Published:Updated:

டாடா குழுமத்தின் ‘சந்திரா’யன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டாடா குழுமத்தின் ‘சந்திரா’யன்!
டாடா குழுமத்தின் ‘சந்திரா’யன்!

உ.சுதர்சன் காந்தி

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவின் மிகப் பழைமையானதும் மிகப் பெரியதுமான டாடா குழுமத்தின் முக்கியமான ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் தமிழரான நடராஜன் சந்திரசேகரன். நாமக்கல்லை அடுத்துள்ள மோகனூரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்.

 சந்திரசேகரின் குடும்பம்!

சந்திரசேகரனின் தந்தை நடராஜன் எம்.ஏ. பி.எல் படித்த வழக்கறிஞர். ஆனால், அவர் குடும்பச் சூழல் காரணமாக உயர் நீதிமன்றத்தில் பயிற்சி எடுக்காமல், தன் சொந்த ஊரிலேயே விவசாயம் செய்து வந்தார். இவரது தாயார் மீனாட்சி. இந்தத் தம்பதியருக்கு இவருடன் சேர்த்து மொத்தம் ஆறு பிள்ளைகள். இவர் ஐந்தாவது பிள்ளை. இவருக்கு இரண்டு அண்ணன்கள், இரண்டு அக்காக்கள், ஒரு தங்கை உண்டு.

சந்திரசேகரனின் மூத்த சகோதரர்    என்.கணபதி சுப்ரமணியம். டிசிஎஸ்-ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். இவருக்கும் மூத்தவர் என்.ஸ்ரீனிவாசன். இவர் முருகப்பா குழுமத்தில் நிதி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். ஆக மொத்தத்தில், இவர்களது குடும்பமே நிர்வாகக் குடும்பம்தான். 

டாடா குழுமத்தின் ‘சந்திரா’யன்!

பள்ளிப் பருவம்!

சந்திரசேகரன் தன் சிறுவயதில் இருந்தே பொது அறிவை வளர்த்துக்கொள்ள பல புத்தகங்களைப் படிப்பார். அந்தக் காலத்திலேயே தினமும் ஆங்கில நாளிதழ்களைத் தவறாமல் படிப்பார். புத்தகம் வாசிக்கும் பழக்கம் அவரிடம் அப்போதிருந்தே இருந்தது.

அவரது குடும்பம் ஓரளவு வசதியான குடும்பம்தான். ஆனால், ஏழை, பணக்காரர் என எந்த வித்தியாசமும் காட்டாமல் எல்லோரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்டவர்.

சிறு வயதில் நண்பர்களுடன் தினமும் காவிரி ஆற்றுக்குக் குளிக்கச் செல்வாராம். இவருக்கு கிரிக்கெட், பேட்மின்டன் விளையாட்டுகளின்  மீதும் ஆர்வம் அதிகம். அக்ரஹாரம் கிரிக்கெட் க்ளப் அணியின் துணை கேப்டனாக இருந்து அந்த அணியை வழிநடத்தினார்.

சிறு வயதில் அவர் சுட்டிப் பையனாக விளங்கியவர். அரசியல் சார்ந்த செய்திகளை எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பார். தினமும் அக்ரஹாரத்தில் இருந்து மோகனூர் அரசு மேல் நிலைப்பள்ளிக்கு நடந்து செல்லும்போது அறிவுப்பூர்வமான விஷயங்களைப் பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டே செல்வாராம். அந்தப் பள்ளியின் கிரிக்கெட் அணியிலும் இவர் முக்கியப் புள்ளி.

சந்திரசேகரனுக்கு கடவுள் பக்தி அதிகம். இவருடைய குடும்பத்திலேயே இவர் மட்டுமே முறைப்படி வேதம் படித்தவர். தினமும் பல்வேறு  மந்திரங்களைச் சொல்லி கடவுளை வழிபடுவார். விஷ்ணு சகஸ்ர நாமம், சமக்கம் எல்லாம் இவருக்கு மனப்பாடம். காஞ்சிப் பெரியவர் மீது இவருக்கு மரியாதை கலந்த பக்தி உண்டு.

இவருக்குப் பிடித்த உணவு சாம்பார் சாதம்தான்.  அதேபோல், இலந்தைப் பழம் என்றாலும் இவருக்கு கொள்ளைப் பிரியம். 

டாடா குழுமத்தின் ‘சந்திரா’யன்!

கல்லூரிப் படிப்பு!

இவர் தன் தொடக்கக் கல்வியை மோகனூரில் உள்ள பிரித்வி தொடக்கப் பள்ளியில் முடித்தார். பின், மேல்நிலைக் கல்வியை மோகனூரில் இருந்து வளையப்பட்டிக்குப் போகும் வழியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இவரது பேட்ச்தான் அந்தப் பள்ளியின் முதல் +2 பேட்ச். பின்பு, கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில் இளங்கலை செயல்முறை அறிவியல் (அப்ளைடு சயின்ஸ்) படித்துப் பட்டம் பெற்றார். பிறகு, திருச்சி ஆர்.இ.சி கல்லூரியில் (தற்போது என்.ஐ.டி) கணினிப் பயன்பாடு (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்) படித்து, முதுகலைப் பட்டம் பெற்றார்.

இவர் பள்ளிக் காலத்தில் சராசரி மாணவர்தான். ஆனால், தனக்குக் கொடுத்த வேலை எதுவாயினும், அதனை எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் செய்து முடிப்பதில் கெட்டிக்காரர்.

அபாரமான ஞாபக சக்தி என்பது தலைமைப் பண்புகளுக்குள் முக்கியமான ஒன்று. அதற்கு ஏற்றாற்போல், பல விஷயங்களையும், தான் சந்திக்கும் நபர்களின் பெயர்களையும் ஞாபகம் வைத்திருப்பதில் இவரை யாரும் தோற்கடிக்க முடியாது.

சந்திரசேகரன் ஆறாம் வகுப்பு படித்த போது அவருக்கு வயிற்றில் ஒரு மருத்துவ சிகிச்சை நடந்தது. அதனால் அவர் நான்கு மாதங்களாகப் பள்ளிக்குச் செல்லவில்லை. அப்போது சந்திரசேகரனின் மீது அக்கறைக் கொண்ட கண்ணம்மா என்ற டீச்சர், அவரது  வீட்டுக்கே வந்து அன்று பள்ளியில் நடத்திய பாடத்தைத் தினமும் நடத்திவிட்டுப் போவராம். இதன் மூலம் இவர் அந்த ஆண்டில் வெற்றிகரமாக தேர்ச்சிப் பெற்றார். ஆக, இவருடைய ஆசிரியர்களில் இந்த கண்ணம்மா டீச்சரின் பங்கு மகத்தானது. இன்றும் தன் சொந்த ஊருக்கு வந்தால், தனது ஆசிரியர்களை சந்தித்துவிட்டுதான் செல்வாராம் சந்திரசேகரன். 

இவருக்கு கர்நாடக இசையில் அதீத பிரியம் உண்டு. புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் மீது அலாதிப் பிரியம் உண்டு. இவரது குடும்பத்தினரில் சிலருக்கு  சர்க்கரை நோய் உண்டு.எனவே, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜாக்கிங் செய்ய ஆரம்பித்தவர், நாளடைவில் மாரத்தான் ஓட்ட வீரராக மாறி மும்பை, நியூயார்க், சிகாகோ, பாஸ்டன் நகரங்களில் நடைபெறும் மாரத்தான்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

சந்திரசேகரனின் மனைவியின் பெயர் லலிதா. அவர் இன்வெஸ்ட்மென்ட் பேங்கராக வேலை பார்த்து வந்தவர். திருமணத்துக்குப் பின் வேலைக்குப் போவதை நிறுத்திக் கொண்டார். இவர்களது மகன் பெயர் ப்ரணவ், தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார். 

டாடா குழுமத்தின் ‘சந்திரா’யன்!

டாடாவில் வேலை!

1987-ல் டாடா நிறுவனத்தில் புரோகிராமராக பணியில்  சேர்ந்தார். 2009-ல் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக உயர்ந்தார். ராமதுரைக்குப் பிறகு டிசிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியை ஏற்றுக்கொண்ட இவர், அந்த நிறுவனத்தின் வருமானத்தையும் சந்தை மதிப்பையும் பல மடங்கு உயர்த்தினார். இவர் தன் வாழ்நாளில் டாடா நிறுவனத்தைத் தவிர, வேறு  எந்த  நிறுவனத்திலும் பணியாற்றியதில்லை.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு பலரது பெயர்கள் அடிபட்டன. அத்தனை ஜாம்பவான்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இவரது பெயரை முன்மொழியக் காரணம், இவரிடம் உள்ள நேர்மையுடன் கூடிய தொழில் திறமைதான். டிசிஎஸ் நிறுவனத்தை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்ற மாதிரி, டாடா குழும நிறுவனங்களையும் மிகப் பெரிய வெற்றி காண வைப்பார் நம்மூர் சந்திரசேகரன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு