Published:Updated:

ராஜரத்தினம் மட்டும்தான் குற்றவாளியா?

விருந்தினர் பக்கம்

ராஜரத்தினம் மட்டும்தான் குற்றவாளியா?

விருந்தினர் பக்கம்

Published:Updated:
ராஜரத்தினம் மட்டும்தான் குற்றவாளியா?


இன்சைடர் டிரேடிங் செய்த குற்றத்திற்காக அமெரிக்க நீதிமன்றத்தால் 11 ஆண்டுகால சிறைத் தண்டனை அடைந்திருக்கிறார் ராஜரத்தினம். இந்த நிகழ்ச்சியைப் பார்த்த நம்மவர்கள் அமெரிக்காவில் நீதிநெறி தழைத்தோங்குவதாகவும், நம்மூரில் அப்படி இல்லையே என்றும் வருத்தப்பட ஆரம்பித்து இருக்கிறார்கள். இப்படி கவலைப்படுவதில் எந்த நியாயமும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியவில்லை.

ராஜரத்தினம் மட்டும்தான் குற்றவாளியா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜரத்தினம் இன்சைடர் டிரேடிங் குற்றம் செய்தார் என்பதற்காக கடுமையாகவே தண்டிக்கப் பட்டிருக்கிறார். ஆனால், நான் கேட்க விரும்பும் கேள்வி, அமெரிக்காவில் குற்றம் செய்தது ராஜரத்தினம் மட்டும்தானா?  

ஓராண்டுக்கு முன்பு 'இன்சைட் ஜாப்’ என்கிற டாகுமென்டரி படம் வெளியானது. கடந்த முப்பதாண்டுகளில் கோல்டுமேன் சாக்ஸ், மெரில் லிஞ்ச், சிட்டி பேங்க் போன்ற மிகப் பெரிய தனியார் முதலீட்டு வங்கிகள் அமெரிக்கப் பொருளாதாரத்தை எப்படி எல்லாம் சீர்குலைத்தன என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னது இந்தப் படம். அமெரிக்கப் பொருளாதாரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்ததே இந்த வங்கிகள்தான் என்கிற உண்மையை இந்தப் படம் நறுக்கென்று எடுத்துச் சொல்லும்போது நமக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

 சில தனியார் வங்கிகளின் சி.இ.ஓ-கள் அரசு நிதித் துறை செயலாளர்களாகவும், நிதித் துறை செயலாளர்கள் தனியார் வங்கிகளின் சி.இ.ஓ-களாகவும் ஆகி, அமெரிக்கப் பொருளாதாரத்தையே அவர்கள் இஷ்டத்திற்கு மாற்றி அமைத்திருக்கின்றனர். கடந்த காலத்தில்தான் இப்படி நடந்தது என்றால், ஒபாமா ஆட்சிக்கு வந்தபிறகும் இந்த நடைமுறை தொடரவே செய்தது.

தங்கள் நன்மைக்காக நாட்டின் பொருளாதாரத்தையே நாச மாக்கிய இந்த நிறுவனங்களுக்கு இதுவரை எந்த தண்டனையும் கிடைக்கவில்லை! இன்றும்கூட இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் எந்த பிரச்னையும் இல்லாமல் சௌக்கியமாகத்தான் இருக்கிறார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஊருக்கு இளைச்சவனைத்தான் சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டிக்க முடியும். ராஜரத்தினத்துக்கு அமெரிக்க முதலீட்டு வட்டாரத்தில் பெரிய ஆதரவு ஒன்றும் கிடையாது. எனவே, தவறு செய்தவுடன் அவரைப் பிடித்து தண்டித்துவிட்டார்கள்.

##~##
ஆனால், மக்களின் சொத்துக்களை கொள்ளை அடித்தவர்கள் இன்றைக்கும் வால் ஸ்ட்ரீட்டில் ஜாலியாகச் சுற்றி வரத்தானே செய்கிறார்கள்? அவர்களையும் தண்டிப்பதுதானே சரி? சரி, நம்மூருக்கு வருவோம். ராஜரத்தினம் போன்றவர்கள் நம்மூரிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இங்கும் இன்சைடர் டிரேடிங், சர்க்குலர் டிரேடிங் என பல குற்றங்கள் நடக்கவே செய்கிறது. ஆனால், எந்த குற்றத்திற்காகவும் தனிநபர்களோ, நிறுவனங்களோ  தண்டிக்கப்படுவதில்லை. காரணம், குற்றம் செய்தவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவதில் நம்மூரில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

இதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், போனில் பேசுவதை ரெக்கார்ட் செய்வது. ஒருவர் போனில் பேசுவதை ரெக்கார்ட் செய்வதற்கான உரிமை இன்கம் டேக்ஸ், சி.பி.ஐ., ரா போன்ற ஐந்தாறு அமைப்புகளுக்கு மட்டுமே இருக்கிறது.

இந்த நிறுவனங்களும் நினைத்த நேரத்தில் யாருடைய பேச்சை வேண்டுமானாலும் ரெக்கார்ட் செய்துவிட முடியாது. இன்னார் போனில் பேசுவதை ரெக்கார்ட் செய்ய அனுமதி வேண்டும் என உயரதிகாரிகளிடம் கேட்டு வாங்கிய பிறகே செய்ய முடியும். அப்படியே கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி, பேச்சை பதிவு செய்தாலும் அதை ஒரு ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது. காரணம், அந்த ஆதாரத்தை நம் சட்டம் ஒப்புக் கொள்ளாது. இது மாதிரி பல சிக்கல்கள் இருப்பதால் நம்மூரில் தவறு செய்தவர்கள் எளிதில் தப்பித்துவிடுகிறார்கள்.

மேலும், அமெரிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு எண்பதாண்டு கால வரலாறு கொண்டது. பல்வேறு குற்றங்களைப் பார்த்து பார்த்து, அதன் அடிப்படையில் பல்வேறு புதிய விதிமுறைகளை உருவாக்கியதன் மூலம் குற்றம் நடப்பதற்கான வாய்ப்புகளைக் குறைத்திருக்கிறது. ஆனால், நம்மூர் பங்குச் சந்தையை ஒருங்கிணைக்கும் செபி-க்கு இருபது ஆண்டுகளே பூர்த்தி ஆகியிருக்கிறது. இது ஒரு வளர்ந்துவரும் அமைப்பு என்பதால், நடக்கிற குற்றங்களுக்கு ஏற்ப புதுப்புது விதிமுறைகளை மாற்றி அமைத்து வருகிறது. குற்றவாளிகள் தப்பிக்க முடியாதபடிக்கு புதிய விதிமுறைகளை உருவாக்க இன்னும் நீண்ட காலமாகலாம்.  

தவிர, பங்குச் சந்தை பற்றி நன்கு தெரிந்தவர்களை செபி அமைப்பின் தலைவர்களாக நியமிக்க வேண்டும். இதுநாள் வரை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே செபிக்கு தலைவர்களாக வருகிறார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் ஆகாய விமானம் ஓட்டுவதற்கும் என்ன சம்பந்தமோ, அந்த சம்பந்தம்தான் பங்குச் சந்தைக்கும்.

நேரடியான அனுபவம் எதுவும் இல்லாத பட்சத்தில் சந்தையைப் புரிந்து கொள்வது கடினமே. ஏற்கெனவே நான்கைந்து அதிகாரிகள் தயார் செய்து வைத்திருக்கும் பேப்பர்களில் பச்சை மையினால் கையெழுத்துப் போடத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது. சுயமாக யோசித்து முடிவெடுக்கத் தெரிய வேண்டும்.

இதெல்லாம் செய்யாமல் ராஜரத்தினங்களை மட்டும் தண்டிக்க நினைத்தால் எப்படி சாத்தியம்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism