Published:Updated:

SME கைடுலைன்!

தொழில்முனைவோருக்கு பயன்தரும் கிளஸ்டர் மேம்பாடு!

SME கைடுலைன்!

தொழில்முனைவோருக்கு பயன்தரும் கிளஸ்டர் மேம்பாடு!

Published:Updated:

எந்தவொரு தொழிலையும் தனித்தனியாகச் செய்வதன் மூலம் சிறப்பாகச் செய்ய முடியாது. ஆனால், ஒரேமாதிரியான தொழிலைச் செய்யும் பலரும் ஓரிடத்தில் கூடி அந்தத் தொழிலை செய்யும்போது தங்களது தயாரிப்புகளுக்கு சிறந்த கவனத்தைப் பெறமுடியும். சிறு தொழில் செய்யும் எம்எஸ்எம்இகள் இப்படி ஒரே இடத்தில் தொழில் செய்வதைத்தான் கிளஸ்டர் என்று சொல்கிறார்கள்.

இந்த  கிளஸ்டர் என்பது எம்எஸ்எம்இகளுக்கு எந்தவிதத்தில்  பயனளிக்கிறது, இதன் செயல்பாடுகள் என்னென்ன, இதனை எப்படியெல்லாம்     எம்எஸ்எம்இகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து சென்னை எம்எஸ்எம்இ அதிகாரிகளிடம் கேட்டோம்.
 
‘‘சிறு, குறு மற்றும் நடுத்தர அளவில் தொழில் செய்கிறவர் கள் ஒரே இடத்தில் கூடி,  ஒருங் கிணைந்து தொழில் செய்வது தான் கிளஸ்டர் என்று சொல்லப் படுகிறது. அங்கு அவர்களுக்குத் தேவையான பொதுவான வசதிகளைச் செய்துகொள்ளவும், தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவும்  முடியும். 

இது எஸ்எம்இகளுக்குப் பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உதவும் விதமாக அமைக்கப்படுகிறது. இந்தியாவின் நேரடி ஏற்றுமதியில் 35 சதவிகிதப் பங்களிப்பையும், ஒட்டுமொத்த உற்பத்தியில் 40 சதவிகிதப் பங்களிப்பையும் சிறு தொழில் நிறுவனங்கள் அளிக் கின்றன.

1996-ல் கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டத்தைத் துவங்கி அதன்மூலம் சிறு மற்றும் குறுந் தொழில்முனைவோர் ஒன்றாக இணைந்து பயன்பெற ஏதுவான வகையில் இந்தியாவில் 350 எஸ்எஸ்ஐ கிளஸ்டர்களையும், 2000-க்கும் மேற்பட்ட கிராமப்புற கிளஸ்டர் களையும் நாடு முழுவதும் தொடங்கியது அரசு.

SME கைடுலைன்!

கிளஸ்டரின் பணி என்ன?

கிளஸ்டர் என்பது எஸ்எம்இகளுக்கு உதவும் விதமாக அமைக்கப்படும் ஒருங்கிணைந்த அமைப்புதான். ஒரே துறையைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் இணைந்து ஒரு பொதுவான இடத்தை வாங்கி, அதில் தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டத்தை அளிக்கும்போது அவர்களுக்கு அரசு உதவியுடன் இயந்திரங்களுக்கான மானியத்தையும், அதனை வாங்கத் தேவையான நிதியுதவிகளும் எளிதில் கிடைக்கும்.

இதனைக் கொண்டு குறிப்பிட்ட  காலத்துக்குள் தொழிலை ஆரம்பித்து, இந்த இருபதுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் தங்களுக்கான தயாரிப்புகளைப் பொதுவாக ஒரே இடத்தில் தயாரித்துக் கொள்ளலாம்.

மேலும், இந்தப் பொது உபயோக மையத்தில் (Common facility centre) கிளஸ்டரில் இல்லாத எஸ்எம்இகளும் பயன்பாட்டுக் கட்டணத்தைச் செலுத்தி உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

SME கைடுலைன்!

யாருக்கு என்ன பயன்?

இதில் உறுப்பினர்களாக உள்ள எம்எஸ்எம்இகளுக்கு என்ன லாபம் எனில், இந்த கிளஸ்டரில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குப்பின், இந்த கிளஸ்டர் சொந்தமாகிவிடும். இ்தனால் அவர்களின் பயன்பாடு தவிர, மற்ற எஸ்எம்இக்கள் வழங்கும் பயன்பாட்டுக் கட்டணம் மூலம்் கிடைக்கும் வருமானம் இவர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். மேலும், இது கிளஸ்டரை மேம்படுத்தவும் உதவும்.

இதில் பயன்பெறும் உறுப்பினர் அல்லாத  எம்எஸ்எம்இக்கள் இதுபோன்ற கிளஸ்டரை அணுகி, அதனைப் பயன்படுத்தித் தனது உற்பத்தியைத் தொடங்கும்போது, வெறும் பயன்பாட்டுக் கட்டணம் மட்டுமே கட்டுகிறார். உள்கட்டமைப்பு, இயந்திர தொழில்நுட்பம் ஆகியவற்றை முதலீட்டின் மூலம் கொண்டு வருவது எனில் இவர்களுக்கு மிகவும் சிரமம். அதனை இந்த கிளஸ்டர் அமைப்பு சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வழிவகைச் செய்கிறது.

இதனால் ஒட்டுமொத்தமாக கிளஸ்டரை அமைப்பவர்கள், கிளஸ்டரில் பயனடை பவர்களைத் தவிர, அந்தத் தொழிலுக்கான தேவை அந்த இடத்தில் அதிகரிப்பதும், அதனால் வேலைவாய்ப்புகள் அந்தத் தொழிலில் ஒரே இடத்தில் உருவாவது போன்ற பயன்களும் உண்டாகின்றன. நாட்டின் உற்பத்தியும், பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்க  இந்த கிளஸ்டர் போன்ற அமைப்புகளின் பங்களிப்பு பெரிய அளவில் உதவுகின்றன'' என்றனர்.

எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம்?

SME கைடுலைன்!

இந்த கிளஸ்டரை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என டான்சியா கூட்டமைப்பின் துணைத் தலைவர் சி.கே.மோகனிடம் கேட்டோம். “பொதுவாக, கிளஸ்டர் என்பது ஒன்றாக இணைந்து தொழில் செய்வதுதான். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, தானாகவே ஒரே இடத்தில் ஒரே தொழில் செய்யும் பலர் ஒன்றிணைந்து அந்தத் தொழிலைச் சிறப்பாகச் செய்யலாம். அதற்கான இடவசதியை ஏற்பாடு செய்துவிட்டு, அரசிடம் இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான தொகையை 75 முதல் 90 சதவிகிதம் வரை அந்த கிளஸ்டரின் தேவையைப் பொறுத்துப் பெற்றுக்கொள்ளலாம்.

மற்றொரு வகை, ஒரே தொழிலை செய்து வருபவர் களிடம் போதிய மேம்பாட்டு வசதிகள் இல்லாமலும், ஆனால் சிறப்பான முறையில் தயாரிப்புகளைச் செய்துவருவதைக் கண்டு அரசே அவர்களை வைத்து ஒரு கிளஸ்டரை உருவாக்கி அந்தத் தொழிலை மேம்படுத்தும்.
 அப்படிப்பட்ட தொழில்களுக்கும் இதேபோன்ற சலுகைகளை அரசு அளிக்கும். இதனைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்பை பெரிய முதலீடு இல்லாமல் சிறப்பான தயாரிப்பாகவும் தரமானதாகவும் கொடுக்க முடியும்.

இதுதவிர, எஸ்எம்இகள் சிறிய அளவில் சிறப்பான தொழிலை செய்து வருவார்கள்.அவர்களால் பெரிய இயந்திரங்களை வாங்கி உற்பத்தியையோ அல்லது புதிய தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவோ முடியாமல் இருப்பார்கள்.

வங்கிகளிலும் இவர்களின் தொழிலின் அளவுக்கு அவ்வளவு பெரிய தொகை கடனாகக் கிடைக்காது. அதுமாதிரியானவர்கள்  இதுபோன்ற கிளஸ்டர்களில் சென்று தங்கள் தயாரிப்பை செய்வதன் மூலம் சிறிய அளவில் பெரிய தொழிநுட்பங்களைக் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். சிறுதொழில்முனைவோர்கள் இதுபோன்ற கிளஸ்டர் மூலம் தங்கள் தயாரிப்பை நவீன தொழில் நுட்பத்தில் தயாரிப்பதன் மூலம் அவர்கள் சந்தையில் போட்டியைச் சமாளிக்க முடியும். தவிர, அவர்களது  உற்பத்திச் செலவையும் கணிசமாகக் குறைக்க முடியும்'' என்றார்.

மத்திய, மாநில அரசுகள் எம்எஸ்எம்இகளுக்கு உதவும்விதமாக இந்த கிளஸ்டர்களை நிறுவி  உதவி வருகிறது. எந்தப் பகுதியில் எந்த கிளஸ்டர் உள்ளது என்பதை இந்த இணையதள முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். http://www.dcmsme.gov.in/clusters/clus/smelist.htm#clus
எம்எஸ்எம்இகள் தற்போது இருக்கும் கிளஸ்டர்களில் உறுப்பினர்களாகவோ அல்லது அதனைப் பயன்படுத்தியோ பயன் பெறலாமே!