்று யோசித்தபோது உருவானதுதான் அச்சு இயந்திரம். எழுத்துக்களை அச்சுகளாக வார்த்து அதை முறையாக அச்சிடுவதன் மூலம், குறைந்த நேரத்தில் அதிகமான பிரதிகளை அச்சிட உதவும் அச்சு இயந்திரத்தை ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன்னஸ் கூட்டன்பெர்க் 1436-ம் ஆண்டு கண்டுபிடித்தார்.

அன்றையச் சூழலில் மிகப் பெரிய கண்டுபிடிப்பாக இருந்தது இந்த அச்சு இயந்திரம். இந்த அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்புதான் எழுத்தறிவு எல்லோருக்கும் சொந்தம் என்கிற நிலை உண்டானது. பத்திரிகைகளும் செய்தித்தாள்களும் உருவாகின. காலத்தால் அழியாத இலக்கியங்கள் எழுத்தில் ஏறி, எல்லோரும் படிக்கும் சூழல் உருவானது. பிற்பாடு அரசியல் புரட்சி ஏற்பட்டு, ஜனநாயகம் தோன்ற வும், அறிவியல் தொழில்நுட்பம் வளரவும் அடிப்படையாக இருந்தது இந்த அச்சு இயந்திரம்தான்.

கடந்த 400 ஆண்டுகளில் மனிதனின் அறிவுப்பூர்வமான பரிணாம வளர்ச்சியை பல மடங்கு உயர்த்திய  அச்சு இயந்திரம், இன்றைக்கு காலமாற்றத்தின் கட்டாயத்தினால் கணினி என்கிற அடுத்தகட்டத் தொழில்நுட்பத்துக்கு வழிவிட்டு ஒரு ஓரமாக ஒதுங்கிநிற்கிறது. இன்றைக்கு ஆப்செட், டிஜிட்டல், 3டி பிரின்டிங் என பல வகையான அச்சுத் தொழில்நுட்பம்  அதிவேகத்தில் வளர்ந்துவந்தாலும், அதற்கு அடிப்படையாக இருந்தது கூட்டன்பெர்க் கண்டுபிடித்த அச்சு இயந்திரம்தான். ஒரு சிறிய கண்டுபிடிப்பு மனித வரலாற்றில் எத்தனை பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது பார்த்தீர்களா?
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு