Published:Updated:

சமைக்கத் தெரிந்தால் சம்பாதிக்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சமைக்கத் தெரிந்தால் சம்பாதிக்கலாம்!
சமைக்கத் தெரிந்தால் சம்பாதிக்கலாம்!

சமைக்கத் தெரிந்தால் சம்பாதிக்கலாம்!

பிரீமியம் ஸ்டோரி

“வேலைவாய்ப்புக்காக வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வர்றவங்களுக்கு நல்ல சாப்பாடு கிடைப்பது பெரும்பாடாகத்தான் இருக்கு. இந்தப் பிரச்னையை எங்க தொழிலுக்குப் பயன்படுத்திக்க நினைச்சு, ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி நானும் என் நண்பரும் இணைந்து ஆரம்பிச்சதுதான் ‘ஃபுட்டோ.காம்’ (Fooddoo.com). இல்லத்தரசிகள் தங்களோட வீட்டுக்குத் தினசரி சமைக்கிறதையே கொஞ்சம் கூடுதலாக சமைச்சுத் தந்தா போதும். அதை நாங்க எடுத்துட்டுப்போய், தேவை இருக்கிற கஸ்டமர்களுக்கு டெலிவரி செஞ்சுடுவோம். இதுதான் எங்க பிசினஸ். இப்ப எங்க நிறுவனத்தின் மூலமா பல நூறு கஸ்டமர்கள் வீட்டுச் சாப்பாட்டை சாப்பிட்டுக்கிட்டு நிம்மதியா இருக்காங்க. அதைவிட முக்கியமான விஷயம், பல இல்லத்தரசிங்க  கைநிறைய சம்பாதிச்சுட்டு, மகிழ்ச்சியா இருக்காங்க...’’ - உற்சாகமாகப் பேசினார் ‘ஃபுட்டோ.காம்’ நிறுவனத்தின் சி.இ.ஓ சண்முக சுந்தரம்.  

சமைக்கத் தெரிந்தால் சம்பாதிக்கலாம்!

இந்தப் புதிய பிசினஸ் முயற்சியின் பின்னணியை விளக்கிச் சொன்னார்  சண்முகசுந்தரத்தின் நண்பரும் இந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ஹெட்டுமான பொன்னுவேல்.

“பிசினஸை ஆரம்பிக்கும்முன்பு, வெளியூர்களிலிருந்து வந்து சென்னையில் மேன்ஷன், ஹாஸ்டல்னு தங்கியிருக்கிறவங்களோட உணவுச் சிக்கல்கள், தேவைகள் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டோம். அடுத்ததா, உணவுத் திருவிழாக்களில் கலந்துகொண்டு மக்களின் உணவு ரசனையைத் தெரிஞ்சுக்கிட்டோம். சுவையா, சுகாதாரமா சமைக்கிற இல்லத்தரசிகளைத் தேடிப் போய், அவங்ககிட்ட எங்க பிசினஸ் கான்செப்ட்டைச் சொன்னோம். ‘தினமும் நீங்க சமைக்கிறதையே கொஞ்சம் கூடுதலாக சமைச்சுக் கொடுத்தா, உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்’ என்று நாங்க சொன்னதை நம்பி, எங்ககூட கைகோத்த பெண்கள் பலர்.

சமைக்கத் தெரிந்தால் சம்பாதிக்கலாம்!முதல் கட்டமா, அவங்க வீட்டுக்குச் சென்று கிச்சன் பராமரிப்பு, சமைக்கும் உணவின் தரம், சுவை போன்றவற்றையெல்லாம் பரிசீலித்தோம். திருப்தியா இருந்தவங்களுக்கு,  எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (Food Safety and Standards Authority of India) சான்றிதழ் வாங்கிக் கொடுத்து, அவங்களையெல்லாம் எங்கள் நிறுவன உறுப்பினர்களா தேர்வு செஞ்சோம். இன்றைக்கு எங்க பிசினஸ் சூப்பரா போயிட்டு இருக்கு’’ என்றவர், இல்லத்தரசிகள் சமைத்த சாப்பாட்டினை வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் இவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் பற்றியும்  சொன்னார்.

“இல்லத்தரசிகள், தாங்கள் சமைக்கவிருக்கிற உணவு வகைகள் மற்றும் அளவுகளை, முந்தின வேளையிலேயே எங்க ஆப் மூலமா தெரிவிச்சுடுவாங்க. உணவு தேவைப்படுபவர்கள், தங்களுக்கு வேண்டிய உணவு வகைகளை, அதிகபட்சமாக டெலிவரிக்கு மூணு மணிநேரத்துக்கு முன்பு அதே `ஆப்’ வாயிலாகத் தேடி, புக் செய்து, பணத்தையும் கட்டிடலாம். கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனும் உண்டு. இல்லத்தரசிகளும் கஸ்டமர்களும் 15 நாள்களுக்கு, ஒரு மாதத்துக்கு என்றும் தங்களோட மெனுவையும், ஆர்டரையும் முன்கூட்டியே `ஆப்’ல அப்லோடு செய்துக்கலாம். பல கஸ்டமர்கள், தங்கள் லொக்கேஷனில் இருக்கும் ஏதாவது இல்லத்தரசியின் மெனுவைத் தேர்ந்தெடுத்துப்பாங்க. சிலர், தான் விரும்பும் உணவுக்காக வேறு லொக்கேஷனில் வசிக்கும் இல்லத்தரசியின் மெனுவையும் புக் செய்வாங்க. எந்த இடம் என்றாலும், டெலிவரிக்கு நாங்க பொறுப்பு’’ என்றார் பொன்னுவேல்.     

சமைக்கத் தெரிந்தால் சம்பாதிக்கலாம்!

“இல்லத்தரசிங்க எங்க நிறுவனம் மூலமா நல்ல வருமானம் பெறுவதைப் பார்க்குறப்ப, எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி’’ என்று தொடர்கிறார் சண்முகசுந்தரம். “ஒவ்வொரு முறையும் இல்லத்தரசிங்க சமைச்சு தர்ற உணவுக்கான தொகையைக் கணக்கிட்டு வெச்சிருப்போம். ஆயிரம் ரூபாய் சேர்ந்ததும், அந்தத் தொகையை அவங்க அக்கவுன்ட்டுக்கு ஆன்லைன் மூலமா அனுப்பிடுவோம். ‌அல்லது 15 நாள்களுக்கு ஒருமுறை, மாசத்துக்கு ஒருமுறைன்னு அவங்க  விருப்பத்துக்கேத்த மாதிரி பேமென்ட் வாங்கிக்கிற பெண்களும் இருக்காங்க. இப்ப 25 வயதிலிருந்து 65 வயது வரையுள்ள 130-க்கும் அதிகமான இல்லத்தரசிங்க எங்க நிறுவனத்தின் உறுப்பினரா இருக்காங்க. இவர்கள் ஒவ்வொருவரும்
மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் அதிகபட்சமாக ரூ.40,000 வரை சம்பாதிக்கிறாங்க.

ரூ.10 லட்சம் முதலீட்டுல இந்தத் தொழிலைத் தொடங்கினோம். இப்ப மாசம் ரூ.4 லட்சம் வரை டேர்ன் ஓவர் கிடைக்குது. நாங்க இன்னும் பெரிசா வளர்றதுக்கு நிறையவே வாய்ப்பிருக்கு’’ என்று நம்பிக்கையுடன் பேசி முடித்தார்  சண்முகசுந்தரம்.

வித்தியாசமான பிசினஸ் ஐடியாக்கள் எப்போதுமே ஜெயிக்கும் என்பதற்கு   ஃபுட்டோ.காம் ஓர் உதாரணம் எனலாம்.

- கு.ஆனந்தராஜ்

படங்கள்: ரா.வருண் பிரசாத்

சமைக்கத் தெரிந்தால் சம்பாதிக்கலாம்!

“மூணு மணி நேரம் வேலை... நல்ல வருமானம்!’’

‘ஃபுட்டோ.டாட்காம்’-க்கு சமைத்துக் கொடுக்கும் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி தேவி பரமசிவம், தன் அனுபவங்களை நம்மிடம் எடுத்துச் சொன்னார். 

“பி.ஏ கார்ப்பரேட் செகரட்டரிஷிப் படிச்சுட்டு டேட்டா என்ட்ரி வேலை செஞ்சுக்கிட்டு இருந்தேன். கல்யாணத்துக்குப் பிறகு வேலையை விட்டுட்டேன். வீட்டுல சும்மா இருந்ததால, சமையல்ல ஆர்வம் அதிகமாச்சு. ஆறு மாசத்துக்கு முன்னாடி உறவினர் ஒருவர் மூலமா ‘ஃபுட்டோ.காம்’ பற்றித் தெரியவர, நானும் சமைச்சுக் கொடுக்கலாமேனு முடிவெடுத்தேன். வெஜ், நான்-வெஜ்னு பல வகை உணவுகள் மற்றும் சிறுதானிய ஸ்நாக்ஸ் செஞ்சு தர்றேன். டெலிவரி எடுத்துட்டுப் போக பணியாளர்கள் வர்றதுக்குள்ள குறிப்பிட்ட நேரத்துக்குள்  `பேக்’ செஞ்சு வெச்சுடுவேன். மதியம் மற்றும் இரவு நேரம் என ஒரு நாளில் மூணு மணி நேரம்தான் சமையலுக்காக ஒதுக்குறேன். இதனால வீடு, கணவர், குழந்தைனு எப்பவும்போல என்னால பார்த்துக்க முடியுது. கோயம்பேடு பகுதியில எனக்கு வீடு இருக்கிறதால  மாசத்துல எல்லா நாளும் ஆர்டர் வந்துடும். நான் ரெண்டு வேளைக்கும் தலா 20 பேருக்கு சமைச்சுத் தர்றேன். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுத்துக்குவேன். சமையலுக்கான செலவுகள் போக, நல்ல லாபம் கிடைக்குது” என்றார்  தேவி. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு