Published:Updated:

மிஸ்திரியை நீக்க ஒன்று கூடிய டாடா!

மிஸ்திரியை நீக்க ஒன்று கூடிய டாடா!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்திரியை நீக்க ஒன்று கூடிய டாடா!

ஜெ.சரவணன்

மிஸ்திரியை நீக்க ஒன்று கூடிய டாடா!

ஜெ.சரவணன்

Published:Updated:
மிஸ்திரியை நீக்க ஒன்று கூடிய டாடா!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்திரியை நீக்க ஒன்று கூடிய டாடா!
மிஸ்திரியை நீக்க ஒன்று கூடிய டாடா!

@டாடா நிறுவனத்தின் தலைமை யிடத்தில் நடக்கும் பதவிப் போரில் முதல் ரவுண்டிலேயே அவுட் ஆகியிருக்கிறார் சைரஸ் மிஸ்திரி. டாடா சன்ஸ், டிசிஎஸ், டாடா டெலி ஆகிய மூன்று நிறுவனங்களின் தலைமைப் பதவியிலிருந்து வெற்றிகரமாக விலக்கப்பட்டு இருக்கிறார். கடந்த அக்டோபர் 24-ம் தேதி டாடா சன்ஸ் குழுமத் தலைவர் பதவியிலிருந்து மிஸ்திரி நீக்கப்பட்டபோது, அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான காரணங்கள் எதையும் ரத்தன் டாடா சொல்லவில்லை.

பிறகு ஒவ்வொரு காரணங்களாகக் கண்டுபிடித்து அவர் மீது குற்றம் சாட்ட, மிஸ்திரியும் பதிலடி கொடுத்தே வந்தார். ஆனாலும், அவருக்குத் தோல்விகள் தொடர்ந்து வந்தபடி இருக்கின்றன.

கடந்த வாரத்தில், டாடா குழுமத்தின் ‘பொன் முட்டையிடும் வாத்து’ என்று குறிப்பிடப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டத்தை நடத்தியது டாடா குழுமம். மிஸ்திரி வகித்துவந்த இயக்குநர் பொறுப்பிலிருந்து அவரை நீக்க, அதன் பங்குதாரர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. 

டாடா சன்ஸ் குழுமத்தில், டாடா சன்ஸ் குழுமம் அதிக அளவு பங்குகளை வைத்திருந்ததால், அதன் தலைவர் பதவியிலிருந்து மிஸ்திரியை எளிதில் பதவி நீக்கம் செய்ய முடிந்தது. ஆனால், நிறுவனங்களின் சட்டப்படி ஒரு நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து ஒருவரை நீக்க அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். இதனாலேயே டாடா குழும நிறுவனங்களின் இயக்குநர் பொறுப்புகளில் இருந்து மிஸ்திரியை நீக்க, டாடா குழுமம் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக டிசிஎஸ், டாடா டெலிசர்வீசஸ், இந்தியன் ஹோட்டல்ஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா கெமிக்கல்ஸ் மற்றும் டாடா பவர் ஆகிய நிறுவனங்களின் பங்குதாரர்கள் கூட்டங்களை அடுத்துவரும் நாட்களில் டாடா குழுமம் நடத்த இருக்கிறது. 

இது குறித்து டாடா குழும நிறுவனப் பங்குதாரர்களுக்கு, டாடா குழும இடைக்காலத் தலைவராக உள்ள ரத்தன் டாடா சில நாட்களுக்குமுன் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ‘‘டாடா சன்ஸ் குழுமத் தலைவர் என்பதால்தான், டாடா சன்ஸ் குழும நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் அவர் (மிஸ்திரி) நியமனம் செய்யப்பட்டார். டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உடனேயே, அவர் குழும நிறுவனங்களின் பிற பொறுப்புகளில் இருந்தும் வெளியேறி விடுவார் என்று எதிர்பார்த்தோம். துரதிர்ஷ்டவசமாக அவர் வெளியேற வில்லை. இந்த நிலையில் அவர் டாடா குழும நிறுவனங்களின் பொறுப்புகளில் தொடர்வது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்பதினால், அவரை நீக்குவதற்கு பங்குதாரர்களின் ஆதரவு அவசியம் தேவை’’ என்று எழுதி இருந்தார்.

இதற்கு மிஸ்திரியும் பதில் அளித்தார். ‘‘என்னைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பாக முன்பே பலமுறை விவாதித்ததாக ரத்தன் டாடா கூறுவதில் துளியும் உண்மை இல்லை. அக்டோபர் 24-ம் தேதி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக, அன்று இயக்குநர் குழுக் கூட்டம் நடப்பதற்கு ஐந்து நிமிடத்துக்கு முன்புதான் என்னிடம் தெரிவிக்கப் பட்டது. அதற்குமுன் என் செயல் பாடுகளை அறிந்து, ஊதியத்தை உயர்த்தும் பரிந்துரையைச் செய்த இயக்குநர் குழு, திடீரென்று என்னை நீக்கியது அதிர்ச்சியாக இருந்தது. நான் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு டாடா குழுமத்தின் மீது இருந்த இமேஜ் கடுமையாகச் சரிந்தது. அதன்பிறகே இந்தக் கடிதத்தை ரத்தன் டாடா எழுதி இருக்கிறார்’’ என்று மிஸ்திரி கூறி இருக்கிறார்.

மிஸ்திரியை நீக்க ஒன்று கூடிய டாடா!

இந்தக் களேபரத்துக்கு இடையில்,  டாடா குழும நிறுவனங்களின் பொறுப்புகளில் இருந்து மிஸ்திரியை நீக்குவதற்கான வேலையை டாடா குழுமம் தீவிரப்படுத்தியது. கடந்த வாரம் திங்கள் அன்று (12.12.2016) டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டம் மும்பையில் கூடி,  வாக்கெடுப்பு நடத்தியது. அதில் பெரும்பாலான பங்குதாரர்கள் அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் குழுவின் பதவிகளில் இருந்து மிஸ்திரியை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்தனர். எனவே, அவர் உடனடியாக அந்தப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.

அடுத்த நாள் செவ்வாய் அன்று, டிசிஎஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து மிஸ்திரியை நீக்குவதற்கான பங்குதாரர்கள் வாக்கெடுப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த டிசிஎஸ் நிறுவனத்தின் எந்தக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளாத ரத்தன் டாடா, இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்களித்த பங்குதாரர்களில் 93.11 சதவிகிதத்தினர் மிஸ்திரிக்கு எதிராக, அதாவது டிசிஎஸ் இயக்குநர்  பொறுப்பில் இருந்து அவரை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனப் பங்குதாரர்களில் 44 சதவிகி தத்தினர் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

வாக்கெடுப்பில் வாக்களித்த வர்களில் 57.5 சதவிகிதத்தினர் மிஸ்திரியை இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு ஆதரவாகவும், 42.5 சதவிகிதத்தினர் மிஸ்திரி பதவி நீக்கத்துக்கு எதிராகவும் வாக்களித்தனர். மேலும், பொதுப் பங்குதாரர்களில் (Public share holders) 82 சதவிகிதத்தினர் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்ட 18 சதவிகிதம் பேரில், 78 சதவிகிதத்தினர் பதவிப் பறிப்புக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 22 சதவிகிதத்தினர் மட்டுமே அவரின் பதவிப் பறிப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

இதற்கிடையில் ‘‘புரமோட்டர் அல்லாத பங்குகளில் 70 சதவிகிதத்தை கைவசம் வைத்துள்ள 20 சதவிகிதத்துக்கும் மேலான பங்குதாரர்கள் மிஸ்திரிக்கு ஆதரவாக, இந்தப் பதவிப் பறிப்பை எதிர்த்து வாக்களித்துள்ளதே எங்களுக்கு பெரிய வெற்றிதான்’’ என்று மிஸ்திரி தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பங்குதாரர் ஒருவர், ரத்தன் டாடாவிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். “நள்ளிரவில் சூரியன் உதிக்கிறது என்று ரத்தன் டாடா சொன்னால், ஆமாம் என்று சொல்லும் நபர்கள் அவரைச் சுற்றி இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறாரா? டாடா சன்ஸ் குழுமத்தில் கிட்டதட்ட 20% பங்குகள் மிஸ்திரி வைத்துள்ள நிலையில், அவரை அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கும் டாடா சன்ஸ் குழுமம், தகுதி படைத்தவராக இருந்தாலும்கூட யாரையும் எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறியும் போல் இருக்கிறதே’’ என்றார்.

மற்றுமொருவர், “சுயாதீன இயக்குநர்கள்          (Independent Directors) சுதந்திரமாகச் செயல்படவில்லை. அவர்களை டாடா சன்ஸ் மற்றும் டாடா ட்ரஸ்டினை நடத்துபவர்கள்தான் இயக்குகின்றனரா? டாடா சன்ஸ் குழுமம் மிஸ்திரி மீது நம்பிக்கை இழந்துவிட்டது என்று சொல்வது எனக்குப் புரியவில்லை. நம்பிக்கை போகும் அளவுக்கு மிஸ்திரி என்ன செய்தார்?” என்று கேட்டார். அதற்கு கூட்டத்தின் தலைவராக இருந்த மேத்தா, “உங்கள் அனைத்துக் கேள்விகளுக்குமான பதில்கள் ஏற்கெனவே உங்களுக்கு தரப்பட்டு விட்டன” என்று விவாதத்தை முடித்தார்.

இறுதியாக ரொனால்ட் ஃபெர்னாண்டஸ் என்ற பங்குதாரர், “டாடா குழுமத்துக்கு டாடா குடும்பத்தில் இருந்து ஒருவரைத் தலைமை தாங்க செய்திருந்தால், எந்தப் பிரச்னையும் இருந்திருக்காது. அப்போதே நோயல் டாடா-வை தலைவராக நியமித்திருக்கலாம். மிகப் பெரிய தவறு செய்துவிட்டீர்கள்” என்றார்.

டாடா குழுமம் மிஸ்திரிக்கு எதிராக ஒன்று திரண்டு டிசிஎஸ் இயக்குநர் குழுவில் இருந்து வெற்றிகரமாக நீக்கிவிட்டது. ஆனால், டாடாவின் உண்மையான வெற்றி, விரைவில் அனைத்து சிக்கல்களிலிருந்தும் மீண்டு வருவதுதான். இல்லை யென்றால் ஒரு சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடைவதை இந்திய பிசினஸ் உலகம் காண வேண்டியிருக்கும்!