Published:Updated:

தமிழ்நாடு கனிம நிறுவனம் லாபத்தில் இயங்குவது எப்படி?

தமிழ்நாடு  கனிம நிறுவனம் லாபத்தில்  இயங்குவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு கனிம நிறுவனம் லாபத்தில் இயங்குவது எப்படி?

ஆ.நந்தகுமார்

தமிழ்நாடு கனிம நிறுவனம் லாபத்தில் இயங்குவது எப்படி?

ஆ.நந்தகுமார்

Published:Updated:
தமிழ்நாடு  கனிம நிறுவனம் லாபத்தில்  இயங்குவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாடு கனிம நிறுவனம் லாபத்தில் இயங்குவது எப்படி?
தமிழ்நாடு  கனிம நிறுவனம் லாபத்தில்  இயங்குவது எப்படி?

ரசு நிறுவனங்கள், அதுவும் தமிழக அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் என்றாலே நஷ்டத்தில்தான் இயங்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. இந்த நிலையில், நஷ்டத்தில் இயங்கிவரும் பல்வேறு அரசு நிறுவனங்கள் இடையே லாபத்துடன் மிளிர்கல்லாக மிளிர்ந்து வருகிறது ‘டாமின்’ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ‘தமிழ்நாடு கனிம நிறுவனம்.’ எப்படி இது சாத்தியமானது என தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வள்ளலாரிடம் கேட்டோம்.

‘‘இயற்கை வளத்தை சிறிதளவும் வீணாக்காமல் அனைத்தையும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பதால்தான் ‘டாமின்’ அபார வளர்ச்சி அடைந்தது’’ என்றார் வள்ளலார் ஐ.ஏ.எஸ். டாமின் நிறுவனம் லாபத்துடன் இயங்கும் வழிகளை அவர் நம்மிடம் எடுத்துச் சொன்னார்.

தமிழ்நாடு  கனிம நிறுவனம் லாபத்தில்  இயங்குவது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


   காத்திருந்த சவால்கள்!

‘‘2011-க்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள சில குவாரிகளில் மட்டுமே ‘டாமின்’ தனது தொழிலாளர்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு கனிம வளங்களை வெட்டி எடுத்தது. பெரும்பாலான குவாரிகள், தனியார் ஒத்துழைப்புடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வந்தன.  ‘டாமின்’ நிறுவனத்திடம் போதிய நவீன இயந்திரங்கள் இல்லாததால், தனியாரிடம் ஒப்பந்த முறையில் செய்ய வேண்டியிருந்தது. இதனால், ஒப்பந்ததாரர்கள் கனிம வளங்களை வெட்டி எடுத்து விற்று, அதன் லாபத்தில் ஒரு பங்கினை மட்டுமே டாமினுக்குத் தந்தார்கள்.

2011-ல் நான் ‘டாமின்’ நிர்வாக இயக்குநராக பதவி ஏற்றபிறகு, எனக்கு பல சவால்கள் அங்கே காத்திருந்தன. முதலில் நாங்களே குவாரிகளை வெட்டி எடுக்க முடிவு செய்து, களத்தில் இறங்கினோம். இதற்காக 30 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களை வாங்கினோம். ஒப்பந்த முறையில் கூடுதல் பணியாளர்களை வேலைக்குச் சேர்த்தோம். இந்த மாற்று அணுகுமுறை நல்ல பலனைக் கொடுத்தது. இதனால் டாமினுக்கு கிடைக்கும் லாபம் அதிகரிக்க ஆரம்பித்தது.

   கறுப்பு கிரானைட்!

நினைவுச் சின்னங்கள் அமைக்கப் பயன்படுத்தப்படும் கறுப்பு கிரானைட் கற்களுக்கு உலகம் முழுக்கத் தேவை இருந்தது. இதை உணர்ந்து, கறுப்பு கிரானைட்டுக்கு அதிக முக்கியத்துவம் தந்தோம். சர்வதேச சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கிலும், மதுரையில் புதிதாக ஒரு தொழிற்சாலையையும் தொடங்கினோம். கறுப்பு கிரானைட் கற்களால் டாமினுடைய புகழும் உலகம் முழுக்கப் பரவியது. தற்போது 15 நாடுகளுக்கு டாமினுடைய உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன.

  ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் குழு!

கிரானைட் என்பதைத் தாண்டி வெர்மிகுலைட் (Vermiculite), சுண்ணாம்புக் கல், கட்டுமான மண் (M-Sand) என புதிய பொருட்களில் நாங்கள் அதிகக் கவனம் செலுத்தினோம். சுரங்கத் துறை நிறுவனங்களின் ‘ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி’க்காக ஒரு தனிக் குழுவை முதலில் அமைத்தது டாமின்தான். 

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் குழுவில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள், வெர்மிகுலைட், டாமிகோல்டு (Tamigold), டாமிலைட் (Tamilite), பேவர் ப்ளாக்ஸ்    
(Paver Blocks) என்னும் நடைபாதை கற்கள் எனப் புதுப்புது பொருட்களைக் கண்டுபிடித்தனர். வெர்மிடைல்ஸ் (Vermitiles) என்னும் டைல்ஸை வீட்டின் மேற்கூரையில் பொருத்தினால், வீட்டின் வெப்பம் 10 - 12 டிகிரி வரை குறையும்; மின்சாரத் தேவையைக் குறைக்கும்; தண்ணீர் கசிவடையாமல் தடுக்கும்; மேலும், தீ மற்றும் வெளிப்புற இரைச்சல் களைத் தடுத்து நிறுத்தும். டாமிலைட் என்பது சிமென்ட் உடன் கலந்து பூச்சுக்கு பயன்படுத்தும் கலவை. இது வீட்டின் சுற்றுச் சுவர்களில் இருந்து வெப்பம் உள்ளே வருவதைத் தடுக்கும்.

   இரட்டை லாபம்!

கிராபைட்டில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை இரும்புத் தொழிற்சாலை போன்றவற்றுக்கு அனுப்புவோம். 200 டன் கிராபைட் தாதுவிலிருந்து 20 டன் அளவுக்குத்தான் கிராபைட் செதில்கள் தயாராகும். மற்றவை, வீணாகக் கிடக்கும். டன் கணக்கில் வீணாகும் கிராபைட் கழிவுகளை அப்புறப்படுத்தவே அதிகமான செலவு பிடித்தது. இந்த நிலையில், எங்களது ஆராய்ச்சியாளர்கள் தந்த யோசனையினால் வீணாகும் கிராபைட் கழிவுகளில் இருந்து நடைபாதைக் கற்களைத் தயாரித்தோம். தனியாரைவிடத் தரமான, அழுத்தமான நடைபாதைக் கற்களை டாமின் தயாரித்ததால், இரட்டை லாபம் கிடைத்தது.

கிரானைட் கழிவுகளில் இருந்து மணல் உற்பத்தி செய்யும் பணியில் தற்போது தீவிரமாக இறங்கி உள்ளோம். இந்த ‘உற்பத்தி மணலை’க் கட்டடக் கட்டுமானப் பணிகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தலாம். இப்படிப் பார்த்துப் பார்த்து சிறு இயற்கை வளத்தையும் வீணாக்காமல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பதால், ‘டாமின்’ அபார வளர்ச்சி அடைந்தது.

தமிழ்நாடு  கனிம நிறுவனம் லாபத்தில்  இயங்குவது எப்படி?

   சாஃப்ட்வேர் மூலம் கண்காணிப்பு!

தமிழகம் முழுவதும் ‘டாமின்’ நிறுவனத்துக்கு பல குவாரிகள் இருக்கின்றன. ஆரம்ப காலத்தில், இவற்றில் நடக்கும் முறைகேடுகளைக் கண்காணித்துத் தடுப்பது எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. முன்பெல்லாம், குவாரியில் இரண்டு மீட்டர் வெட்டினோம், மூன்று மீட்டர் வெட்டினோம் என தினந்தோறும் போன் செய்து சொல்வார்கள். ஆனால், உண்மையில் எவ்வளவு வெட்டினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், குவாரிகளைக் கண்காணிக்க ‘குவாரி மேலாண்மை முறை’யைக் (Quarry Management System) கொண்டு வந்தோம். தமிழகம் முழுவதும் உள்ள டாமினுக்குச் சொந்தமான குவாரிகளை கணினி சாஃப்ட்வேர் (QMS)  மூலம் ஒன்றிணைத்தோம். இதனால் தினமும் ஒவ்வொரு குவாரியிலும் நடக்கும் பணிகளை, சென்னையில் இருந்தபடியே எங்களால் கண்காணிக்க முடியும். எவ்வளவு கல் அல்லது மணல் வெட்டி உள்ளார்கள், வெட்டி எடுத்ததின் அளவு என்ன, இயந்திரங்கள் எவ்வளவு மணி நேரம் ஓடின, இயந்திரங்களுக்கு போடப்பட்ட டீசல் அளவு எவ்வளவு, எத்தனை பேர் வேலைக்கு வந்துள்ளார்கள் என்பன போன்ற துல்லியமான தகவல்கூட சாஃப்ட்வேரில் அப்டேட் ஆகிவிடும்.

இதன் மூலம் முறைகேடுகளை முற்றிலுமாக ஒழித்தோம். நாள் ஒன்றுக்கு 10 இயந்திரங்கள் உதவியுடன் 50 பேர் வேலை செய்தால் எவ்வளவு உற்பத்தி கிடைக்கும் என்பதைக் கணினியில் அப்டேட் செய்துள்ளோம். உற்பத்தியில் குறைவு இருந்தாலோ, முறைகேடு இருந்தாலோ, சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். ஒரு கிரானைட் கல் குவாரியில் இருந்து உடைத்தது முதல், தொழிற்சாலையில் ‘பாலிஷ்’ ஆகி இறுதி நிலையில் விற்பனைக்கு அனுப்பப்படுவது வரை, அனைத்துமே சாஃப்ட்வேரில் வந்துவிடும். இதனால் நாட்களைக் கணக்குப் போட்டு, இன்று லாபமா, நஷ்டமா என்பதைக் கணித்துவிடுவோம். ஏனெனில், ஒரு கன (கியூபிக்) மீட்டர் அளவுக்கு ஏமாற்றப்பட்டால்கூட, டாமினுக்கு 1 லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். முன்பெல்லாம் வருடக் கடைசி யிலேயே லாப, நஷ்டக் கணக்குப் போட்டுவந்த ‘டாமின்’ நிறுவனம், இப்போது தினமும் கணக்கிடுவ தால், அரசுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.

   இ-கவர்னன்ஸ் விருது!


இவ்வாறாக, புதிய புதிய முயற்சிகளாலும், கண்காணிப்புகளாலும், ‘டாமின்’ தொடங்கப் பட்டதில் இருந்து, முதன்முறையாக 605 சதவிகித அளவுக்கு லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. எங்களின் குவாரி மேலாண்மை முறையைப் பாராட்டி, மத்திய அரசு டாமினுக்கு ‘National e-  Governance’ விருதை அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முன்னணித் தொழில் நிறுவனங்கள் குறிப்பாக, அரசுத் துறை நிறுவனங்கள் இந்த க்யூஎம்எஸ் கணினி சாஃப்ட்வேரை தாங்களும் பின்பற்ற ஆர்வம் காட்டுகின்றன’’ என்றார்.

இவரைப் போல எல்லா அரசு நிறுவனங்களின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் செயல்பட்டால், அரசு நிறுவனங்கள் அனைத்தும் லாபம் மட்டுமே சம்பாதிக்கும்!

படம் : சொ.பாலசுப்ரமணியன்

சுற்றுச்சூழலில் அக்கறை காட்டும் டாமின்!

சிவகங்கையில் உள்ள கிராபைட் சுரங்கத்துக்காகவும், கிராபைட் மேம்பாட்டுத் தொழிற்சாலையின் தேவைக்காகவும் தினமும் 1 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆலையில் பயன்படுத்தப்பட்ட தண்ணீர், கழிவு நீராக வயல்களில் வழிந்தோடியதால், பயிர்கள் பாதிப்படைந்தன. இதனைத் தடுக்கும் விதமாக, கழிவுநீரை மீண்டும் நல்ல நீராக மாற்றி மறுசுழற்சி செய்து, அந்த நீரைப் பயன்படுத்தும் திட்டத்தை ஏற்படுத்தி நிலத்தடி நீரையும், பயிர்களையும் பாதுகாப்பதாகச் சொல்கிறார்கள்.

சீரியல் எண் அடிப்படையில் விற்பனை!

கத்திரிக்காயைப் பார்த்துப் பார்த்து வாங்குவதுபோல, முன்பெல்லாம் குவாரிகளில் நல்ல கற்களாகப் பார்த்துப் பார்த்து வியாபாரிகள் வாங்கி வந்தார்கள். வியாபாரிகள் தேர்ந்தெடுக்காத கற்களை, குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை முன்பு டாமினுக்கு இருந்தது. இதனை மாற்ற டாமினில் ஒவ்வொரு கல்லுக்கும் வரிசை எண் கொடுக்கப்படுகிறது. வியாபாரிகளை இஷ்டத்துக்குத் தேர்வு செய்யவிடாமல், சீரியல் எண் அடிப்படையிலேயே கற்களை விற்க வேண்டும் என கறார் கண்டிஷன் போடப்பட்டதால், எல்லா கற்களும் லாபத்துக்கே விற்பனை ஆகிறதாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism