Published:Updated:

உலகின் சிலிக்கான் வேலி ஆகிறதா இந்தியா?

உலகின் சிலிக்கான் வேலி ஆகிறதா இந்தியா?
உலகின் சிலிக்கான் வேலி ஆகிறதா இந்தியா?

ச.ஸ்ரீராம்

உலகின் சிலிக்கான் வேலி ஆகிறதா இந்தியா?

‘‘அமெரிக்காவில் வேலை செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்’’ - கடந்த காலத்தில் மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் அதுவே உண்மை. ஆனால், மோடி ஆட்சி அமைத்தபிறகு இதில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதுமைகளுக்கு இடமளிக்கும் விதமாகவும், தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியர்களின் அறிவைக் கண்டு வியக்கும் விதமாகவும் டெக் நிறுவனங்கள் இந்தியாவுக்கு படையெடுக்க துவங்கியுள்ளன.

இதற்கு காரணம், இந்தியாவில் இருக்கும் அதிகப்படியான டிஜிட்டல் தேவையும், பல அரசு அமைப்புகள் இப்போதுதான் டிஜிட்டல் மயமாவதும்தான். இதையெல்லாம்விட இந்தியாவில் இருக்கும் மனிதவளமானது உலகின் முக்கியமான தேவைகளில் ஒன்றாக உள்ளது. அதனால் அனைத்து டெக் நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் இந்தியாவுக்குள் நுழைந்து தங்களை பலப்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றன. அதன் ஆரம்பம்தான் அனைத்து டெக் நிறுவன சிஇஓ-க்களின் இந்திய வருகை. 

டிம் குக்!

சென்ற வாரம் இந்தியாவுக்கு வந்த ஆப்பிள் சிஇஓ டிம் குக் பெங்களூருவில் ஸ்டார்ட் அப்களுக்கான மேம்பாட்டு மையத்தை அமைப்பது, இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர்களை துவக்குவது போன்ற செயல்பாடுகள் பற்றி பேசியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவில் உற்பத்தியைத் துவங்கவும், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து விற்பனையை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

தெலங்கானாவில் கருத்தரங்கில் கலந்துகொண்ட குக், தெலங்கானா அரசின் ஐடி மேம்பாடுகளை கண்டு வியந்துள்ளார். டிம் குக்கிடம் தெலங்கானா அமைச்சர் ஐ.டி. திட்டங்களை விளக்கிய வீடியோ சென்ற வார வைரலாக (https://www.youtube.com/watch?v=0OJpx6KVgTk) வலைதளங்களில் பரவியது.

ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை சென்ற ஆண்டு இந்தியாவில் வளர்ந்துள்ளதையும் டிம் குக் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தியர்கள் மத்தியில் ஆப்பிள் தயாரிப்புகளுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை நன்கு அறிந்த அந்த நிறுவனம், அதிக விலை என்கிற தனது பாலிசியை ஓரங்கட்டி விட்டு, குறைந்த விலையில் நடுத்தர வருமானம் பெறும் மக்களை நோக்கி செல்ல திட்டம் தீட்டி வருகிறது. குக்கின் இந்தப் பயணத்தின்போது இந்தியர்களின் மனநிலை, அவர்களது விருப்பம் குறித்த விவாதங்களும் ஆப்பிள் நிர்வாகிகளுடன் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

உலகின் சிலிக்கான் வேலி ஆகிறதா இந்தியா?

சத்ய நாதெள்ளா!

 சென்ற‌ டிசம்பர் மாதம் இந்தியா வந்த சத்ய நாதெள்ளா பிரதமர் மோடியை சந்தித்து இந்தியாவில் கல்வி, விவசாயம் மற்றும் மக்கள் சேவையில் இணையத்தை புகுத்தும் செயல்களுக்கு உதவுவதாக அறிவித்தார்.

மேலும், இந்தியர்கள் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துக்கு எவ்வளவு முக்கியம் என்றும், அவர்களது பங்களிப்பு குறித்தும் பேசினார். தெலங்கானாவில் டிஜிட்டல் புரட்சிக்கு  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உதவி குறித்தும் முக்கிய ஒப்பந்தங்களை செய்தார்.

சுந்தர் பிச்சை!

சென்னையில் பிறந்து கூகுள் சி.இ.ஓ-வான சுந்தர் பிச்சையும் சென்ற வருட இறுதியில் இந்தியா வந்தார். அதற்குமுன் மோடி குறித்த வெல்கம் வீடியோவை வெளியிட்டார். பின்னர் இந்தியா வந்த சுந்தர் பிச்சை, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் முக்கியத்துவம் இந்திய ஸ்மார்ட் போன் சந்தைகளில் இருப்பதைப் பற்றியும், பலூன் மூலம் கிராமங்களில் இன்டர்நெட் வசதி அளிக்கும் புராஜெக்ட் லூன் திட்டம்,400 ரயில் நிலையங்களில் வை-பை வசதி அளிப்பதற்கு இந்தியாவுக்கு கூகுள் உதவும் என்றும் தெரிவித்தார்.

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு உணவுப் பண்டங்களின் பெயர் வைக்கப்படுகிறதே, அடுத்த வெர்ஷனுக்கு என்ன பெயர் என்ற‌ கேள்விக்கு, ஒருவேளை அது இந்திய உணவுப் பண்டமாகக் கூட இருக்கலாம், பாயசம் என்ற வெர்ஷன் கூட வரலாம் என்றார். இந்தியாவில் உள்ளவர்களே இணையதளத்தை பெரிதும் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் மொபைல் மார்க்கெட் பிரதான மார்க்கெட்டாக வளரும் என்று சொன்னதுதான் எதிர்காலத்தில் நிஜமாக போகிறது.

உலகின் சிலிக்கான் வேலி ஆகிறதா இந்தியா?

மார்க் சக்கர்பெர்க்:

உலகையே ஒற்றை சமூக வலைதளத்தில் கொண்டுவரப் போராடும் மார்க் சக்கர்பெர்க்கும் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். ஃப்ரீ பேஸிக்ஸை இந்தியாவில் எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்பதே அவர் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மத்திய அரசாங்கம் அதற்கு அனுமதி அளிக்காமலே விட்டுவிட்டது. இதனால் வெறுப்பாகிப் போனாலும் இந்தியாவைதான் தனது வர்த்தகத்துக்கு முக்கியமான நாடாக நம்பி இருக்கிறார் மார்க். 

இவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு வந்து நம்மைப் பற்றி போற்றிப் புகழ்ந்தாலும் இவர்களின் வருகை மற்றும் புகழ்ச்சிக்குப் பின்னால் வர்த்தகத்துக்கான எதிர்பார்ப்பு இருக்கவே செய்கிறது. இந்தியச் சந்தையை வைத்து பில்லியன்களில் சம்பாதிப்பதுதான் இந்த நிறுவனங்களின் ஒரே நோக்கம். மோடியின் டிஜிட்டல் இந்தியா இதற்கு களம் அமைத்துத் தந்திருக்கிறது. இந்த முன்னணி நிறுவனங்கள் இங்கு தங்களை நிலைநிறுத்தி கொள்வதன் மூலம் உலகின் சிலிக்கான் வேலியாக இந்தியாவை மாற்றும் என்று நம்புவோமாக!

அடுத்த கட்டுரைக்கு