நடப்பு
தொடர்கள்
அறிவிப்பு
Published:Updated:

டேர்ம் இன்ஷூரன்ஸ்... ஏன், எதற்கு, எப்படி?

டேர்ம் இன்ஷூரன்ஸ்... ஏன், எதற்கு, எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
டேர்ம் இன்ஷூரன்ஸ்... ஏன், எதற்கு, எப்படி?

எஸ்.ஸ்ரீதரன் நிதி ஆலோசகர், wealthladder.co.in

புதிதாக ஒரு கார் வாங்குகிறீர்கள். அந்த காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கவில்லை, அதை சாலையில் ஓட்டிக் கொண்டு செல்ல முடியாது. நீங்கள் புதிதாக வாங்கிய ஹூண்டாய்-ஐ10 காருக்கு ஆண்டொன்றுக்கு  இன்ஷூரன்ஸ் பிரீமியமாக சுமார் ரூ.18,000 கட்டுவீர்கள். இதுவே, மாருதி 800-ஆக இருந்தால், சுமார் ரூ.8,000 பிரீமியமாகக் கட்டுவீர்கள். ஆனால், இவை எல்லாவற்றையும் வாங்கும் உங்களுக்காக எவ்வளவு இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருக்கிறீர்கள்?  

டேர்ம் இன்ஷூரன்ஸ்... ஏன், எதற்கு, எப்படி?

இந்தக் கேள்வியைப் பலரிடமும் கேட்டிருக்கிறேன்; பதில் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறார்கள். நாம் வாங்கும் வாகனம் தொலைந்துபோனால் இழப்பீடு கிடைக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், நமக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், நம்மையே நம்பியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுவார்களே என்பதை நாம் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

ஒரு குடும்பத்தின் நிதிநிலை, வருமானம் ஈட்டும் நபரைச் சார்ந்துள்ளதால், அவரின் எதிர்பாராத இழப்பு அந்தக் குடும்பத்தின் நிதிநிலையைத் தலைகீழாக மாற்றிவிடும். எனவே, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது மிகவும் அவசியம் ஆகும். ஒருவரின் ஆண்டு வருமானத்தைப்போல குறைந்தது 10 முதல் 20 ஆண்டுகளுக்குண்டான வருமானம் அளவுக்கு கவரேஜ் இருக்கிற மாதிரி டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம். உதாரணமாக, ஒருவரது ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் எனில், அவர் ரூ.50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். 

டேர்ம் இன்ஷூரன்ஸ்... ஏன், எதற்கு, எப்படி?எண்டோவ்மென்ட் பிளான்


இன்றைக்கு நம்மில் பலரும் எண்டோவ்மென்ட் பிளான் இன்ஷூரன்ஸ் திட்டங்களையே எடுத்து வருகிறோம். கட்டிய பணம் திரும்பக் கிடைக்கும் என்பதுதான் இந்த பாலிசியில் உள்ள ஒரே சிறப்பம்சம். மற்றபடி இந்த பாலிசியின் மூலம் கிடைக்கும் வருமானம் என்று பார்த்தால் 4%-6% மட்டுமே கிடைக்கும்.

30 வயதுள்ள ஒருவருக்கு எண்டோவ்மென்ட் பாலிசியில் சுமார் ரூ.5 லட்சம் கவரேஜ் வேண்டுமென்றால், ஆண்டொன்றுக்குக் குறைந்தது ரூ.25,000 வரை பிரீமியம் கட்டவேண்டும். இவர் எண்டோவ்மென்ட் பாலிசி எடுப்பதற்குப் பதில், டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் ஆண்டொன்றுக்கு ரூ.3,538 கட்டினாலே போதும், ரூ.25 லட்சம் ரூபாய்க்கு கவரேஜ் கிடைக்கும். பிரீமியம் மிக மிகக் குறைவு, கவரேஜ் மிக மிக அதிகம் என்பதுதான் டேர்ம் இன்ஷூரன்ஸின் சிறப்பு.    

டேர்ம் இன்ஷூரன்ஸ்... ஏன், எதற்கு, எப்படி?

டேர்ம் இன்ஷூரன்ஸில் பிரீமியமாகக் கட்டிய பணம் போக மீதமுள்ள பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், பத்து ஆண்டுகள் கழித்து ரூ.17,31,956 கிடைக்கும். (பார்க்க அட்டவணை 1)

அதாவது, ஒரு பாலிசிதாரர் எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்து ஐந்தாண்டுகளில் இறந்துபோனால், அவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் மட்டுமே கிடைக்கும். இதுவே டேர்ம் பிளான் + மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால், அவரின் குடும்பத்துக்கு ரூ.26.5 லட்சம் கிடைக்கக்கூடும். பாலிசிதாரர் ரிஸ்க் எதையும் எடுக்க விரும்பாமல், டேர்ம் இன்ஷூரன்ஸ் கட்டிய தொகை போக மீதமுள்ள பணத்தை பிபிஎஃப்-ல் முதலீடு செய்தால், அவருக்கு ரூ.26.35 லட்சம் கிடைக்கும்.   

டேர்ம் இன்ஷூரன்ஸ்... ஏன், எதற்கு, எப்படி?

ஆகவே, எண்டோவ்மென்ட் பாலிசி எடுப்பதைவிட அவரவரின் ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் பொறுத்து, டேர்ம் பாலிசி எடுத்துக்கொண்டு, பி.பி.எஃப் அல்லது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதே மிகவும் சிறந்தது.

டேர்ம் பிளான் ரிட்டர்ன் ஆஃப் பிரீமியம்

ஒரு சிலர் டேர்ம் பிளானில் முதிர்வுத்தொகை வராதே, இதனால், டேர்ம் பிளான் வித் ரிட்டர்ன் ஆஃப் பிரீமியம் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லதா என்று கேட்பது எனக்குத் தெரிகிறது.

இந்த வகை பாலிசிகளின் பிரீமியம் சாதாரண டேர்ம் பாலிசியின் பிரீமியத்தைவிட சற்று அதிகமாக இருக்கும். இந்த பாலிசியில் பாலிசியின் பிரீமியத்தை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையை முதலீடு செய்து, பாலிசியின் பிரீமியத் தொகைக்கு ஈடாக அதன் முதிர்வு தொகை வருமாறு செய்வார்கள். பாலிசி முதிர்வடையும் தருவாயில், பாலிசிதாரருக்கு பாலிசியில் கட்டிய பிரீ்மியத்தை மொத்தமாகத் திரும்பித் தருவார்கள். உதாரணத்துக்கு, 30 வயதுள்ள ஒருவருக்கு, ரூ.25 லட்சம் கவரேஜுக்கு 20 வருட பாலிசியின் பிரீமியம்  சுமாராக ரூ.5,000 என்று வைத்துக்கொண்டால், பாலிசிதாரர் பாலிசி முதிர்வுக்குள் இறந்தால், காப்பீட்டுத் தொகையான ரூ.25 லட்சம் அவரின் குடும்பத்துக்குச் சென்றடையும். இதுவே, பாலிசிதாரர் பாலிசி முடியும் தருவாயில் உயிருடன் இருந்தால், அவருக்கு பாலிசியில் கட்டிய பிரீமியமான ரூ.2,65,740 முதிர்வுத் தொகையாகக் கிடைக்கும்(பார்க்க அட்டவணை 2). ஆக, எண்டோவ்மென்ட் பாலிசி எடுப்பதைவிட, டேர்ம் இன்ஷூரன்ஸில் கட்டும் பணம் திரும்பக் கிடைக்கும் திட்டத்தை விட, ஃப்யூர் டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டமே சிறந்தது. இனி, இந்த பாலிசியை எடுக்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்...

* இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பின்னணி, மற்றும் எத்தனை ஆண்டுகளாக  அந்த நிறுவனம் இந்தத் தொழிலில் இருக்கிறது என்பதை அறிவது அவசியமாகும்.

* இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மூன்று வருட க்ளெய்ம் செட்டில்மென்ட் விகிதத்தின் அடிப்படையில் தேர்வு செய்வது முக்கியம்.

* நிறுவனத்தின் கிளைகள் எத்தனை, அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளரின் சேவையின் தரம் என்ன என அவசியம் பார்க்க வேண்டும்.

*
ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலும் டேர்ம் இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத் தொகை மாறுபடும். குறைவான பிரீமியம் உள்ள நிறுவனத்தை மட்டும் தேடிச் செல்லாமல், மேற்கூறிய  பல விஷயங்களையும் மனதில் கொண்டு செயல்படுவது அவசியம்.