Published:Updated:

சூப்பர் முதலீட்டாளர் பஃபெட் உருவானது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சூப்பர் முதலீட்டாளர் பஃபெட் உருவானது எப்படி?
சூப்பர் முதலீட்டாளர் பஃபெட் உருவானது எப்படி?

ஹெச்பிஒவின் அசத்தல் டாக்குமென்ட்ரிசித்தார்த்தன் சுந்தரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
சூப்பர் முதலீட்டாளர் பஃபெட் உருவானது எப்படி?

ஃபெட் பற்றி இதுவரை நாம் எத்தனையோ தகவல்களைக் கேட்டிருப்போம்; கட்டுரைகளைப் படித்திருப்போம். ஆனால், அவரது வாழ்க்கையை சுவாரஸ்யமான ஒரு டாக்குமென்டரி படமாக எடுத்து, வெளியிட்டிருக் கிறது ஹெச்பிஓ டிவி நிறுவனம். ‘பிகமிங் வாரன் பஃபெட்’ என்கிற சுமார் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டாக்குமென்டரி படம்தான் தற்போது, உலக அளவில் முதலீட்டாளர்கள் வட்டாரத்தில் சுடச்சுடப் பேசப்பட்டு வரும் படம்.

டெடி குன்ஹார்ட் தயாரித்த இந்த டாக்குமென்டரியை பீட்டர் குன்ஹார்ட் இயக்கி இருக்கிறார். அதாவது, மகன் பீட்டருக்கு இந்த டாக்குமென்டரி படத்தை இயக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறார் டெடி குன்ஹார்ட். இவர், டாக்குமென்டரிகளுக்கான உயரிய விருதான எம்மி (Emmy) விருதை ஆறு முறை பெற்றிருக்கிறார். ‌

இந்த டாக்குமென்டரி, வாரன் பஃபெட் தன்னுடைய கதையை தானே சொல்கிற மாதிரி அமைந்திருக்கிறது. பஃபெட் தவிர, அவருடைய சகோதரி, அவருடைய மூன்று குழந்தைகள், அவருடைய நண்பர் சார்லி மாங்கர், பில்கேட்ஸ் உள்பட பலரும் பஃபெட்டின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை இந்த டாக்குமென்டரி படத்தில் சுவாரஸ்யமாக எடுத்துச்சொல்லி இருக்கிறார்கள்.

பஃபெட் பற்றி ஏற்கெனவே தெரிந்த தகவல்களைத் திரும்பவும் சொல்லாமல், அவர் இவ்வளவு பெரிய பணக்காரராக ஆனதற்குக் காரணமான முக்கியச் சம்பவங்களை எடுத்துச் சொல்லி இருப்பது இந்த டாக்குமென்டரியின் ஸ்பெஷல் அம்சம். அமெரிக்காவில் நெப்ரஸ்கா மாகாணத்தில் உள்ள ஒமஹாவில் வசிக்கும் பஃபெட்டின் வீட்டில் இருந்து சுமார் ஐந்து நிமிட கார் பயண தூரத்தில் இருக்கிறது அவரது அலுவலகம். அலுவலகம் போகிற வழியிலேயே, தான் விரும்பிச் சாப்பிடும் உணவுகளை வாங்கிக் கொள்கிறார் பஃபெட்.

‘‘நான் அலுவலகத்துக்குச் செல்லும்முன் என் மனைவி 2.61 டாலர், 3.17 டாலர் எனச் சில நாணயங்களை எடுத்து வைப்பார். நான் நிறைய பணம் சம்பாதிக்கிறேன் என்று நினைக்கும்போது 3.17 டாலர் கொடுத்து முட்டையும் வெண்ணெய்யும் கலந்த பிஸ்கட்டை வாங்குவேன். இல்லாவிட்டால் 2.61 டாலர் தந்து இரண்டு சாஸேஜ் பட்டீஸை வாங்குவேன்’’ என்றபடி, தானே வாங்கிவந்த உணவை ரசித்துச் சாப்பிடுகிறார் பஃபெட். எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், தேவைக்கு மீறி 50 காசுகூட அதிகம் செலவழிக்க மாட்டேன் என்கிற பிடிவாதம்தான் பஃபெட்டை இந்த அளவுக்குப் பெரிய பணக்காரராக ஆக்கியிருக்கிறது என்பது இந்தப் படத்தைப் பார்க்கும்போது நமக்கு பளிச்சென்று விளங்குகிறது.

சூப்பர் முதலீட்டாளர் பஃபெட் உருவானது எப்படி?

பஃபெட் சிறுவனாக இருந்தபோது அவரது வயதை ஒட்டியவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்த, அவர் மட்டும் புத்தகங்களை வாங்கிப் படிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.  `ஆயிரம் டாலர்கள் சம்பாதிக்க ஆயிரம் வழிகள்’ என்கிற புத்தகத்தைப் படித்து, சிறு வயதிலேயே சின்னச் சின்னதாக வேலைகளைச் செய்து, பணம் சேர்த்து முதலீடு செய்தார். இன்றைக்குக்கூட சுமார் 500 பக்கங்கள் அளவுக்கு  தினமும் தினமும் படிக்கிற வழக்கம் பஃபெட்டிடம் இருக்கிறது ஆச்சர்யமான தகவல்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இவருக்குப் படிக்க இடம் கிடைக்காத நிலையில், கொலம்பியா பிசினஸ் ஸ்கூலில் படிக்கச் சென்றார். அந்த கல்விக் கழகத்தை அவர் தேர்ந்தெடுக்கக் காரணம், அங்கு பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த முதலீட்டு மேதை `பெஞ்சமின் கிரஹாம்’தான். இவர் ‘வேல்யூ இன்வெஸ்ட்டிங்’ என்கிற கோட்பாட்டின்  பிதாமகர். இவரிடமிருந்து கற்றறிந்த `வித்தை’தான் இன்றைக்கு ஆலமரமாக வளர்ந்திருக்கும் வாரனின் சாம்ராஜ்யத்துக்கு `விதை’ ஆகும்.

தனது வாழ்க்கையில் இரண்டு திருப்புமுனைகள் ஏற்பட்டதாக இந்த டாக்குமென்டரியில் சொல்கிறார் பஃபெட். முதலாவது, தாயின் கர்ப்பத்திலிருந்து இந்த உலகுக்கு வந்தது. இரண்டாவது, தனது மனைவி சூஸியைச் சந்தித்தது. (1952-லிருந்து 2004 வரை இவருடன் வாழ்ந்து வந்தார். அதன்பின் 2006-ல் ஆஸ்ட்ரிடைத் திருமணம் செய்து கொண்டார்).

பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது மேடையில் பேசக் கூச்சப்பட்ட பஃபெட், பிற்பாடு டேல் கார்னிஜ் பள்ளியில் `பப்ளிக் ஸ்பீக்கிங்’ வகுப்பில் சேர்ந்து தேர்ச்சி அடைந்தார். 1987-ம் ஆண்டு இவருடைய நிறுவனமான `பெர்க்‌ஷயர் ஹாத்வே ‘சாலமன் இன்க் (Solomon Inc)’ என்கிற நிறுவனத்தில் 12 சதவிகிதப் பங்குகளை வாங்கி, அந்த நிறுவனத்தின் இயக்குநராகவும் ஆனார். 1990-ம் ஆண்டு, கருவூல விதிகளை மீறி சாலமன் இன்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி செயல்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழவே, அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின், அந்த நிறுவனத்தின் சேர்மனாக வாரன் நியமிக்கப் பட்டார். அந்தப் பிரச்னையிலிருந்து அந்த நிறுவனம், வெளிவரும் வரை அவரே தலைமை தாங்கி நடத்தினார்.     1988-ம் ஆண்டு இவரது நிறுவனம் கோகோ கோலா நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஆரம்பித்தது. நாளடைவில் இது 7% அளவுக்கு உயர்ந்தது. முதலீட்டின் மதிப்பு சுமார் 1.02 பில்லியன் டாலர்கள். பெர்க்‌ஷயர் முதலீடு செய்த பங்குகளிலேயே இது மிகவும் லாபகரமான முதலீடு ஆகும். இன்றைக்கும் கோக்கின் பங்குகளை இவரது நிறுவனம் வைத்திருக்கிறது.

இவர் தனது சொத்தில் 99 சதவிகிதத்தைக் கல்வி, சுகாதாரம், அகதிகள் நலன், குழந்தைகள் பாதுகாப்பு, அணு ஆயுத ஒழிப்பு போன்ற சமூக அக்கறை கொண்ட திட்டங்களில் ஈடுபட்டு வரும் பல தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாகத் தந்்திருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க சமூகநல அமைப்புகள் பஃபெட் ஃபவுண்டேஷன், மெலிண்டா & பில்கேட்ஸ் ஃபவுண்டேஷன் ஆகும்.

2006-ம் ஆண்டு இவருடைய சம்பளம் 1 லட்சம் டாலர் மட்டுமே. மற்ற பெரிய நிறுவனங்களின் சிஇஓ சம்பளத்துடன் ஒப்பிடும்போது இது மிக மிகக் குறைவு. 1958-ம் ஆண்டு வாங்கிய வீட்டியே இன்றும் வசித்து வருகிறார். ஒருகாலத்தில் ஒமாஹாவில் பஸ்ஸில் ஏறி மக்களுடன் மக்களாக சேர்ந்து அலுவலகம் போய் வருவார். இப்போதும் தன் கெடிலாக் காரை தானே ஓட்டிச் செல்கிறார்.   2012-ம் ஆண்டு, ப்ரோஸ்டேட் புற்றுநோயால் இவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர் சிகிச்சைக்குப்பின் அவர் நலமாக இருக்கிறார்.

வாரன் பஃபெட்டைக் கண்டு வியப்பவர்களுக்கு இந்த டாக்குமென்டரி, நிச்சயம் ஒரு நல்லதொரு விருந்தாக இருக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு