Published:Updated:

வட்டி குறைப்பு: லாபம் பார்த்த டிரேடர்கள்!

வட்டி குறைப்பு: லாபம் பார்த்த டிரேடர்கள்!

வட்டி குறைப்பு: லாபம் பார்த்த டிரேடர்கள்!

வட்டி குறைப்பு: லாபம் பார்த்த டிரேடர்கள்!

Published:Updated:

‘‘பொங்கலையொட்டி இசிஆரில் இருக்கும் என் பண்ணை வீட்டுக்குச் சென்றுவிட்டேன். எனவே, போனில் செய்திகளைச் சொல்கிறேன்" என ஷேர்லக் சொல்ல,  குறிப்பெடுக்கத் தொடங்கினோம்.

‘‘ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைத்ததைக் கண்டு தொழில்துறை வட்டாரத்தினர் மகிழ்ச்சி அடைந்தார்களோ இல்லையோ, டிரேடர்கள் ஏக குஷியாகிவிட்டனர். 0.25%   வட்டி குறைத்ததை ஏதோ 25% வட்டி குறைத்த மாதிரி ஒரு நிலையை உருவாக்கி, சந்தையை ஏகத்துக்கும் உயர்த்திவிட்டனர் டிரேடர்கள். மறுநாளே, வாங்கிய பங்குகளை   விற்று நல்ல லாபம் பார்த்தனர்.

இதனால்தான் சந்தை இன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. நான் தொடர்ந்து சொல்லி வருகிற மாதிரி, சந்தை சரியும் ஒவ்வொரு சமயத்தையும் முதலீடு செய்வதற்கான வாய்ப்பாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.’’

‘‘ஐஓசியின் 10% பங்குகளை விற்பனை செய்யும்  திட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது?’’

‘‘2014 மார்ச் மாதம் முதலே இதற்கான முயற்சியில் மத்திய அரசு களமிறங்கியது. இப்போது மீண்டும் இந்த விஷயத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இந்த நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டிருக்கும் 10% பங்குகள் (24.27 கோடி பங்குகள்) விற்பனை மூலம் ரூ.8,000 கோடி திரட்டப்பட இருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசின் பங்கு விலக்கல் துறை, பல்வேறு அமைச்சகங்களின் கருத்தை ஜனவரி 27-ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது. அதன்பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.

வட்டி குறைப்பு: லாபம் பார்த்த டிரேடர்கள்!

இதற்கிடையில் மார்ச் 31-ம் தேதிக்குள் ஓஎன்ஜிசி மற்றும் கோல் இந்தியா பங்கு விற்பனை நிறைவு செய்யப்படும் என திரும்பத் திரும்ப மத்திய அரசு சொல்லி வருகிறது. கோல் இந்தியா பங்கு விற்பனை மூலம் சுமார் ரூ.24,000 கோடி திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. கோல் இந்தியா பங்கு விற்பனை பிப்ரவரி மாதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்கு விற்பனை குறித்த தகவல் வெளியான அன்று கோல் இந்தியா பங்கின் விலை 4.5% வீழ்ச்சிகண்டது. காரணம், இந்தப் பங்கு விற்பனை குறித்து டிரேடர்கள் நெகட்டிவ்வான கருத்துகளைக் குறிப்பிட்டதே. கோல் இந்தியாவின் பங்கு விலை இன்னும் சுமார் 5% குறையும் எனவும், அந்த விலையிலிருந்து சுமார் 7% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படு கிறது. சிறு முதலீட்டாளர்களுக்கு விலையில் 5% சிறப்புத் தள்ளுபடி இருக்கிறது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, நீண்ட கால முதலீட்டு நோக்கில் இந்தப் பங்கு விற்பனையில் பங்கேற் கலாம் என்கிறார்கள். தவிர, பொதுத்துறை நிறுவனங்களின் இடிஎஃப் விற்பனை மூலம் மார்ச் மாதத்துக்குள் ரூ.5,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.’’

‘‘காலாண்டு முடிவுகள் எப்படி?’’

‘‘தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் பேங்கின் நிகர லாபம் டிசம்பர் காலாண்டில் 30% அதிகரித்துள்ளது. வட்டி வருமானம் அதிகரித்ததே இதற்கு காரணம். இதன் நிகர வட்டி மார்ஜின் 2.9 சதவிகிதத்திலிருந்து 3.2 சத விகிதமாக அதிகரித்துள்ளது. முன்னணி வீட்டு வசதிக் கடன் நிறுவனமான எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 20% அதிகரித்துள்ள நிலையில், நிகர லாபம், மூன்றாம் காலாண்டில் 5.4% அதிகரித் துள்ளது. வரிக்காக கூடுதலாக ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்ததால், இதன் நிகர லாபம் குறைந்திருக்கிறது.
 
இண்டஸ் இந்த் பேங்க் நிகர லாபம் 29% அதிகரித்துள்ளது. நிகர வாராக்கடனுக்கான ஒதுக்கீடு குறைந்திருப்பதே இதற்கு காரணம்.’’
‘‘வீட்டு வசதி நிறுவனப் பங்குகளில் முதலீடு அதிகரித்திருக்கிறதே?’’

‘‘ஜிஐசி ஹவுஸிங், கேன்ஃபின் ஹோம்ஸ், ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ், திவான் ஹவுஸிங், இந்தியா புல்ஸ் போன்ற நிறுவனப் பங்குகளில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. அந்தவகையில் கடந்த ஒருமாத காலத்தில் ஜிஐசி ஹவுஸிங் மற்றும் கேன்ஃபின் ஹோம்ஸ் பங்குகளின் விலை முறையே 50% மற்றும் 37% அதிகரித்துள்ளன.’’

‘‘எஃப்ஐஐகளின் பார்வை திடீரென சிமென்ட் பங்குகள் பக்கம் திரும்ப என்ன காரணம்?’’

‘‘எல்லாம் கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி விலை வீழ்ச்சியின் கைங்கரியம்தான். இவற்றின் விலை கணிசமாகக் குறைந்திருப்பதால், போக்குவரத்து செலவு குறிப்பிடத் தக்க அளவுக்கு குறைந்துள்ளது. இதனால்  சிமென்ட் நிறுவனங்களின் லாபம் நிச்சயம் அதிகரிக்கும். இதனை முன்கூட்டியே கணித்த எஃப்ஐஐகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடுத்தர அளவு சிமென்ட் நிறுவனங்களான ராம்கோ சிமென்ட்ஸ் (13.7%லிருந்து 18.8%). ஜேகே லெட்சுமி சிமென்ட் (8.65%-லிருந்து 10.8%), சிமென்ட் (7.77%-லிருந்து 10.6%) போன்றவற்றில் அவற்றின் பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ளன.’’

‘‘ஃபார்வேர்டு மார்க்கெட்ஸ் கமிஷனின் தலைவர் பதவி நீடிக்கப்பட்டிருக்கிறதே?’’ 

‘‘எஃப்எம்சி-ன் சேர்மனாக ரமேஷ் அபிஷேக் இன்னும் மூன்று மாதம் அல்லது புதிய சேர்மன் நியமிக்கப்படும்வரை செயல்படுவார். இவருக்கு பதவி நீடிப்பது இது மூன்றாவது முறை.''

‘‘வரும் ஆண்டுகளில் இந்திய ஜிடிபி வளர்ச்சி குறித்து பாசிட்டிவ் தகவல்கள் வருகிறதே?''

‘‘இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அடுத்த நிதியாண்டிலிருந்து அதிகரிக்க ஆரம்பிக்கும் என்கிறது  ஹெச்எஸ்பிசி. 2017-ல் அதாவது, நரேந்திர மோடி பிரதமராகி நான்காவது ஆண்டில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி வேகமாக இருக்கும். அந்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7%-ஆக இருக்கும். ஆனால், சீனாவின் ஜிடிபி வளர்ச்சி 6.9%தான் இருக்கும் என உலக வங்கி சொல்லியுள்ளது’’ என்றவர், ‘‘விருந்துக்கு எல்லோரும் ரெடி. அடுத்த வாரம் நேரில் சந்திப்போம்’’ என்று சொல்லி, போனை கட் செய்தார்.