Published:Updated:

கும்மின்ஸ் இந்தியா லிமிடெட்!

கும்மின்ஸ் இந்தியா லிமிடெட்!

கும்மின்ஸ் இந்தியா லிமிடெட்!

கும்மின்ஸ் இந்தியா லிமிடெட்!

Published:Updated:

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள கம்பெனி கும்மின்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமான கும்மின்ஸ் இன்க் (INC) 1919-ம் ஆண்டு அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாகும். 196 நாடுகளில் தொண்ணூறுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுடனும், 600 டிஸ்ட்ரிப்யூட்டர்களுடனும் 1,500 டீலர்களுடனும் இயங்கிவருகிறது இந்த நிறுவனம். 1962-ம் ஆண்டு இந்தியாவில் கால்பதித்த இந்த நிறுவனம், எட்டு கம்பெனிகளாக (மூன்று மேனுபேக்சரிங் கூட்டணி மற்றும் ஒரு சர்வீஸ் கூட்டணி உற்பட) ஏறக்குறைய 9,000 பணியாளர்களுடன் சுமார் 198 பில்லியன் இந்திய ரூபாய் அளவிலான ஒட்டுமொத்த கூட்டமைப்பின் விற்பனை அளவினை தற்சமயம் கொண்டு திகழ்கிறது.

கும்மின்ஸ் இந்தியா லிமிடெட்!

இந்த நிறுவனம் பவர் ஜெனரேஷன், இண்டஸ்ட்ரியல், ஆட்டோமொபைல் மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன் என்ற நான்கு பிரிவுகளில் வியாபாரம் செய்கிறது. இண்டஸ்ட்ரியல் இன்ஜின் வியாபாரப் பிரிவில் இந்த நிறுவனம் 32 ஹெச்பி முதல் 3,500 ஹெச்பி வரையிலான இன்ஜின்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது. இந்தவகை இன்ஜின் கள் கட்டடம் கட்டும் நிறுவனங்கள், சுரங்க நிறுவனங்கள், மெரைன், ரயில்வே, விவசாயம், ஆயில் மற்றும் காஸ், மின்சார உற்பத்தி மற்றும் ராணுவம் போன்ற துறைகளில் பயன் படுத்தப்படுகிறது. பவர் ஜெனரேஷன் துறையைப் பொறுத்தவரை, ஏழரை முதல் மூவாயிரம் KVA வரையிலான இன்டெக்ரேட்டட் ஜெனரேட்டர் செட்களை உற்பத்தி செய்தும், எனர்ஜி மேனேஜ்மென்ட், கேப்டிவ் பவர் பிளான்ட் மற்றும் ஆல்டர்னேட்டர் களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆட்டோ மொபைல் துறையைப் பொறுத்தவரை, இந்த நிறுவனம் கமர்ஷியல் வாகனங்களின் தேவைக்கான இன்ஜின்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. புதிய தயாரிப்புகளின் விற்பனைக்குப் பிந்தைய உபகரணப் பாகங்களாகிய பில்ட்ரேஷன், டர்போ சார்ஜர்ஸ், எமிஷன் சொல்யூஷன்ஸ் மற்றும் லூப்ரிக்கன்ட் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டிஸ்ட்ரிப்யூஷன் பிசினஸையும் செய்துவருகிறது இந்த நிறுவனம். இதுவும் தவிர, சர்வீஸ் பிரிவில் இன்ஜின்கள் ஜென்செட்டுகள் போன்றவற்றுக்கான தேவைகளையும் பூர்த்திசெய்து வருகிறது கும்மின்ஸ் இந்தியா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொழில் எப்படி?

இந்தியாவில் ஒன்பது இடங்களில் இந்தக் குழுமத்தின் தொழிற்சாலைகள் இருக்கின்றன. புதிய உற்பத்தி நிலையமாக மஹாராஷ்டிராவில் பால்டன் என்ற இடத்தில் ஒன்பது நிலைகளில் மிகப் பெரிய உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவியுள்ள இந்த நிறுவனம், வேகமாக வளர்ந்து வரும் இன்ஜின் தேவைகளை இதன்மூலம் பூர்த்தி செய்ய முற்பட்டுள்ளது. 2013ம் ஆண்டுத் தொடங்கப் பட்ட இந்த உற்பத்தி வசதி பால்டனில் நிறுவப் பட்டுள்ள ஆறாவது கும்மின்ஸ் குழுமத்தின் ஜெனரேட்டர் செட் மற்றும் ஜெனரேட்டர் ட்ரைவ் இன்ஜின் உற்பத்தி வசதியாகும்.

கும்மின்ஸ் இந்தியா லிமிடெட்!

2016-ம் ஆண்டின் இறுதியில் 50,000 இன்ஜின்களை இந்த உற்பத்திவசதியில் உற்பத்தி செய்யமுடியும் என்று இந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது. இன்ஜினீயரிங் துறையில் இருப்பதால் இன்ஜினீயர்கள், கஸ்டமர்கள், டீலர்கள் என அனைவருக்குமே பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அதற்கு வழிவகைச் செய்யும் வகையில் பால்டனில் 1500  இன்ஜினீயர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வண்ணம் ஒரு பயிற்சி நிலையமும், 300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு   கன்ட்ரோல்கள் மற்றும் ஆல்டர்னேட்டர்கள் போன்றவைக் குறித்த பயிற்சி அளிப்பதற்காகப் பயிற்சி நிலையம் ஒன்றினையும் நிறுவியுள்ளது இந்த நிறுவனம். இந்தவகை விரிவாக்கங்கள் எதிர்காலத் தேவைகளைச் செவ்வனே பூர்த்தி செய்யும் என்பதால், லாபம் வளரும் என்று எதிர்பார்க்கலாம்.
 
பவர் ஜெனரேஷன் துறையைப் பொறுத்தவரை, சென்ற ஆண்டு பெரிய அளவிலான இன்ஜின் களுக்கான தேவை அதிகரிக்கவில்லை என்றே சொல்லலாம். ஏறக்குறைய 14 சதவிகித அளவுக்கு இன்ஜின்களுக்கான டிமாண்ட் சென்ற ஆண்டு குறையவே செய்தது. சிபீசிபி-2 என்ற ஜூன் 2014 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சுற்றுச்சூழல் கொள்கையினால் ஜெனரேட்டர்களின் விற்பனை இன்னமுமே நிலைபெறாமல் இருக்கிறது. இந்த வகைச் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு என்பதைக் கடைப்பிடிப்பது கட்டாயமாதலால், ஒவ்வொரு ஜெனரேட்டரிலும் நிறையவே இறக்குமதி செய்யப் பட்ட பாகங்கள் பொருத்தப்படுகின்றன. இந்தவகை இறக்குமதி செய்யப்பட்ட பாகங்கள் பொருத்தப்படு வதால், ஜெனரேட்டர் விற்பனையில் லாபம் கணிசமாகக் குறையவே செய்கிறது. 

போட்டியாளர்கள் பலரும் சிபிசிபி-2 சுற்றுச் சூழல் கொள்கையை எதிர்கொள்ள ‘எமிஷன் காஸ் ரீ சர்க்குலேஷன்’ என்ற டெக்னாலஜியைச் சார்ந்து இருக்கும் வேளையில் இந்த நிறுவனம் தனது சந்தைப்  பங்களிப்பை  தக்க வைத்துக்கொள்வதற்கான திட்டங்களைத் தீட்டி ‘செலக்ட்டிவ் கேட்டலைட்டிக் ரிடக்‌ஷன் டெக்னாலஜி’ என்ற புதிய  டெக்னாலஜியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேவைப் பட்டால் விலையைக் குறைத்து விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் இந்த இந்தியா நிறுவனம் ஈடுபடலாம். 

இந்திய ஜெனரேட்டர்கள் சந்தையில் ஏறக்குறைய 25 முதல் 30 சதவிகித அளவிலான சந்தைப் பங்களிப்பு 10 முதல் 50 சதவிகித ஹெச்பி  அளவிலான ஜெனரேட்டர்களே கொண்டுள்ளன. ‘லோ ஹார்ஸ் பவர் செக்மென்ட்’ என்ற இந்தப் பிரிவில் இந்த நிறுவனம் தற்சமயம் நல்லதொரு அனுபவத்துடன் திகழ்கிறது. இந்தவகை ஜெனரேட்டர் களைத் தயாரித்து விற்பதில் தனிக் கவனத்தை இந்த நிறுவனம் செலுத்த ஆரம்பித்து இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

 இந்த வகை ஜெனரேட்டர்கள் இந்த நிறுவன விற்பனையில் தற்சமயம் ஏறக்குறைய 5  சதவிகித அளவில் இருக்கிறது. ஜெனரேட்டர் ஏற்றுமதியில் குறைந்த குதிரை சக்தி கொண்ட ஜெனரேட்டர்களை ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் குறைந்த குதிரை சக்தி ஜெனரேட்டர் விற்பனையின் உலகளாவிய பங்களிப்பு சுமார் 5% மட்டுமே.

கும்மின்ஸ் இந்தியா லிமிடெட்!

ஏன் ட்ராக் செய்ய வேண்டும்?

கடந்த சில வருடங்களாகவே இந்த நிறுவனம் நிறைய விரிவாக்கத்துக்கான விதைகளை விதைத்து வந்துள்ளது. உதாரணத்துக்கு, லோ ஹார்ஸ் பவர் ஜெனரேட்டர்கள் உற்பத்தி மற்றும் உள்நாட்டு/வெளிநாட்டு விற்பனை, ரீகண்டிஷன் செய்து தருதல், பழைய ஜெனரேட்டரைப் புதிதாக்கி தரும்  சேவையைத் தருதல் போன்ற பல செயல்களையும் செய்ய ஆரம்பித்துள்ளது இந்த நிறுவனம். இது லாபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

அதேபோல் குறைந்த குதிரை சக்தி கொண்ட ஜெனரேட்டர்கள் உற்பத்தி மற்றும் உள்நாட்டு/வெளிநாட்டு விற்பனையும் லாபத்தைக் கொஞ்சம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

 சிபிசிபி-2 சுற்றுச்சூழல் கொள்கையின்படி உற்பத்தியாகி விற்பனையாகும் ஜெனரேட்டர்கள் விற்பனையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தவகை ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்யும் வசதியை இந்த நிறுவனம் பால்டனில் நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

 இந்த நிறுவனத்தின்  தாய் நிறுவனம் அமெரிக்க நிறுவனமாக இருப்பதால் சிபிசிபி-2 சுற்றுச்சூழல் கொள்கையைக் கடைப்பிடிப்பதற்கான டெக்னாலஜியை சுலபத்தில் பெற்று இந்தியாவிலேயே இந்த நிறுவனம் அதற்கான தொழில்நுட்பங்களுடன் கூடிய உதிரிபாகங்களைக் கூடியவிரைவில் தயாரிக்க ஆரம்பித்துவிடும்.  இதனால் இறக்குமதி செய்யப்படும் பாகங்களின் அளவு ஜெனரேட்டர்களில் குறைய ஆரம்பிக்கும். அதனால் குறைந்த விலையில் ஜெனரேட்டர்களை விற்பனை செய்து இந்த நிறுவனத்தினால்  அதிக விற்பனை இலக்கை எட்ட முடியும்.

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

பொருளாதார வளர்ச்சியை முழுமையாக நம்பி இருக்கும் தொழில்  என்பதால் இந்த நிறுவனம் செயல்படும் மின்சார ஜெனரேட்டர் மற்றும் இன்ஜின் துறை, ஏதாவது ஒரு காரணத்தினால் பொருளாதாரம் எதிர்பார்த்த வகையில் வளர்ச்சியடையாவிட்டால் விற்பனை குறைந்து இந்த நிறுவனத்தின் லாபமும் குறைய வாய்ப்புள்ளது. புதிய டெக்னாலஜிகள், மாசுக் கட்டுப்பாடு சட்டங்கள் போன்ற பலவும் இந்த நிறுவனத்தின் லாபத்தைப் பாதிக்க வல்லது.

சிக்கல்கள் பல வருவதற்கு வாய்ப்பிருந்தாலும், நீண்ட அனுபவமும்; அமெரிக்கத் தொழில் நுட்பமும் ; அந்த நிறுவனத்தைத் தாய் நிறுவனமாகக் கொண்டிருப்பதும்; இந்த நிறுவனத்தின் தனிச் சிறப்பாகும்.

 புதிய டெக்னாலஜிகளை அறிமுகப் படுத்துவதில் இது மிகவும் உதவியாக இருக்கும். இதனாலேயே இந்த நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் நீண்ட நாள் முதலீட்டுக்காகச் சரியானதொரு விலை இறக்கம் வரும்போது சிறிய எண்ணிக்கையில் வாங்குவதற்காக ட்ராக் செய்யலாம்.

- நாணயம் ஸ்கேனர்

 
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின்  தனிப்பட்ட முடிவாகும்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism