Published:Updated:

உண்மையான ஃபீட்பேக்கை பெறும் சூத்திரங்கள்!

நாணயம் லைப்ரரி

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது, 'தேங்க்ஸ் ஃபார் தி ஃபீட்பேக்’ எனும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஃபீட்பேக்கை (விற்பனை/சேவைக்குப் பிந்தைய வாடிக்கையாளரின் கருத்துப்பதிவு அல்லது பணியாளரின் வேலைதிறன் குறித்த மேலதிகாரியின் கருத்துப்பதிவு போன்றவை) துல்லியமாகப் பெறும் கலை மற்றும் அறிவியலைப் பற்றிச் சொல்லித்தரும் புத்தகத்தை. டக்ளஸ் ஸ்டோன் மற்றூ ஷீலா ஹீன் என்ற இருவரும் சேர்ந்து எழுதியுள்ள புத்தகம் இது. சரியோ தவறோ, கனிவானதோ  கடுமையானதோ, சிந்தித்துக் கொடுக்கப்படுவதோ போகிறபோக்கில் வீசப்படுவதோ எதுவானாலும் சரி ஃபீட்பேக்கை பெறுவதில் இருக்கும் சவால்கள் குறித்தும், ஏன் உண்மையான ஃபீட்பேக்கை பெறுவது சிக்கலான விஷயமாக இருக்கின்றது என்பதையும், எப்படி அந்தச் சிக்கல்களை எதிர்கொண்டு எல்லாவிதமான மனிதர்களிடம் இருந்தும் ஓரளவுக்கு உண்மையான ஃபீட்பேக்கை பெற முயற்சிப்பது என்பது பற்றி கூறும் புத்தகம் இது.

உண்மையான ஃபீட்பேக்கை பெறும் சூத்திரங்கள்!

 ஃபீட்பேக் என்ற வார்த்தை பல அர்த்தத்தை உணர்த்துவதாய் இருப்பதாலேயே பல சிக்கல்கள் இதில் உருவாகின்றது என்று சொல்லும் ஆசிரியர், சூப்பர் பிரியாணி சார் என வாழ்த்துவது, எப்படிய்யா இப்படி குப்பையாய் சமைக்கிறீங்க என்பது, முதுகில் தட்டிக்கொடுப்பது, டவுசர் கழலுமளவுக்கு எகிறுவது எல்லாம் ஃபீட்பேக்தான் என்று சொல்கின்றனர். அதனால்தான், கடுமையான ஃபீட்பேக் வரும்போது, மட்டமாகச் சொல்லப் படுபவை ஃபீட்பேக் கேட்டவரை கடுப்பான மனநிலைக்குச் சுலபத்தில் தள்ளிவிடுகிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பிறருடன் பேசும் பேச்சுகளில் கடினமான சூழ்நிலையை எப்போது எதிர்கொள்கின்றீர்கள் என்று கேட்டால் அனைவருமே சொல்வது ஒருவரிடம் அவரைக் குறித்த ஃபீட்பேக்கைச் சொல்லும்போதுதான் என்கின்றனராம். பத்துவருஷமா இருக்குது இந்தப் பிரச்னை. இதை எப்படி சால்வ் பண்றதுன்னே தெரியவில்லை. யாராவது இதற்குக் காரணம் என்னன்னு சொன்னீங்கன்னா பரவாயில்லை என ஊழியர்களிடம் நிர்வாகம் கெஞ்சி, கதறி கேட்கும் போதும்கூட, இதோ பாருங்க இந்த டிபார்ட்மென்ட்டிலதான் பிரச்னை. ஒரு பய வேலையை உருப்படியாச் செய்யறது இல்லேன்னோ, நீங்க கொடுக்கற சம்பளம் ரொம்பக் குறைச்சல், அதுக்கு இப்படி ஓட்டை உடைசல் ஆள்தான் கிடைப்பான், சம்பளத்தை ஏத்துங்க, இவனுங்களை எல்லாம் விரட்டிட்டு கில்லி மாதிரி ஆள் எடுத்து பின்னிடலாமுன்னு ஓப்பனா பேசமுடியாது. அப்படி உடைத்துப் பேசினா,

அடுத்த நிமிடமே நிர்வாகம் அட,  நம்மையே குறை சொல்றாங்களேன்னு கூட நினைத்து கடுமைகாட்டிவிடலாம் என்ற பயம் மனது முழுவதையுமே வியாபித்துவிடும் என்கின்றனர் ஆசிரியர்கள். இதனால்தான் ஃபீட்பேக் என்பது கடினமாகின்றது எனவும் சொல்கின்றனர்.

ஃபீட்பேக் என்பது நம்மைப் பற்றி நாம் பெறும் தகவல். பிறருடன் ஏற்படும் நம்முடைய அனுபவத்தை மட்டுமே வைத்து நம்மைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், அது ஒருபாதிதான். மற்றவர்களுடன் நமக்கு ஏற்படும் அனுபவத்தை மற்றவர்கள் எப்படிப் பார்க்கின்றார்கள்/அனுபவிக்கின்றார்கள் என்பது மீதிப்பாதியாகும். அதைப் பெற்றுத்தருவது தான் ஃபீட்பேக். இந்த மறுபாதியைச் சேர்த்தால் மட்டுமே நம்மைப்பற்றி நாம் படிக்க நினைக்கும் பாடம் முழுமையடையும் என்கின்றனர் ஆசிரியர்கள். ஏனென்றால், மற்றவர்கள் நினைப்பதை நாம் கேட்கும்போது, நம்முடைய மனம் தெளிவாய் இருக்கவேண்டும். இல்லை யென்றால் உண்மை நமக்கு உரைக்காது. உதாரணத்துக்கு, ஒரு பார்ட்டிக்குப் போகின்றீர்கள். கிளம்பி ரெடியானவுடன் உங்கள் மனைவி என்னய்யா பேன்ட் ஷர்ட்போட்டிருக்கிறாய், உனக்கும் இந்த டிரெஸ்ஸுக்கும் ஒத்துவரலை என ஃபீட்பேக் கொடுக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அட! நம்முடைய மனைவிக்கு நம்மேல் என்னவொரு அக்கறை என்றும் நினைக்கலாம் அல்லது நாம் இவளுக்கு மேட்ச்சாக இல்லை என்பதைச் சொல்கின்றாளோ! டைவர்ஸ் ஏதும் அப்ளை பண்ணுகின்ற ப்ளானுக்கு இது அச்சாரமோ என்றுகூட யோசிக்கலாம் இல்லையா என்று கேட்கின்றனர் ஆசிரியர்கள்.

ஃபீட்பேக் என்பது நம்மைப் பற்றி நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள உதவுவது என்பதை முதலில் நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் நாம் பாதி, மற்றவர்கள் மீதி என்பதுதான் உண்மை நிலை என்கின்றனர் ஆசிரியர்கள். ஆனால், நாம் என்ன செய்கின்றோம் தெரியுமா? உங்கள் பாஸ் ஒருநாள் உங்களுடைய குறைகளைப் பட்டியலிடு கின்றார். நீங்கள் அவர் சொன்னதைப் பற்றி யோசிப்பீர்களா? இல்லவே இல்லை. முதலில் அவருடைய குறைகளைப் பற்றிப் பட்டியல் போடுவீர்கள். இவர் என்ன பெரிய ஒழுங்கா என மனதில் கேள்விகேட்பீர்கள். உங்கள் பாஸ் உங்களிடம் நம்முடைய கம்பெனியின் வொர்க் கிளைமேட் பற்றி ஒரு சர்வே பண்ணிக்கொடு என்கின்றார். ஏகப்பட்ட ஓட்டை உடைசல் என்கின்றனர் உங்கள் சகபணியாளர்கள். நிறைய விஷயங்களில் நிர்வாகம் என்ன நினைக்கின்றது என்றே புரிந்துகொள்ள முடிவதில்லை. நிர்வாகத்துக்கு அது நினைப்பதை சொல்லத் தெரியவில்லை என்கின்றனர் பணியாளர்கள்.

உண்மையான ஃபீட்பேக்கை பெறும் சூத்திரங்கள்!

நீங்கள் அதை பாஸிடம் சொல்கின்றீர்கள். அவர் என்ன சொல்வார். என்ன எனக்குச் சொல்லத்தெரியவில்லையா? உங்களுக்கும் அவங்களுக்கும் கேட்கத்தெரியலேன்னு சொல்லுங்க! நீங்க என்ன மாதிரி கேள்வியெல்லாம் கேட்டீர்கள். உங்க மெத்தடாலஜி தப்பு என உங்களைக் குறைசொல்ல முயல்வார். ஏனென்றால், நீங்கள் அவரையல்லவா குறை சொல்கின்றீர்கள். மனித  இயல்பு அது. அதனால்தான் ஃபீட்பேக் என்ற உடனேயே ஒரே ஓட்டமாய் ஓட ஆரம்பித்து விடுகின்றோம் என்கின்றனர் ஆசிரியர்கள்.

தனிநபரோ, நிறுவனமோ, மூன்றே விஷயங்கள் தான் ஃபீட்பேக் சிஸ்டம் சிறப்பாகச் செயல்படாமல் இருக்கத் தடையாக இருப்பது என்று சொல்கின்றனர் ஆசிரியர்கள். முதலாவதாக, தம்பி சூப்பர் என்று நீ பில்ட்அப் கொடுக்கும் அளவுக்கு உன் வேலை ஒன்றும் பிரமாதமாயில்லை என்பது போன்ற உண்மை ஃபீட்பேக் வெளிப்படும்போது. உள்ளதைச் சொன்னால் நாம் ஏற்றுக்கொண்டுவிடுவோமா என்ன? இவனெல்லாம் ஃபீட்பேக் கொடுக்கின்ற அளவுக்கு நான் இளப்பமா என்ற எண்ணம் தலைவிரித்து ஆடுவது இதனால்தான் என்கின்றனர் ஆசிரியர்கள்.

அடுத்தபடியாக ஃபீட்பேக் கொடுப்பவருக்கும் நமக்கும் இடையே இருக்கும் உறவு ஃபீட்பேக்கின் அடிப்படையையே மாற்றிவிடுகின்றது. அவன் பழைய கடுப்பை இப்போது தீர்க்கின்றான் என்போம். 20 நொடி உறவானாலும் சரி, 20 வருட உறவானாலும் சரி ஃபீட்பேக் தரப்படும்போது மோட்டிவ்கள் அலசப்படுகின்றன.  உள்நோக்கங்களைக் கற்பிக்க ஆரம்பித்து ஃபீட்பேக்கின் அடித்தளத்தையே நாம் உலுக்க ஆரம்பிக்கின்றோம்.  மூன்றாவதாக, இமேஜை உலுக்கும் ஃபீட்பேக்குகள் என்று சொல்லும் ஆசிரியர்கள், ஃபீட்பேக்கின் மூலம் தெரியவருவது நடப்பில் இருக்கும் நம்முடைய இமேஜையே முழுமையாகச் சிதைக்கும் அளவுக்கு இருக்கும்போது ஃபீட்பேக் என்பது தவறு என்ற நிலைப்பாட்டை நாம் எடுக்க முயல்கின்றோம் என்கின்றனர்.

அடிப்படையில் இந்த முன்று சூழ்நிலை களிலும்தான் நாம் வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு, கடுப்பாகி என்ன செய்வதென்று புரியாமல்போய்க் கடைசியில் ஃபீட்பேக் சிஸ்டமே தவறு சொல்லுமளவுக்கு நம்மைத் தள்ளுகின்றது என்கின்றனர் ஆசிரியர்கள். இந்த மூன்று சூழ்நிலை களையும் தவிர்க்கும் அளவுக்கு ஒரு ஃபீட்பேக் சிஸ்டத்தை நாம் உருவாக்குவது எப்படி, எதைப் புரிந்துகொள்ளவேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும், எதைக் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் பிரமாதமான வகையில் பட்டியலிட்டுச் சொல்லியுள்ளனர் ஆசிரியர்கள்.

தனிநபரோ, மேனேஜரோ, பிசினஸ் உரிமையாளரோ எவரானாலும் சரி நம்முடைய வெற்றியின் மறுபாதி மற்றவர்கள் கையில் இருக்கின்றது. எனவே, ஃபீட்பேக் என்பது மிகமிக முக்கியமான ஒன்று. வெற்றியைப் பெற்றுத்தரும் ஃபீட்பேக்கை பெறும் கலையைச் சொல்லித்தரும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படிப்பதில் தவறேதுமில்லை.

நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

கிரெடிட் கார்டு பயன்பாடு 27% அதிகரிப்பு!

கடந்த அக்டோபரில் இந்தியாவில் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குவது 2013 அக்டோபரைவிட  27% அதிகரித்து 17,313.70 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த மாதத்தில் நாட்டில் புழக்கத்தில் உள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 7.43%் அதிகரித்து, 1.99 கோடியாக உயர்ந்திருக்கிறது. இகாமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஆஃபர்களால்தான் கிரெடிட் கார்டுகள் மூலம் அதிக பரிவர்த்தனை நடந்திருப்பதாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு