நடப்பு
தொடர்கள்
அறிவிப்பு
Published:Updated:

“மீண்டும் லைசென்ஸ் ராஜ்!” - எச்சரிக்கும் பொருளாதார ஆய்வாளர் ஷங்கர் அய்யர்

“மீண்டும் லைசென்ஸ் ராஜ்!” - எச்சரிக்கும் பொருளாதார ஆய்வாளர் ஷங்கர் அய்யர்
பிரீமியம் ஸ்டோரி
News
“மீண்டும் லைசென்ஸ் ராஜ்!” - எச்சரிக்கும் பொருளாதார ஆய்வாளர் ஷங்கர் அய்யர்

“மீண்டும் லைசென்ஸ் ராஜ்!” - எச்சரிக்கும் பொருளாதார ஆய்வாளர் ஷங்கர் அய்யர்

மூடீஸ் நிறுவனத்தின் தரக் குறியீட்டு உயர்த்தலைத் தொடர்ந்து, நமது பொருளாதாரம் சிறப்பான நிலையில் இருப்பதுபோல பலரும் பேசி வருகின்றனர். ஆனால், பொருளாதார வளர்ச்சிக்கு நாம் இன்னும் செய்ய வேண்டியது நிறையவே இருப்பதாகச் சொல் கிறார் அரசியல் பொருளாதார ஆய்வாளர் ஷங்கர் அய்யர். ஐ.டி.எஃப்.சி இன்ஸ்ட்டிடியூட்டில் விசிட்டிங் ஃபெல்லோவாக இருக்கும் ஷங்கர் அய்யர், ‘ஆக்ஸிடென்ட்டல் இந்தியா அண்டு ஆதார்: எ பயோ மெட்ரிக் ஹிஸ்டரி ஆஃப் இந்தியாஸ் 12 டிஜிட் ரெவல்யூஷன் (Accidental India and Aadhar: A Biometric History of India’s 12 Digit Revolution.)’ என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அவர் நமக்களித்த பேட்டி இதோ...   

“மீண்டும் லைசென்ஸ் ராஜ்!” - எச்சரிக்கும் பொருளாதார ஆய்வாளர் ஷங்கர் அய்யர்

இந்தியப் பொருளாதாரம் இப்போது சந்திக்கும் சவால்கள் என்னென்ன?

‘‘சர்வதேச அளவில் மாற்றங்கள் நடந்துவருவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த மாற்றத்துக்குக் காரணமாக இருக்கும் இரண்டு விஷயங்கள் தொழில்நுட்பமும், மக்கள் தொகையும்தான். வளர்ந்த பொருளாதார நாடுகளில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை சுருங்கிவருவது ஒருபக்கம்; தொழில்நுட்பமானது உற்பத்தி, சேவை மற்றும் மனித வாழ்வில் மிக வேகமான மாற்றத்தைக் கொண்டு வருவது இன்னொருபக்கம். இந்த இரண்டும் ஒன்றிணைந்தும், தனித்தனியாகவும் உலகப் பொருளாதாரத்தை மெதுவாகவும், உறுதியாகவும் மாற்றி வருகின்றன. இந்த நிலையில், நம் முன்புள்ள சவால் என்னவெனில், புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவித்து, வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கான திட்டங்களைத் தீட்டி, அதற்கான சட்டதிட்டங்களை உருவாக்குவதுதான்.’’

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி-யினால் என்ன விளைவுகள் ஏற்பட்டுள்ளன?

‘‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது ஏற்கெனவே இருக்கும் பிரச்னையை அதிகமாக்கிவிட்டது. காரணம், நம் நாடு ரொக்கத்தில் புழங்கும் நாடு. ரொக்கப் பயன்பாட்டை எப்படிக் குறைப்பது என்பது பற்றி ஆழமாக ஆராய்ந்தறியாமலேயே நடவடிக்கை எடுத்துவிட்டார்கள். ஜி.எஸ்.டி-யும் முறைப்படுத்தப்பட்ட, முறைப்படுத்தப்படாத துறைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது. நமது வர்த்தகர்கள் பின்பற்றிவரும் சிக்கலான வர்த்தக வழிமுறைகளை அரசு அதிகாரிகளும், சட்ட விதிமுறைகளை உருவாக்குபவர்களும் சரியாகப் புரிந்துகொண்ட மாதிரி தெரியவில்லை. இனிமேலாவது அவர்கள் சரியாகப் புரிந்துகொண்டு, சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.’’

தொழில் செய்வதற்கேற்ற சூழலில் நம் நாடு ஒரே ஆண்டில் 30 இடங்களைத் தாண்டி முன்னேறியிருக்கிறதே!

‘‘திவால் சட்டத்தைக் கொண்டுவந்தததும், கடன் தொடர்பான தகவல்களைப் பெறும் முறையை உருவாக்கியதுமே இந்த முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணங்களாகும். ஆனால், தொழில் தொடங்குவது, கட்டுமானம் தொடர்பான அனுமதிகளைப் பெறுவது, சட்டபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற விஷயங்களில் இன்னும் எத்தனையோ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த விஷயங்கள் மும்பை, டெல்லி தவிர, வேறு நகரங்களில் மிக மோசமாக உள்ளன. நம் நாட்டில் மிகப் பெரிய பிரச்னையே, எல்லா அரசுத் துறையும் எல்லா விஷயங்களுக்கும் அனுமதி தரவேண்டும் என்று நினைப்பதுதான். ராஜாஜி எதிர்த்த லைசென்ஸ் ராஜ் 1991-ம் ஆண்டிலேயே ஒழிக்கப்பட்டுவிட்டாலும், எல்லாவற்றுக்கும் அரசிடமிருந்து அனுமதி வாங்க வேண்டும் என்பது மட்டும் மாறவேயில்லை.’’

மூடீஸ் நிறுவனம் 14 ஆண்டுகளுக்குப் பின்பு நமது பொருளாதார நிலையைத் தரமுயர்த்தியிருக்கிறதே!

‘‘மூடீஸ் நிறுவனம் நமது பொருளாதார நிலையைத் தரமுயர்த்தியதன் மூலம் நமது அரசு, நிதி தொடர்பான விஷயங்களில் ஓர் ஒழுங்கை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நாம் செய்ய வேண்டியவை இன்னும் நிறையவே இருக்கின்றன. இந்தத் தரமுயர்த்தலின் மூலம் இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிடமிருந்து குறைந்த வட்டியில் நிதியுதவி கிடைக்கும். ஆனால், பெரும்பாலான நமது நிறுவனங்களின் நிலை மோசமாகவே இருக்கிறது.’’

ஜி.எஸ்.டி வந்தபிறகு தொழில்கள் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றன. இதனைத் தீர்க்க மத்திய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?


‘‘ஜி.எஸ்.டி வரிமுறைகளை மீண்டுமொருமுறை பரிசீலிக்க வேண்டும். பலவகைகளில் வரிகள் விதிக்கப்படுவதுடன், அவற்றைப் பலவிதங்களில் பதிவும் செய்ய வேண்டியிருக்கிறது. இதனால், செலவுதான் அதிகரிக்கிறது. இரண்டு அல்லது மூன்று விதங்களுக்கு மேல் வரிகள் இருக்கக்கூடாது என்பதுடன் ஒரேமுறை பதிவு செய்கிற மாதிரியும் இருக்க வேண்டும். காலாண்டுக்கொருமுறை செலுத்திய பணம் திரும்பக் கொடுக்கப்பட வேண்டும். வருமான வரி கட்டுவதுபோல மிக எளிதாக இது மாற்றப்பட வேண்டும். பிசினஸ் நிறுவனங்கள் தனது செலவையும், வருமானத்தையும் குறிப்பிட்டு, வருமானத்துக்கேற்ற வரியைக் காலாண்டுக்கொருமுறை கட்டிவிட வேண்டும். இப்படியொரு எளிய நடைமுறையை மத்திய அரசாங்கம் ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது?’’

திவால் சட்டத்தை இன்னும் திறமையாகச் செயல்படுத்த என்ன செய்ய வேண்டும்?

‘‘திவால் சட்டம் வலுவாகத்தான் இருக்கிறது. ஆனால், வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே ஏமாற்றுபவர்கள் யார், எந்தத் தவறும் செய்யாமல் சிக்கிக்கொள்பவர்கள் யார் என்பதைக் கண்டறியும் வழிமுறைகளைத்தான் இனி உருவாக்க வேண்டும். இப்போதைக்கு அரசின் முன்பு இருக்கும் மிகப் பெரிய கேள்வி, வங்கியில் வாங்கிய கடனைத் திரும்பக் கட்டாதவர்களின் சொத்தை ஏலத்துக்கு விடும்போது அவர்களே அதை வாங்க அனுமதிக்கலாமா வேண்டாமா என்பதுதான். முக்கியமான இந்தப் பிரச்னைக்கு அரசியல் ரீதியில் உரிய தீர்வு காணப்பட வேண்டும்.’’

வங்கிகளின் வாராக் கடன் எட்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்திருக்கிறதே!

‘‘நான் ஏற்கெனவே சொன்னமாதிரி, பிசினஸ் சூழலால் பாதிக்கப் பட்டவர்களை விட்டுவிட்டு, வேண்டுமென்றே ஏமாற்றுபவர்களை நாம் பிரித்து இனம் காண வேண்டும். வேண்டுமென்றே ஏமாற்றுபவர்கள் மீதும், அவர்களைப் பற்றிச் சரியாக விசாரிக்காமல் கடன் தந்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல் தலையீடுகளிலிருந்து வங்கியை விடுவிக்க வேண்டும். அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவிக்கும்படி இருக்க வேண்டும். வாராக் கடன் எப்படி உருவாகிறது என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அரசு அனுமதி தர காலதாமதம் செய்வதினாலும், பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதிகளை வழங்க 18 மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொள்வதினாலும், பிசினஸ் தொடர்பான கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவதினாலும், கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரிகள் தாங்கள் எடுத்த முடிவுகளை ஆதரித்து வாதிடாமல் இருப்பதுபோன்ற காரணங்களினாலும் பிசினஸ் நிறுவனங்களுக்குப் பெரிதும் இழப்பு ஏற்படுகிறது.’’

-ஏ.ஆர்.குமார்

“மீண்டும் லைசென்ஸ் ராஜ்!” - எச்சரிக்கும் பொருளாதார ஆய்வாளர் ஷங்கர் அய்யர்

இந்தியப் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது?

‘‘க
டந்த ஆறு காலாண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் சுணக்கமாக இருக்கிறது. மூலதனச் செலவு அதிகரிப்பு, தொழில் துறைக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவது போன்ற காரணங்கள் வேலைவாய்ப்பைப் பாதித்துள்ளன. தவிர, இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் சிறு நிறுவனங்கள் உள்ளன. இந்திய அளவிலும், உலக அளவிலும் இவர்கள் போட்டிப் போட்டு ஜெயிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர். உதாரணமாக, இன்றைக்கு சீனா அல்லது கொரிய நாட்டு நிறுவனங்கள் தயாரித்துத் தரும்   டி.வி-யைவிட விலை குறைவாகத் தரவேண்டிய கட்டாயம் இவர்களுக்கு உருவாகியிருக்கிறது.’’

“மீண்டும் லைசென்ஸ் ராஜ்!” - எச்சரிக்கும் பொருளாதார ஆய்வாளர் ஷங்கர் அய்யர்

வேலை வாய்ப்பைப் பெருக்க என்ன செய்ய வேண்டும்?

‘‘1991
முதல் எளிதான சீர்திருத்தங்களை மட்டுமே செய்துவருகிறோம். வங்கி மறுமூலதனம் போன்ற கடினமான சீர்திருத்தங் களைக் காலம் கடந்தே செய்து வருகிறோம். வெளிநாடுகளிலிருந்து நாம் மொபைல் போன், கம்ப்யூட்டர், சில வகையான உணவு தானியங்களை யெல்லாம்  இறக்குமதி செய்து வருகிறோம்.இவற்றை யெல்லாம் நம் நாட்டிலேயே நாம் ஏன் உற்பத்தி செய்யக் கூடாது? ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடிப் பேர் வேலை தேடி வருகிறார்கள். மக்களுக்கான அடிப்படை வசதிகளான தண்ணீர், மின்சாரம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்துதரும் வேலையைச் செய்யத் தொடங்கினாலே போதும், வேலைவாய்ப்புகள் தானாகப் பெருகிவிடும்!’’