கதையின் களம் தேவலோகம். தேவலோகத்தில் ஒலிப்பெருக்கியில் அறிவித்தார்கள். “மணப்பெண்கள் அனைவரும் தயாராக இருங்கள்... தேவகுமாரன் வருகிறார்” என்று.

உடனே பெண்கள் அனைவரும் முழுவதுமாக தங்களை அலங்கரித்துக் கொண்டனர். அப்போது சில புத்திசாலிப் பெண்கள் கையில் மெழுகுவத்தியை எடுத்துக் கொண்டார்கள். அதைப் பார்த்த மற்ற பெண்களும் மெழுகு வத்தியை எடுத்துக்கொண்டார்கள். ஆனால், முதலில் மெழுகுவத்தி எடுத்துக் கொண்ட புத்திசாலிப் பெண்கள், கூடுதலாக சில மெழுகு வத்திகளையும் எடுத்துக்கொண்டனர்.
இதில் என்ன பெரிதாகப் புத்திசாலித்தனம் இருக்கிறது என்கிறீர்களா?
எல்லோரும் தயாராகி வரிசையில் காத்திருந்தனர். நேரம் போய்க்கொண்டு இருந்தது. ‘இதோ தேவகுமாரன் வரப்போகிறார்... வரப்போகிறார்...’ என அறிவிப்பு மட்டும் தொடர்ந்து வந்தது.
நேரம் கடந்து இருட்ட தொடங்கிவிட, எல்லா பெண்களும் தங்களுடைய மெழுகுவத்தியை ஏற்றிக்கொண்டார்கள். நேரம் கடந்து கொண்டிருந்தது. மெழுகுவத்தி எரிந்து முடியும் நிலையில் இருந்தது. புத்திசாலிப் பெண்கள் அவர்களிடம் இருந்த எக்ஸ்ட்ரா மெழுகுவத்தியை எடுத்துக்கொண்டார்கள். ஒரே ஒரு மெழுகுவத்தி மட்டும் எடுத்துவந்த மற்ற பெண்கள், “எங்களுக்கும் ஒரு மெழுகுவத்தி கொடுங்களேன்” என்றனர். புத்திசாலிப் பெண்களோ, “எங்களிடம் இல்லை, அதோ அந்தக் கடையில் சென்று வாங்கிக்கொள்ளுங்கள்” என்றனர். அவர்கள் அங்கிருந்து நகர்ந்த அடுத்த நிமிடம் தேவகுமாரன் வந்து, அங்கு நின்றிருந்த பெண்களை மட்டும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார். மெழுகுவத்தி வாங்கிக்கொண்டு திரும்பிவந்த பெண்கள் அதை அறிந்து மிகவும் வேதனையடைந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஆயத்தமாயிருங்கள்!’ - இது பைபிளில் வரக்கூடிய ஒரு வசனம். எப்போதும், எந்த ஒரு விஷயத்திலும் நாம் ஒரு முடிவு எடுக்கும்முன் நாம் பலமுறை அதைபற்றி சிந்திக்க வேண்டும். ஆனால், முடிவு எடுத்துவிட்டால், அதனால் வரக்கூடிய வெற்றி அல்லது தோல்விக்கு நம்மைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். இது ஒரு வகை. மற்றொரு வகை, நாம் என்னவாக வேண்டும் என முடிவெடுத்தோமோ அதற்கு ஏற்றவாறு நாம் நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் சற்றுமுன் படித்த கதையில், எல்லாப் பெண்களுக்கும் தேவகுமாரனை அடைய ஆசை இருந்தது. ஆனால், அதில் சில பெண்கள் மிகத் தெளிவாக எந்தவிதச் சூழலுக்கும் தங்களைத் தயாராக வைத்திருந்தார்கள்; அதனால் தேவகுமாரனை அடைந்தார்கள்.
மற்ற பெண்களுக்கு ஆசை இருந்தது. ஆனால், அதற்குத் தங்களை எப்படித் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்கிற தெளிவு இல்லை. இதை நாம் நம் வாழ்கையிலும் பொருத்திப் பார்க்கலாம்.
சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது, அதில் நாம் இழந்தது என்ன? பணம், பொருள், மனித உயிர்கள். இப்படி எல்லாரும் ஒவ்வொரு விஷயத்தைச் சொன்னாலும் ஒன்றை மட்டும் சொல்ல மறந்துவிட்டோம். அதுதான், மழை நீர். 1. ஏன் நாம் மழை நீரை இழந்தோம், 2. என்ன செய்திருந்தால் மழை நீர் வீணாகாமல் இருந்திருக்கும், 3. இதற்கு யாரெல்லாம் காரணம்?
இந்த எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் நாம் தயாராக இல்லாததுதான். 1. ஏரி, குளங்கள் சரியாகப் பராமரிக்கப்படாததால் மழை நீரை இழந்தோம். 2. சரியான முறையில் குளங்கள் தூர் வாரப்பட்டிருந்தால் மழை நீரைச் சேகரித்திருக்கலாம். இப்படிச் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், அதற்கான ஏற்பாட்டை நாம் செய்திருந்தோமா என்றால், இல்லை என்பதே பதில். இதற்கான தேவை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால், நாம் அதை எதிர்பார்த்து நம்மைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தயாராக இல்லாவிட்டால்..? மீண்டும் ஒரு கதைச் சொல்கிறேன்.
ஒரு கிராமத்தில் வரதன் என்றொருவர் இருந்தார். அவருக்குக் கடவுள் பக்தி அதிகம். தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்து, கடவுளைக் கும்பிட்டுவிட்டுத்தான் வீட்டை விட்டே வெளியில் வருவார். அதற்குப் பிறகு கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டுத்தான் காலை உணவே சாப்பிடுவார்.
ஒரு நாள் மழையும் காற்றும் படுபயங்கரமாக இருந்தது. பக்கத்துக் கிராமத்து மக்கள் அவர்கள் ஊருக்குள் வெள்ளம் வந்ததால், மேடான பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு ஆள் வரதனிடம், ‘‘இங்கும் வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இப்போதே வீட்டை விட்டு வெளியேறி மேடான பகுதிக்குச் சென்றுவிடுங்கள்’’ என்றார். அப்போது வரதன், “எனக்குத் தெரியும், என்னைக் கடவுள் வந்து காப்பாற்றுவார்” என்றார்.
சிறிது நேரத்தில் ஊருக்குள் வெள்ளம் வந்து விட்டது. இவர் தனது வீட்டின் மாடியில் ஏறிக் கொண்டார். அப்போது அங்கே படகில் மக்களை ஏற்றிச் செல்ல வந்தவர்கள் இவரைப் பார்த்து, “நீங்களும் வந்துவிடுங்கள். இன்னும் சற்று நேரத்தில் வெள்ளம் அதிகமாகும்’’ என்றனர். அப்போதும் அவர், “ இல்லை இல்லை, என்னைக் கடவுள் காப்பாற்றுவார்’’ என்றார். அந்தப் படகு காரர்களும் அங்கிருந்து சென்றனர்.
வெள்ளம் அதிகமானது. இவரும் மாடியில் இருந்த வாட்டர் டேங் மேலே ஏறி உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் ஒரு ஹெலிகாப்டர் வந்தது. அப்போதும் அவர், கடவுள் வருவார் எனச் சொல்லி ஹெலிகாப்டரிலும் ஏறவில்லை. கடைசியில், கடவுளிடம் இறைந்து கேட்டபின் கடவுளே அவர்முன் தோன்றினார்.
அப்போது ‘‘கடவுளே, நீ ஏன் என்னைக் காப்பாற்ற வரவில்லை?’’ என்று கேட்டார். கடவுள் என்ன சொன்னார் தெரியுமா? ‘‘நான் மூன்று முறை வந்து எச்சரித்தேன். முதலில் ஒரு மனிதன் மூலம். இரண்டாவது ஒரு படகுக்காரன் மூலம். மூன்றாவது, ஹெலிகாப்டர் மூலம். இந்த மூன்று வாய்ப்புகளையும் நீ பயன்படுத்திக் கொள்ளவில்லையே’’ என்றார்.
இப்போது சொல்லுங்கள், நாம் என்ன செய்கிறோம்..? நமக்கான வாய்ப்பு எப்போதும் நம் எதிரிலேயே இருந்தும், நாம் அதைப் பயன்படுத்துவதே இல்லை. இனியாவது நமக்கான வாய்ப்பைப் பயன்படுத்துவோம் அல்லது வாய்ப்பை உருவாக்குவோம்.
(காலம் வெல்லும்)
படம்: ப.சரவணக்குமார்

பிட்காய்ன் டீலர்கள் அலுவலகத்தில் திடீர் ரெய்டு!
பிட்காய்னை வாங்கி விற்க உதவும் டீலர்களின் அலுவலகங்களை வருமான வரித் துறையினர் சமீபத்தில் திடீர் ரெய்டு நடத்தினர். டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள பிட்காய்ன் டீலர் அலுவல கங்கள் வருமான வரித் துறையினரின் ரெய்டுக்குள் ளானது.
பிட்காய்ன் வர்த்தக மானது நம் நாட்டில் அங்கீ கரிக்கப்படாதது. ஆன் லைன் மூலம் இது நடப்ப தால், வரி கட்டாமல் ஏமாற்ற இதில் நிறைய வழியுண்டு.
இதைத் தடுப்பதற்கா கவே வருமான வரித் துறை யினர் இந்த ரெய்டு நடத்தி யிருப்பதாகச் சொல்லப் படுகிறது. இந்த ரெய்டு தொடரும் என்கிறார்கள்!

உங்களிடம் சில கேள்விகள்!
1. நீங்கள் உங்களுடைய இலக்கை அடைவதற்காக உங்களை எவ்வாறெல்லாம் தயாராக வைத்திருக்கிறீர்கள்?
2. நீங்கள் உங்களை அப்போதைக்கு அப்போது புதுப்பித்துக்கொள்கிறீர்களா, இல்லை நமக்கான வாய்ப்பு வரட்டும்; வாய்ப்பு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் எனக் காத்துக்கொண்டு இருக்கிறீர்களா?
3. என்னிடம் திறமை இருக்கிறது, என்னால் நினைத்த நேரத்தில் என்னைத் தயார்படுத்திக் கொள்ள முடியும் என நினைக்கிறீர்களா?
4. வாய்ப்பு வந்து கண்முன் நின்றும், கவனம் வைத்து அதைப் பற்றிக்கொள்ளாமல், அலட்சியமாக இருக்கிறீர்களா?
உங்கள் இலக்கு இதுதான் என்று நிர்ணயம் செய்துவிட்டால், அதை அடைவதற்கான வழிமுறைகளைத் தேடித் திட்டமிட வேண்டும். இத்தகைய தேடலும் திட்டமிடலும் இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும்.