பிரீமியம் ஸ்டோரி

கமிஷன் எச்சரிக்கை!

500 ரூபாய் ஆச்சர்யம்!


நான் சமீபத்தில் பணியிலிருந்து ஓய்வுபெற்றேன். சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டவேண்டும் என்பது என் ஆசை. ஓய்வு பெற்றபோது கிடைத்த தொகையைக் கொண்டு வீடு கட்டத் தொடங்கினேன். நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்திய மேஸ்திரி ஒருவர் மூலம் பில்டிங் கட்ட ஆரம்பித்தேன். கூலியை மட்டும் கான்ட்ராக்ட் அடிப்படையில் பேசியிருந்தேன். பொருள்களை நான் வாங்கித் தந்தாக வேண்டும். ‘’நீங்கள் ஏன் வெயிலில் அலைகிறீர்கள். என்ன பொருள் வேணுமுன்னு சொல்லுங்க. நான் ஒரு போன் பண்ணா, பொருளே வந்துடும்’’ என மேஸ்திரி சொல்லவே, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பொருள் வரவர பில்லுக்கான பணத்தை நான் கொடுத்தேன். ஒரு சமயம் என் உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்தபோது மணல் விலை, செங்கல் விலைப் பற்றி கேட்டார். நான் பில்களை எடுத்துக் கொடுத்தேன். எல்லா பொருட்கள் மீதும் 10%  அதிகமான  விலை போடப்பட்டிருப்பதாகச் சொன்னார். கடையில் நான் நேரடியாக சென்று விசாரித்தபோதுதான் அது உண்மை என்று தெரிந்தது. எனக்கு உதவி செய்கிற மாதிரி நடித்து, கணிசமான தொகையை கமிஷனாக சம்பாதித்திருக்கிறார் அந்த ‘பலே’ மேஸ்திரி! 

-மணிமாறன், திருச்சி

அண்ணாச்சிக் கடை ஆச்சர்யம்!

500 ரூபாய் ஆச்சர்யம்!

நான் வழக்கமாக மளிகைச் சாமான்களை எங்கள் வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு பெரிய கடையில் வாங்குவேன். அவர்களிடம் ஃப்ரீ டோர் டெலிவரியும் உண்டு என்பதால், மொத்த சாமான்களையும் வாங்கிவிடுவேன். அன்றொரு நாள், திடீரென எண்ணெய் தேவைப்படவே, பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சிக் கடையில் நான் வழக்கமாக வாங்கும் பிராண்டட் எண்ணெய்யை வாங்கினேன். வழக்கமாக நான் வாங்கும் விலையைவிட குறைவாக இருந்தது.  எனக்கு சந்தேகம் வரவே, எங்கள் ஏரியாவில் உள்ள பல கடைகளிலும் அந்த எண்ணெய் பாக்கெட்டின் விலையை விசாரித்தேன். அந்த ஒரு அண்ணாச்சிக் கடை அளவுக்கு எங்கும் விலை குறைவில்லை. அடுத்த மாதமே டிபார்ட்மென்ட் ஸ்டோரில் அவசியம் வாங்கவேண்டும் என்ற சில பொருள்களை தவிர, மற்ற எல்லாப் பொருட்களையும் அண்ணாச்சிக் கடையில் வாங்க ஆரம்பித்துவிட்டேன். இதனால் என் மளிகைச் செலவு ஒவ்வொரு மாதமும் சுமார் 300 - 500 ரூபாய் வரை குறைந்தது. என்னைப் போல் நடுத்தரவாசிகளுக்கு ரூ.300 - 500 என்பது பெரிய தொகைதானே! நீங்களும் உங்கள் பகுதியில் இப்படித் தேடிப் பாருங்களேன்!

-மதுமதி, விழுப்புரம்

இரக்கம் ஏமாற்றம்!

500 ரூபாய் ஆச்சர்யம்!

எங்கள் வீட்டுக்கு சமீபத்தில் இரண்டு பெண்கள் வந்திருந்தார்கள். குறிப்பிட்ட ஒரு அனாதை ஆஸ்ரமத்தின் பெயரைச் சொல்லி, நன்கொடை அளிக்குமாறு கேட்டார்கள். மொத்தம் 80 குழந்தைகள் வரை இருக்கிறார்கள். அவர்களின் படிப்பு மற்றும் சாப்பாட்டுச் செலவுக்கு ஏதாவது உதவி செய்யுமாறு கேட்டார்கள். ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவட்டுமே என்று நினைத்து நான் 500 ரூபாய் கொடுத்தேன்.

இரண்டு மாதம் கடந்த பிறகு எங்களுக்குத் திருமண நாள் வந்தது. என் கணவர் அந்த ஆஸ்ரமத்துக்குச் சென்று குழந்தைகளுக்கு ஏதாவது பரிசு வாங்கித் தரலாம் என்றார். இனிப்பு, பரிசுப் பொருட்களுடன் நாங்கள் அந்த ஆஸ்ரமத்துக்குச் சென்றோம்.

எதேச்சையாக நாங்கள் அந்தப் பெண்கள் வந்து சென்ற விவரத்தைச் சொன்னோம். அவர்களோ, அப்படி யாரையும் நாங்கள் வசூல் செய்ய நியமிக்கவில்லையே என்றதும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஆஸ்ரமத்தின் பெயரைச் சொல்லி சிலர் வசூல் வேட்டை செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டோம். சரியான ஆதாரமின்றி யாரையும் நம்பக்கூடாது என  அன்று நாங்கள் முடிவெடுத்தோம்.

-மீனாட்சி, திருவள்ளூர்.

ஓட்டை உடைசல் உஷார்!

500 ரூபாய் ஆச்சர்யம்!

சமீபத்தில் அலுவலகத்தில் வேலை முடித்து, ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். மூன்று சாலை பிரியும் ஓர் இடத்தில் ஒரே கூட்டமாக இருக்கவே, என்னவென்று எட்டிப் பார்த்தேன். சட்டை, டீ-சர்ட், பேன்ட் என மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

‘‘அத்தனையும் பிராண்டட் துணிகள்... எக்ஸ்போர்ட் ரிட்டர்ன்... 1,000 ரூபாய் பேன்ட் வெறும் 200 ரூபாய், 800 ரூபாய் சட்டை வெறும் 150 ரூபாய்...’’ என ஒருவர் கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தார்.

பலரும் சட்டை, பேண்ட் என்று வாங்கிக்கொண்டு இருந்தார்கள். நானும் 2,000 ரூபாய்க்கு துணிகளை வாங்கினேன். வெளிச்சம் அதிகம் இல்லாததால் கலர் பார்த்து வாங்க முடியவில்லை.

வீட்டுக்கு வந்ததும் பெருமையோடு மனைவியிடம் காட்டினேன். பிரித்துப் பார்த்த என் மனைவி என்னை திட்டித் தீர்த்தாள். காரணம், எல்லாத் துணிகளிலும் ஓட்டை. சில இடங்களில் துணி நைய்ந்து போயிருந்தது. வாரிச் சுருட்டிக்கொண்டு அந்த இடத்துக்கு ஓடினேன். அதற்குள் அவர்கள் இடத்தை காலி செய்திருந்தார்கள்.  பேராசைப்பட்டேன். பெரிய நஷ்டம்தான் வந்தது!

-சடகோபன், சென்னை

உங்கள் அனுபவங்களையும் வாசகர் கார்னர் பகுதிக்கு எழுதலாம்... navdesk@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு