Published:Updated:

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு... பத்தாம் பசலித்தனமான கேள்விகள் தேவையா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு...  பத்தாம் பசலித்தனமான கேள்விகள் தேவையா?
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு... பத்தாம் பசலித்தனமான கேள்விகள் தேவையா?

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு...  பத்தாம் பசலித்தனமான கேள்விகள் தேவையா?

ரசுப் பணி. இன்றைக்கும் அதன் ஈர்ப்பு குறையாமல் இருக்கிறது.  இப்போதெல்லாம் தனியாருக்கு இணையாக, அல்லது அதற்கும் மேலாக ஊதியம், அரசுப் பணியில் கிடைக்கிறது. அதிலும் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமலான பின்னர், ‘அள்ளித் தருகிறது’ அரசு.

பணி நேரம், பணிச் சூழல், பணிச் சலுகைகள் என்று சாதகங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதனால் இப்போதெல்லாம் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் எழுதுவோரின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தொடுகிறது. இதற்கு ஏற்றாற்போல், பணிக்கான தேர்வு முறையும், மிகவும் நேர்த்தியாக, நேர்மையாக நடைபெறுகிறது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு...  பத்தாம் பசலித்தனமான கேள்விகள் தேவையா?ஆனாலும், தேர்வுகளுக்கான பாடத் திட்டம், கேட்கப்படும் வினாக்கள் ஆகியவற்றில் போட்டித் தேர்வுகள், காலத்தால் மிகவும் பின்தங்கியே உள்ளன. கடந்த சுமார் 30 ஆண்டுகளில் எந்தவித பெரிய மாற்றத்துக்கும் உள்ளாகாத ஒரே துறை, அநேகமாக இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு, இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

‘குரூப் 1’ என்பது, ஐ.ஏ.எஸ்/ஐ.பி.எஸ் போன்ற பணிகளுக்கு அடுத்த நிலையில் இருப்பது. தேர்ச்சி பெற்றுப் பணியில் சேருவோர், எடுத்த எடுப்பிலேயே முதல் நிலை அதிகாரியாகப் பொறுப்பு வகிப்பார். அடுத்து சுமார் பத்து ஆண்டுகளில், மாவட்ட ஆட்சித் தலைவராகப் பதவி உயர்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர் ஆகிவிடுவார். இந்த அளவுக்கு உயர்பதவிக்கான தேர்வில் வினாக்கள் எப்படி இருக்கவேண்டும்..? ஆனால், வினாத்தாளைப் பார்க்கிறபோது, பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.

பாமினி அரசர்களின் பெயர்களைக் கால வரிசைப்படி பட்டியல் இடுதல், மக்கள் தொகை அடிப்படையில் உ.பி, பீகார், மேற்கு வங்கம் மாநிலங்களை வரிசைப்படுத்துதல், நிதிக் குழுவின் தற்போதைய தலைவர் யார், சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார் என்பது போன்ற கேள்விகள்தான் நிரம்பி இருந்தன.

பாவம் இளைஞர்கள்! ஏதோ ஒரு ‘விநாடி - வினா’ நிகழ்ச்சியில் பங்கு எடுத்த உணர்வுதான்  அவர்களுக்குத் தோன்றியிருக்கும். ‘இது முதல் நிலைத் தேர்வுதான்; தர வரிசைக்கு இந்த மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படாது’ என்று கூறப்பட்டாலும்கூட, சற்றேனும் களத் தேவை மற்றும் கள நிலைமையைக் கருத்தில்கொள்ளாமல் எப்படி இத்தகைய வினாக்களைத் தொடுக்க முடிகிறது..? 

இன்றைய இளைஞர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் படித்தவர்களிடம் இருந்து முற்றிலுமாக மாறுபட்டவர்கள். இவர்கள் கற்பதும், காண்பதும், அறிந்துகொள்வதும், செய்ய எண்ணுவதும் இன்றைய உலகத் தேவைகளோடு ஒட்டியவை. இவர்கள் நிகழ்கால செயல் வீரர்கள். கணினியும் இணையமும், தொடு திரையும் காணொளியும் இன்றைய இளைஞர்களை வேறு ஓர் அறிவுலகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டன. அதற்கேற்றாற்போல, போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டமும் கேள்விகளும் மாறி இருக்கவேண்டும். ஆனால், இல்லை என்பதுதான் வேதனை தரும் நிஜம்.

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்? (கேள்வி எண் 158), எந்த மாநிலத்துக்கு யார் ஆளுநர் என்பது (கேள்வி என் 126) போன்ற கேள்விகள், கடந்த சில பத்து ஆண்டுகளில் எதுவுமே மாறவில்லை என்பதையே எடுத்துச் சொல்கின்றன.

நம் நாட்டில் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், குடிசைத் தொழில் செய்வோர் ஆகியோரின் பிரச்னைகள் பற்றி... கல்வி, வேலை வாய்ப்பு, அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்து...சர்வதேச அரசியல்,  பொருளாதாரம், சுற்றுச்சூழல், மரபுசாரா எரிசக்தி குறித்து... இப்படி பல முனைகளில் இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய, அறிந்து வைத்திருக்கிற விவரங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, எந்த ஆண்டு எந்தத் தேதியில், என்ன நடந்தது என்று பத்தாம்பசலித்தனமான கேள்வி களுக்கு பதில் எழுதச் சொல்லி, எத்தகையோரை அரசுப் பணிக்கு அனுப்ப முயற்சிக்கிறார்கள்...?

ஏற்கெனவே, ‘அரசு இயந்திரம் மக்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதில்லை’ என்கிற மனக்குறை பரவலாக இருக்கிறது. இனிவரும் தலைமுறையாவது இந்தக் குறையைத் தீர்த்து வைப்பார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தால், பணிக்கு வரும் முன்பே அவர்களை இயந்திரங்களாக்குகிற வகையில் தேர்வுகள் அமைந்தால் என்ன செய்வது..?

அறிவுத் திறனை, பகுத்துணர்ந்து பார்க்கும் ஆற்றலை, சமயோசிதமாக முடிவெடுக்கும் பக்குவத்தை வளர்ப்பதாகத் தேர்வுகள் அமைய வேண்டும். நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் வாழத் துடிக்கும் இளைஞர்களை அடையாளம் காண்கிற விதத்தில் தேர்வு முறையை மாற்றி அமைக்கவேண்டும். உடனடியாக அதற்கான சாத்தியம் இல்லையா..? குறைந்தபட்சம், தேர்வில் கேள்விகளையாவது, இன்றைய இளைஞர்களின் ஆர்வத்துக்கு ஈடு கொடுக்கிற வகையில் தேர்வு செய்யலாம்.

‘குரூப் 1 நிலைப் பணிகள் தவிர பிறவற்றுக்கு, நேர்முகத் தேர்வு கூடாது’ என்று தற்போதைய மத்திய அரசு அறிவித்துவிட்டது. பாரபட்சமான தேர்வு நடைபெறுவதை இது தடுக்கும் என்பது மட்டுமல்ல; எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிற கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்குச் சாதகமாக அமையும்.

இதேபோன்று, கிராமப்புற இளைஞர்கள் எளிதில் விடை அளிக்கும் வகையில், எல்லாப் போட்டித் தேர்வுகளிலும் எல்லாத் தாள்களையும் தாய்மொழியில் எழுதுகிற வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் தற்போது நிலவும் ஏற்றத்தாழ்வு அகலும்; கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புப் பெருகும். 

போன பாதையிலேயே குருட்டாம் போக்கில் போவதற்குப் பதிலாக ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது உத்திகளை அறிமுகப்படுத்த வேண்டும்; புதிய பணிச் சூழலுக்கு, புதிய பணிச் சவால்களுக்கு பழக்கப்படுத்துகிற வகையில் போட்டித் தேர்வுகள் அமைக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் மனிதவள ஆர்வலர்கள், விற்பன்னர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, அதன்படி மைய அரசும் மாநில அரசுகளும் போட்டித் தேர்வுகளை வடிவமைக்க வேண்டும். அப்படிச் செய்தால், காலத்துக்கு ஏற்ற திறன் படைத்தவர்களைக் கொண்ட அரசு அலுவலகங்கள் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு