Published:Updated:

குழந்தைகளின் மேற்படிப்புக்கு ஏற்ற முதலீடு எது?

குழந்தைகளின் மேற்படிப்புக்கு ஏற்ற முதலீடு எது?
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைகளின் மேற்படிப்புக்கு ஏற்ற முதலீடு எது?

கேள்வி - பதில்

குழந்தைகளின் மேற்படிப்புக்கு ஏற்ற முதலீடு எது?

?எனக்கு 45 வயதாகிறது. என் குழந்தைகளின் கல்விக்காகச் சேமிக்க விரும்புகிறேன். இதற்காக நான் சமீபத்தில் கோட்டக் செலக்ட் ஃபோகஸ் மற்றும் எஸ்பிஐ புளூசிப் ஃபண்ட் என இரண்டு ஃபண்டுகளில் தலா 10,000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்துவருகிறேன். மேலும், மாதத்துக்கு 30,000 ரூபாயை  முதலீடு செய்யலாம் எனவும் திட்டமிட்டு இருக்கிறேன். எல்லாப் பணத்தையும் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வது சரியா? எனக்கு நல்ல ஆலோசனை சொல்லவும்.
 
மனோஜ், சென்னை.

குழந்தைகளின் மேற்படிப்புக்கு ஏற்ற முதலீடு எது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quizஸ்ரீகாந்த் மீனாட்சி, இயக்குநர், ஃபண்ட்ஸ் இந்தியா.காம்

“உங்களுக்கு 45 வயதாகிறது என்பதால், உங்கள் குழந்தைகளின் கல்வித் தேவைகளுக்கான தருணம் வருவதற்கு இன்னமும் 5 - 7 வருடங்கள் ஆகும் என்று அனுமானிக்கிறேன். அதுமாதிரியான சமயத்தில், பங்குச் சார்ந்த ஃபண்டுகளில் எல்லா முதலீட்டையும் முதலீடு செய்வது ஆபத்தானதாகவே இருக்கும்.

 தற்போது நீங்கள் இரண்டு லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறீர்கள். கூடுதலாக மிரே அசெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் என்னும் ஒரு பல்துறை ஃபண்டில் ரூ.5,000 முதலீடு செய்யுங்கள்.

அது தவிர்த்து, 15,000 ரூபாயை பிர்லா சன்லைஃப் டைனமிக் பாண்ட் ஃபண்டிலும், 10,000  ரூபாயை ஹெச்.டி.எஃப்.சி ஷார்ட் டேர்ம் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டிலும் முதலீடு செய்யுங்கள். இந்தத் தொகுப்பு உங்களுக்கு வளர்ச்சிக்கு உகந்த, ஆனால் ஓரளவு பாதுகாப்பானதொரு போர்ட்ஃபோலியோ வாக இருக்கும்.”

?நான் கடந்த பல ஆண்டுகளாக வைத்திருந்த சில பங்குகளை என் மகனுக்குப் பரிசளித்தேன். அவன் அதை டீமேட்டாக மாற்றிய பிறகு அந்தப் பங்குகளை ஒரு மாதத்துக்குள் விற்பனை செய்துவிட்டான். இதற்கான வருமான வரியை எப்படிச் செலுத்தவேண்டும்?

சுந்தரமூர்த்தி, விருதுநகர்

குழந்தைகளின் மேற்படிப்புக்கு ஏற்ற முதலீடு எது?கே.ஆர்.சத்யநாரயணன், ஆடிட்டர்

“எந்தத் தேதியில் பங்குகள் வாங்கப்பட்டதோ, அதன் அடிப்படையில்தான் வரித் தாக்கல் என்பது அமையும். இங்கு அப்பா, தன் மகனுக்குப் பங்குகளைப் பரிசளித்துள்ளார். மகன் தனது பங்குகளை ஒரு மாதத்துக்குள் விற்பனை செய்திருந்தாலும், அவருடைய தந்தை எப்போது பங்குகளை வாங்கினாரோ, அதன் அடிப்படையில்தான் வருமான வரி என்பது இருக்கும். இங்கு அவருடைய தந்தை பங்குகளை வாங்கி, பல ஆண்டு காலம் ஆனதால், இதை நீண்ட கால முதலீடாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் வரிச் செலுத்தவேண்டியது அவசியமில்லை.”

?ஆதர்ஷ் கிரெடிட் கோ-ஆபரேடிவ் சொசைட்டி லிட் (Adarsh credit cooperative society ltd) என்னும் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட வங்கி ஒன்று உள்ளது. சென்னையில் பல இடங்களில் அதற்கு கிளைகள் இருக்கின்றன. அந்த வங்கியில் மாதம்தோறும் முதலீடு செய்தால் 10% வட்டி தருவதாகச் சொல்கிறார்கள். இது நல்ல வங்கியா? இதில் முதலீடு செய்யலாமா? நம்பகத்தன்மையுடன் இருக்குமா?

அப்துல் கரீம் கனி, பவானி.

ரிசர்வ் வங்கி உயர் அதிகாரி, சென்னை

“ஆதர்ஷ் கிரெடிட் கோ-ஆபரேடிவ் சொசைட்டி லிட் என்னும் நிறுவனம் ஒரு வங்கி அல்ல. இந்த நிறுவனம் ரிசர்வ் வங்கியின் கீழ் வராது. இது கூட்டுறவு சங்கங்களின் கீழ் வரும். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பதே நல்லது.”

?நான் பணிபுரியும் எனது நிறுவனம் எடுத்திருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் இணைந்து உள்ளேன். இதுதவிர, எனக்கு வேறு எந்த ஆயுள் காப்பீடும் இல்லை. இதற்காக நான் வேறு ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கவேண்டுமா?


சந்தோஷ், கடலூர்

குழந்தைகளின் மேற்படிப்புக்கு ஏற்ற முதலீடு எது?வி.கிருஷ்ணதாசன்,

நிதி ஆலோசகர்.

“மெடிக்ளெய்ம் (ஹெல்த் இன்ஷூரன்ஸ்) பாலிசியானது மருத்துவச் செலவுகளை க்ளெய்ம் செய்ய மட்டுமே பயன்படுமே அன்றி, அதனால் உயிர் காப்பீட்டுக்கான பலன் எதுவும் கிடைக்காது. ஒருவரது உயிருக்குப் பாதகம் ஏற்பட்டால், அவர் தனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக பாதுகாத்துக்கொள்ளவும், அவரது குடும்பத்தினரின் செலவுகளைக் கவனித்துக் கொள்ளவும் ஒரு உயிர் காப்பீட்டு பாலிசியை எடுப்பது மிக அவசியம்.

உயிர் காப்பீட்டுக்காக, உயிர் காப்பீட்டை மட்டுமே அளிக்கக்கூடிய டேர்ம் பாலிசி எடுத்தால் போதுமானது. இந்த பாலிசி ஒருவருக்கு உயிரிழப்பு நேரும்போது மட்டுமே கவரேஜ் தொகையை (Sum Assured) பாலிசிதாரரின் நாமினிக்கு அளிக்கும். இதற்கான பிரீமியம் மிகவும் குறைவு. ஒருவரது மாதச் சம்பளத்தின் 150 மடங்கு கவரேஜ் கொண்ட டேர்ம் பாலிசியை எடுக்கலாம்.

30 வயதுடைய புகைப்பழக்கம் இல்லாத ஆண் ஒருவர், ரூ.1 கோடிக்கான டேர்ம் பாலிசியை 30 வருட காலத்துக்கு ஆன்லைனில் வாங்கினால் கிட்டத்தட்ட ஆண்டுக்கு 10,000 ரூபாய் மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டிவரும். செலுத்தும் பிரீமியத்துக்கு வருமான வரி
பிரிவு 80C-ன் கீழ் வருமான வரி விலக்கும் பெற முடியும்.”

?ராணுவ வீரர்கள் ரூ.50,000 வரி சேமிப்பு பெற தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு அனுமதிக்கப்படுகிறதா?

பிரவீன், ஈரோடு

குழந்தைகளின் மேற்படிப்புக்கு ஏற்ற முதலீடு எது?ஈ.எஸ்.முருகானந்தம், ஆடிட்டர்

“ராணுவ வீரர்கள் மத்திய அரசு ஊழியர்களாக கருதப்படுவர். அவர்கள் வருமான வரி சுற்றறிக்கை எண்-19/2015-ன்படி,தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) முதலீடு செய்யலாம். ஆனால், அந்த ராணுவ ஊழியர் 01-01-2004-க்குப்பின் பணியில் சேர்ந்து இருப்பது அவசியம்.

அதேசமயத்தில், அவர் 01-04-2015-க்குப்பின் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு ரூ.50,000 வரை வருமான வரி சட்டப் பிரிவு 80CCD (1B) கீழ் கூடுதல் வரி விலக்கு பெறலாம். இந்த வரி விலக்கு தொகை அவரது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் கூட்டுத் தொகையில் 10 சதவிகித வரம்புக்கு உட்பட்டது.”

போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள்.

எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

உங்கள் எண்ணங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!

facebook.com/naanayamvikatan
twitter.com/nanayamvikatan

எவ்வித கட்டணமும் இல்லாமல் ஏராளமான தகவல்களைப் படித்து பயன்பெறுங்கள்!

nanayam.vikatan.com

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.