Published:Updated:

கடன் வாங்கிட்டு எப்படியெல்லாம் சமாளிப்பாங்க!

கடன் வாங்கிட்டு எப்படியெல்லாம் சமாளிப்பாங்க!
பிரீமியம் ஸ்டோரி
கடன் வாங்கிட்டு எப்படியெல்லாம் சமாளிப்பாங்க!

கருப்பு - ஓவியம்: ஹரன்

கடன் வாங்கிட்டு எப்படியெல்லாம் சமாளிப்பாங்க!

கருப்பு - ஓவியம்: ஹரன்

Published:Updated:
கடன் வாங்கிட்டு எப்படியெல்லாம் சமாளிப்பாங்க!
பிரீமியம் ஸ்டோரி
கடன் வாங்கிட்டு எப்படியெல்லாம் சமாளிப்பாங்க!

‘ஏற்பது இகழ்ச்சி’ என அவ்வைப் பாட்டி சொன்னாலும், அவசரத் தேவைக்கு கடன் வாங்குறது இந்தக் காலத்துல ரொம்பவே சாதாரணம். ஆனா சிலர் வாங்குன கடனைத் திருப்பிக் கேட்கும்போது, விஜய் மல்லையாவாக மாறி டிமிக்கித் தருவாங்க. எப்படி சமாளிப்பாங்க தெரியுமா?

கடன் வாங்கிட்டு எப்படியெல்லாம் சமாளிப்பாங்க!

• கடன் வாங்கினவங்க பொதுவா சம்பளம் வந்ததும் தர்றதாதான் சொல்வாங்க. எப்படியாவது வாங்கியாகணும்னு ஈவ்னிங் போய் நின்னா, ‘அச்சச்சோ! மச்சி ஞாபகமே இல்லாம ஊருக்கு அனுப்பிட்டேனே. ஒரு வாரம் வெயிட் பண்ணு தர்றேன்’னு ஸ்விஸ் பேங்க்ல போட்ட கறுப்புப் பணத்தை மீட்க முடியாதுங்கிற ரேஞ்ச்ல பில்டப் தருவாங்க.

• ‘டெபிட் கார்டு கொஞ்சம் பிரச்னையா இருக்கு. இல்லாட்டி இந்நேரம் எடுத்துக் கொடுத்திருப்பேன்’னு சொல்ற ஆளுங்களுக்கு ஒரே நேரத்துல நெட் பேங்கிங்லேயும் எப்படி பிரச்னை வருதுங்கிற மர்மம் மட்டும் புரிய மாட்டேங்குது.

• கடன் கேட்கும்போது,  ‘லோன் சாங்ஷன் ஆகிருச்சு மச்சி. அடுத்த வாரம் வந்துடும். வந்த உடனே திரும்ப தந்துருவேன்’னு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுவாங்க. நாமும் நம்பிக் கொடுத்திருப்போம். ஆனா பாருங்க... அந்த லோன் கடைசி வரை என்னாச்சுனே தெரியாது.

 

• சில பசங்க ரொம்ப டென்ஷன் பேர்வழிங்க. கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டா, ‘என்ன மச்சி... என் மேல நம்பிக்கை இல்லையா? நம்ம நட்பு என்ன அவ்வளவு தானா?’னு நட்பை அடமானம் வைப்பாங்க. அதிலும் சிலர் ஒருபடி மேலே போய், ‘நீ கேட்டா என் உயிரையே தருவேன் மச்சி’னு ஃபீலிங்கைக் கொட்டுவாங்க. உன் உயிர வெச்சு நான் என்னடா பண்றது?

• பணம் வாங்குற வரைக்கும் அடிக்கடி பேசிக்கிட்டு இருந்தவங்ககூட டக்குனு எப்படித்தான் பிஸி ஆகிடுறாங்களோ! நாமளே வெட்கத்தை விட்டு போன் பண்ணுனாலும், ‘மச்சி ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன். அப்புறம் கூப்புடுறேன்’ எனச் சொல்லி கட் பண்ணும் நண்பர்கள் ஒருபோதும் திரும்ப அழைப்பதில்லை.

• ‘ரொம்ப டைட் மச்சி. நானே கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்’னு சொல்ற பக்கிங்க ஊரைச் சுற்றி, வீக் எண்ட் ஆனா பிரியாணி சாப்பிடுட்டு வெறியேத்துவாங்க. ‘நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன் மச்சி. இது அவனோட’ ட்ரீட். அதுக்குதான் போனேன் தெரியுமான்னு சூடம் கொளுத்தாத குறையாக சத்தியம் செய்வார்கள். நம்புவதைத் தவிர நமக்கும் வேறு வழியில்லை.

• ‘ஒரு புராஜெக்ட் முடியப்போகுது மச்சி. முடிஞ்சதும் லம்ப்பா வாங்கிக்கோ’ன்னு சொல்வாங்க. ‘நீ காசைக்கூட வெச்சுக்கோ. புராஜெக்ட், பிஸினஸ்னு சீன் மட்டும் போடாதே’னு சொல்லத்தோணும். ஆனா, மானங்கெட்ட மனசாட்சி அதை மியூட் பண்ணிடும்.

• 3ஜி வேகத்துல கடன் வாங்குறவங்க. திருப்பிக் கேட்டா மட்டும் 2ஜி வேகத்துல பதில் சொல்றப்போ வரும் பாருங்க ஒரு கடுப்பு! கம்பன் மட்டும் இந்தக் காலத்துல இருந்திருந்தா “கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன்”னு எழுதினாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை.

• கடன் அன்பை முறிக்கும்னு அகிம்சை வழியில் சொல்லிப்பார்த்தும் ஒரு பயலும் கேட்காததாலதானோ என்னவோ... இப்பல்லாம் ‘கடன் எலும்பை முறிக்கும்’னு வெறித்தனமா போர்டு வைக்க ஆரம்பிச்சிட்டாங்க. அது சரி! கவர்மென்ட்டே கடன்லதான் இருக்கு. போங்கப்பு!

லேட்டஸ்ட் சமாளிப்பு

‘பாஸு, உன்கிட்ட வாங்கின கடனைத் திருப்பிக் குடுத்துடலாம்னு பத்து 500 ரூபா நோட்டை எண்ணி எடுத்து வச்சிருந்தேன். ஆனா, 500 ரூபா செல்லாதுன்னு மோடி கவுத்துட்டாரு  பாஸு. இப்ப பேங்குக்கும் போக முடியல. பணமும் எடுக்க முடியல. ரொம்ப கஷ்டப்படுறேன் பாஸு. உன்கிட்ட இருந்தா இன்னொரு 5000 ரூபா கொடேன். மொத்தமா சேர்த்து தந்துட்றேன்’ என்கிறாங்க. ஏற்கெனவே ஒருமுறை தந்து அனுபவிக்கிறது போதாதாடா?

கடன் தரும்முன் கவனிக்க வேண்டியவை!

• ஏற்கெனவே கடன் தந்து சரியாக திரும்பத் தந்தவர்களுக்கு மட்டுமே கடன் கொடுங்கள்.

• கடன் பெற சொல்லப்படும் காரணங்களில் 95% நொண்டிச் சாக்குகள்தான். அந்த சாக்குகளை உடனே நம்பி பணத்தைத் தந்தால்  தப்பு உங்கள் மீதுதான்.

• கடன் தருவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நபர் எப்படிப் பட்டவர் என்பதை கொஞ்சம் விசாரியுங்கள். பலரிடமும் அடிக்கடி கடன் கேட்பவர் என்று தெரிய வந்தால், முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள்.

• ஏற்கெனவே கடன் தந்தவருக்கு இன்னொரு முறை கடன் தருவது உசிதம். அதுவும் ஒரு குறிப்பிட்ட தொகைக்குள் இருந்தால் மட்டுமே கொடுங்கள். யாருக்குக் கடன் கொடுப்பதாக இருந்தாலும் சில ஆயிரங்களுக்கு மட்டும் கடன் கொடுங்கள். தொகை அதிகமாக தருவதாக இருந்தால், அந்தக் கடனை வேறு மாதிரிதான் நீங்கள் தரவேண்டும்.

• யார் கடன் கேட்டாலும் அவர் கேட்பதில் 50% மட்டுமே உடனே  கொடுங்கள். கேட்ட பணத்தை அப்படியே தந்துவிட்டால், ‘இவனிடம் நிறைய பணம் இருக்கு போல! மெதுவா குடுத்துக்கலாம்’ என்று ஜவ்வு மாதிரி இழுப்பார்கள்.