Published:Updated:

‘டாடா’வில் சந்திரசேகரன்... சந்திக்க வேண்டிய சவால்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘டாடா’வில் சந்திரசேகரன்... சந்திக்க வேண்டிய சவால்கள்!
‘டாடா’வில் சந்திரசேகரன்... சந்திக்க வேண்டிய சவால்கள்!

ஜெ.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கப்பட்டதில் இருந்து, டாடா குழுமத்தின் செயல்பாடும் அதன் மீது மக்களுக்கும் மற்றும் பங்குதாரர்களுக்கும் இருக்கும் நம்பிக்கையும் குறையத் தொடங்கி இருக்கின்றன. மிஸ்திரி நீக்கத்துக்குப் பிறகு ரத்தன் டாடா இடைக்காலத் தலைவராக இருந்தார். அப்போதும் டாடாவுக்கும் மிஸ்திரிக்கும் இடையிலான மோதல் தொடர்ந்தபடி இருந்தது.

இந்த நிலையில்தான், டாடா சன்ஸ்-ன் புதிய தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். டாடா குழும நிறுவனங்களில் கடந்த முப்பது ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் சந்திரசேகரன். டிசிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இவர் பதவியேற்றபின் அந்த நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்தது. 

150 வருட பாரம்பர்யமும், 103 பில்லியன் டாலர் மதிப்பும் கொண்ட டாடா குழுமத்தின் தலைவர் பதவிக்கான பட்டியலில் வெளிநாட்டினர் உட்பட பலரது பெயர்கள் இருந்தும், தமிழரான சந்திரசேகரன் (சுருக்கமாக, சந்திரா) அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம். ஆனாலும், அவர் சந்திக்கவேண்டிய சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தச் சவால்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

‘டாடா’வில் சந்திரசேகரன்... சந்திக்க வேண்டிய சவால்கள்!

   இணக்கமான உறவு!

டாடா சன்ஸ், டாடா ட்ரஸ்ட் மற்றும் டாடா குழும நிறுவனங்கள் என அனைத்துடனும் இணக்கமான உறவு வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் சந்திராவுக்கும் தற்போது இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் டாடா சன்ஸின் தலைவராக மிஸ்திரி இருந்தாலும், ரத்தன் டாடா அதிகம் ஆதிக்கம் செலுத்தும் டாடா ட்ரஸ்ட்டில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அது மட்டுமல்லாமல், டாடா குழும நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பல போட்டிகளும், முரண்பாடுகளும், சிக்கல்களும் உள்ளன. இந்த நிறுவனங்கள் எல்லாம் அளவில் மிகப் பெரியவை. எனவே, அவற்றுள் இருக்கும் பிரச்னைகளும் பூதாகரமானவை. இந்தப் பிரச்னைகளை எல்லாம் தீர்க்க வேண்டும் எனில், எல்லா அமைப்பின் தலைவர்களுடன் நல்லதொரு உறவை வைத்திருப்பது அவசியம். எல்லோருடனும் நல்ல பழக்கம் வைத்திருக்கும் திறமை கொண்டவர் சந்திரா. டாடா குழும நிறுவனங்களின் தலைவர்களுடன் அவர் எப்படிப்பட்ட இணக்கமான உறவை வைத்திருக்கப்போகிறார் என்பது முக்கியமான சவால்.

   இழந்த நம்பிக்கை, உடைந்த இமேஜ்!

டாடா சன்ஸின் தலைவர் பதவியில் இருந்து மிஸ்திரி தூக்கி எறியப்பட்ட பின்பு, டாடா குழும நிறுவனங்களின் இமேஜ் மோசமாக பாதிப்படைந்து உள்ளது. முதலில் அதனை சரிசெய்ய வேண்டும். 

டாடா பிராண்டின் மீது இருந்த நம்பிக்கை  குறைந்ததால், கடந்த சில மாதங்களில் பங்குச் சந்தையில் டாடா குழும நிறுவனங்கள் அடைந்த நஷ்டம் சுமார் ரூ.42,470 கோடி. இவை டாடா குழும நிறுவனங்களின் மொத்த மார்க்கெட் கேபிட்டலைசேஷனில் சுமார் 5%. ரத்தன் - மிஸ்திரி மோதல் வெளிப்படையாக நடக்கத் தொடங்கிய பின்பு, டாடா குழும நிறுவனப் பங்குகளைப் பலரும் விற்கத் தொடங்கியதினால் ஏற்பட்ட விளைவு இது. இதனால் நஷ்டமடைந்த சில பங்குதாரர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிற அளவுக்குச் சென்றிருக்கிறார்கள்.

டாடா குழும நிறுவனங்களின் பங்கு விலை தற்போது கொஞ்சம் உயர்ந்திருக்கிறது என்றாலும், இதை இன்னும் பெரிய அளவில் உயர்த்த வேண்டிய சவால் சந்திராவுக்கு இருக்கவே செய்கிறது.

   சுதந்திரமான செயல்பாடு!


டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மிஸ்திரி, ரத்தன் டாடா மீது வைக்கும் முக்கியமான விமர்சனமே, தான் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவே இல்லை என்பதே. 

‘கண்ணை மூடிக் குளத்தில் விடப்பட்ட வாத்தாகவே நான் இருந்தேன்’ என்று மிஸ்திரி ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். மிஸ்திரியைப் போலத்தான், சந்திராவையும் வைத்து இருப்பார்களா அல்லது அவரையாவது சுதந்திரமாகச் செயல்பட விடுவார்களா என்பது மிகப் பெரிய கேள்வி.

ரத்தனைப் பொறுத்தவரை, டாடா சன்ஸின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் தனது வழிகாட்டுதலுடன் தொழில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாகப் பலரும் சொல்கிறார்கள். குறிப்பாக, எந்த நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்வது, எந்த நிறுவனத்தை வாங்குவது, எதை தக்கவைத்துக் கொள்வது, எதை விற்பது போன்றவற்றில் முக்கிய முடிவுகளை எடுக்கும் ரத்தனின் ஆலோசனையை, புதிய தலைவரான சந்திரா பெறுவது அவசியம் என்று பலரும் நினைக்கிறார்கள். எனவே, அவரே சுயமாகச் சிந்தித்து, எந்த அளவுக்கு தன்னிச்சையான முடிவினை எடுக்க முடியும் என்பது பெரிய சவால்தான்.

   வளர்ச்சியில் கவனம்!

நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் டிவிடெண்ட் வளர்ச்சி மோசமாக இருப்பதே மிஸ்திரியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முக்கிய காரணம் என்று சொன்னது டாடா ட்ரஸ்ட் மற்றும் டாடா சன்ஸ் இயக்குநர்கள் குழு.

கடந்த சில வருடங்களாகவே டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் தவிர, பிற டாடா குழும நிறுவனங்கள் அனைத்தும் வீழ்ச்சியில் இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திலேகூட, நானோ கார் அறிமுகப்படுத்தப்பட்டபோது நல்ல வளர்ச்சி அடைந்தது. ஆனால், தற்போது அது நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி டாடாவின் பல தயாரிப்புகள் பெரும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சந்திரா, மிஸ்திரி ஆளான அதே பழிக்கு ஆளாகாமல் எப்படிக் குழும நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிக்கப் போகிறார் என்பதும் முக்கியமான சவால்தான்.  

‘டாடா’வில் சந்திரசேகரன்... சந்திக்க வேண்டிய சவால்கள்!

   ஐ.டி தவிர வேறு அனுபவம் இல்லை!

டாடாவில் முப்பது வருடங்கள் அனுபவம் சந்திராவுக்கு இருந்தாலும், அவர் 1987-ல் டாடாவுக்குள் வந்தது முதல் இன்று வரை டிசிஎஸ் நிறுவனத்தைத் தாண்டி டாடாவின் பிற நிறுவனங்கள் அல்லது பிற டாடா தயாரிப்புகளில் எந்த அனுபவத்தையும் பெற்றது கிடையாது. அவருக்குத் தகவல் தொழில்நுட்பத் துறை மட்டும்தான் நன்கு தெரியும். பிற துறைகளான ஸ்டீல், ஏர்லைன்ஸ், கெமிக்கல் உட்பட டாடாவின் பிற தொழில் துறைகள் பற்றிய அனுபவம் துளியும் இல்லை. இந்த நிலையில், அவர் எப்படி டாடா குழும நிறுவனங்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளைத் திட்டமிடுவார் என்பது பெரிய கேள்விக்குறி. மேலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் அவ்வளவு அனுபவம் இருந்தும், இன்டர்நெட், இ-காமர்ஸ் போன்றவற்றில் எந்தத் தொழில் முன்னெடுப்புகளையும் டாடா சார்பாக அவர் எடுக்கவில்லை.

  டாடா ஸ்டீல், டொகோமோ மற்றும் பல!

டாடாவின் சில முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகளை அவற்றின் வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க வேண்டிய கட்டாயமும் சந்திராவுக்கு இருக்கிறது. மிஸ்திரி நீக்கப்பட்ட பிறகு, அவர் எழுதிய கடிதத்தில், குறிப்பிட்ட 18 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை டாடா இழக்கும் அபாயம் உள்ளது என்று தெரிவித்திருந்தார். அவர் குறிப்பிட்டதில் முக்கியமானவை, இங்கிலாந்தில் இருக்கும் டாடா ஸ்டீல் வாங்கிய கோரஸ் நிறுவன விவகாரம், டாடா-டொகோமோ இணைப்பு விவகாரம், இந்தியன் ஹோட்டல்ஸ் கோ. லிமிடெட் நிறுவனத்தின் பிசினஸ். இந்த நிறுவனங்கள் டாடா குழுமத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. இனிவரும் நாட்களில் ஏற்படுத்தவும் போகின்றன. இந்த இழப்பிலிருந்து டாடா குழும நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டிய சவால் சந்திராவுக்கு இருக்கிறது.

   மிஸ்திரியின் வழக்குகள்!

டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்ட மிஸ்திரி, டாடாவின் மீது பல வழக்குகளைத் தொடுத்துள்ளார். மிஸ்திரி குடும்பம் டாடா குழுமத்தில் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்துள்ள நிலையில், அவரது வழக்குகள் டாடா குழுமத்துக்கு எப்போதும் சிக்கல்தான். டாடா சன்ஸின் தலைவராக சந்திரா நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்வேன் என்றும் சொல்லியிருக்கிறார் மிஸ்திரி. இந்த வழக்குகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பது முக்கியமான சவால்தான். 

  உலகப் பொருளாதார சுணக்கம்!

உலக அளவில் பொருளாதார வளர்ச்சியானது இன்னும் வேகமெடுக்காமலே இருக்கிறது. அமெரிக்காவும், ஐரோப்பாவும் 2008-க்குப் பிறகு பெரிய அளவில் தொழில் முன்னேற்றம் காணவில்லை. வளர்ந்த நாடுகளை மட்டுமே இனி நம்பி இருக்காமல், வளர்ந்துவரும் நாடுகளிலும் கவனம் செலுத்தினால்தான் டாடா குழும நிறுவனங்களின் தொழில் வளர்ச்சியைப் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல முடியும். தனது நிறுவனங்களுக்கான புதிய சந்தையை
சந்திரா எப்படித் தேடிக் கண்டுபிடிக்கப் போகிறாரோ? 

மாரத்தான் ஓட்டக்காரரான சந்திராவுக்கு  டாடாவில் பல மேடுபள்ளங்கள் உள்ள சாலைதான் தற்போது கிடைத்திருக்கிறது. அவர் இந்த மேடு பள்ளங்களை எல்லாம் எப்படிக் கடந்து வந்து, தன் வெற்றியை நிலைநாட்டப் போகிறார் என்பது அவர் முன்நிற்கும்  மிகப்பெரிய சவால்!

டாடா குழும நிறுவனங்கள்... இனி என்ன செய்ய வேண்டும்?

வ.நாகப்பன், பங்குச் சந்தை நிபுணர்

‘டாடா’வில் சந்திரசேகரன்... சந்திக்க வேண்டிய சவால்கள்!

‘‘டிசிஎஸ்  நிறுவனம் இனி என்னவாகும் என்பதும் பலரை யோசிக்க வைத்திருக்கும் கேள்வி. என்றாலும், அது மிகச் சரியாக இயங்கும் (Well oiled engine) நிறுவனம் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. டிசிஎஸ் நிறுவனத்தை விட்டு அதன் சிஇஓ ராமதுரை போனபோதோ அல்லது சிஎஃப்ஓ மஹாலிங்கம் போனபோதோகூட இந்தக் கேள்வி எழவில்லை. அடுத்துப் பொறுப்பேற்க இருக்கும் கோபிநாத்தும் நீண்ட கால அனுபவமிக்கவர். எனவே,    டிசிஎஸ். இப்போது நன்றாகச் செய்படுவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், அடுத்தக்கட்ட வளர்ச்சி என்பது முக்கியமான கேள்வி.  

டாடா குழும நிறுவனங்கள் புதுத் துறைகளில் கால்பதிக்க வேண்டும். இதற்குப் புத்தாக்கத்தை (Innovation) ஊக்குவித்து, உயர் மதிப்பு சேர்க்கும் துறைகளுக்கேற்ப தன்னை மேம்படுத்துவதன் மூலமாக மட்டுமே அடுத்தக்கட்ட வளர்ச்சி இருக்கும்.

டாடா குழுமத்தில், பல நிறுவனங்கள் ஒரே துறையில் ஈடுபட்டு வருகின்றன. ஒரே துறையில் அல்லது ஒரே துறை சார்ந்து இயங்கிவரும் இந்த நிறுவனங்களை ஒருங்கிணைக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் அவர்களது செயல்பாடு மேம்படவும், சந்தையை விரிவாக்கவும், செலவுகளைக் கட்டுக்குள் வைத்து லாபம் அதிகரிக்கவும் வழிபிறக்கும்.

உதாரணமாக, மென்பொருள்/தகவல் தொழில்நுட்பத் துறையில் எடுத்துக்கொண்டால், டி.சி.எஸ். + டாடா எலெக்ஸி, தொலைத்தொடர்புத் துறையில் டாடா டெலிகாம்/கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலி சர்வீசஸ், நுகர்வோர் பொருட்கள் துறையில் டாடா காபி, டாடா குளோபல் பீவரேஜஸ், ரசாயனப் பொருட்களைத் தயாரிக்கும் அதே நேரத்தில் உப்பு மற்றும் பருப்பு வியாபாரம் செய்யும் டாடா கெமிக்கல்ஸ், உலோகத் துறையில் டாடா மெட்டாலிக்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களை இணைப்பதன் முழுக் கவனத்துடன் தொழில் செய்ய முடியும். மேலும், ஒவ்வொரு பொருளுக்கும் அல்லது ஒரே மாதிரியான பொருட்களுக்கு ஒவ்வொரு நிறுவனமும் விற்பனைக்கான நெட்வொர்க்கைத் தனித்தனியாக அமைப்பதைவிட, ஒரே நிறுவனமாக இருந்து ஒரே நெட்வொர்க்கைப் பயன்படுத்தினால் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும்.  

அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான், கூகுள், ஃபேஸ்புக் என இந்த ஐந்து நிறுவனங் களின் சந்தை மதிப்பைக் கூட்டினாலே அது, நம் நாட்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஒட்டுமொத்த நிறுவனங்களின் சந்தை மதிப்பைவிட மிக அதிகம். இவ்வளவும் நடந்திருப்பது கடந்த 15 ஆண்டுகளில்தான். இந்த அதிவேக வளர்ச்சியில், அங்கு பணிபுரியும் பெரும்பாலான இந்தியர்களுக்கும் பங்கு உண்டு. பிறகு ஏன் இந்தியத் தகவல் தொழில்நுட்ப/மென்பொருள் நிறுவனங்கள் ஒன்றுகூட அந்த அளவுக்கு வளர முடியவில்லை? இந்தக் கேள்வி டாடா குழும நிறுவனங்களை நடத்துபவர்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு