Published:Updated:

அலட்சியத்தால் திண்டாடும் குடும்பம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அலட்சியத்தால் திண்டாடும் குடும்பம்!
அலட்சியத்தால் திண்டாடும் குடும்பம்!

வாசகர் கார்னர் ஓவியங்கள்: ஹரன்

பிரீமியம் ஸ்டோரி

அதே ஆள், அதே டயலாக்!

அலட்சியத்தால் திண்டாடும் குடும்பம்!

சென்னை வில்லிவாக்கத்தில் மார்க்கெட் சென்று திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது  60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் 10 வயது சிறுமியுடன் நின்றுகொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், நெருங்கி வந்தார். ‘‘எனக்கு திருநெல்வேலிப் பக்கம். வீட்டில் மனைவியுடன் சண்டை. கோபித்துக்கொண்டு வந்துவிட்டேன்.  இவள்தான் என் கடைசிப் பெண். ஊருக்குத் திரும்பிப் போக காசு இல்லை. சாப்பிட்டு மூன்று நாள் ஆச்சு. எனக்கு கொஞ்சம் பணம் கொடுத்தால் ஊருக்கு போய், பணத்தை அனுப்பிவிடுகிறேன்” என்றார். பார்க்கப் பரிதாபமாக இருக்கவே, நான்  ரூ.500 கொடுத்து, என் முகவரியையும் கொடுத்தேன். நன்றியுடன் கையெடுத்துக் கும்பிட்டார்.

ஒரு மாத காலம் ஓடிப்போனது. பணம் திரும்பி வரவில்லை. போய்த் தொலைகிறது என்று விட்டு விட்டேன். சமீபத்தில் அதே வில்லிவாக்கம் மார்க்கெட் சென்று திரும்பும்போது, அதே பெரியவர்,  அதே சிறுமியுடன் யாரோ ஒரு நபரிடம் உதவி கேட்பதைப் பார்த்து அதிர்ந்துபோனேன். கோபத்தில் அவரது சட்டையைப் பிடித்துவிட்டேன். உடனே காலில் விழுந்து கதறினார். இவரைப் போன்ற சிலரால்தான் நிஜமாகவே சிக்கலில் இருப்பவர்களுக் கும் உதவி செய்ய தயங்குகிறார்கள் மக்கள்!

-ராஜூ, சென்னை

நீங்க குடும்பத்தை நேசிப்பவரா?

அலட்சியத்தால் திண்டாடும் குடும்பம்!

நான் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு சம்பளம், பிடித்தங்கள் போக ரூ.50 ஆயிரம் கிடைக்கிறது. நான், என் மனைவி, இரண்டு குழந்தைகள் என அளவான குடும்பம். இதுவரை பெரிய சேமிப்பு எதுவும் இல்லை. என் நண்பர் சோமசுந்தரத்துக்கும் கிட்டத்தட்ட என் சம்பள அளவுதான். அவருக்கும் பெரிய சேமிப்பு எதுவும் இல்லை.

ஒரு நாள் நானும் சோமுவும் காலை வாக்கிங் போனபோது எங்களுடன் வேலை பார்த்த சந்திரசேகரன் எதிரில் வரவே, பல விஷயங்களைப் பேசினோம். அப்போது திடீரென  இன்ஷூரன்ஸ் பற்றி பேச்சு வரவே அவர் ‘டேர்ம் இன்ஷுரன்ஸ் எடுங்கள்’ என்றார். ‘‘அட போப்பா, அதுல நாம செத்தாத்தான் பணம் கிடைக்குமாம். அது வேஸ்ட்” என்று சொல்லிவிட்டார் சோமு. சந்துரு எவ்வளவோ சொல்லியும் கேட்கவே இல்லை.

அடுத்த சில மாதங்களில் எதிர்பாராத விபத்து ஒன்றில் சோமு பரிதாபமாக உயிரிழந்தார். இப்போது அவருடைய குடும்பம் பணம் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கஷ்டம் இனி என் குடும்பத்தினருக்கும் வரக்கூடாது என்பதால், நான் இப்போது டேர்ம் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டேன்.

-கணேசன், சேலம்

ஆசை தந்த மோசம்!

அலட்சியத்தால் திண்டாடும் குடும்பம்!

ஆறு மாதங்களுக்கு முன்பு என் வீட்டுக்கு இரண்டு பெண்கள் வந்தார்கள். சேலத்தில் இருந்து வருவதாகச் சொன்னார்கள். கையில் 15 பவுன் அளவுக்கு தங்க நகை வைத்திருந்தார்கள். தன் 10 வயது ஆகும் மகளுக்கு ஆபரேஷன் செய்வதற்காக கோயம்புத்தூர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். ஆபரேஷன் செலவுக்கு ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், இந்த நகை 15 பவுனை வாங்கிக்கொண்டு ஒரு லட்சம் கொடுத்தால் போதும் என்றார்கள்.

வீட்டில் என் கணவர்கூட இல்லை. போன் செய்து கேட்கலாம் என்றால் போன் ரீச் ஆகவில்லை. எனவே, என் மகளுக்கு கல்லூரிக் கட்டணம் கட்ட வைத்திருந்த பணம் ஒரு லட்சத்தை எடுத்துக் கொடுத்து அந்த நகையை வாங்கினேன்.

குறைந்த விலையில் நகை வாங்கிய  மகிழ்ச்சியோடு, என் கணவர் வந்ததும்  காட்டினேன். அவரும் என்னைப் பாராட்டினார். இந்த நகைகளை அடமானம் வைத்து காலேஜ் ஃபீஸ் கட்டலாம் என்று முடிவு செய்து பக்கத்தில் இருந்த வங்கிக்குச் சென்றேன். நகைகளை உரசிப் பார்த்தவர்கள் அத்தனையும் போலி நகைகள் என்றனர். நான் அதிர்ந்து போனேன். என் கணவர் திட்டித் தீர்த்தார்.

-தனலட்சுமி, கோவை.

கடைசி கால பாதுகாப்பு!

அலட்சியத்தால் திண்டாடும் குடும்பம்!

நான் அரசுப் பணியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றேன். எனக்கு ரூ.15 லட்சம் அளவுக்கு பிடிமானப் பணம் கிடைத்தது. இந்த பணத்தை பிள்ளைகளுக்காகச் சேர்த்து வைக்க முடிவு செய்து, எனக்கு தெரிந்த சிலரிடம் ஆலோசனை கேட்டேன். ஆளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். என் மனைவியோ தங்க நகை வாங்கலாம் என்றாள். பிற்பாடு அவசரத் தேவைக்கு உதவும் என்றாள்.
 
இப்படியே ஆறு மாதம் ஓடியது. வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர், ‘அட, ஏன் பணத்தை கையில் சும்மா வச்சுக்கிட்டு இருக்க. உங்கிட்ட பணம் இருந்தா, நெருங்கினவங்க யாராவது கேட்பங்க;  பேசாம பிள்ளைகளுக்கு பிரிச்சு கொடுத்திடு. நிம்மதியா இருக்கலாம். அதுக தேவைப்பட்ட செலவை செஞ்சுக்கிடட்டும்” என்றார். நானும் இருக்கும் மொத்தப் பணத்தையும் மகன்கள், மகள்களுக்கு  சரிசமமாகப் பிரித்துக் கொடுத்தேன்.

இப்போது பிள்ளைகள் அனைவரும் ஆளுக்கொரு பக்கம் போய்விட்டார்கள். நானோ உடம்புக்கு முடியாமல் ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருக்கிறேன்.பிள்ளைகளிடம் பணம் கேட்டால் அவர்கள் கஷ்டங்களைச் சொல்கிறார்கள். கடைசி வரைக்கும் நமக்குன்னு கொஞ்சம் பணம் வைத்திருப்பதுதான் நமக்கு பாதுகாப்பு! 

-ஆறுமுகம், நெல்லை

உங்கள் அனுபவங்களையும்  வாசகர் கார்னர் பகுதிக்கு எழுதலாம்... வாசகர் கார்னர், நாணயம் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை -600 002 மெயில் : navdesk@vikatan.com
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு