Published:Updated:

22 வருடங்கள்... 4 பேர்... 7 ஆர்.டி - இன்க்ரிமென்ட்... அப்படியே இன்வெஸ்ட்மென்ட்!

22 வருடங்கள்... 4 பேர்... 7 ஆர்.டி - இன்க்ரிமென்ட்... அப்படியே இன்வெஸ்ட்மென்ட்!
பிரீமியம் ஸ்டோரி
22 வருடங்கள்... 4 பேர்... 7 ஆர்.டி - இன்க்ரிமென்ட்... அப்படியே இன்வெஸ்ட்மென்ட்!

கு.ஆனந்தராஜ்

22 வருடங்கள்... 4 பேர்... 7 ஆர்.டி - இன்க்ரிமென்ட்... அப்படியே இன்வெஸ்ட்மென்ட்!

கு.ஆனந்தராஜ்

Published:Updated:
22 வருடங்கள்... 4 பேர்... 7 ஆர்.டி - இன்க்ரிமென்ட்... அப்படியே இன்வெஸ்ட்மென்ட்!
பிரீமியம் ஸ்டோரி
22 வருடங்கள்... 4 பேர்... 7 ஆர்.டி - இன்க்ரிமென்ட்... அப்படியே இன்வெஸ்ட்மென்ட்!

டந்த 22 ஆண்டுகளாகத் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் வங்கி ஆர்.டி சேமிப்பின் மூலம் தன் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலகார்த்திகா. தனியார் வங்கியொன்றில் முதன்மை மேலாளராகப் பணியாற்றும் அவர், தன்னுடைய ஆர்.டி சேமிப்பு அனுபவத்தை எடுத்துச் சொன்னார். 

“1995-ம் வருஷம், என்னோட 21 வயசுல தனியார் வங்கியில் சாதாரண கிளர்க்கா பணியைத் தொடங்கினேன். அப்பவே சின்னத் தொகையையாவது சேமிக்கணும்னு நினைச்சேன். குடும்பக் கஷ்டத்துல அப்ப என்னால சேமிக்க முடியல. அப்ப என் அண்ணனுக்கு விபத்து நடந்து வீட்லயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுச்சு. என் அண்ணனோட பொழுதுபோக்குக்காக ஏதாச்சும் கிஃப்ட் வாங்கித் தரணும்னு நினைச்சு, நான் வேலை செஞ்ச வங்கியிலயே ரெக்கரிங் டெபாசிட்ல மாசம் 25 ரூபாயை சேமிக்க ஆரம்பிச்சேன். அப்போ இருந்த   10 - 12 சதவிகித வட்டி விகிதப்படி, ஓராண்டுச் சேமிப்பு முடிவுல எனக்குத் தோராயமா 350 ரூபாய் வரைக்கும் கிடைச்சுது. அந்தத் தொகையோட, கொஞ்சம் பணம் போட்டு என் அண்ணனுக்கு டேப் ரெக்கார்டர் வாங்கிக் கொடுத்தேன். அதைப் பார்த்துட்டு என் அண்ணன் அடைஞ்ச சந்தோஷத்தை நினைச்சா இப்பக்கூட நெகிழ்ச்சியா இருக்கு.

22 வருடங்கள்... 4 பேர்... 7 ஆர்.டி - இன்க்ரிமென்ட்... அப்படியே இன்வெஸ்ட்மென்ட்!

நாலு பேருக்கு ஏழு ஆர்.டி

குறிப்பிட்ட தொகையை விடாப்பிடியா சேமிச்சா, பிற்பாடு உதவும்னு எனக்கு நல்லா மனசுல பதிஞ்சு போச்சு. திரும்பவும் ஆர்டியிலயே பணத்தைச் சேமிக்க ஆரம்பிச்சேன். 100 ரூபாய் கேப்பிட்டல் தொகையில ஒரு வருஷ கால அளவுல புது ஆர்.டி தொடங்கி, முடிவுல வேலைக்குப் போய்வர, புது சைக்கிள் வாங்கினேன். அப்பதான் சேமிப்போட முழு அர்த்தத்தையும் பயன்பாட்டையும் உணர்ந்தேன். அதுல இருந்து வருஷம்தோறும் என் பெயர்ல ரெண்டு ரெக்கரிங் டெபாசிட்ல சேமிப்பை நிறுத்தாம செய்ய ஆரம்பிச்சேன். என்ன கஷ்டமான சூழ்நிலையிலயும், என்னோட சேமிப்பை மட்டும் நான் நிறுத்தல. என்னோட ஒவ்வொரு இன்க்ரிமென்ட் சம்பளத் தொகையையும் அப்படியே ஒவ்வொரு புது ஆர்.டிக்கான கேப்பிட்டல் தொகையா நிர்ணயம் செஞ்சேன்.

எனக்குக் கல்யாணம் ஆனதும் என்னோட ஆர்.டி. சேமிப்புப் போக, என் கணவர் பெயர்லயும், பின்னர் என்னோட ரெண்டு பிள்ளைங்க பிறந்தவுடனே அவங்க பெயர்லயும் தனித்தனியா ஆர்.டி கணக்கைத் தொடங்கி சேமிக்க ஆரம்பிச்சேன். இப்ப என் பெயர்ல மாசம் 5,000 ரூபாய் கட்டுற மாதிரி ரெண்டு ஆர்.டி.யும் (ஒரு வருட கால அளவு), என்னோட கணவர் பெயர்ல 5,000 ரூபாய் கட்டுற மாதிரி ஒரு ஆர்.டியும் (ஒரு வருட கால அளவு), என் பொண்ணு பெயர்ல மாசம் 250 ரூபாய்க்கு ரெண்டு ஆர்.டியும் (மூன்று வருட கால அளவு), ரூ.500-க்கு ஒரு ஆர்.டியும் (ஐந்து வருட கால அளவு), என் பையன் பெயர்ல 500 ரூபாய்க்கு (ஐந்து வருட கால அளவு) ஒரு ஆர்.டியும் மொத்தம் ஏழு ஆர்.டி கணக்குல சேமிச்சுட்டு வர்றேன்.

 கல்யாணம், படிப்புக்கு உதவிய சேமிப்பு

என் கல்யாணத்துக்குப் பிறகு 2007 - 2011 வரைக்கும் நான் சேமிச்ச எஃப்.டி பணத்தை வச்சு கார் வாங்கினேன். புதுசா வீடு வாங்க இனிஷியல் தொகையை ஆர்.டி. மூலமாகத்தான் சேர்த்தேன். கடந்த 22 வருஷத்துல எங்க நாலு பேர் பெயர்ல நூறு ஆர்.டிக்கும், ஐம்பது எஃப்.டிக்கும் மேல போட்டு குளோஸ் பண்ணியிருக்கேன். தவிர நகை, குடும்ப அத்தியாவசியப் பொருள்களை வாங்குவது, குழந்தைகள் படிப்புக்கு ஃபீஸ் கட்டுறது, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு, பண்டிகைக் காலத் தேவைக்கு, வீட்டுக் கடனை முழுசாக் கட்டி முடிக்கன்னு பல முக்கியமான தேவைகளுக்கும் எங்களோட வங்கிச் சேமிப்பு பக்கபலமா இருந்திருக்கு. 

22 வருடங்கள்... 4 பேர்... 7 ஆர்.டி - இன்க்ரிமென்ட்... அப்படியே இன்வெஸ்ட்மென்ட்!

அசலுக்கு ஆபத்தில்லை

22  வருஷமா பேங்க்ல சேமிச்சுட்டு இருக்கீங்களே. ஷேர் மார்க்கெட் அல்லது மியூச்சுவல் ஃபண்டுல சேமிச்சுருந்தா இப்போ பேங்கைவிட பல மடங்கு லாபம் கிடைச்சிருக்குமேன்னு பலரும் எங்கிட்ட கேட்டிருக்காங்க. ஷேர் மார்க்கெட்லயும் கொஞ்சம் பணத்தைப் போட்டோம். அதைப்பத்தி தெரியாம செஞ்சதால, கொஞ்சம் நஷ்டம் வந்திடுச்சு. அதனால, ரிஸ்க் இல்லாத முதலீடே போதும் நெனைச்சு, ஆர்.டியில பணத்தைச் சேமிச்சுட்டு வர்றேன். என்னைப் பொறுத்த வரை, அசலுக்கு முழு உத்தரவாதத்தோட, 7 - 8 சதவிகித வட்டி கிடைக்குற  ஆர்.டி சேமிப்பே நல்ல ஆரோக்கியமான சேமிப்புதான்.  

 திட்டமிட்டால் சாத்தியமே

ஆர்.டி-ல சேமிப்புக் காலம் முடியுற வரையும் அந்தத் தொகையை எடுக்கக் கூடாது. மீறி எடுத்தா நம் திட்டத்தின் ஒரிஜினல் வட்டி விகிதத்துல அபராதத் தொகையைப் பிடித்தம் செய்வாங்க. ஒருவேளை ஆர்.டி திட்டக்காலம் முடியுறதுக்கு முன்னாடியே அந்தப் பணத்தை எடுக்குற சூழல் உருவாச்சுன்னா, அத்தொகையின் மேல்  கடன் வாங்கிக்கலாம். அதனால் அபராதம் பிடிக்கமாட்டாங்க.

 சில வங்கிகள்ல குறைந்தபட்சம் ஆறு மாசத்துல இருந்து பத்து வருஷ கால அளவுல ஆர்.டி சேமிப்புக் காலத்தை ஃபிக்ஸ் செய்வாங்க. ஆர்.டியில மூணு வருஷத்துக்கும் குறைவான கால அளவுல சேமிக்கிறப்போ தனி வட்டி மட்டும்தான் கிடைக்கும். மூணு வருஷத்துக்கு மேல சேமிக்கிறப்ப கூட்டு வட்டி கிடைக்கும். மாசம்தோறும் சம்பளத்துல குறைந்தபட்சம் 10 - 20 சதவிகிதத் தொகையை அப்படியே அசலுக்கு ஆபத்தில்லாத, பயன்தரக்கூடிய அளவு லாபம் கிடைக்குற மாதிரியான ஏதாவது ஒரு சேமிப்புத் திட்டத்துல முறையா சேமிச்சுக்கிட்டு வரணும். அத்தகைய சேமிப்பு, எதிர்காலத்துல நீங்களே நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு பெரிய தொகையா பெருகியிருக்கும்’’ என்று முடித்தார் பாலகார்த்திகா.

விஷயம் தெரியாமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம் என்று பாலகார்த்திகா நினைத்தது சரிதான். ஆனால், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளிலோ, பேலன்ஸ்டு ஃபண்டுகளிலோ முதலீடு செய்திருந்தால், இன்னும் நல்ல லாபம் கிடைத்திருக்கலாம்.

படங்கள்: ரா.வருண் பிரசாத்