Published:Updated:

இந்திய மீடியாக்களின் ராஜா சுபாஷ் சந்திரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இந்திய மீடியாக்களின் ராஜா சுபாஷ் சந்திரா
இந்திய மீடியாக்களின் ராஜா சுபாஷ் சந்திரா

இந்திய மீடியாக்களின் ராஜா சுபாஷ் சந்திரா

பிரீமியம் ஸ்டோரி

த்தாம் வகுப்புகூட முடிக்காதவர். ஆனால், இந்திய ஊடக வரலாற்றில் மிக முக்கியமான சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர். தொலைக்காட்சி, சினிமா இரண்டிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தனதாக்கிக்கொண்ட இவர், அரசியலிலும் களமிறங்கிக் கலக்கியிருக்கிறார். அவர்தான் எஸ்ஸெல் (ஜீ தொலைக்காட்சி) குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுபாஷ் சந்திரா. அவரது கடந்த 40 ஆண்டு கால பிசினஸ் பயணம் என்பது எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய சுவாரஸ்யமான கதை. 

  தாத்தா கற்றுத் தந்த பாடங்கள்

ஹரியானாவின் ஹிசார் கிராமத்தில் பிறந்த சுபாஷ் சந்திராவின் குடும்பம் மிகப் பெரியது. ஏழு குழந்தைகளில் இவர்தான் மூத்தவர். அவரது குடும்பம் உணவு தானியங்களை மொத்தமாக வாங்கி, கமிஷனுக்கு விற்கும் தொழில் செய்து வந்தது. பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும், குடும்பத் தொழிலில் ஈடுபாட்டுடன் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துவந்தார் சுபாஷ் சந்திரா. வாடிக்கையாளர்களுக்கு அனுப்பவேண்டிய கடிதங்களைத் தாத்தாவுக்கு எழுதிக் கொடுப்பார். அவருடைய தாத்தாவிடமிருந்து அவர் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார். அவற்றில் மிக முக்கியமானவை, “எதற்கும் பயப்படாதே, எந்த காரணத்துக்காகவும் எடுத்த காரியத்திலிருந்து பின் வாங்காதே, நேர்மையிலிருந்து தவறாதே” ஆகிய மூன்றும்தான்.

இந்திய மீடியாக்களின் ராஜா சுபாஷ் சந்திரா

  நொடிந்துபோன குடும்பத் தொழில்

இப்படி மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த சுபாஷ் சந்திராவின் வாழ்க்கையில் திடீர் திருப்பம், அவர் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது வந்தது. குடும்ப பிசினஸ் முற்றிலும் நஷ்டமடைந்து, பெரும் கடன் சேர்ந்து பொருளாதார நெருக்கடியில் இருந்தது. அந்த நெருக்கடியால் அவரது பெற்றோர் அவருடைய படிப்புக்குப் பணம் கட்ட முடியாமல், படிப்பை நிறுத்திவிட்டு, குடும்பத் தொழிலில் ஈடுபட அழைத்தனர். தோல்வியடைந்த தொழிலுக்கு தன்னை அழைக்கிறார்களே என்று அவர் நினைக்கவில்லை. மாறாக, அனைத்து சவால்களையும் பிரச்னைகளையும் சந்திக்கும் துணிவோடு இறங்கினார். அவரிடம் அப்போது இருந்தது வெறும் 11 ரூபாய் மட்டுமே. எப்போது நம்மிடம் இழக்க எதுவுமில்லையோ, அப்போதுதான் நாம் வெற்றியடைவதற்கான அனைத்தும் நம்மிடம் இருக்கிறது என்று அர்த்தம் என்பதற்கேற்ப, அவர் செயல்பட ஆரம்பித்தார்.

இந்திய உணவுக் கழகத்தின் மேலாளருக்கு சுபாஷ் சந்திரா அறிமுகமாக, ராணுவத்துக்குத் தேவையான உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை வாங்கித் தரும் ஆர்டர் கிடைத்தது. முடிந்தது என்று நினைத்த குடும்பத் தொழில்  மீண்டும் துளித்தது. ஆனால், முதலீடு செய்ய கையில் துளியும் பணம் இல்லை. ஆனாலும், இந்த வாய்ப்பை விட்டுவிட சுபாஷுக்கு மனமில்லை.

அதற்காக உணவு தானியங்களை ஏலம் எடுக்கும்போது அதிக விலை கேட்டபோதும்கூட அவருக்குப் பொருள்கள் தரப்படவில்லை. அவரை விடக் குறைவாக ஏலம் கேட்டவருக்குத் தந்தார்கள்.  “நீ பணம் கொடுக்கிற வரை எங்களால் காத்திருக்க முடியாது” என்றார்கள். அவர்கள் சொல்வதை வேதனையுடன் ஒப்புக்கொண்டாலும், அதை சுபாஷ் சந்திரா அப்படியே விட்டுவிடவில்லை. வாடிக்கையாளரிடம் நம்பிக்கையை விதைத்தது தான் சுபாஷின் முதல் பிசினஸ் தந்திரம். ரூ.10 லட்சம் பிசினஸ் செய்ததில் ஒரு லட்சம் லாபம் கிடைக்கிறது என்றால், அதை எடுத்துக்கொண்டு யாருக்கெல்லாம் தரவேண்டுமோ, அவர்களிடம் சென்று அவர்களுக்குத் தரவேண்டியதில் ஒரு பங்கை மட்டுமாவது கொடுத்து நம்பிக்கையை வளர்த்தார். இந்த நம்பிக்கை அவரது பிசினஸை வளர்த்தது.

  எளிய யோசனை தந்த தொழில் வாய்ப்பு

பின்னர் 1971-ல் தனது பிசினஸை டெல்லிக்கு மாற்றினார். அங்கு ஒரு பருப்பு ஆலையைக் குத்தகைக்கு எடுத்து, பிசினஸ் செய்ய ஆரம்பித்தார். இந்திய உணவுக் கழகம்,   உணவு தானியங்களைச் சேமித்து பாதுகாக்கிற மாதிரி கூடாரம் அமைக்க பெரிய இடம் தேடி வந்தது. கான்கிரீட் கட்டடங்கள் எதற்கு,  பாலிதீன் ஷீட்டுகளைக் கொண்டு கூடாரம் அமைத்து திறந்தவெளியிலேயே உணவுப் பொருள்களை மூடி வைக்கலாம் என்று சொன்ன அவரது எளிமையான யோசனையால், கூடாரம் அமைக்கும் பிசினஸும் அவருக்கே கிடைத்தது.

பாலிதீன் பிசினஸ் செய்ய ஆரம்பித்ததும், பிற பேக்கேஜிங் முறைகள் குறித்தும் அறிந்துகொண்டார் சுபாஷ். பேக்கேஜிங் பிசினஸிலும் இறங்கினார். மாத்திரைகளுக்கான லேமினேட்டட் அட்டை களையும், காலி கேப்சூல்களையும் உற்பத்தி செய்யும் தொழிலை ஆரம்பித்தார். கூடவே தொழில் துறை கருவிகளை உற்பத்தி செய்யும் ஆலையையும் வாங்கினார். இப்படி நினைத்த தொழில்களையெல்லாம் செயல்படுத்தினார்.

1982-ல் எஸ்ஸெல் பேக்கேஜிங் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, பற்பசைகளுக்கான லேமினேட்டட் டியூப்களை உருவாக்கினார். ஆனால், அவற்றை யுனிலிவர், கோல்கேட் போன்ற நிறுவனங்கள் வாங்க முன்வரவில்லை. பின்னர் லோக்கல் பிராண்ட் நிறுவனங்களுக்கு லேமினேட்டட் டியூப்களை விற்பனை செய்தார்.  நாளடைவில் அவரை நிராகரித்த நிறுவனங்கள் அவரைத் தேடி வந்தன. இன்று எஸ்ஸெல் பேக்கெஜ், சர்வதேச அளவில் முன்னணி லேமினேட்டட், சாஃப்ட் டியூப் உற்பத்தி நிறுவனமாக இருப்பதோடு, 13 நாடுகளில் தனது விற்பனையைச் செய்துவருகிறது.

  தடைகளைத் தாண்டித் தொடங்கிய தொலைக்காட்சி

1990-ல் அடுத்த அதிரடியாக, இந்தியாவின் முதல் சாட்டிலைட் தனியார் தொலைக்காட்சியைத் தொடங்கும் முயற்சியில் இறங்கினார். பிராட்காஸ்டிங் உரிமம் அப்போது அரசுத் துறைகளிடம் மட்டுமே இருந்தன. தூர்தர்ஷன் போலவே, தனியார் சாட்டிலைட் தொலைக்காட்சி ஒன்றை தொடங்க வேண்டும் என்று விரும்பியவருக்கு, தொடக்கத்தில் மிஞ்சியதெல்லாம் ஏமாற்றமே. ஏனெனில் வெளிநாட்டிலுள்ள சேனல்களெல்லாம் இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. ஆனால், இந்தியாவில் தனியார் தொலைக்காட்சி தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை. தொடர்ந்து முட்டிமோதிப் பார்த்தும் எந்தப் பலனும் இல்லை. ஆனாலும், அவர் பின்வாங்கவில்லை. வேறு வழியைக் கண்டுபிடித்தார். இந்தியாவில் தொடங்கும் சேனலுக்குத்தானே அனுமதி இல்லை, நாமும் வெளிநாட்டில் தொலைக்காட்சியைத் தொடங்கி இங்கே ஒளிபரப்பினால் யார் தடுப்பார்கள் என்று இறங்கினார். ஆனால், அது ஒன்றும் அவ்வளவு சுலபமாக நடந்துவிடவில்லை. 

1990-ல் சீன அரசும், ஆசிய சாட்டிலைட் டெலி கம்யூனிகேஷன் நிறுவனமும் இணைந்து தொடங்கும் நேரடி பிராட்காஸ்டிங் சாட்டிலைட்டுக்கு ஹாங்காங் உரிமம் கொடுத்தது. ஆசிய சாட்டிலைட் நிறுவனத்தின் சிஇஓ, லி கா ஷிங் என்பவரைத் துரத்தித் துரத்திக் கேட்டும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. 1.5 மில்லியன் டாலர் மதிப்புடைய உரிமைக்கு, 5 மில்லியன் டாலர் கொடுப்பதாகக் கூறியும் இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஹாங்காங்கைச் சேர்ந்த ஸ்டார் நிறுவனத்துக்கு மட்டுமே குத்தகை விடப்பட்டது. அது லி கா ஷிங்கின் மகன் நடத்தும் நிறுவனம். அந்த நிறுவனத்திடம் கேட்டபோது அதுவும் நிராகரித்தது. ஆனால், அவரது விடாமுயற்சிக்காகவே நிலைமை அவருக்குச் சாதகமாக மாறியது.

ஸ்டார் நிறுவனத்திடமிருந்து, இந்தியாவில் ஒளிபரப்புவதற்கான உரிமையை, சுபாஷ் சந்திரா தருவதாகச் சொன்ன விலையில்கூட பெற்றுக் கொள்ள யாரும் முன்வரவில்லை. வேறுவழி இல்லாமல் ஸ்டார் நிறுவனம் சுபாஷ் சந்திராவிடம் வந்து நின்றது. லி கா ஷிங்கை ஹெலிகாப்டரில் கூட்டிக்கொண்டு வந்து, தனது எஸ்ஸெல் பேக்கேஜ், எஸ்ஸெல் வேர்ல்டு போன்றவற்றைக் காட்டி தனது பிசினஸ்களைப் பற்றியும் எடுத்துக் கூறினார். அவரது கடும் உழைப்பு மற்றும் முயற்சியால் கவரப்பட்ட லி கா ஷிங், இறுதியில் இதற்கான ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டார். 

ஆனால், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர் அவரது தொலைக்காட்சிக்குத் தடை போட்டார். பின்னர் நிறுவனத்தின் பெயரை ஜீ டெலிஃபிலிம்ஸ் லிமிடெட் என்று மாற்றி, அந்தத் தொலைக்காட்சிக்குத் தேவையான செய்திகளைக் கொடுத்துவந்தார். அது இந்தியாவுக்குள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த தொலைகாட்சியில் விளம்பரக் கட்டணம் குறைவாக இருந்ததால், ஜீ டிவி பிசினஸ் வளர்ந்தது.

ஆனால், அதற்கு சோதனை, நியூஸ் கார்ப் நிறுவனத் தலைவர் ராபர்ட் முர்டாக் வழியாக வந்து சேர்ந்தது. ஸ்டார் நிறுவனத்தின் 63 சதவிகிதப் பங்குகளை வாங்கிய அவர், இந்திய ஒளிபரப்பு பிசினஸை ஆரம்பத்தில் பொருட்படுத்தவில்லை. ஆனால், போகப் போக ஒட்டுமொத்த 20 மில்லியன் ரீச்சில் 12 மில்லியன், ஜி இந்தியாவிலிருந்துதான் கிடைப்பதைப் பார்த்த அவர், அதை அப்படியே தனதாக்கிக்கொள்ள விரும்பினார். வேறு வழியில்லாமல் வேறொரு நிறுவனத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அதற்கு பணம் இல்லாததால், ஜி இந்தியாவின் 49 சதவிகிதப் பங்கை அவருக்கு விற்றார்.

இதற்குப்பின் ஸ்டார் நிறுவனம் ஒப்பந்தத்தை மீறி, இந்தியிலும் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க,  இதனால் முற்றிய விவகாரத்தில் சுபாஷ் சந்திரா வைத்திருந்த 51 பங்குகளையும் முர்டாக் கேட்க, நிறுவன மதிப்பைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாகப் பணம் கேட்டார். லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, வெற்றி பெற்று, 180 மில்லியன் டாலர் பணம் கொடுத்து முர்டாக்குடனான பார்ட்னர்ஷிப்பை முடித்துக் கொண்டார்.

இத்தனை சவால்களைத்  தாண்டி உதயமான ஜி டிவி, பிற்பாடு அடையாத உச்சமில்லை. தொலைக்காட்சி, சினிமா பிசினஸில் கொடிகட்டிப் பறந்தது. 167 நாடுகளில் சுமார் 500 மில்லியன் பார்வையாளர்கள் இந்தத் தொலைக்காட்சிக்கு இருக்கிறார்கள். டிரேடிங், பேக்கேஜிங், டிவி, சினிமா என்று இன்று எஸ்ஸெல் குழுமம் பிரமாண்ட ஆலமரமாக எழுந்து நிற்கிறது.

சக்சஸ் மந்திரம்!

கையில் எது கிடைத்தாலும் அதனை வைத்து பிசினஸ் செய்யும் சாமர்த்தியம் கொண்டவர் சுபாஷ் சந்திரா. ஒரு பிசினஸுக்கானத் தேவை இருந்தால், அதற்கான பொருளும் கிடைத்தால் போதும் பிசினஸ் தொடங்கிவிடுவார். அந்தத் தொழில் தனக்குத் தெரியுமா தெரியாதா, வெற்றி கிடைக்குமா, கிடைக்காதா என்பதைப்பற்றியெல்லாம் பெரிதாக யோசிக்க மாட்டார். முயற்சி மட்டுமே அவரது முதல் ஆயுதமாக இருந்தது. அவரது பின்வாங்காத துணிச்சல் அவருக்கு இரண்டாவது ஆயுதமாக இருந்து தோல்வியிலிருந்து அவரைக் காத்தது. நிறைய பிசினஸ்களைத் தொடங்கி மூடியிருக்கிறார். எந்த பிசினஸாக இருந்தாலும் அதன் முதல் இரண்டு இடங்களில் இருந்தால் மட்டும்தான் அவர் அந்த பிசினஸைத் தொடர்ந்து நடத்துவார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு