நடப்பு
பங்குச் சந்தை
அறிவிப்பு
Published:Updated:

புதிய காருக்கு நோ க்ளெய்ம் போனஸ் கிடைக்குமா?

புதிய காருக்கு நோ க்ளெய்ம்  போனஸ் கிடைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய காருக்கு நோ க்ளெய்ம் போனஸ் கிடைக்குமா?

கேள்வி - பதில்

புதிய காருக்கு நோ க்ளெய்ம்  போனஸ் கிடைக்குமா?

? எனது காருக்கான இன்ஷூரன்ஸ் பாலிசி இரு மாதங்களுக்குமுன் காலாவதியாகிவிட்டது. நான் காரை விற்றுவிட்டதால், பாலிசியைப் புதுப்பிக்க வில்லை. இப்போது புதிதாக கார் வாங்க இருக்கிறேன். என் இன்ஷூரன்ஸ் பாலிசியின் நோ க்ளெய்ம் போனஸை இப்போது க்ளெய்ம் செய்ய முடியுமா?

புதிய காருக்கு நோ க்ளெய்ம்  போனஸ் கிடைக்குமா?சி. மகேஷ், தென்காசி.
திருமலை, வழக்கறிஞர் மற்றும் இன்ஷூரன்ஸ் நிபுணர்


“நோ க்ளெய்ம் போனஸ் என்பது, நாம் க்ளெய்ம் எதுவும் செய்யாவிட்டால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நமக்கு வழங்கக்கூடியது. இது வாகனத்துக்குக் கிடையாது, பாலிசிதாரருக்குத்தான் கிடைக்கும். பாலிசிதாரர் விபத்து எதுவும் ஏற்படுத்தாமல், வாகனத்தை நன்கு பாதுகாத்து, இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தாமல் இருந்ததால், அவரைப் பாராட்டி பிரீமியத்தில் ஒரு சில சதவிகிதத்தை நோ க்ளெய்ம் போனஸாக இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும். இது பாலிசிதாரரை ஊக்குவிக்கும்விதமாக வழங்கப்படுகிறது.

‘ஓன் டேமேஜ்’ பிரீமியத்தில் மட்டுமே நோ க்ளெய்ம் போனஸ் வழங்கப்படுகிறது. இதை நீங்கள் வாங்க இருக்கும் புத்தம் புதிய காருக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். பழைய காருக்கு (Secondhand car) பயன்படுத்த முடியாது. புதிய காரைப் பயன்படுத்தும்போது, உங்களுடைய ரெனுவல் நோட்டீஸை ஆதாரமாக வைத்துக்கொள்ளலாம். பொதுவாக, பாலிசிதாரருக்கு வழங்கப்பட்ட நோ க்ளெய்ம் போனஸை புதிய காருக்குப் பயன்படுத்த எந்த அவசரமும் இல்லை. மூன்று வருடங்களுக்குள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.”

? நான் பங்குச் சந்தையில் ரூ.10 லட்சம் முதலீடு செய்துள்ளேன். அதில் ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை நான் வருமான வரியில் இருந்து கழித்துக்கொள்ள முடியுமா? அல்லது, வரியைத் தவிர்க்க வேறு ஏதாவது வழிகள் இருக்கிறதா?

புதிய காருக்கு நோ க்ளெய்ம்  போனஸ் கிடைக்குமா?நடராஜ், திருநெல்வேலி
ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், கோவை


“பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி டீமேட் கணக்கில் வைத்துவிட்டு விற்பனை செய்யாமல், அதன் மதிப்பு குறைந்து இருந்தாலோ, அதிகரித்து இருந்தாலோ வரி விலக்கோ, வரிச் சலுகையோ கிடைக்காது. பங்குகளை விற்பனை செய்து லாபம் அல்லது நஷ்டம் வந்தால் அதனை   வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும்போது காட்ட வேண்டும்.  பங்குகளை வாங்கி ஓராண்டுக்குள் விற்று  லாபம் வந்தால் குறுகிய கால மூலதன ஆதாய வரி 15%  கட்ட வேண்டும்; நஷ்டமாக இருந்தால், அடுத்த எட்டு வருடங்களில் கிடைக்கும் லாபத்திலிருந்து கழித்துக்கொள்ளலாம். இதுமட்டுமன்றி, வருமான வரிப் படிவங்களை காலக்கெடுவுக்கு முன்பாகவே தாக்கல் செய்ய வேண்டும்.”

? சமீபத்தில் எனது சிபில் ஸ்கோர் ரிப்போர்ட்டைப் பார்த்தேன். அதில் என் தந்தையின் பெயருக்குப் பதிலாக வேறு பெயர் இருக்கிறது. மேலும், நான் கடன் வாங்கியது போலவும் தவறாகக் காட்டப்பட்டு இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?

புதிய காருக்கு நோ க்ளெய்ம்  போனஸ் கிடைக்குமா?செந்தில்குமார், சேலம்
ராஜன், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ் பிரைவேட் லிமிடெட்.


“சிபில் இணையதளத்தில் CIBIL Online Dispute Resolution Form பகுதியில், உங்களுடைய பெயர், முகவரி, போன் நம்பர், இ-மெயில் ஐடி என குறிப்பிட்ட சில விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அதன்பின் உங்கள் தந்தை பெயர் மற்றும் கடன் சம்பந்தமாக என்னென்ன தவறுகள் உள்ளனவோ அவற்றைச் திருத்திக்கொள்ள முடியும். இதற்கு எந்தவிதமான ஆவணமும் தேவையில்லை. இதைப் பதிவுசெய்த பின்னர் உங்களுடைய இ-மெயில் முகவரிக்கு பதில் வரும். இதற்குக் குறைந்தபட்சம் 30 நாட்கள் ஆகும். இதை ஆன்லைனில் மட்டுமே செய்ய முடியும்.”

? பங்குச் சந்தையில் 50 ஆயிரம் ரூபாய்  முதலீடு செய்துள்ளேன். என் கணக்கு இலவச அடிப்படை டீமேட் பிஎஸ்டிஏ (Basic Services Demat Account) கீழ் வருகிறது. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பிஎஸ்டிஏ டீமேட் கணக்குகளை வைத்துக்கொள்ளலாமா?

புதிய காருக்கு நோ க்ளெய்ம்  போனஸ் கிடைக்குமா?ராகேஷ், உளுந்தூர்பேட்டை
அபுபக்கர் சித்திக், நிதி ஆலோசகர்


“செபி அமைப்பானது ரூ.50,000 வரைக்கும் செய்யப்படும் பங்கு முதலீட்டுக்கு இலவச டீமேட் வழங்க சொல்லி இருக்கிறது. ரூ. 50,001 முதல் 2,00,000 வரையிலான டீமேட் கணக்குகளுக்கு ஆண்டுக்கு ரூ.100 கட்டணம்    வசூலிக்கச் சொல்லி இருக்கிறது. என்எஸ்டிஎல், சிடிஎஸ்எல் என இரண்டு டெபாசிட்டரி நிறுவனங்களின் கீழ்தான் பல்வேறு நிறுவனங்கள் டீமேட் கணக்குகளை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு காலாண்டிலும் பான் எண் மூலம், ஒன்றுக்கு மேற்பட்ட இலவச டீமேட் கணக்கு வைத்திருப்பவர்களுடைய கணக்கை ரத்து செய்ய நிறுவனங்களுக்கு, என்எஸ்டிஎல் மற்றும் சிடிஎஸ்எல் அறிக்கை அனுப்பி வருகின்றன. ஆகையால், பல இலவச டீமேட் கணக்குகளை ஒருவர் வைத்திருக்க முடியாது. இதற்குமுன், டீமேட் கணக்குத் தொடங்குவதற்கு முன்பே, பிஎஸ்டிஏ கணக்கு வேண்டுமெனில், அதற்கான படிவத்தில் ‘டிக்’ செய்ய வேண்டும். இப்போது யார் டீமேட் கணக்குத் தொடங்கினாலும், குறிப்பிட்ட தொகைக்குக் குறைவாக இருந்தால் தானாகவே அது பிஎஸ்டிஏ கணக்காகத்தான் ஆரம்பிக்கப்படும். இனி ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இலவச டீமேட் கணக்குகளை வைத்திருக்க முடியாது.”

கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.

போன் மூலமாகவும்  கேள்வி கேட்கலாம்!

இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளைப் பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளைப் பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!