Published:Updated:

தொடரும் மோசடிகள்... தவிக்கும் மக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தொடரும் மோசடிகள்... தவிக்கும் மக்கள்!
தொடரும் மோசடிகள்... தவிக்கும் மக்கள்!

சே.சின்னதுரை

பிரீமியம் ஸ்டோரி
தொடரும் மோசடிகள்... தவிக்கும் மக்கள்!

“எங்கள் கம்பெனியில் பணத்தைப் போடுங்கள். ஒரே வருடத்தில் இரண்டு மடங்காக திரும்பத் தருகிறோம்” என ஊர், பெயர் தெரியாத யாராவது சொன்னால் உடனே பணத்தைக் கொண்டுபோய் கொட்டிவிடுகிறார்கள் பலர். பிற்பாடு அந்த நிறுவனம் கம்பியை நீட்டிவிட்டால், பணத்தைத் திரும்ப வாங்க முடியாமல் பரிதாபமாக அலைகிறார்கள். மதுரை பரவை அருகே நிதி நிறுவனம் ஒன்றில் பணத்தைப் போட்டுவிட்டு, திரும்ப வாங்கமுடியாமல் அதன் வாசலிலேயே  சிலர் தவம் கிடக்கிறார்கள். 

‘டால்’ (Disc Assets Lead India Limited ) என்ற நிதி நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எல்லாம் தந்தது. இந்த நிறுவனம் தந்த வாக்குறுதிகளை நம்பி, தங்களுக்கு நிறைய கமிஷன் கிடைக்கும் என்ற ஆசையில் பலர் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் இந்த நிதி நிறுவனத்தில் இணைத்துவிட்டனர். பிற்பாடு அந்த நிதி நிறுவனம் திடீரென மறைந்து விட, பணத்தைக் கட்டியவர்கள் ஏஜென்ட்டுகளை நெருக்க, ஏஜென்ட்டுகள் இந்த நிறுவனத்தின் வாசலில் சோறு வடித்துச் சாப்பிடுகின்றனர். 

மாற்றுத் திறனாளியான ஏஜென்ட் கண்ணனிடம் பேசினோம். “மதுரை நெடுங்குளம் பகுதியில் வசிக்கும் நான் ஒரு டெய்லர். எனது நண்பர் ஒருவர் இந்த நிறுவனத்தைப் பற்றி சொன்னார். ‘நமக்கு கீழ் அதிக நபர்களைச் சேர்த்தால், அதிக கமிஷன் கிடைக்கும்; அதனால் நமது வாழ்க்கையே மாறிவிடும்’ என்றார்

2012-லிருந்து மாதம் 500 ரூபாய் கட்டி வந்தேன், மேலும், எனக்குக் கீழ் பல நபர்களை இணைத்தேன். இப்போது கம்பெனியில் ஆட்களையே காணோம். எனக்கு மேல் இருக்கும் சீனியர்களுக்கு போன் செய்தால், ஸ்விட்ச் ஆஃப் என்று வருகிறது. என்னை நம்பிப் பணம் போட்டவர்கள் என்னை நெருக்குகிறார்கள்.  நான் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வீட்டுக்குக்கூட போகாமல் இங்கே வந்து காத்துக் கிடக்கிறேன்” என்றார்.

மதுரை பாலரங்கபுரத்தைச் சார்ந்த ஒருவர்,  ‘‘நான் பிளாஸ்டிக் கம்பெனி சொந்தமாக வைத்துள்னேன். அதில் கிடைக்கும் பணத்தைச் சேமிக்க நினைத்து, இந்த நிறுவனத்தை அணுகினேன்.  இந்த நிறுவனம் ரிசர்வ் பேங்கோடு தொடர்புடையது என்று ஆவணங்களை எல்லாம் காட்டினார்கள். நானும் அதை நம்பி ஒவ்வொரு மாதமும் சரியாகப் பணத்தைக் கட்டினேன். மூன்று ஆண்டுகள் கழிந்தபின் என்னையும் ஏஜென்ட்டாக மாற்றினார்கள். எனக்கு கீழ் பலரையும் நான் இணைத்துவிட்டேன். எனக்கு எல்லா தவணைத் காலமும் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் பணம் தரவில்லை. ‘செபி எங்கள் பணத்தை ‘லாக்’ செய்துவிட்டது. சில மாதங்களில் ‘லாக்’கை எடுத்துவிடுவார்கள்’ என்று சொன்னார்கள். தற்போது அலுவலகத்தை பூட்டிவிட்டு ஓடிவிட்டார்கள்” என்றார்.

தொடரும் மோசடிகள்... தவிக்கும் மக்கள்!


மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்த பாலுவிடம் பேசினோம். “நிறைய லாபம் கிடைக்கும் என்று சொன்னதை நம்பி பணம் கட்டினோம்.  செபி இந்த நிறுவனத்தை முடக்கியுள்ளதால், ‘அயன்’ என்ற கம்பெனியில் பணத்தை கட்டச் சொன்னார்கள். அதையும் செய்தோம்.   இப்போது பணத்தைத் திரும்ப வாங்க அலையாய் அலைகிறோம்’’ என்று புலம்பினார்.

தேனி சின்னமனூரை சேர்ந்த கிருஷ்ணன், ‘‘நான் கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் வரை கட்டி இருக்கிறேன். நான் கட்டிய பணம் திரும்பக் கிடைக்காவிட்டால், என் வாழ்க்கையே இருண்டுவிடும்’’ என்று மனம் வெறுத்துப் பேசினார்.

‘‘அந்த நிறுவனம் ‘disc agrotech limited’ என பெயரை மாற்றியுள்ளது. சொத்துக்களை விற்று, உடனடியாக பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கவேண்டும் என செபி அறிவுறுத்தி உள்ளதால், உங்கள் பணம் விரைவாக வங்கிக் கணக்கு மூலமாக வழங்கப்படும் என பத்திரிக்கை மூலமாகத் தெரிவித்திருந்தது அந்த நிறுவனம். ஆனால், அவர்கள் குறிப்பிட்டிருக்கும் தொலைபேசி எண்கள் அனைத்தும் ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம்தான் எங்கள் பணத்தை வாங்கித் தரவேண்டும்’’ என்றார்கள் பணத்தை பறிகொடுத்தவர்கள்.

அப்பாவி மக்கள் பாவம்தான்!

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், நா.ராஜமுருகன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு