Published:Updated:

திருமதி எஃப்.எம்.

திருமதி எஃப்.எம்.

திருமதி எஃப்.எம்.


நாட்டுக்கு பட்ஜெட் போடுவதைவிட கஷ்டமானது வீட்டுக்கு பட்ஜெட் போடுவது. கணக்காக வரும் சம்பளத்தைக் கச்சிதமாக செலவு செய்து, நாலு காசு சேமித்து பொன்னும் பொருளும் வாங்கிக் குவிக்கிற குடும்பத் தலைவிகளின் திறமை ஆச்சரியமானது! மாதந்தோறும் வெற்றிகரமாக வீட்டு பட்ஜெட்டை போடும் திருமதி ஃபைனான்ஸ் மினிஸ்டர்கள் தங்கள் பட்ஜெட் ரகசியங்களை இந்த பகுதியில் சொல்கிறார்கள்.

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''வே
லூருக்குப் பக்கத்துல இருக்கிற திருப்பத்தூர்தான் என் சொந்த ஊர். என் கணவர் கண்ணன் சாஃப்ட்வேர் என்ஜினீயர். நான் எம்.பில். முடிச்சிட்டு துணைப் பேராசிரியரா இருக்கிறேன். எங்களுக்கு ரெண்டு பசங்க. பெரியவன் யுவஆகாஷ் எல்.கே.ஜி. படிக்கிறான். சின்னவன் இனியனை அடுத்த வருஷம்தான் ஸ்கூல்ல சேர்க்கணும். கல்யாணம் ஆன புதுசுல ஃபுல்டைமா வேலை பார்த்தேன். இப்ப குழந்தைங்க இருக்கிறதால ஈவினிங் காலேஜ்ல மட்டும் வேலை பார்க்கிறேன்.

வேலைக்குப் போறப்ப சின்ன பையன கிரீச்ல விட்டுட்டு போய்டுவேன். குழந்தைங்களை விட்டுட்டு வேலைக்குப் போகத்தான் வேணுமான்னு சில பேரு கேப்பாங்க. சில நன்மைகளை பெறணும்னா சில தியாகங்களைச் செஞ்சுதான் ஆகணும். நாள் முழுக்க குழந்தைகளோட இருக்கிறதால ஒரு சில மணி நேரம் அவர்களை விட்டு பிரிஞ்சா தப்பில்லை. இதனால குழந்தைகளும் என்னை எதிர்பார்க்காம சொந்தக்கால்ல நிக்கவும் கத்துக்கும்.

கஷ்டப்பட்டு பணத்தைச் சம்பாதிக்கிறதால, அதை கச்சிதமா செலவு செய்யணும்ங்கிறதுல குறியா இருப்பேன்.

என் சம்பளம் பத்தாயிரம் ரூபாய்தான். இந்த பணத்துல வீட்டு வாடகை, குழந்தைக்கு கிரீச் கட்டணம், வீட்டுக்கான மளிகைச் செலவுன்னு எல்லாத்தையும் முடிச்சுடுவேன். அவரு சம்பளத்துல வெறும் ஐந்தாயிரம் ரூபாய் மட்டும்தான் வீட்டுச் செலவுக்காக எடுத்துக்குவேன். மிச்சப் பணத்தை அப்படியே சேமிக்கிறதுக்கு ஒதுக்கிடுவேன்.

ஒருவேளை அந்த மாதத்துல கூடுதலா செலவானா எதனால செலவு அதிகமாச்சுன்னு குறிச்சு வைச்சிட்டு அடுத்த மாதம் அதை எப்படி சமாளிக்கலாம்னு பிளான் பண்ணுவேன்.

மாத முதல் தேதியில வீட்டுக்குத் தேவையான பொருளை ரெண்டு பேரும் சேர்ந்து போயி மொத்தமா வாங்கிட்டு வந்துடுவோம். ஆனா, ஷாப்பிங் போனா என் கை கொஞ்சம் நீளத்தான் செய்யும். எதைப் பார்த்தாலும் ஒண்ணுக்கு ரெண்டா வாங்கினா என்னன்னு நெனைப்பேன். ஆனா, என் கணவர் சட்டுன்னு என்னை சரி பண்ணிடுவார். எந்தப் பொருள்னாலும் தேவை இல்லாம வாங்குறதை அவரு அனுமதிக்கவே மாட்டார். செலவு பண்றதுல அவர் கறார்ங்கிறதை நெனைச்சு நான் கோபமோ, வருத்தமோ பட்டதில்லை. செலவு விஷயத்துல புருஷன் - பெண்டாட்டி ரெண்டு பேரும் ஒரு மனசோடு செலவு பண்ணினாத்தான் குடும்பத்துல குழப்பம் இருக்காது. அதனால் அவர் சொல்ற அட்வைஸை அப்படியே கேட்டு நடந்துக்குவேன்.

திருமதி எஃப்.எம்.

தினப்படி வாழ்க்கையைக் கொஞ்சம் உத்துப் பார்த்தா சில செலவு தவிர்க்க முடியாதுங்கிறது புரியும். உதாரணமா, பசங்களோட ஸ்கூல் பீஸ் அல்லது தீபாவளி துணிமணி பர்ச்சேஸ். ஸ்கூல் பீஸ்தானே, ஏப்ரல் மாசம் வரட்டும் யோசிப்போம்னு சொல்லி சும்மா உக்கார்ந்துடக்கூடாது. ஒவ்வொரு மாசத்துலயும் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து ஆர்.டி.யில் போட்டு வைக்கணும். இதேமாதிரி தீபாவளிச் செலவுக்கும் பிளான் பண்ணனும். இந்த மாதிரி பணத்தை ஒதுக்கி வைக்கிறது பெரிய தலைவலிதான். ஆனால், இந்த ஒழுங்கு மட்டும் வந்துடுச்சுன்னா, ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டிய நேரத்துல யார்கிட்டயாவது போயி கையேந்த வேண்டிய அவசியம் இருக்காது.

தவிர்க்க முடியாத செலவுகளைச் சமாளிக்க நான் பிளான் செஞ்சிடற தால, போனஸ், சம்பள உயர்வு மாதிரி லம்ப்பா கிடைக்கிற பணத்தை முதலீடு செய்யறதுக்குப் பயன்படுத்திக்குவேன். எதுல முதலீடு செய்யறதுங்கிறதை என்கிட்டயே விட்டுருவாரு என் கணவர். நான் மொத்தமாக பணம் கிடைக்கிறப்ப எல்லாம் தங்க காயினா வாங்கிடுவேன். ஊர்ல ஏற்கெனவே ஒரு இடம் வாங்கி இருக்கோம். வீடு கட்றதுக்கான பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாச் சேர்த்துக்கிட்டே இருக்கோம்.

கிரெடிட் கார்டு நாங்க பயன் படுத்துவோம். ஒரே ஒரு கார்டு வச்சிருக் கோம்ங்கிறதால எந்தத் தேதியில பொருள் வாங்குறோம், செக்கை எந்த தேதியில தரணுங்கிறதை  நாள் தவறாம சரியா குடுத்துடுவோம். தேவையில்லாதச் செலவுகளை கிரெடிட் கார்டுல செய்ய மாட்டோம்.

அவசரத் தேவைக்கு மட்டுமே கார்டை பயன்படுத்தணும்னு முடிவு பண்ணிட்டா, பயமில்லாம அதை வச்சுக்கலாம். அந்த கன்ட்ரோல் இல்லைன்னா, கிரெடிட் கார்டு நம்ம நிம்மதியைக் கெடுத்துரும். இப்படி திட்டம் போட்டு சிக்கனமா இருக்குறதால, இன்றுவரை கடன் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.

கூடிய சீக்கிரத்தில் சென்னையில இடம் வாங்கி வீடு கட்டணும்னு ஆசை. அதுக்கான பணத்தைச் சேர்க்க முடிஞ்ச வரை செலவை குறைச்சுட்டோம். இன்னும் அஞ்சு வருஷத்துல நான் வீடு கட்டி முடிச்சுடுவேன். கட்டாயம் கிரஹப்பிரவேசத்துக்கு வந்துடுங்க!''  

- பானுமதி அருணாசலம்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

திருமதி எஃப்.எம்.