Published:Updated:

அவுட்லயர்ஸ்

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 48

அவுட்லயர்ஸ்

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்! 48

Published:Updated:
அவுட்லயர்ஸ்
அவுட்லயர்ஸ்

அது 1931-ம் வருடம், செப்டம்பர் 9-ம் தேதி...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெய்ஸி நேஷன் என்கிற இளவயது பெண்ணொருத்தி இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். மத்திய ஜமைக்காவில் ஹாரேவுட் என்கிற கிராமத்தைச் சேர்ந்த செயின்ட் கேதரின் தேவாலய மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண்ணும் அவளது கணவர் டொனால்டும் பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்தார்கள். பிறந்த குழந்தைகளுக்கு அவர்கள் ஃபெயித், ஜாய்ஸ் என்று பெயரிட்டனர்.

அவுட்லயர்ஸ்

நேஷன் குடும்பத்தினர் ஹாரேவுட்டில் இருந்த, இங்கிலாந்து நாட்டு திருச்சபையைச் சார்ந்த தேவாலயத்தில் இருந்த ஒரு காட்டேஜில் வசித்து வந்தனர். அவர்கள் வேலை பார்த்து வந்த பள்ளிக்கூடம் அதற்கு அருகிலேயே இருந்தது. சில சமயங்களில் ஒரு அறையில் முந்நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் மற்ற அறைகளில் இரண்டு டஜனுக்கும் குறைவான குழந்தைகளும் இருப்பார்கள். குழந்தைகள் மிகவும் சத்தமாகப் படிக்கவோ அல்லது வாய்ப்பாட்டை மனனம் செய்தபடியோ இருப்பார்கள்.

ஸ்லேட்டில்தான் எழுது வார்கள். சில நேரங்களில் தேவைப்பட்டால் வெளியே மாமரத்திற்குக் கீழே வகுப்புகள் நடக்கும். குழந்தைகளைக் கட்டுப்படுத்த டொனால்ட் நேஷன் அந்த அறையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு ஒரு குச்சியை சுழற்றிக் கொண்டே நடப்பார். குழந்தைகளும் இதைப் பார்த்தவுடன் சட்டென்று அடங்கிவிடுவார்கள்.

இவர் அடக்கமானவர், மற்றவர்களால் மதிக்கப் பட்டவர். புத்தகங்களின் மீது தீராத காதல் கொண்டவர். இவருடைய சிறிய நூலகத்தில் கவிதை, தத்துவம், நாவல்கள் என தரமான பல புத்தகங்கள் இருந்தன. ஒவ்வொரு நாளும் இவர் மிகவும் கவனத்துடன் பத்திரிகையைப் படித்து உலகெங்கிலும் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வார். ஜமைக்காவின் பிரச்னைகள் குறித்து நண்பர்களுடன் அலசிக் கொண்டிருப்பார்.

##~##
டொனால்டின் மனைவி செயின்ட் எலிசபெத் தேவாலயத்தைச் சேர்ந்தவர். திருமணத்திற்கு முன் அவருடைய பெயர் ஃபோர்ட். அவருடைய அப்பா ஒரு சிறிய பலசரக்குக் கடை வைத்திருந்தார். இவரையும் சேர்த்து மூன்று பெண்கள்.  இது இவ்வாறு இருக்க... பிறந்து வளர்ந்த இரட்டையர்களுக்குப் பதினொரு வயதில் நார்த் கோஸ்ட்டில் உள்ள செயின்ட் ஹில்டா பள்ளிக்கூடத்தில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது.

இது மிகவும் பழமையான ஒரு ஆங்கிலப்பள்ளி. செயின்ட் ஹில்டாவிலிருந்து அவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருந்தார்கள். அங்கும் அவர்களுக்கு அட்மிஷன் கிடைத்தது.அதற்குப்பின், ஜாய்ஸ் 21 வயது நிரம்பிய ஆங்கில கணிதவியலாளரான கிரஹாமின் பிறந்தநாள் விருந்துக்குச் சென்றிருந்தார். அவர் எழுந்து ஒரு பாடலை பாட ஆரம்பித்து இடையில் சில வரிகள் மறந்து போனதால் அப்படியே நிறுத்திவிட்டார். இதன்பிறகு ஜாய்ஸும், கிரஹாமும் காதலில் விழ... அது அவர்களின் கல்யாணத்தில் முடிந்தது.

அதற்குப் பிறகு அவர்கள் கனடாவிற்குச் சென்றார்கள். ஜாய்ஸ் மிகவும் பிரபலமான எழுத்தாளரும், குடும்ப தெரப்பிஸ்ட்டும் ஆனார். அவர்களுக்கு மூன்று மகன்கள். நகரத்தை விட்டு தள்ளி குன்றின் மீது அழகான வீடு கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். கிரஹாமின் பின்பாதிப் பெயர் கிளாட்வெல். அது வேறு யாருமல்ல... எனது அப்பா. புரிந்ததா..? ஜாய்ஸ் கிளாட்வெல் வேறு யாருமல்ல... மால்கம் கிளாட்வெல் ஆகிய என் அம்மா!

அவுட்லயர்ஸ்

ஒரு சாதாரண பள்ளி ஆசிரியரின் மகளான என் அம்மா வெற்றிகரமானவராக மாறியது எப்படி? என்பதைத் தெரிந்து கொள்ள அவருக்கு கிடைத்த வாய்ப்புகளையும், அவர் பிறந்து வளர்ந்த குடும்பத்தின் கலாசார மரபுரிமை பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆண்டு 1935... எனது அம்மாவுக்கும் அவருடைய சகோதரி ஃபெய்த்துக்கும் வயது நான்கு. அப்போது வரலாற்றாசிரியர் வில்லியம் எம்.மேக்மில்லன் ஜமைக்காவிற்கு வந்திருந்தார். அந்த சமயத்தில் அவர் தென் ஆப்பிரிக்காவில் ஜோஹன்ஸ்பர்க்கிலிருந்த யுனிவர்சிட்டி ஆஃப் விட்வாட்டர்ஸ்ராண்ட்டில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். மேக்மில்லன் அவர் காலத்திற்கு முன்னால் உள்ள தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் தென் ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் சம்பந்தப்பட்ட சமூகப் பிரச்னையில் அதிக கவனம் செலுத்தி வந்தவர். அவர் தென் ஆப்பிரிக்காவில் என்ன விவாதம் செய்தாரோ... அதையே இந்த கரிபியன் நாட்டிலும் செய்ய வந்தார்.

அனைத்து சமூகப் பிரச்னை களிலும் தலையாயதாக மேக்மில்லன் கருதியது - ஜமைக்காவின் கல்வித் திட்டம். ஜமைக்காவில் பப்ளிக் பள்ளிக்கூடங்களோ அல்லது பல்கலைக்கழகங்களோ இல்லை. உயர்படிப்பு படிக்க வேண்டு மென்ற ஆர்வம் உள்ளவர்கள், பள்ளியிலேயே தலைமை ஆசிரியரிடம் தங்களுடைய டீன் ஏஜ் பருவத்தில் அதிகப்படியான வகுப்புகள் எடுத்துக் கொள்வார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் அவர்கள் ஆசிரியர்களுக்கான கல்லூரியில் சேர்வார்கள். இன்னும் அதிகப்படியான ஆசை உள்ளவர்கள், எப்படியோ பிரைவேட் பள்ளிக் கூடத்தில் சேர்ந்துவிடுவார்கள். அதற்குப் பிறகு அங்கிருந்து அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் போய்ச் சேர்ந்துவிடுவார்கள்.

மிகவும் குறைவான ஸ்காலர்ஷிப்கள்தான் உண்டு; அதுவும் கிடைப்பது அரிது. பிரைவேட் பள்ளிக் கூடங்களில் படிப்பதற்கு செலவு அதிகம் ஆகும். எனவே, அதில் ஒரு சிலர்தான் சேர்ந்து படிக்க முடியும். இங்குள்ள கல்விமுறை, சமூகத்தில் நலிந்தவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறிய மேக்மில்லன், இந்தப் பள்ளிக் கூடங்கள் சமூகத்தில் வேற்றுமையை இன்னும் அதிகப்படுத்தினாலோ, அரசாங்கம் மக்களுக்கு வாய்ப்புகள் வழங்கா விட்டாலோ வெகு சீக்கிரமே சமூகக் கிளர்ச்சிகள் உருவாகும் எனவும் எச்சரித்தார்.

மேக்மில்லனுடைய புத்தகம் வெளியானதற்குப் பிறகு... அவர் கணித்தது போலவே கரிபியனில் குழப்பங்களும், போராட்டங்களும் வெடித்தன. இதனால் டிரினிடாட்டில் 14 பேர் கொல்லப்பட்டார்கள். பார்படோஸில் 14 பேர்கள் கொல்லப்பட்டார்கள். ஜமைக்காவில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்தன. இதனால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இதையெல்லாம் பார்த்து பயம் கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், மேக்மில்லனின் எச்சரிக்கை மற்றும் ஆலோசனையை தீவிரமாக எடுத்துக் கொண்டது. மற்ற சீர்திருத்தங்களுடன், அந்த தீவு முழுவதும் கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு வேண்டிய ஸ்காலர்ஷிப் வழங்குவதாகவும் அவசரமாக அறிவித்தது. ஸ்காலர்ஷிப்புகள் 1941-லிருந்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டுதான் என்னுடைய அம்மாவும், அவருடைய சகோதரியும் ஸ்காலர்ஷிப்பிற்கான தேர்வு எழுதினார்கள். இப்படியாகத்தான் அவர் களுக்கு உயர்நிலைப்பள்ளிக் கல்வி கிடைத்தது.

இப்போது நினைத்துப் பாருங்கள்... அவர்கள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பிறந்திருந்தால்... குறிப்பிட்ட வயதை அடையும்போது ஸ்காலர்ஷிப் அறிவிப்பே இருந்திருக்காது. அவர்களுக்குப் படிப்புக்கான உதவி கிடைத்திருக்காது. என் அம்மாவும் அவர் சகோதரியும் முழுக் கல்வியைப் பெற்றிருக்க இயலாது.

தவிர, எனது பாட்டி டெய்ஸி நேஷன் எடுத்த சில முடிவுகளும் மிக முக்கியமானவை. என் அம்மாவையும் சித்தியையும் ஹாரேவுட்டை விட்டு செயின்ட் ஹில்டாவிற்குப் படிக்க அனுப்பினார். என் தாத்தாவுக்கு தன் மகள்கள் பற்றி ஏதாவது குறிக்கோள் இருந்திருந்தாலும் அவரிடம் அதை நிறைவேற்றுவதற்கான பரந்த பார்வையும், சக்தியும், தீர்க்கதரிசனமும் இல்லை. ஆனால், என் பாட்டியிடம் அது இருந்தது. பாட்டிக்கு செயின்ட் ஹில்டா பற்றிய யோசனை வந்ததற்கான காரணம் - அந்தப் பகுதியைச் சேர்ந்த பணக்காரக் குடும்பத்தினர் தங்களுடைய மகள்களை அங்குதான் அனுப்பியிருந்தனர். அவருடைய மகள்கள் கிராமத்தில் இருந்த மற்ற குழந்தைகளுடன் விளையாடு வதற்குப் பதில் லத்தீன், அல்ஜீப்ரா போன்ற பாடங்களைக் கற்க முன்வந்தனர். அவை உயர்நிலைப் பள்ளிக்கு மிகவும் அவசியம்.

எனவேதான் அதற்கென்றே தனியாக பாடம் கற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்தார் பாட்டி. அவருடைய குறிக்கோள் எல்லாம்,  ''பெரிய படிப்புக்கு வாய்ப்பு இல்லாத இந்த இடத்திலிருந்து வெளியேறுவதுதான்'' என்றுகூட அவர் சொல்லி இருப்பார்.  

ஸ்காலர்ஷிப் தேர்விற்கான முடிவு வந்தபோது சித்திக்கு மட்டும்தான் ஸ்காலர்ஷிப் கிடைத்ததாம். ஆனால், அவர்கள் ஒரு மகளை தங்களிடமே வைத்துக் கொண்டு இன்னொரு மகளை மட்டும் எப்படி அனுப்புவார்கள்? பாட்டியைப் பொறுத்தவரை கண்டிப்பாக இருவரையும் அனுப்ப வேண்டும் என்றே விரும்பினார். பள்ளிக் கூடத்தின் முதல் டேர்ம் முடியும்போது, அந்தப் பள்ளியில் படித்த இன்னொரு மாணவிக்கு இரண்டு ஸ்காலர்ஷிப்புகள் கிடைத்திருந்தன. இந்த இரண்டாவது ஸ்காலர்ஷிப்பை என் அம்மாவிடம் தந்தனர்.  

அவுட்லயர்ஸ்

அதேபோல், பல்கலைக் கழகம் செல்லக்கூடிய சமயம் வரும் போது சித்திக்கு 'சென்ட்னரி ஸ்காலர்ஷிப்’ கிடைத்தது. இதில் உள்ள 'சென்ட்னரி’ என்ற சொல், ஜமைக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு நூறாண்டுகளுக்குப் பிறகு நிறுவியதால் வந்தது. இந்த ஸ்காலர்ஷிப், பொது ஆரம்பப் பள்ளிகளில் படித்துவிட்டு வந்த பட்டதாரிகளுக்குக் கொடுக்கப் பட்டது. இந்த ஸ்காலர்ஷிப் தீவு முழுவதிலுமுள்ள மாணவர்கள் நூறு பேர்களுக்கு வழங்கப்படும்.

முதலாவதாக வரும் மாணவி, மாணவன் என மாறி மாறி இந்தப் பரிசு வழங்கப்படும். எனது சித்தி இதற்கு விண்ணப்பித்த வருடம் - ஒரு மாணவிக்கு அந்த வாய்ப்பைத் தரவேண்டிய வருடம். ஆக, ஒரு வருடம் முந்தியோ பிந்தியோ என் சித்தி பிறந்திருந்தால்... இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. அதேசமயம், இரட்டையரில் ஒருவராகப் பிறந்திருந்த என்னுடைய அம்மாவிற்கு அந்த வாய்ப்பு இல்லை.

என்னுடைய அம்மா இங்கிலாந்து செல்வதற்கு, அறை வாடகை, அன்றாட செலவு மற்றும் கல்விக் கட்டணம் என எல்லாவற்றிற்கும் செலவு செய்ய வேண்டியிருந்தது. அம்மா யுனிவர்சிட்டி ஆஃப் லண்டனில் சேர்ந்திருந்தார். அங்கே செலவழித்த தொகை, என் தாத்தா, பாட்டி ஆகியோர் ஆண்டு முழுவதும் சம்பாதித்த வருமானத்திற்குச் சமமானது! அப்போதெல்லாம் மாணவர் களுக்கென்று படிப்புக்கு கடன் தரும் வழக்கம் இல்லை.

அப்புறம் என்னதான் செய்தார்?

பக்கத்திலிருந்த ஒரு சீன வியாபாரியின் கடைக்குச் சென்றார். 19 -ம் நூற்றாண்டி லிருந்து ஜமைக்காவில் சீன மக்கள் கொஞ்சம் கணிசமான அளவில் இருந்தனர். பெரும்பாலோர் வர்த்தகத் துறையில் ஈடுபட்டிருந்தனர். ஐமைக்காவில் சீனர்களுடைய கடைக்கு 'சின்னி ஷாப்’ என்று பெயர். என் பாட்டி அந்த மாதிரியான ஒரு 'சின்னி ஷாப்’பிற்கு சென்றார். அதை நிர்வகித்து வந்தவர் மிஸ்டர் சான்ஸிடம் கடனுக்குப் பணம் வாங்கி வந்தார். அவர் தன் சக்திக்கும் மீறிய ஒரு தொகையை கடனாக வாங்கினார். ஆனால், வாங்கிய கடனுக்கான தவணையை தவறாமல் கட்டி வந்தார். அதற்கும் மேலே சொல்ல வேண்டுமானால், என் பாட்டி டீச்சராக இருந்த பள்ளியில்தான் சான்ஸின் குழந்தைகள் படித்தார்கள்.

தன் கடந்த காலம் பற்றி அம்மா என்னிடம் தொடர்ந்து நினைவு கூரும்போது, 'அது எப்படியோ நடந்தது... நான் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தேன். எனக்கு இடம் கிடைத்தது. நான் எனது அம்மாவின் மேல் உள்ள நம்பிக்கையால் தொடர்ந்து பாடுபட்டுப் படித்தேன்' என்றார்.

இந்த வெற்றிக்கதைக்கு உரமாக அமைந்த அற்புதமான சிறப்புக் காரணிகள் அதோடு முடிந்துவிடவில்லை...

(விதை விருட்சமாகும்)
Copyright © 2008 by Malcolm Gladwell

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism