Published:Updated:

பாரம்பர்யமா, முன்னேற்றமா... - தடுமாறும் டாடா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாரம்பர்யமா, முன்னேற்றமா... - தடுமாறும் டாடா!
பாரம்பர்யமா, முன்னேற்றமா... - தடுமாறும் டாடா!

ஜெ.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி

ந்தியத் தொழில் துறையையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது டாடா குழுமத்தில் நடந்துவரும் மோதல். டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி திடீரென அந்தப் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார். இந்த அதிர்ச்சிகரமான முடிவை எடுத்தது வேறு யாருமல்ல, டாடா குழும இயக்குநர் குழுதான். இதன் பின்னணியில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பாரம்பர்யமா, முன்னேற்றமா... - தடுமாறும் டாடா!

   இந்தியாவின் யானை!

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட டாடா குழுமம், 148 வருட பாரம்பர்யம் கொண்டது. தற்போது ஆறு கண்டங்களில், 150-க்கும் மேலான நாடுகளில் தனது தொழிலை விரிவுப்படுத்தி செயல்பட்டு வருகிறது. 6,60,800 பேர் இந்தக் குழுமத்தில் பணிபுரிகின்றனர். தகவல் தொழில் நுட்பத் துறை (டிசிஎஸ்), டெலிகாம், தாஜ் ஓட்டல்கள் போன்ற சேவை சார் தொழில்களில் உலகின் முன்னணி நிறுவனமாக டாடா உள்ளது. மேலும், இரும்பு உற்பத்தி, மோட்டார் வாகனம் ஆகிய துறைகளிலும் உலகளவில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுமட்டும் அல்லாமல் நுகர்வோர் பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறது. இத்தனை தொழில்கள், இவ்வளவு பெரிய அளவில் வர்த்தகம் செய்துவரும் டாடாவை ‘இந்தியாவின் யானை’ என்றே அழைக்கிறார்கள். 

   ரத்தன் டு மிஸ்திரி!

1938 முதல் ஏறக்குறைய 53 ஆண்டுகள் டாடா குழுமத்தின் தலைவராக இருந்தவர் ஜே.ஆர்.டி. டாடா. அவருக்குப்பின் 1991-ல் டாடா குழுமத்தின் தலைவராக ஆனார் ரத்தன் டாடா. 2012-ல் ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரியை நியமித்துவிட்டு, அந்தப் பதவியிலிருந்து விலகினார். டாடா குடும்பத்தைச் சேராத சைரஸ் மிஸ்திரி, டாடா குழுமத்தின் தலைவர் ஆனது அந்தக் குழுமத்தில் அதுவரை இல்லாத ஒரு நடைமுறை. காரணம், டாடா குழுமத்தில் டாடா நிறுவனத்தில் அதிகப் பங்குகளை வைத்திருக்கும் பலோன்ஜி மிஸ்திரியின் இளைய மகன்தான் சைரஸ் மிஸ்திரி. நல்ல தொழில் மற்றும் துறை சார்ந்த அனுபவம் அவருக்கு இருப்பதும், அவரது செயல்பாடுகளும் நிச்சயம் டாடா குழுமத்தின் வளர்ச்சியை உயர்த்தும் என்று ரத்தன் டாடா அப்போது நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்றுகொண்டிருந்த டாடா நிறுவனத்தில், கடந்த 24-ம் தேதி திடீர் புயல் வீச, சைரஸ் மிஸ்திரி வெளியேற்றப்பட்டு, ரத்தன் டாடா மீண்டும் டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். இயக்குநர் குழுவில் இருக்கும் 9 பேரில் 6 பேர் மிஸ்திரிக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். இருவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி திடீரென்று நீக்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பே இதற்கான வேலைகளில் இயக்குநர் குழு இறங்கிவிட்டது என்கிறார்கள் சிலர்.

பாரம்பர்யமா, முன்னேற்றமா... - தடுமாறும் டாடா!

   இடைக்காலத் தலைவர்!

அடுத்துவரும் நான்கு மாதங்களுக்கு டாடா குழுமத்தின் இடைக் காலத் தலைவராக இருப்பார் ரத்தன் டாடா. இந்த இடைப்பட்ட காலத்தில் டாடாவின் அடுத்த தலைவர் யார் என்பதை முடிவு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழு அடுத்த நான்கு மாதங்களில் டாடாவின் புதிய தலைவரைக் கண்டுபிடித்து, அவரிடம் தலைமைப் பதவியை ஒப்படைக்கும்.

இந்த நிலையில், தன்னைத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரம் டாடா குழும இயக்குநர் குழுவுக்கு இல்லை என்று சொல்லி வருகிறார் சைரஸ் மிஸ்திரி. தன் அதிகாரத்தை, உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதே  மிஸ்திரியின் நிலை என்கிறார்கள்.

என்ன காரணம்?

டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணம் என டாடா குழும இயக்குநர் குழு அதிகாரபூர்வமாக ஏதும் சொல்லவில்லை. என்றாலும் பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. அந்தக் காரணங்களை ஒவ்வொன் றாகப் பார்ப்போம்.

  குறைந்தது வளர்ச்சி!

டாடா டிரஸ்ட்டின் உறுப்பினரான வி.ஆர்.மேத்தா, ‘மிஸ்திரி நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், டாடா குழுமத்தின் வருமான வளர்ச்சி குறைந்ததுதான்’ என்கிறார். ‘‘டிசிஎஸ், ஜாக்குவார் லேண்ட் ரோவர் மட்டும்தான் அவரது கவனமாக இருந்தது. அவர் தனித்தே இயங்கி வந்தார். அவருக்கு அனைத்து சுதந்திரங்களையும் டாடா குழுமம் கொடுத்திருந்தும் அவர் அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. டாடாவின் கொள்கைகளுக்கு உட்பட்டு அவர் செயல்படவே இல்லை.

நன்றாகச் செயல்படும் டாடா கன்சல்டன்சி, டாடா மோட்டார்ஸ் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினார் மிஸ்திரி. பிற குழும நிறுவனங்களை வளர்ப்பதற்கான எந்தத் திட்டத்தையும் அவர் வைத்திருக்கவில்லை. இதனால் டாடா குழுமத்தின் வருமானம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 பில்லியன் டாலர்கள் குறைந்துவிட்டது’’ என்றார் அவர். 

மிஸ்திரி பதவியேற்கும்போது, டாடா குழுமத்தின் மொத்த வருமானம் 2021-ல் 500 பில்லியன் டாலராக இருக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதற்கான எந்தத் திட்டத்தையும் அவர் முன்னெடுக்கவில்லை.

நிர்வாகத்திலும் அவரது செயல்பாடு குழும நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இல்லை என்று சொல்லப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக டாடா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை. குழும சிஎஃப்ஓ பதவியும் மூன்று வருடங்களாக காலியாகவே உள்ளது. தாஜ் ஓட்டல் தொழிலை நிர்வகித்து வந்த பல அனுபவமிக்க நபர்கள் வெளியேறிவிட்டார்கள்.

  எக்கசக்கக் கடன்!

டாடா குழுமத்துக்கு 30 பில்லியன் டாலர் கடன் உள்ளது. ரத்தன் டாடா, நாடு நாடாக சுற்றி ஆராய்ந்து வாங்கிக் குவித்த நிறுவனங்களை, மிஸ்திரி விற்றுக் கடனை அடைக்கவே திட்டமிட்டார். இதனால் உலக அரங்கில் டாடாவின் மீதான நம்பிக்கை குறையத் தொடங்கியது. இது இயக்குநர் குழுவைப் பெரிதும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

  ஒப்புதல் பெறாத முடிவுகள்!

டாடா குழுமத்தில் ரூ.500 கோடிக்கு அதிகமாக செய்யப்படும் அனைத்து செலவுகளும் இயக்குநர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகே செயல்படுத்தப்பட வேண்டும் என்று மிஸ்திரி பொறுப்பேற்றுக் கொள்ளும்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நடைமுறையை அவர் பின்பற்றியதில்லை. எந்தச் செலவு குறித்தும் அவர் ஒப்புதல் கேட்டதில்லை என்கிறார்கள்.

  சரிவை ஏற்படுத்திய முடிவுகள்!

டாடா டெலிகாமிலிருந்து டொகோமோ வெளியேறியது பெரும் சரிவை ஏற்படுத்தியது. இப்போதுதான் 3ஜி சேவைக்கான டவர்களையே அமைக்கிறது டாடா. மேலும், டொகோமோவுக்கு டாடா தரவேண்டிய 1.4 பில்லியன் டாலர் பாக்கி வேறு இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் பெரிய வளர்ச்சி அடையவில்லை. டியாகோ மற்றும் போல்ட் வகை கார்கள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையில், டாடாவுக்கு கணிசமான வருமானத்தைக் கொடுத்துவந்த ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்களின் விற்பனையும் குறைந்தது.

டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களுமே கடந்த நான்கு ஆண்டுகளாக ஏதோ ஒரு சிக்கலில் தவித்துக்கொண்டிருந்ததும் தலைவர் பதவியிலிருந்து  மிஸ்திரியை நீக்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.  

  சொல்லப்படாத ரகசியங்கள்!

ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த பல விஷயங்களை கவனமாக ஆராய்ந்து பார்த்தால், மிஸ்திரி மீது எந்தத் தவறும் சொல்ல முடியாது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

டாடா நிறுவனம் இங்கிலாந்தின் கோரஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இந்திய நிறுவனமாக இருந்த டாடா, சர்வதேச நிறுவனமாக மாறியது உண்மைதான். ஆனால், அந்தப் பெயரை அடைவதற்கு டாடா நிறுவனம் கொடுத்த விலை, கொஞ்சநஞ்சமல்ல. எக்கசக்கமாகக் கடன் வாங்கி 13.1 பில்லியன் டாலரைத் தந்துதான் கோரஸ் இரும்பு உருக்காலையை வாங்கியது டாடா நிறுவனம். அந்த சமயத்தில் மிட்டல் நிறுவனம் பிரான்ஸின் ஆர்சிலர் நிறுவனத்தை வாங்குவதற்கு போட்டியாகத்தான் கோரஸை வாங்கியது டாடா.

கோரஸை வாங்கியவுடன் 2008-ல் உலக அளவில் பொருளாதார நெருக்கடி நிலை உருவானது. அதன்பிறகு சீனாவிலும் இரும்புக்கான தேவை கணிசமாகக் குறைந்தது. இதனால் கோரஸ் நிறுவனத்தினால் லாபம் சம்பாதிக்கவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் தினமும் 1.3 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படவும் செய்தது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தை இனிமேலும் வைத்திருப்பதைவிட, அதை விற்றுவிடுவதுதான் சரியான வழி என்கிற முடிவுக்கு வந்தார் சைரஸ் மிஸ்திரி. இன்னும் பல ஆண்டுகளுக்கு லாபம் சம்பாதிக்கவே முடியாது என்கிற நிலையில் அவர் செய்தது சரிதானே என்று கேட்கின்றனர் சிலர்.

  டொகோமோ தலைவலி!

டாடா டெலிகாம் சர்வீஸிலிருந்து டொகோமோ வெளியேற, ரத்தன் டாடா கொடுக்க ஒப்புக் கொண்ட தொகை நியாயமான விலைக்கு மேல் இருந்தது. அப்படி நியாய விலைக்கு மேல் எந்தப் பரிவர்த்தனைகளும் செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளதை மிஸ்திரி கூறியுள்ளார். இந்தத் தலைவலியிலிருந்து மீள்வதற்கு மிஸ்திரி சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருந்தது. அதற்காக அவர் டாடாவின் பெயரைக் கெடுக்கிறார் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று கேட்கிறது மிஸ்திரியின் தரப்பு.

  பாரம்பர்யமா, முன்னேற்றமா?

டாடாவில் இப்போது நடக்கும் மோதலுக்கு முக்கிய காரணம், பழமைக்கும் புதுமைக்கும், பாரம்பர்யத்துக்கும் முன்னேற்றத்துக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கி, டாடா நிறுவனம் தடுமாறிக் கொண்டிருப்பதுதான் என்கிறார்கள் தொழில் துறையைச் சேர்ந்தவர்கள்.
‘‘இந்தியத் தொழில் உலகம் வித்தியாசமானது. முந்தைய தலைமுறையினரின் தொழில் அணுகுமுறைக்கும், இன்றைய தலைமுறையினரின் தொழில் அணுகுமுறைக்கும் நிறைய வித்தியாசம் உருவாகிவிடுகிறது. பழைய தலைமுறையினர் பாரம்பர்யத்தை முக்கியமாக நினைக்கின்றனர். அவர்களுக்கு நிறுவனம் அடைய நினைக்கும் லாபத்தைவிட, நிறுவனத்தின் பெயர் எந்த வகையிலும் கெடாமல் இருக்கவேண்டும் என்பதே பிரதான நோக்கமாக இருக்கிறது. ஆனால், இளம் தலைமுறையினரோ வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் புதிய முடிவுகளை எடுக்கத் தயங்குவதில்லை. நீண்ட காலமாக ஒன்றைச் செய்துவருகிறோம் என்பதற்காகவே பழைய விஷயங்களைத் தொடர்ந்து செய்ய அவர்கள் விரும்புவதில்லை. இப்போதைக்கு நஷ்டப்பட்டாலும் எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக லாபம் சம்பாதிக்க முடியும் என்கிற துடிப்புடன் அவர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக பல பெரிய நிறுவனங்களிலும் இந்த மோதல் ஏற்படுவதை நாம் தாராளமாகப் பார்க்கலாம். அப்படிப்பட்ட ஒரு மோதல்தான் இப்போது டாடா நிறுவனத்திலும் ஏற்பட்டுள்ளது’’ என்கிறார்கள் அவர்கள். 
 
 தனிப்பட்ட விஷயம் அல்ல..!

நிறுவனங்களில் சண்டையும் சர்ச்சையும் ஏற்படுவது புதிதல்ல. சிறிய நிறுவனங்களில் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டால், அது அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட பிரச்னை என்று விட்டு விடலாம். பல லட்சம் பேருக்கு வேலை தருவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத்  தொடர்ந்து உயர்த்திச் செல்லும் முக்கியமானதொரு அங்கமாக இருக்கும் டாடாவில் ஏற்பட்ட சர்ச்சை சீக்கிரத்திலேயே ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.

டாடா VS மிஸ்திரி!

ஜேஆர்டி டாடாவுக்கு பிறகு தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட ரத்தன் டாடா பல்வேறு புதிய தொழில்களையும் திட்டங்களையும் தொடங்கியதாகவும், முதலீடுகளை அதிகரித்ததாகவும் சொல்கிறார்கள். இதன் காரணமாகவே டாடா குழுமத்தில் அவர் தலைவராக இருந்த 22 ஆண்டுகளில் ஒரு முறைகூட அந்நிறுவனம் இறக்கத்தைச் சந்திக்காமல் வளர்ச்சியை நோக்கியே இருந்துள்ளது. 1995-96 நிதி ஆண்டில் 6 பில்லியன் டாலராக மட்டுமே இருந்த டாடா குழுமத்தின் மொத்த வருமானம், 2011-12 நிதி ஆண்டில் 100 பில்லியன் டாலராக உயர்ந்தது. இந்திய நிறுவனமாக இருந்த டாடாவும் சர்வதேச பிராண்டாக மாறியது. இந்த இருபதாண்டுகளில் சென்செக்ஸ், நிஃப்டி தந்த வருமானத்தைவிட டாடா குழுமம் கொடுத்த வருமானம் அதிகம்.

ஆனால் 2011-ல் மிஸ்திரி துணைத்தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட பிறகு முதல் நிதி ஆண்டிலேயே வளர்ச்சியானது இறக்கத்தைச் சந்தித்துள்ளது. பிறகு 2014-15 நிதி ஆண்டில் மீண்டும் உயர்ந்து 108 பில்லியன் டாலராக இருந்தது. 2015-16 நிதி ஆண்டில் மறுபடியும் இறக்கத்தைச் சந்தித்து 103 பில்லியன் டாலரானது. (முன்பக்க கிராப் பார்க்கவும்)

மேலும், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டிசிஎஸ்) போன்ற நன்கு லாபம் ஈட்டக் கூடிய தொழில்களில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வந்ததாகவும், பிற தொழில்களை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தவில்லை என்றும் இயக்குனர் குழு வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் டாடா குழுமத்தின் பிற நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன. (நிறுவனம் வாரியான விற்பனை மற்றும் லாப அட்டணையைப் பார்க்கவும்)

பாரம்பர்யமா, முன்னேற்றமா... - தடுமாறும் டாடா!
பாரம்பர்யமா, முன்னேற்றமா... - தடுமாறும் டாடா!

‘‘நான் ஒரு போஸ்ட்மேனாக இருந்தேன்!’’

லைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு சைரஸ் மிஸ்திரி, டாடா குழும நிர்வாகிகளுக்கும், டாடா டிரஸ்ட் நிர்வாகிகளுக்கும் ஐந்து பக்க கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். ‘‘நான்கு ஆண்டுகள் பல சவால்களுக்கிடையில் தலைவர் பதவியில் இருந்த ஒருவரை, எந்தக் காரணமும் சொல்லாமல், என் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க வாய்ப்பும் அளிக்காமல் நீக்கியிருப்பது இதுவே முதன்முறை. ரத்தன் டாடாவும் லார்ட் பட்டாசார்யாவும் 2011-ல் என்னை தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டபோது, நான் ஏற்கெனவே ஒரு பெரிய நிறுவனத்தின் பொறுப்பில் இருந்ததால் மறுத்தேன். அந்தப் பொறுப்புக்கு தகுதியானவர் யாரும் இல்லை என்பதால், மீண்டும் என்னை அது குறித்து யோசிக்க சொன்னதால்தான் ஒப்புக்கொண்டேன்.

நான் பொறுப்பில் இருந்தபோது எனக்கிருந்த சவால்கள், பிரச்னைகளை இயக்குநர்கள் குழு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல் சில ஜாயின்ட் வென்ச்சர்கள், முதலீடுகளில் நான் எடுத்த முடிவுகள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டது. எனக்குச் சொல்லப்பட்டதை நான் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. உதாரணமாக, ஏர் ஏசியா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடனான ஜாயின்ட் வென்சர். ஒரு குழுமத்தின் தலைவராக நான் இருந்தேனே ஒழிய, அதிகாரம் என்பது யார் யாரிடமோ இருந்தது. நான் ஒரு போஸ்ட்மேனாகவே செயல்பட்டேன்’’ என்று அந்தக் கடிதத்தில் வருத்தப்பட்டிருக்கிறார் மிஸ்திரி.

பாரம்பர்யமா, முன்னேற்றமா... - தடுமாறும் டாடா!

‘‘பெரிதாக இறக்கம் இருக்காது!’’   - வ.நாகப்பன், பங்குச் சந்தை நிபுணர்

“டாடா குழும நிறுவனங்கள் மட்டுமல்ல, பொதுவாக அனைத்து நிறுவனங்களுமே சற்று தொய்வு நிலையில்தான் உள்ளன. எனவே, மிஸ்திரி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது பெரிய அளவில் நிறுவனப் பங்குகளின் வளர்ச்சியைப் பாதித்துவிடாது. இயக்குநர் குழுவில் ஏதேனும் பிரச்னை அல்லது வேறு ஏதேனும் காரணம் என்றால் போகப் போகத்தான் தெரியும். ஆனால், இயக்குநர் குழுவே முன்வந்து மிஸ்திரி நீக்கப்பட்டதற்கான காரணத்தை தனது பங்குதாரர்களுக்குத் தெரிவிக்கவேண்டிய கடமை உள்ளது. அப்போதுதான் நம்பகத்தன்மை இருக்கும். மிஸ்திரி பதவியில் இருந்த நான்கு வருடங்களில் டாடா குழும நிறுவனப் பங்குகள் ஏற்றமடைந்துதான் இருக்கின்றன. எனவே, தற்போது சிறு இறக்கங்கள் வரலாம். அதற்காக விற்கவேண்டிய அவசியமில்லை. ரத்தன் டாடா மீது உள்ள நம்பிக்கை தொடர்ந்து இருப்பதால், பெரிதாக முதலீடுகள் வெளியேற வாய்ப்பில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு