Published:Updated:

பொதுக் காப்பீடு நிறுவனங்களின் 25% முதலீட்டை விற்பது சாதகமா, பாதகமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பொதுக் காப்பீடு நிறுவனங்களின்  25% முதலீட்டை விற்பது  சாதகமா, பாதகமா?
பொதுக் காப்பீடு நிறுவனங்களின் 25% முதலீட்டை விற்பது சாதகமா, பாதகமா?

ஜெ.சரவணன்

பிரீமியம் ஸ்டோரி
பொதுக் காப்பீடு நிறுவனங்களின்  25% முதலீட்டை விற்பது  சாதகமா, பாதகமா?

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ், ஓரியன்டல் இன்ஷூரன்ஸ், நேஷனல் இன்ஷூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆகிய ஐந்து அரசு பொதுக் காப்பீடு நிறுவனங்களில் உள்ள தனது முதலீட்டினை 100 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதமாகக் குறைத்துக்கொள்ள மத்திய அரசாங்கம் முடிவெடுத்து, அதற்கான ஒப்புதலையும் மத்திய நிதி அமைச்சரவையிடம் இருந்து பெற்றுவிட்டது.

பொதுக் காப்பீடு நிறுவனங்களின்  25% முதலீட்டை விற்பது  சாதகமா, பாதகமா?



இதன் மூலம் இந்த நிறுவனங்களின் 25 சதவிகிதப் பங்குகளை பொதுப் பங்கு வெளியீட்டின் (IPO) மூலம் விற்பனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மத்திய அரசாங்கம், இந்த நிறுவனங்களில் உள்ள பங்குகளைக் குறைத்துக்கொண்டு, நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது.

இந்த விற்பனையின் மூலம் ரூ.20,000 கோடிக்கு மேல் நிதி திரட்டப்படலாம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே பல அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்பட்டு வந்துள்ளன. அரசின் இந்த முயற்சிக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது.

பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் அரசுக்கு இருக்கும் முதலீட்டைக் குறைக்கும் நடவடிக்கை சாதகமா அல்லது பாதகமா என வெல்த்லேடர் நிதி ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.ஸ்ரீதரனிடம் கேட்டோம். ‘‘இந்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, இன்ஷூரன்ஸ் துறைக்கே அரசின் இந்த நடவடிக்கை சாதகமாக இருக்கும்’’ என்று தனது கருத்தைச் சொல்லத் தொடங்கினார் ஸ்ரீதரன்.

“கடந்த ஐந்து வருடங்களாகவே இன்ஷூரன்ஸ் துறை பெரிதாக வளரவே இல்லை. முக்கியமாக, ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டங்கள் மிக மிகக் குறைவாகவே மக்களைச் சென்றடைந்திருக்கின்றன. மேலும், இன்ஷூரன்ஸ் துறையில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தனியார் நிறுவனங்கள் நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. காரணம், அவை மக்களிடையே தொடர்ந்து விழிப்பு உணர்வுத் திட்டங்களைச் செயல்படுத்துவது, தொடர்ச்சியாக விளம்பரங்களைச் செய்வது, புதுமையான  மார்க்கெட்டிங் உத்திகளைக் கையாள்வது போன்றவற்றினால்தான். 

ஆனால், கடந்த காலங்களில் அரசுக் காப்பீடு நிறுவனங்கள் தங்களுடைய பிசினஸை வளர்ப்பதில் தீவிரமாக முயற்சித்த மாதிரித் தெரியவில்லை. அதனால்தான் அவற்றின் பிசினஸ், தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது சற்றுக்  குறைவாகவே இருக்கிறது. ஆனாலும்கூட, அரசுக் காப்பீட்டு நிறுவனங்கள் பழமையானது, நம்பிக்கைக்குரியது என்கிற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது. எனவே, தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் காப்பீட்டுத் திட்டங்களைத் திட்டமிடுவதும், அவற்றை மக்களிடையே கொண்டு போய் சேர்ப்பதும் முக்கியம். அரசுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக இதுவரை பெரிய நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், இந்த நிறுவனங்களுக்காக அரசே தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் பங்குகள் விற்பனை செய்யப்பட்டு, பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் முதலீட்டாளர்கள் இந்த பங்குகளில் முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் அரசுக்குக் கணிசமான நிதி கிடைக்கும். அந்த நிதியை இந்த நிறுவனங்களின் விரிவாக்கப் பணிகளுக்காகவும் விளம்பரம் மற்றும் விழிப்பு உணர்வு போன்றவற்றுக்காகவும் பயன்படுத்த முடியும்.
 
இன்ஷூரன்ஸ் துறையில் பெரும்பாலான திட்டங்கள் இன்னும்கூட பெருவாரியான மக்களைச் சென்று அடையாமலேயே இருக்கின்றன. அந்த வெற்றிடத்தை அரசு நிறுவனங் களால் எளிதில் நிரப்ப முடியும். இந்த நடவடிக்கை ஒட்டுமொத்தமாக இன்ஷூரன்ஸ் துறையிலும் கணிசமான வளர்ச்சியை ஏற்படுத்தும்.

இந்தப் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர் களுக்கும் நீண்ட காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். குறுகிய காலத்தில் தனியார் நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வந்தாலும், அரசின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும்பட்சத்தில், நீண்ட காலத்தில் அரசுக் காப்பீட்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களுக்கு நிகராக வளர்ச்சி அடையும்” என்றார்.

ஆனால், அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசுக் காப்பீட்டு நிறுவனங்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இது குறித்து யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் அதிகாரிகள் சங்கத்தின் சென்னை பிராந்திய பொதுச் செயலாளர் வாசுதேவனுடன் பேசினோம். அரசின் இந்த முயற்சியை எதிர்ப்ப தற்கான காரணங்களை அவர் சொன்னார்.

“பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங் களுக்குத் தேவையான நிதியைத் திரட்டவும்,  இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் கணக்குகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகச் சொல்கிறது. ஆனால், இந்த நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு இந்த நிறுவனங்களின் நிதிநிலை ஒன்றும் மோசமாக இல்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே லாபத்தை ஈட்டும் நிறுவனங்களாகவே இந்த நிறுவனங்கள் இருக்கின்றன.

அரசுக்குக் கணிசமான டிவிடெண்ட் தொகையும் இந்த நிறுவனங்கள் மூலம் கிடைத்து வருகிறது. மேலும், அரசின் நிதி உதவி இல்லாமலேயே இந்த நிறுவனங்கள்      வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. தனியார் நிறுவனங்களைப் போல, அதிக லாபம் ஈட்டும் நோக்கில் இல்லாமல், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு, ஆரோக்கியமான அளவில் லாபத்தை ஈட்டி வருகின்றன.

மேலும், மக்களின் நலனுக்காக மத்திய அரசாங்கம் அவ்வப்போது அறிவிக்கும் காப்பீட்டுத் திட்டங்களை யும் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றன. உதாரணத்துக்கு, சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட பிரதம மந்திரி சுரக்‌ஷா பிம யோஜனா திட்டம் மற்றும் தமிழக முதல்வர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மேலும், இயற்கைச் சீற்றங்களின்போது மக்களுக்கு ஏற்படும் இழப்புகளிலிருந்தும் இந்த நிறுவனங்களின் திட்டங்கள் மீட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் க்ளெய்ம் விகிதம் மிகவும் அதிகம்.

ஆனால், இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளைக் குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசாங்கம் இறங்குவது இந்த நிறுவனங்களை பலவீனமாக்கிவிடும். அதனால்தான் நாங்கள் இதை எதிர்க்கிறோம்” என்று முடித்தார்.

பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் 25 சதவிகித முதலீட்டை பங்கு வெளியீட்டின் மூலம் வெளியிடுவதினால் சில பாதகங்கள் ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், இந்தப் பாதகங்களைவிட சாதகங்களே அதிகம். எனவே, அரசின் இந்த முயற்சியை மனமுவந்து வரவேற்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு