Published:Updated:

உலகின் மனிதவளத் தலைநகராகும் இந்தியா!

டீம்லீஸ் சேர்மன் மனீஷ் சபர்வால் சிறப்புப் பேட்டி!

கைநிறைய சம்பளம், வார இறுதி நாட்களில் விடுமுறை, சொகுசு வாழ்க்கை, அலுவலகத் துக்குச் சென்றுவர அலுவலகமே ‘பிக்-அப் அண்ட் ட்ராப்’ வசதி, இரண்டு வருடத்தில் ஆன்-சைட் டூட்டி... இப்படி எல்லோருக்கும் கனவு வேலையாக இருந்தது ஐ.டி துறை வேலைவாய்ப்புகள். ஆனால், சமீபத்தில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் துவங்கி பன்னாட்டு நிறுவனங்கள் வரை அனைத்து ஐ.டி நிறுவனங்களும் ஆட்களைப் புதிதாகச் சேர்ப்பதை விட ஆட்களைக் குறைப்பதிலேயே அதிக ஆர்வம்காட்டி வருகின்றன என்ற செய்திகள் வந்தவாறு உள்ளன. இந்த நிலை உண்மை தானா, இதற்கு என்ன காரணம், அடுத்து என்ன மாதிரியான துறைகளில் பிரகாசமான வேலை வாய்ப்புகள் இருக்கும் என்கிற கேள்வியை டீம்லீஸ் நிறுவனத்தின் சேர்மன் மனீஷ் சபர்வாலிடம் கேட்டோம்.

உலகின் மனிதவளத் தலைநகராகும் இந்தியா!

‘‘ஐ.டி துறையில் வேலைவாய்ப்புகள் குறைவது உண்மைதான். ஆனால், ஐ.டி நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப ஆட்களைக் குறைக்கின்றனவே தவிர, ஐ.டி துறையில் அதிகம்பேர் வேலையைவிட்டுச் செல்கிறார்கள் என்று கூறமுடியாது. ஐ.டி துறையை விட இன்னும் சில துறைகளில் அதிகம்பேர் வேலையைவிட்டுச் செல்வதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. உதாரணமாக, மார்க்கெட்டிங் மற்றும் ரீடெயில் பொருட்கள் விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள் ஐ.டி துறையில் உள்ளவர்களைவிட அதிகமான எண்ணிக்கையில் வேலையை விட்டுச் செல்கிறார்கள். ரீடெயில் துறையில் வேலையைவிட்டு வெளியேறுபவர்களின் சதவிகிதம் 9.2 சதவிகிதமாகவும், வங்கி மற்றும் நிதித் துறையில் 9 சத விகிதமாகவும் உள்ளது. ஆனால், ஐ.டி துறையில் இந்த விகிதம் 8.8 சதவிகிதம் மட்டுமே.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதனால் ஐ.டி துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டன என்றில்லை. இனி, ஐ.டி துறைகளில் வேலைவாய்ப்பைத் தேடுவது ரிஸ்க்கானது என்று நினைப்பதும் தவறு. ஐ.டி துறையில் பெரிய நிறுவனங்கள் அதிகமான எண்ணிக்கையில் ஆட்களை எடுத்திருந்தன. ஆனால், இப்போது தங்களது தேவைக்கு ஏற்ப நபர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கவும், செலவினங்களைக் குறைக்கும் முயற்சியிலும் சற்று பெரிய அளவிலான முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பை மேற்கொள்கின்றன.

இது ஒருபக்கமிருக்க, இன்னொரு பக்கம் ஐ.டி துறை வேகமாக வளரத் துவங்கியுள்ளது. முன்பு ஐ.டி துறை வேலை என்பது பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான சேவை தயாரிப்புகளைத் தயாரித்துக் கொடுப்பதாகவே இருந்தது. தற்போது, இவை விரிவடைந்து இரண்டாவது கட்ட ஐ.டி துறை வேலைகளை ஊக்குவிக்கும் இ-காமர்ஸ் துறை, அரசுத் துறைகளின் டிஜிட்டல் மயமாக்கம் ஆகியவற்றில் பெரும்பாலான வேலைவாய்ப்புகள் உருவாகத் துவங்கியுள்ளன.

இ-காமர்ஸ் துறை ஒரு ஐ.டி துறை அல்ல என்றாலும், அது ஒரு வணிகம் செய்யும் தளம். அதற்கு லாஜிஸ்டிக்ஸ் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு ஐ.டி துறையின் உதவியும் முக்கியம்.

ஒரு இ-காமர்ஸ் தளத்தின் பொருட்கள் வாங்கும் இணையதளத்தை வடிவமைப்பது துவங்கி, பொருள் எந்த இடத்தில் சென்று சேருகிறது என்பது வரை எல்லா வேலை களையும் வடிவமைப்பது ஐ.டி துறையின் பணிதான். எனவே, இந்த வேலைக்கான வாய்ப்புகள் இ-காமர்ஸ் துறையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகின் மனிதவளத் தலைநகராகும் இந்தியா!

இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஐ.டி நிறுவனங்களைவிட அதிக அளவில் சம்பளம் தரத் தயாராக இருப்பதால், பெரிய ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கூட இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர்.

தவிர, அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டமும் ஐ.டி துறையை மேம்படுத்தும் விதமாகவும், அதில் வேலைவாய்ப்புகளை உருவாக் கவும் உதவுகிறது என்பதால், இந்தத் துறையில் வேலைவாய்ப்பு கள் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தில் இருக்கும்’’ என்று விளக்கினார் மனீஷ்.

இந்தத் துறையைத் தாண்டி இந்தியாவில் வேறு எந்தத் துறைகளில் புதிய வேலைவாய்ப்பு கள் உருவாகி வருகின்றன, இனி எந்தெந்த துறை அதிக அளவில் வளர்ச்சி அடையும், அதற்குக் காரணங்கள் என்ன என்று அவரிடமே கேட்டோம். அதற்கும் அவர் விரிவான பதிலளித்தார்.

‘‘இந்தியாவில் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பற்றிப் பேசும்போது சில விஷயங்களை நாம் கட்டாயம் கவனித்தாக வேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் திறன் இரண்டுக்கும் உள்ள ஏற்ற இறக்கங்கள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன.

திறன் மேம்பாடு என்பது இந்தியாவில் குறைவாகவே உள்ளது. சிறிய மற்றும் பெரிய அளவில் இந்தியாவில் சுமார் 63 மில்லியன் நிறுவனங்கள் இயங்கி வந்தாலும் 14,000 நிறுவனங்கள் மட்டுமே சிறப்பாக இயங்கி வருகின்றன. வேலைவாய்ப்புகள் அதிகரிக்க இந்தியாவில் தொழில் செய்யத் தகுந்த சூழ்நிலை (Ease of Doing Business) உருவாக வேண்டும்.

தற்போது உள்ள கல்வி முறை யில் இருந்து வருபவர்களுக்குப் படிப்பறிவு அதிகமாக இருந்தாலும், அனுபவ அறிவு அதிகம் இருப்பதில்லை. அதனைப் பயிற்றுவிக்கும் கல்விக்கூடங்களின் எண்ணிக்கையும் அளவில் குறைவாக உள்ளது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பொறியியல் மாணவர் சேர்க்கையில் லட்சக்கணக்கில் இடங்கள் காலியாக இருப்பதுதான். மற்ற துறைகளிலும் ஏறக்குறைய இதே நிலைதான் நீடிக்கிறது.

இதனைச் சரிசெய்ய இந்தியாவில் செயல்முறை அறிவு உள்ள பாடத்திட்டங்களைப் பயிற்சிகளோடு சேர்த்து வழங்க வேண்டிய நிலை உள்ளது. அதனைச் சரிசெய்ய நாங்கள் மத்திய அரசுடன் இணைந்து பட்டப்படிப்புடன் கூடிய தொழில் பழகும் (Apprentice) படிப்பை வழங்கத் திட்டமிட்டுளோம்.

இதில் சுற்றுலா வளர்ச்சி, ஐ.டி, மெக்கட்ரானிக்ஸ் மற்றும் ஃபைனான்ஸ் ஆகிய துறைகளில் இந்தப் படிப்பை படிக்க முடியும். இந்தத் திட்டத்துக்கு ‘நெட்ஆப்’ (NETAPP) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம் திறனுள்ள பணியாளர்களை உருவாக்க முடியும். இதன் நோக்கமே பட்டப்படிப்பு முடித்தவருக்கு அதிகத் திறன் இருக்கவேண்டும் என்பதே.

உலகில் அடுத்த 10 வருடங்களில் உருவாகவுள்ள புதிய பணியாளர்களில் 25 சதவிகிதம் பேர் இந்தியர்களாக இருப்பார்கள் என்கிறது ஆய்வு. அதற்கேற்ப இந்தியாவில் தற்போது புதிய திட்டங்களும் உருவாகி வருகிறது. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் உற்பத்தி, கட்டுமான துறைகளின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால் இந்தத் துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, வேகமாக வளர்ந்துவரும் இ-காமர்ஸ் துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

ஐ.டி துறை மற்றும் ரீடெயில் துறைகளில் 12 சதவிகிதத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளும்,  உற்பத்தி, வங்கி மற்றும் ஃபைனான்ஸ் துறைகளில் 8 சத விகிதத்துக்கும் அதிகமான வாய்ப்புகளும் இந்த ஆண்டுக்குள் உருவாகும். ஐ.டி துறை மட்டுமே வேலை அதிகம் தரும் துறை என்று இல்லாமல் அனைத்துத் துறை களிலும் கொண்டு வரப்படும் திட்டங்களால் அனைத்து துறை களும் மேம்படும்.

கல்லூரியில் மெக்கானிக்கல் முடித்த மாணவர்கள் அவர் களுக்கான வேலையைச் செய்யாமல், ஐ.டி துறையில் வேலைக்குச் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால், திறன்களை வளர்த்துக்கொண்டு அதற்கான வாய்ப்புகளும் உருவாகும்போது அவரவர் துறையிலேயே வேலைக்குச் செல்லும் வாய்ப்புகள் உருவாகும்.

உற்பத்தியை வளர்க்கும் மேக் இன் இந்தியா, டிஜிட்டல் மயமாக்கலில் உதவும் டிஜிட்டல் இந்தியா, பணியாளர்களின் திறனை வளர்க்கும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், தொழில் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை நீண்ட காலத்தில் நிறைவேறும்போது அடுத்த 10 வருடங்களில் இந்தியாவில் மாதம் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் நிலை ஏற்படும். இளைஞர்களின் விகிதம் இதில் அதிகம் இருக்கும் என்பதால், இந்தியா உலக நாடுகளுக்குத் தொழில் செய்வதில் மற்றும் பணிகளுக்குத் தேவையான மனிதவளங்களை உருவாக்குவதில் உலக நாடுகளின் மனிதவள தலைநகரமாக விளங்கும் என்பதில் ஆச்சர்யமில்லை’’ என்றார்.

இனிவரும் காலம் திறமைசாலி களுக்கானது என்பதால், இன்றைய இளைஞர்கள் படிப்பறிவுடன் சிறப்பாக வேலை செய்யும் திறமையையும் பெற்றால் வேலையும் வளமான எதிர்காலமும் நிச்சயம் என்பதில் சந்தேகமே இல்லை!

ச.ஸ்ரீராம்